முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் 16-வது சட்டமன்றத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13-ந்தேதி நிறைவு பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 1 மாத காலம் நடந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள், தீர்மானங்கள், ஏகப்பட்ட திட்டங்களுக்கான அறிவிப்புகள், நெகிழ்ச்சி யான சம்பவங்கள் என நிறைய அரங்கேறியுள்ளன.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கவர்னர் பன்வாரிலாலின் உரையுடன் ஜூன் 21-ந்தேதி கூடியது சட்டமன்றம். கவர்னரின் சட்டமன்ற வருகை என்பது மிகவும் கம்பீரமானது. நம்முடைய சட்டமன்றத்தின் நடைமுறைகள், கடைப்பிடிக்கப்படுகிற மரபுகள் எல்லாமே இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற நடைமுறைகளை நினைவுகூறுபவை!
கவர்னரின் வருகையைப் போலவே அவரது உரையும் மிடுக்காக இருந்தது. தி.மு.க. அரசு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தனது உரையில் பதிவு செய்திருந்தார் கவர்னர் பன்வாரிலால். பொதுவாக, உரையாற்றிவிட்டு தனது மாளிகைக்கு கவர்னர் திரும்பிவிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை உரையாற்றியதற்குப் பிறகு அவரது அறையில் 30 நிமிடங்கள் ஓய்வெடுத்தார் கவர்னர்.
அவருடன் முதல்வர் ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோரும் இருந்தனர். அவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டிருந்த கவர்னர், இந்த கூட்டத் தொடர் முடிந்ததும் தமிழகத்துக்கு புதிய கவர்னர் வரப்போகிறார். தமிழகத்திலிருந்து நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது. எதிர்க்கட்சியாக இருந்து நீங்கள் செயலாற்றியதை பார்த்த எனக்கு, ஆளும் கட்சியாக இருந்து செயலாற்றும் திறனைக் கவனிக்கும் வாய்ப்பு இருக்காது என நினைக்கிறேன்''’என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
ஆளுநர் உரை மீதான விவாதமும் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்குமாக நடந்த 4 நாள் சட்டமன்றம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக ஆகஸ்ட் 13-ந்தேதி மீண்டும் கூடியது. பட்ஜெட் மீதான விவாதம், அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம் என ஒரு மாத காலம் நடந்து முடிந்துள்ள இந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து 40-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளைச் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!
கூட்டத் தொடரின் இறுதிநாளில் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி சபைக்கு வந்திருந்தனர் அ.தி.மு.க. உறுப்பினர்கள். நீட் தேர்வு பயம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவிக்கவும், தி.மு.க. அரசை கண்டிப்பதற்கு மாகவே கறுப்பு பேட்ஜ் அணிந்திருப்பதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாணியம்பாடியில் கடந்த 10-ந் தேதி வாசிம் அக்ரம் என்ற வாலிபர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அ.தி.மு.க. கிளறும் என ஆளும் கட்சி எதிர்பார்த்திருந்ததை போலவே, அந்த விவகாரத்தை சபையில் எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் தனது பேச்சில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படாததை அவர் சுட்டிக்காட்ட, அப்போது குறுக் கிட்ட முதல்வர் ஸ்டாலின், வாணியம்பாடி படுகொலை யின் பின்னணிகளையும் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டிருப்பதையும் விவரித்தார். அத்துடன், நீட் தேர்வு தொடர்பாக சட்டமசோதா தாக்கல் செய்யவிருக்கிறோம். அதில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்று நிறைவேற்றித் தரவேண்டும் என கேட்டுக்கொண்டார் முதல்வர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. அரசைப் பற்றி எடப்பாடி விமர்சிக்க, அவர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார் சபாநாயகர் அப்பாவு. அதனை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர் அ.தி.மு.க.வினர்.
இதனையடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு முதன்முதலில் நடத்தப்பட்டது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள். குடியுரிமை சட்டங்கள் மற்றும் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கலாம். அதனை செய்திருந்தால் ஓரளவுக்கு விலக்குப் பெற்றிருக்க முடியும். ஆனால் அந்த தெம்பு, திராணி அவர்களுக்கு இல்லை. நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும் என அழுத்த மாக பதிவு செய்தார் ஸ்டாலின். இதனையடுத்து, காவல்துறை மானிய விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் நலன்களுக்காக 40 புதிய அறிவிப்புகளைச் செய்ததோடு, கொடநாடு குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தெரிவித்ததை கூர்மையாகக் கவனித்தது சட்டமன்றம்.
