ஊரக உள்ளாட்சியில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட சில வார்டு களுக்கான தேர்தல், கடந்த ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஜூலை 12ஆம் தேதி வெளியான முடிவில், பல இடங்களில் ஆளும் கட்சியான தி.மு.க. வெற்றிபெற்ற நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க.விடம் தோற்றுள்ளது தி.மு.க.வினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், 24வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலருக்கான தேர்தலில், தி.மு.க. வேட்பாளரைவிட 510 வாக்குகள் கூடுதலாக பெற்று இந்துமதிகாசி வெற்றிபெற்றார். நாயக்கனேரி ஊராட்சியின் 8வது வார்டில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நதியா, 9வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுசீலா ஆகியோரும் வெற்றிபெற்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "கீழ் மட்ட நிர்வாகிகளை, தொண் டர்களை மதித்து அவங்களுக்கு தேவையானதை செய்து தாங்கன்னு ஒரு மாதத்துக்கு முன்பு தலைவர் பேசினார். தலைவர் பேச்சை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் கேட்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் தோல்வி. கட்சியின் உட்கட்சித் தேர்த லில், திருப்பத்தூர் மாவட்ட ஒன்றிய கழகத் தேர்தல் பொறுப்பாளராக செய்தி தொடர்பாளர் அணி மாநில இணைச்செயலாளர் சிவ.ஜெயராஜ் நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலை 5ஆம் தேதி தேர்தலுக்காக மனு வாங்க வந்தார். தலைமை உத்தரவை மீறி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிட்டிங் ஒ.செ.க்கு எதிராக மற்றொரு வரை மனு செய்யவைத்தார் மா.செ. தேவராஜ்.
இதுகுறித்து சிட்டிங் ஒ.செ ஒருவரிடம் பேசிய போது, "ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு, சீனியாரிட்டி பார்க்காமல் தனது மகன் பிரபாகரனை ஒ.செ.வாக்க முயற்சி செய்கிறார் மா.செ. தேவராஜ். அதேபோல், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய ஒ.செ.வாக இருந்த ஞானவேலன், 50 லட்சம் ரூபாய் செலவில் தளபதி அறிவாலயம் கட்டி, கட்சி அலுவலகம், படிப்பகம், ஜிம் எனச் செலவழித்திருக்கிறார். மீண்டும் ஒ.செ. பதவி கேட்டுள்ள அவருக்கு எதிராக தன் உதவியாளர் அன்பு அல்லது மச்சான் அசோகனை ஒ.செ.வாக்க முயற்சிக்கிறார் தேவராஜ். எனவே, கட்சி நிர்வாகிகளை மதிக்காத தேவராஜை மாற்றுங்கள் அல்லது திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரியுங்கள் என்கிற கோரிக்கை முன்வைத்துள்ளனர். தேவராஜ் செயல்பாடுகள் குறித்து அறிவாலயத்துக்கு புகார்கள் சென்றதால், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தேவ ராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர்'' என்றனர்.
இதுகுறித்து விளக்கம்பெற மா.செ. தேவராஜை 99******05 என்ற எண்ணில் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. கோஷ்டிச் சண்டை இப்படியே தொடர்ந் தால்... எம்.பி. தேர் தலில் எதிரொலிக்கும்.