நாடாளுமன்றத் தேர்தலை மையப் படுத்தி பா.ஜ.க.வை அழிக்கும் திட்டத்துடன் எடப்பாடி செய லாற்றி வரும் நிலையில், தி.மு.க. கூட்டணியிலும் சர்ச்சைகளும் மோதல்களும் அதிகரித்தபடி இருக்கின்றன.
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை செருப்புக்கு கீழாக நடத்துகிறார் என அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சித்துவிட்டு பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய அக்கட்சியின் ஐ.டி. விங்க் தலைவர் நிர்மல்குமார், உடனடியாக எடப்பாடியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். இணைப்புக்குப் பிறகு, அண்ணாமலையை 420 என்றெல்லாம் மிக மோசமாக குற்றம்சாட்டினார் நிர்மல்குமார்.
அதேசமயம் அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க.வின் ஐ.டி. விங்கின் முக்கிய பொறுப்பாளர் கள், பா.ஜ.க.வின் மாவட்ட நிர்வாகிகள் என பலரும் பா.ஜ.க.விலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் அடைக்கலமானார்கள். இந்த வெளியேறும் படலம் விரிவடைந்துவரும் நிலையில், அப்படி வெளி யேறுபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அ.தி.மு.க.வில் சேர்த்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதனால் கோபம் தலைக்கேறிய அண்ணா மலை, மத்திய உளவுத்துறையிலுள்ள தனது நண்பர்களை தொடர்புகொண்டு, என்ன நடக்கிறது என விசாரித்திருக்கிறார். அப்போது அண்ணா மலையிடம் பேசிய உளவுத்துறையினர், உங்கள் தலைமையிலான தமிழக பா.ஜ.க.வை அழிக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக தனது கட்சியின் மாவட்ட செயலாளர் களிடம், ’அண்ணாமலை மீது அதிருப்தியிலுள்ள பா.ஜ.க.வினரை அ.தி. மு.க.வுக்குள் கொண்டு வாருங்கள். என்ன விலை கொடுத்தாலும் அதைச் செய்யுங்கள். நாடாளு மன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்காது. புதிய கூட்டணியை நாம் உருவாக்குவோம்’ என எடப்பாடி சொல்லி யிருக்கிறார்.
எடப்பாடியின் அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில்தான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மா.செ.க்கள் அனைவரும் அவரவர் மாவட்டங்களில் பா.ஜ.க.வினரை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள னர். அதற்கான வலை ஸ்ட் ராங்காக வீசப்பட்டுள்ளது” என்று அண்ணாமலைக்கு தகவல் தந்துள்ளது மத்திய உளவுத்துறை.
எடப்பாடியின் இந்தத் திட் டத்தை ஜீரணிக்க முடியாத அண்ணாமலை, இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஒரு ரிப்போர்ட்டை அனுப்பி விட்டு, பதிலுக்காக காத்திருந்தார். ஆனால், கட்சித் தலைமை யிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இதனையும் சகித்துக்கொள்ள முடியாமல் தவித்த அண்ணாமலை, எடப்பாடிக்கு எதிராக, தான் நினைத்த ரியாக்ஷனைக் காட்டும் வகையில், ‘’திராவிட கட்சிகளை சார்ந்துதான் பா.ஜ.க. வளரும் என்கிற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இன்றைக்கு பா.ஜ.க.வில் உள்ள ஆட்களை இணைத்துக் கொண்டால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சி. யாரை வேண்டுமானாலும் பா.ஜ.க.விலிருந்து இழுத்துக்கொள் ளுங்கள். 4 பேர் வெளியேறினால் 40 பேர் பா.ஜ.க.வுக்கு வருவார்கள். எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு” என்று எடப்பாடியின் பெயரை குறிப்பிடாமல் தாக்கினார்.