காலையில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர் பின்னர் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த சட்டமசோதாவின் மீது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இதனை அ.தி.மு.க. வரவேற்கிறது என்றார். பா.ஜ.க. உறுப்பினர்கள் மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் நீட்டுக்கு எதிரான சட்டமசோதா நிறைவேறியது. மசோதா நிறைவேற ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் முதல்வார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட தைப் போலவே நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின். இதே போல அ.தி.மு.க. ஆட்சியிலும் 2017-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உரிய தரவுகள் இல்லாததால் அ.தி.மு.க.வின் சட்ட மசோதாவை அப்போது நிராகரித்திருந்தார் ஜனாதிபதி. அந்த தகவலைக்கூட சபைக்கு அறிவிக்காமலும் எடப்பாடி மறைத்திருந்தார். இந்த நிலையில், நீட் தேர்வினால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள தமிழக மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளனர்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? அதனை சரி செய்வது எப்படி? என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அதற்கான தரவுகளைப் பெற்று அதனடிப்படையில் முழுமையான ஒரு சட்ட மசோதாவாக தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க. கவர்னரின் ஒப்புதலைப்பெற ராஜ்பவனுக்கு உடனடியாக அனுப்பியும் வைக்கப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுக்குப் பிறகு ஜனாதிபதிக்கு மசோதாவை தி.மு.க. அரசு அனுப்பி வைக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவைப் போலவே, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு செய்தார் ஸ்டாலின். சென்னை காவல்துறை ஆணையரகத்தை சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்றாகப் பிரித்தல், அரசுப் பணிகளில் மகளிர்க்கு 40 சதவீத இடஒதுக்கீடு, மேலவை அமைக்க நிதி ஒதுக்கீடு ஆகியவைகளும் இறுதிநாளில் முக்கியமாக கவனிக்கப்பட்டன.
கூட்டத்தொடர் நிறைவு பெற்றதும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று, மலர் தூவி மரியாதை செய்தார் ஸ்டாலின்.
முதன்முதலாக காகிதமில்லா பட்ஜெட், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் ஆகியவற்றை முறையே நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்தது இந்த கூட்டத் தொடரின் முக்கிய அம்சம். பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்த அதேநேரம், கடந்த அ.தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிதிநெருக்கடியும் கடன் சுமையும் அதிகரித்திருப்பதை அம்பலப்படுத்தினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர்களில் ஓரிருவரைத் தவிர அனைவருமே அசத்தினர். நிறைய ஹோம்வொர்க் பண்ணியிருந்ததும், 3 மாதத்தில் தங்களின் துறைகளை முழுமையாக கற்றறிந்ததும் அவர்களின் பதில்களில் வெளிப்பட்டன.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நெடுஞ் சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அதிக ஸ்கோர்களை எடுத்தனர். இந்த துறைகளில் கடந்த காலங்களில் நடந்த ஊழல்களை சபையில் புள்ளிவிபரங் களோடு அமைச்சர்கள் சொன்னபோது, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களால் அதனை அழுத்தமாக மறுக்க முடியாமல் திணறியதையும் பார்க்க முடிந்தது.
நெகிழ்ச்சியான, பெருந்தன்மையான சம்பவங்களையும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த சட்டமன்றம் சந்தித்தது. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபோது, அரசியல்மாச்சரியங்களைக் கடந்து அனைத்து கட்சிகளும் கலைஞரின் பெருமை களைச் சொல்லி பேசி மகிழ்ந்தது நெகிழ்ச்சியானவை. அ.தி.மு.க. சார்பில் அன்றைக்குப் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., எனது தந்தை கலைஞரின் தீவிர பக்தர். அவர் சட்டைப்பையில் எப்போதும் "பராசக்தி' படத்தின் வசன புத்தகம் இருக்கும். கலைஞரின் அனைத்து சிறப்புகளும் நினைவிடத்தில் இருக்க வேண்டும் எனச் சொன்னதில் முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல மொத்த சபையும் சிலிர்த்தது. சபாநாயகருக்கு துணையாக பேரவையை ஸ்மூத்தாக வழிநடத்திச் சென்ற அவை முன்னவர் துரைமுருகனின் 50 ஆண்டுகால சட்டப்பேரவை பணிகளைப் பாராட்டும் வகையில் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததும் அதன்மீது முதல்வர் உள்பட கட்சிகளின் தலைவர்கள் பேசியதும் உருக்கமானவை.
