தாய்ப்பத்திரம் இருக்கும் நிலையில், போலி பத்திரத்தைத் தயாரித்து, அ.தி.மு.க. பிரமுகரான பாக்கியம் பிள்ளை என்பவரும், சார்பதிவாளர் ஒருவரும் இணைந்து, நிலத்தின் உரிமையாள ருக்கே தெரியாமல், அவரது நிலத்தை விற்பனை செய்துள்ள சம்பவம், தாம்பரத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. மேற்குதாம்பரம் கடப்பேரி கிராமம், சுந்தரம் காலனியில், முரளி என்பவருக்குச் சொந்தமான 1.5 கிரவுண்ட் இடம் உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, மே மாதத்தில், முரளியின் செல்போனுக்கு, நிலம் விற்பனை செய்து தரப்படும் என்று ஒரு விளம்பர எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. தன்னுடைய மகனின் வெளிநாட்டுப் படிப்புக்காகத் தனது இடத்தை விற்பது தொடர்பாக, இந்த எஸ்.எம்.எஸ்.ஸில் குறிப்பிடப்பட்டுள்ள கோடம்பாக்கம், குளோபல் கன்சல்டன்ஸியை நடத்தும் ராமகோபாலன் என்பவரை முரளி சந்தித்துள்ளார். இடம் விற்பனை தொடர்பான வற்றை, பைனான்சியர் பாக்கியம் பிள்ளைதான் செய்து கொடுப்பார் என்று கைகாட்ட, இருவருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், முரளியின் இடத்தை அடுக்குமாடிக் குடியிருப்பாக மாற்றி, அந்த அடுக்குமாடியில் மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீடும், 1 கோடி ரூபாய் பணமும் முரளிக்குக் கொடுக்கவேண்டும் என்று ஒப்பந்தம் முடிவாகி யுள்ளது. அந்த ஒப்பந்தப்படி கட்டட வேலையில் இறங்குவதற்கு, பவர் எழுதித்தர வேண்டுமென்று கேட்டதால் அதையும் செய்துகொடுத்துள்ளார். ஆனால் ஒப்பந்தப்படி முரளிக்கு பணமும் கொடுக்காமல், வீடும் கொடுக்காமல், அந்த இடத்தை 39 லட்ச ரூபாய்க்கு, பாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்து, மோசடி செய்துள்ளார் பைனான் சியர் பாக்கியம் பிள்ளை. அதோடு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து, தாம்பரம் சார்பதிவாளர் வெங்கட சுப்பரமணியத்திடம் விசாரித்தபோது, இந்த இடத்தை விற்பனை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். நொந்து போன முரளி, இதுதொடர்பாகப் பரவலாக விசாரித்ததில், இந்த மோசடியில் சார்பதிவாளரும் கூட்டுச் சதி செய்திருப்பதும், இதேபோல பல இடங்களை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்திருக்கிறது. ஒருவருக்கு பவர் எழுதித்தர வேண்டு மென்றால் அதற்கு பட்டா, சிட்டா உள்பட அந்த இடத் துக்கான அனைத்து உரிமைப் பத்திரங்களும் இருக்கவேண் டும். ஆனால் அவையெல்லாம் இல்லாமல் இன்னொருவருக்கு விற்பனை செய்வதற்கு சார்பதிவாளர், முறைகேடாக உதவி செய்துள்ளார்.
தேவைப்படும் பத்திரங்கள் முறையாக இல்லாமலேயே சார்பதிவாளர், கிரையப் பத்திரம் செய்து வைத்துள்ளார். இதன்படி, ஒரே இடத்துக்கு இருமுறை பதிவு செய்யப்பட்டு, அந்த பத்திரங்கள், தாம்பரம் சார்பதிவாளர் அலுவல கத்திலுள்ள கணினியில் ஏற்றப் பட்டுள்ளன. இந்த பத்திரங்களில் சார்பதிவாளரே முறைகேடாகக் கையொப்பமிட்டு பதிவேற்றியுள்ளார். இந்த முறைகேட்டுக்கு சார்பதிவாளர், 5 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு முறை கேடாக விற்பனை செய்ய உறுதுணையாக இருந்துள்ளார். இத் தகைய முறைகேடுகளை, அ.தி.மு.க.வின் வணிக வரிப் பதிவு மற்றும் முத்திரை அமைச்சர் மூலமாக, பாக்கியம் மூடி மறைத்துள்ளார்.
இதுகுறித்து, அந்த இடத்தின் உரிமையாளரான முரளியிடம் பேசியபோது, ""இந்த சார்பதிவாளர் முறைகேடான முறையில் என்னுடைய இடத்தை விற்பனை செய்வதற்காக, பாக்கியம் பிள்ளையுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டுள்ளார். எனது இடத்தை, மூன்றாம்நபரான பால கிருஷ்ணனுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, முதலமைச்சர் தனிப் பிரிவிலும், லஞ்சஒழிப்புத் துறையிலும் மனு கொடுத்தும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. பைனான்சியர் பாக்கியம் பிள்ளை, அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பிலிருப்பதால் அவர்மீது எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்க மறுக்கிறது'' என்றார். இந்த புகார் தொடர்பாக சார்பதிவாளர் வெங்கட சுப்ரமணியிடம் கேட்டபோது, பேச மறுத்துவிட்டார்.
வணிக வரிப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் அரசு முதன்மை செயலாளர் பீலா ராஜேஷைத் தொடர்புகொண்டபோது, ""இது தொடர்பாக விசாரணை செய்து, புகாரில் உண்மையிருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.