CR

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி, சொல்லிவைத்த மாதிரி 40-க்கு 40 தொகுதிகளையும் தட்டித் தூக்கி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நேரத்தில்... இங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., பல இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

Advertisment

குறிப்பாக, மதுரையில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகிய அ.தி.மு.க.வின் இரண்டு பவர்ஃபுல் மா.செ.க்கள் இருந்தும், அ.தி.மு.க. வேட்பாளரான டாக்டர் சரவணன் இந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். மதுரை அ.தி.மு.க.வினரோ, இந்த வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் என மேற்கண்ட இருவரையும் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர்கள் வைக்கக் காரணம், மதுரை மா.செ.க்களாக செல்லூர் ராஜுவும் ராஜன் செல்லப்பாவும் கடந்த 20 வருடங்களாக இருந்து வருகின்றனர். இவர்களை மீறி அ.தி.மு.க.வில் எவராலும் தலையெடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கட்சியையாவது பலப்படுத்த வேண்டாமா? என்கிற கேள்வியை ரத்தத்தின் ரத்தங்கள் பலரும் வைக்கிறார்கள்.

Advertisment

மதுரையை ஒருகாலத்தில் அ.தி.மு.க.வின் கோட்டையாகப் பார்க்கப்பட்டது. முக்குலத்தோர் அதிகமுள்ள மதுரையில் சவுராஷ்டிரா சமூகத்தினரின் வாக்குகள் ஒரு லட்சம் அளவிற்கு இருக்கின்றது. அதற்கு அடுத்தடுத்த இடத்தில் இஸ்லாமியர், பிள்ளைமார், கோனார், தலித்துகள் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.விற்கே தொடர்ந்து வாக்களித்து வந்திருக்கிறார்கள். இருந்தும் இப்போது அ.தி.மு.க. அங்கே கோமா நிலைக்கு வந்திருக்கிறது.

இதுபற்றி மதுரை அ.தி.மு.க. சீனியர் தொண்டர்கள் சிலர் நம்மிடம், “""இந்தமுறை டாக்டர் சரவணனை வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கும்போதே இரு மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரைப் பிடிக்கவில்லை. ஏனென்றால் செல்லூர் ராஜுவும் ராஜன் செல்லப்பாவும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சரவணனோ அகமுடையார். மதுரையில் பழக்கடை பாண்டிக்குப் பிறகு அகமுடையார் எவரேனும் கட்சிப் பதவியை நோக்கி நகர்ந்துவந்தால், இவர்கள் இருவரும் கடுமையாக எதிர்வினையாற்றி, ஓரம்கட்டி வந்தார்கள். இப்போது தோற்கடிக்கப்பட்டிருக்கும் டாக்டர் சரவணன், கட்சிக்காக செலவழிக்கத் தயங்காதவர். அவர் வெற்றிபெற்றால், அவர் செல்வாக்கு வளர்ந்துவிடும் என்றும், அதனால் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள்வரை, அவர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்றும் நினைத்து, அவரைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

செல்லூர் ராஜு வெளிப்படையாகவே தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திலே சரவணனைப் பார்த்து, ’"ஏம்ப்பா, ஜெயிச்சு வேறு கட்சிக்கு போயிரமாட்டியே'’ என்று எல்லோர் முன்னிலையிலும் கிண்டலடித்தார். அப்பவே ஏதோ உள்ளடி வேலை ஆரம்பித்துவிட்டது என்று நினைத்தோம். அது உண்மையாகிவிட்டது. அடுத்தடுத்து மதுரையில் உள்ள 100 வட்டச் செயலாளர்களில் 60 சதம் பேர், இவர்கள் பேச்சைக் கேட்டு சுணக்கம் காட்டினார்கள். தேர்தல் செலவுக்காகக் கட்சி கொடுத்த பணத்தையும் வெளியே எடுக்கவில்லை. தேர்தல் அன்று பூத் சிலிப்பைக் கூட கொடுக்கவில்லை. அதேபோல் ஓட்டுப் போடும் இடத்திற்கு அருகே வாக்காளரை வரவேற்கப் பந்தல் கூடப்போடவில்லை. மொத்தத்தில் ஒரு டீமாக இருந்து வேட்பாளர் சரவணனைக் கவிழ்த்துவிட்டார்கள். இவர்களைப் போன்ற துரோகிகளை இன்னும் எடப்பாடி அனுமதிக்கலாமா?''’என்றார்கள் காரமாகவே.