அதேபோல, பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச பாடப்புத்தகப் பைகளில் ஜெயலலிதா, எடப்பாடியின் உருவப் படங்கள் இருப்பதை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் சுட்டிக்காட்டிய போது, அந்த படங்கள் இருக்கட்டும்; அந்த பைகளிலேயே புத்தகங்களை வழங்குங்கள் என ஸ்டாலின் உத்தரவிட்டது பெருந்தன்மைக்கு உதாரணம். அதேபோல, பட்ஜெட் புத்தகம் எடுத்து வரும் சூட்கேசிலும், நல்லாசிரியர்களுக்கு வழங்கும் அரசு விருதுகளிலும் எனது படம் இருக்கக்கூடாது, அரசின் முத்திரைதான் பெரிதாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டதும், அதன்படியே நடந்ததும் சட்டமன்றம் இதுவரை காணாத காட்சிகள். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா, தொழிற் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்டமசோதா, வர்த்தக நிறுவனங்களில் இருக்கைகள் குறித்த சட்ட மசோதா, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல் விலை உறுதி சட்ட மசோதா, அத்யாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் என 50-க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் தன்னை பாராட்டுவதை கண்டித்து சபையை விவாதக் களமாக, ஆரோக்கியமாக, கண்ணிய மாக இருக்க வேண்டுமென்பதிலும், எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பதிலும் கவனமாக இருந்தார் ஸ்டாலின். இதனாலேயே காரசாரமான விவாதங்கள் மன்றத்தில் அதிகம் எதிரொலித்தன. பல்வேறு அறிவிப்புகள், முக்கிய தீர்மானங்களில் எதிர்க்கட்சிகளின் பாராட்டுதல்களும், பிரதான எதிர்க்கட்சிக்கு முதல்வர் நன்றி தெரிவித்ததும் இந்த பேரவை கண்ட புதுமைகள்.
தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இருப்பதில்லை என்றும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எதிரிகளாகவே இருக்கிறார்கள் என்றும் கடந்த 30 ஆண்டுகளாக நிலைகொண்ட விமர்சனத்தை பொய்யாக்கும் வகையில் பேரவையின் மூலம் அதனை ஸ்டாலின் உடைத்தெறிந்திருப்பது இந்த சபையின் சிறப்பு. இதனாலேயே வெளிநடப்புகள் மிகமிக குறைந்துபோனது.
எவ்வித விவாதங்களுமின்றி அத்தியாவசியம் கருதி சில முக்கிய அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக பேரவையின் 110 விதியை முதல்வர்கள் பயன்படுத்துவது மரபு. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த விதியை மிகவும் அரிதாகத்தான் முதல்வர்கள் பயன்படுத்தியது உண்டு. ஆனால் 2011-க்கு பிறகு பேரவை நடக்கும் நாட்களில் தினமும் 110 விதியின் கீழ் எண்ணற்ற அறிவிப்புகளை செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் இது தொடரவே செய்தது.
தி.மு.க. ஆட்சியும் இதற்கு விதிவிலக் கில்லை என்பதை இந்த பேரவை எதிர் கொண்டது. தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை சமூகநீதி நாளாக அறிவித்தல், நகைக்கடன் தள்ளுபடி, இடஒதுக்கீடு தியாகிகளுக்கும் அயோத்திதாசர் உள்ளிட்ட பல சமுதாய அறிஞர்களுக்கும் மணி மண்டபம் என 110 விதியை பயன்படுத்தி நூற்றுக்கும் அதிகமான அறிவிப்புகளை செய்தார் ஸ்டாலின். கலைஞரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால், இவைகள் வெற்று அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். அதில்தான் இருக்கிறது ஸ்டாலினின் நிர்வாகத் திறன்.
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட சட்டமன்ற ஜனநாயகமும், அரசியல் நாகரீகமும் மீட்டெடுக்கப்பட்டதை உணர்த்தியது பேரவை. இதைத்தாண்டி, சமூக நீதியின் லட்சியங்களான இட ஒதுக்கீடு கொள்கையைப் பாதுகாத்திடவும், சமூகம், கல்வி, பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ளவர்களை முன்னேற்றவும், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை உயர்த்த வும் உறுதிகொண்ட அரசாக ஸ்டாலின் ஆட்சி இருப்பதை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிரூபித்திருக்கிறது.