இதனையடுத்து, எடப்பாடியை கண்டித்து அவரது உருவப் படத்தை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எரித்தனர். இந்த சம்பவம் அ.தி.மு.க. மா.செ.க்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டதையறிந்து அதனை தடுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடிக்கும் அண்ணாமலைக்குமிடையிலான மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், எடப்பாடிக்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை வந்ததற்குப் பிறகு, அ.தி.மு.க.வினர் பலரையும் பா.ஜ.க.வில் அவர் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் நாங்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இப்போ, அண்ணா மலையின் அரசியல் பிடிக்காததால் பா.ஜ.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். இதில் அண்ணாமலை ஆத்திரப்பட என்ன இருக்கிறது? கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தக்கவைத்துக்கொள்ள திறனற்றவராக இருக்கும் அண்ணாமலை, தனது லாயக்கில்லாத தனத்தை மறைப்பதற்காகவே அ.தி.மு.க.வுக்கு எதிராக கொந்தளிக் கிறார். ஜெயலலிதாவின் தலைமை பதவியோடு தனது பதவியையும் ஒப்பிட்டுக் கொள்கிறார். ஜெயலலிதாவின் கால்தூசுக்கு அண்ணாமலை சமமாவாரா? அவரது திமிரை அ.தி.மு.க. ஒடுக்கும்’''’என்கிறார்கள் ஆவேசமாக.
இதற்கிடையே,”அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை உதறினால்தான் தி.மு.க. கூட்டணியை உடைத்து அங்குள்ள சில கட்சிகளை அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர முடியும் என்கிற திட்டத்தின் முன்னோட்ட மாகத்தான் பா.ஜ.க.வை அழிக்கும் அஸ்திரத்தை வீசத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி”என்கிறார்கள் எடப்பாடியின் அகம், புறம் அறிந்தவர்கள்.
இது குறித்து நம்மிடம் மனம் திறந்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவர், "தி.மு.க. கூட்டணியில் 10 கட்சிகள் இருக்கின்றன. இந்த கட்சிகளுக்கு சமீபகாலமாக தி.மு.க. மீது அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியை எடப்பாடி மெல்ல மெல்ல அந்த கட்சிகளின் தலைமையிடம் அதிகரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத் தில் இது பெரிதாக வெடிக்கக்கூடும். தி.மு.க. கூட்டணியும் உடையும். அப் போது அவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக் குள் வருவார்கள். அப்படி அவர்கள் வருவதற்கு தடையாக இருப்பது அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு நீடிப்பதுதான். அதனால், அந்த தடையை அகற்றுவதில் எடப்பாடியின் கவனம் இப்போதிலிருந்தே கூடுதலாகியிருக்கிறது”என்று விவரிக்கிறார் அவர்.
இந்த நிலையில், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு உள்ளிட்ட சீனியர்களிடம் கலந்து பேசினார் எடப்பாடி. அப்போது, பா.ஜ.க.வை எதிர்க்கும் மனநிலையிலிருந்து விலகிவிடக்கூடாது. பா.ஜ.க.வுடனான உறவுகளை துண்டிப்பது அரசியல்ரீதியாக பல நன்மைகளை அ.தி.மு.க.வுக்கு கொடுக்கும். நமக்கு எதிராக வழக்குகளைக் காட்டி மோடி அரசாங்கம் மிரட்டினால் பயப்படக்கூடாது. அப்படி அவர்கள் மிரட்டி ஆக்ஷன் எடுத்தால், அதுவும் நமக்கு நல்லதைத்தான் செய்யும். மோடியா? லேடியா? என்று மக்களிடம் கேட்டார் ஜெயலலிதா. அதேபோல, நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக அரசியல் செய்தால்தான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்று எதார்த்த அரசியலை எடப்பாடி யிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் மாஜிக்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதல்கள் இப்படி இருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியிலும் அதிருப்திகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தி.மு.க. கூட்டணி நீடிக்கும் என முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது உறுதிப்படுத்தினாலும் கூட்டணிக்குள் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
இதுகுறித்து தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் நாம் விசாரித்தபோது, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவள வனின் பொதுவெளி பேச்சுக்கள் தி.மு.க.வை விமர்சிப்பதாகவே பார்க்கப்படுகிறது. திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட திருமா, "தமிழக திரைத்துறை ஒரு நபரின் கைக்குள் சிக்கியுள்ளது' என உதயநிதியை மறைமுகமாக சாடினார். அந்த பேச்சு அரசியல்ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தலைவர் ஸ்டாலின் ரசிக்கவில்லை.