அ.தி.மு.க.வின் வட்டச்செயலாளர் உதயா நம்மிடம், “""இந்த தோல்வி தொடர்பான பழியை, முழுக்க முழுக்க இரண்டு மாவட்டச் செயலாளர்கள் மீது போடுவதைவிட, தலைமை கொஞ்சம் யோசிக்கவேண்டும். தனது தனிப்பட்ட ஈகோவை விட்டுவிட்டு, அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்திருக்கவேண்டும். இங்கு மட்டுமல்ல தென்மாவட்டங்கள் முழுவதுமே அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி, பா.ஜ.க.விற்கு மடை மாறியிருக்கிறது. அதுவும் வேறுவழியில்லாமல் அ.தி.மு.க. தொண்டன் தி.மு.க.விற்கு போட மனதுவராமல், பா.ஜ.க.விற்கு போட்டுள்ளான். இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. பிரிந்துபோன தலைவர்கள் ஒன்றுசேர்ந்தால், தென்மாவட்டத்தில் வெற்றி நிச்சயம்''’என்கிறார் உறுதியான குரலில்.

அ.தி.மு.க.வின் 15 ஆவது வார்டு பிரதிநிதி சக்திவேலோ, ""ஜெ.’இறந்தபோது மொட்டை போட்டவன் நான். தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். அப்படிப்பட்ட நானும் பா.ஜ.க.வுக்குதான் ஓட்டுப்போட்டேன். அதேசமயத்தில் மதுரையைப் பொறுத்தவரை டாக்டர் சரவணன் வென்றுவிட்டால் மாவட்டச் செயலாளர் பதவியில் போட்டி ஏற்பட்டுவிடும் என, வேண்டுமென்றே அ.தி.மு.க., தொண்டர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மதுரை கிழக்கு, மேலூர் தொகுதியின் பொறுப்பாளராக ராஜன் செல்லப்பாவும், மற்ற 4 நகர் தொகுதிகளை செல்லூர் ராஜுவும் கவனித்துக்கொண்டார்கள். இந்த சூழலில் முழுக்க முழுக்க செல்லூர் ராஜுவின் நெருங்கிய ஆதரவாளர்களும், ராஜன் செல்லப்பாவின் நிழல்களும் உள்ளடி வேலைகளைச் செய்து, கட்சிகுள் துரோகத் தீயை மூட்டிவிட்டனர்''’என்றார்.

அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர் செல்லப்பாண்டியோ, “""ரொம்ப வேதனையா இருக்கு. முக்குலத்தோர் ஓட்டுப் போட்டிருந்தால்கூட நாங்க ஜெயிச்சிருப்போம். அவங்க அதிருப்தியில் இருக்காங்க. இந்த மாவட்டச் செயலாளர்கள் இருக்கும்வரை அ.தி.மு.க.காரன் ரோட்டில் தரிசாதான் போவான். இவய்ங்க இரண்டு பேரும் கட்சியைக் குழிதோண்டிப் புதைச்சிருவாங்க. மேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. ஆனா படு கேவலமான ஓட்டு வாங்கியிருக்கோம். அதுவும் பா.ஜ.க.வைவிட கீழ. செல்லூர் ராஜுவே பகிரங்கமா, ‘"செலவுக்குக் கொடுத்தா வாங்கிக்க. வேலை செய்யாதே'’என்றார். யாராவது கட்சிக்காக வேலைபார்த்தால் அடுத்த நிமிடம் செல்லூரார்கிட்ட இருந்து போன் வரும். ‘என்னப்பா விழுந்து விழுந்து வேலை பார்க்கிறீயாமே’ என்பார் கிண்டலாக. "உன்னை நியமிச்ச எனக்கே இப்படி வேலை பார்க்கவில்லையேப்பா'’என்பார் நக்கலாக. அதற்கு என்ன அர்த்தம் என்றால் வேலை பார்க்காதே என்பது'' என்றார் கவலையோடு.

