அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
""நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' என்று ராகுல் காந்தியின் படத்துடன் பதிவிட்டிருந்தார், செல்லூர் ராஜூ. ஏற்கெனவே, ""தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்'' என செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பேசிவரும் சூழ-ல்... செல்லூர் ராஜூவின் பேச்சு, பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஆனால் சர்ச்சை கிளம்பியதால் சுதாரித்துக்கொண்ட செல்லூர் ராஜூ, இப்போது ""எடப்பாடி பழனிசாமிபோல எளிமையாக ராகுல்காந்தி இருக்கிறார். எனவேதான் அவரை புகழ்ந்து பதிவிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?'' என பல்டியடித்திருக்கிறார். மேலும் தனது பதிவை நீக்க முடியாது எனவும் முரண்டு பிடித்து வந்தவர், எடப்பாடியின் கண்டிப்பிற்குப் பின், தனது பதிவை நீக்கிவிட்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையிலும் மதுரை அ.தி.மு.க. பிரமுகர்களான புறநகர் மா.செ. ராஜன்செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வாய் திறக்க யோசித்தனர். பத்திரிகையாளர்கள் இது குறித்து ராஜன்செல்லப்பாவிடம் கேட்டபோது...
""அ.தி.மு.க.வின் மிக மூத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராகுல் குறித்துச் சொன்னதை எங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தேசியக் கட்சிகளான பா.ஜ.க.வையும் காங்கிரûஸயும் நாங்கள் விரும்பவில்லை. இரண்டையும் சம தூரத்தில் வைத்துதான் பார்க்கிறோம். எங்களுக்கு மாநில நலனே முக்கியம். தேர்தல் நேரத்தில் ராகுலைப் புகழவேண்டிய அவசியமில்லை''’என்றவர், ""தேர்தலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்கும். புதிய மாவட்ட செயலாளர்கள் அமர்த்தபடலாம். தலைவர் எடப்பாடிக்கு அதற்கான முழு அதிகாரம் இருக்கிறது. தகுதி அறிந்து திறமை அறிந்து அவர் பதவி கொடுப்பார்''’என்று சூசகமாக சொல்ல, அ.தி.மு.க.வில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய, அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் காலத்தி-ருந்து இருக்கும் சில முக்கிய பொறுப்பாளர்களிடம் பேசினோம்...
""பொதுவாக மூத்த நிர்வாகிகளை எடப்பாடி கண்டுகொள்வதே இல்லை. இந்த செல்லூர் ராஜூவையே எடுத்துக்கொள்ளுங்கள். மதுரையைப் பொறுத்தவரை அவர் மிகவும் சீனியர். அவரையே சமீபகாலமாக ஒதுக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. தென்மாவட்டங்களில் அனைத்து மாவட்ட செயலாளர்களுமே முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதிலும் அனைவருமே மிகவும் சீனியர்கள். மதுரையைப் பொறுத்தவரை செல்லூர் ராஜூ கட்சியை வளர்த்தவர்களில் ஒருவர். அப்படியிருக்கும்போது ஜூனியரான ஆர்.பி.உதயகுமாருக்கு எடப்பாடி மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது கட்சியில் இருப்பவர்களுக்கே பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்து செல்லூர் ராஜூ அலுவலக வாச-ல் கிடையாகக் கிடந்தவர் உதயகுமார். தற்போதுகூட பாராளுமன்றத் தேர்தலில் செல்லூர் ராஜூ பரிந்துரைத்த வேட்பாளரைத் தவிர்த்து, ஆர்.பி.உதயகுமார் கை காட்டிய, சமீபத்தில் கட்சியில் சேர்ந்த டாக்டர் சரவணனை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி. மேலும் மதுரை நகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிய மாவட்ட செயலாளராக உதயகுமார் பரிந்துரைக்கும் நபரை எடப்பாடி அறிவிக்கவிருப்பதாகத் தெரிகிறது. மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை கொண்டுவந்தது எல்லாம் எங்களைப் போன்ற சீனியர்களுக்குப் பிடிக்கவில்லை. இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் தற்போது ராகுல்காந்தியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் செல்லூரார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ராகு-ன் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். சாதாரண நாளில் செய்து இருந்தால்கூட பரவாயில்லை. அதுவும் ராஜீவ்காந்தியின் நினைவுநாளில் செய்திருப்பதுதான் சந்தேகத்தையும், கட்சிக்குள் ஏதோ நடக்கபோகிறது என்கிற எதிர்பார்ப்பையும் தொண்டர்களுக்கு ஏற்படுத்துகிறது.
ஜூன் 4க்கு பிறகு கட்சியில் பெரிய பூகம்பமே இருக்கும். அது சமீபத்தில் அரசல் புரசலாக இருக்கிறது. வேலுமணி, செங்கோட்டையன் தலைமையில் சசிகலா அம்மையார் வழிகாட்டலில் மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், பரமகுடி, விருதுநகர் என தென்மாவட்ட செயலாளர்கள் வரிந்துகட்டி நிற்கத் தயாராகிவிட்டனர். மூட்டையை அவிழ்ப்பது யார் என்பது மட்டுமே பாக்கி. மற்றபடி தினகரனைத் தவிர்த்து, பிரிந்துபோன அனைத்து தலைவர்களையும் சேர்த்து பழைய அ.தி.மு.க. மீண்டும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனிடமும் ஏற்பட்டிருக்கிறது. அதன் சமிக்கைதான் செல்லூர் ராஜூவின் இந்த திடீர் நடவடிக்கையில் வெளிப்பட்டிருக்கிறது. இது எல்லாம் எடப்பாடிக்கு எதிரான பிள்ளையார் சுழிதான். இன்னும் எத்தனை தோல்வியைத்தான் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும்? பொறுத்தது போதும்''’’என்கிறார்கள் ஒரே குரலில்.
அ.தி.மு.க.விற்குள் ஒரு பூகம்பம் கருக்கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், செல்லூராரின் ராகுல் பற்றிய பதிவு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.