அதேபோல, சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "பா.ம.க.-பா.ஜ.க. கட்சிகள் இருக்கும் கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகள் இருக்காது. இப்படிச் சொல்லும் துணிச்சல் இந்தியாவில் எவனுக்காவது இருக்கிறதா? எனக்கு பதவி தலைமுடிக்கு சமம். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய திருமா, தமிழக காவல்துறை, பா.ஜ.க.வினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?'' என்றெல்லாம் ஆவேசப்பட்டிருக்கிறார். இதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டியதிருக்கிறது.
இந்தியாவில் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மிக உறுதியாக இருப்பவர் தலை வர் ஸ்டாலின். பா.ஜ.க.வுடன் எந்த சூழலிலும் கூட்டணி கிடையாது என்பதும் அவரது நிலைப்பாடு. அப்படி யிருக்கையில், திருமாவளவன் யாருக்கு சவால் விடுகிறார்? தி.மு.க.வை சீண்டுவது போலத்தானே இருக்கிறது. தமிழக காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த காவல்துறை பா.ஜ.க.வினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என கேள்வி கேட்டால் அதனை எப்படி எடுத்துக் கொள்வது?
சமீபகாலமாக அவரது அரசியலில் மாற்றம் தெரிகிறது. அதாவது, அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடிக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வந்ததும் முதல்நபராக எடப்பாடிக்கு வாழ்த்துச் சொல்கிறார் திருமா. அ.தி.மு.க. வழக்கில் இறுதி தீர்ப்பும் வரவில்லை; அ.தி.மு.க. முழுமையாக எடப் பாடியிடமும் போகவில்லை. அப்படியிருக்கையில் ஒரு தீர்ப்புக்காகவா வாழ்த்தெல்லாம் சொல் வார்கள்? இது ஒருபுறமிருக்க, ஈழப் பிரச்சனை பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திருமா, வைகோவுக்கு எதிராக அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்த பேச்சும் சர்ச்சை யாகியுள்ளது.
அதேபோல, கூட்டணியிலுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும் தி.மு.க. அரசை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாசூக்காக விமர்சிக்கிறார். இடதுசாரிகளும் கூட தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக போராடத் துவங்கியிருக்கிறார்கள். ஆக, அ.தி.மு.க. எடப்பாடி போடும் திட்டத்திற்கு தி.மு.க. கூட்டணியிலுள்ள சில கட்சிகள் தலையாட்டிக் கொண்டிருப்பதாகவே தி.மு.க. மூத்த தலைவர் களிடம் பேச்சு இருக்கிறது. இப்படியே போனால், தி.மு.க. கூட்டணி நிலைக்குமா என்பதும் கேள்விக்குறிதான்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இத்தகைய சூழலில் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்த திருமாவளவன், "ஆட்சி நிர்வாகத்தில் உள்ள குறை களையும், காவல்துறையினரின் தவறுகளையும் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்டுகிறோமே தவிர, ஆட்சி தலைமையையோ தி.மு.க.வையோ விமர்சிக்கவில்லை. தி.மு.க. கூட்டணி வலிமையாக இருக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம். தி.மு.க.-வி.சி.க. கூட்டணியில் யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது. அது உறுதியாக இருக்கிறது''’என்று விளக்கமளித்திருக்கிறார். ஆனாலும், சிறுத்தைகள் உள்பட சில தோழமைக் கட்சிகளின் நடவடிக்கையில் ஒருவித நம்பிக்கையற்றே இருக்கிறது தி.மு.க. தலைமை.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் நிலவும் அதிருப்தி அரசியல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க பூதாகரமாக வெடிக்கப்போகிறது!
-இரா.இளையசெல்வன்