பெயர் சொல்லவிரும்பாத ஒரு வட்டச்செயலாளரோ, “""இப்படியெல்லாம் நடக்குதுன்னா, அதுக்குக் காரணம்... தைரியமில்லாத எடப்பாடிதான். இப்படி ஒரு துரோகம் கட்சிக்கு நடந்திருக்கு. அவர்களை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கியிருக்கவேண்டாம். அவர் செய்யமாட்டார்''’என்றார் எரிச்சலாய்.

அ.தி.மு.க. பிரதிநிதி சன்னாசி நம்மிடம், ""மதுரை மாநகரில் யாரும் வேலையே பார்க்கவில்லை. வேலை பார்க்கவேண்டாம் என்று செல்லூரார் சொல்லிவிட்டார். அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? டாக்டரைத் தோற்கடிக்க இருவரும் ஒன்று சேர்ந்துகிட்டாங்க. பெரும்பாலான வட்டச்செயலாளர்கள் அதிருப்தியில்தான் இருக்காங்க. இப்பதான் ஒவ்வொருத்தரா சமூக வலைத்தளத்தில் தங்களது குமுறலைக் கொட்டத் தொடங்கியிருக்காங்க''’என்றார் சங்கடக் குரலில்.

அ.தி.மு.க.வின் மற்றொரு வட்டச் செயலாளரோ, ""தெருத் தெருவா போஸ்டர் ஒட்டி, இந்தக் கட்சியை வளர்த்தவன் சார் நான். எங்களுக்கு இரட்டை இலையைத் தவிர வேற சின்னமே தெரியாது. நானே மாற்றி பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்ருக்கேன்னா பார்த்துக்கங்க. இரண்டு மாவட்டச் செயலாளர்களும் ஒன்றுசேர்ந்து டாக்டர் சரவணனைப் பழிவாங்கிட்டாங்க. அதனால் அ.தி.மு.க.வின் கோட்டையான மதுரையிலேயே ஓட்டை விழுந்திருக்கு. இங்க யார் மேலேயும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, யாருக்கும் துணிவு இல்லை. தலைமையே வீக்கா இருக்கு''’என்கிறார் ஆதங்கமாய்.

அ.தி.மு.க.வின் வட்டப் பிரதிநிதியான சரவணனோ, ""எல்லா கட்சியிலேயும் உள்ளடி வேலை இருக்கும். அதுபோல், எங்க கட்சியில் மாவட்டச்செயலாளரில் இருந்து அ.தி.மு.க.வின் தலைவர் எடப்பாடிவரை சொந்தக் கட்சிகாரர்களையே கட்டம் கட்டி வெளியேத்துறாங்க. அவ்வளவுதான். டாக்டர் சரவணன் நம்மைவிட வளர்ந்துருவாரோ என்று சரியா வேலை பார்க்கலை. அதே மாதிரி கட்சி தோற்றதற்கு பிறகாவது, பிரிந்துபோன தலைவர்கள் எல்லோரையுமே ஒன்றுசேர்த்து, கட்சியை பலப்படுத்தவேண்டும். அதைச் செய்ய மறுக்கிறார்கள். இனி அடுத்து வரும் தேர்தலில், நடிகர் விஜய் வேற கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அடுத்தடுத்த தேர்தலில் அ.தி.மு.க. நான்காவது இடம், ஐந்தாவது இடம் என்று போய்விடும். என்னை மாதிரி உண்மையான விசுவாசி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதான்னு கத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். கட்சியில கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை சுயநலம், ஈகோ, பதவி வெறி பரவியிருக்கு. இவர்களே கட்சியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்போல. ஒவ்வொரு தலைவர்கள் மறைவின்போதும் அ.தி.மு.க.விற்கு நெருக்கடி நிலைமை வரும். பிறகு அதுவே சரிசெய்து மாபெரும் கட்சியாக நிமிர்ந்து நிற்கும். அந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம்''’என்றவர் விழிகளில் நீர் வழிந்தது.

எடப்பாடி தொடங்கி செல்லூர் ராஜு வரையிலான பவர் புள்ளிகளுக்கு எதிராக, அ.தி.மு.க.வில் எரிமலை வெடிக்க ஆரம்பித்திருப்பதை, தமிழகத்துக்கு உணர்த்துகிறது மதுரையின் தட்பவெப்பம்!