"சசிகலாவுடன் மட்டுமல்ல; பன்னீர்செல்வத்துடனும் இணைந்து செயல்பட 100 சதவீதம் வாய்ப்பில்லை. இத்துடன் இதற்கு முற் றுப்புள்ளி வைக்கிறேன்''’என்று அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் பின்னணியில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ராஜதந்திரம் அடங்கியிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது,’ ’"இரட்டைத் தலைமையில் அ.தி.மு.க. இயங்கிய சூழலில், பிரிந்தவர்களை சேர்த்துக்கொள்வது பற்றி ஒருமுறை விவாதம் நடந்தது. அப்போது, "பதவிக்கு ஆசைப்பட வில்லையெனில் சசிகலாவைக்கூட கட்சிக் குள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனா, டி.டி.வி. தினகரனை மட்டும் சேர்த்துக்க முடியாது' என ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த வெறுப்பு தற்போது மாறியிருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை எடப்பாடி, சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் சந்தித்தபோது, "சட்டமன்ற தேர்தலில் தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 10 சீட் கொடுக்க வலியுறுத்தினேன். ஆனா, நீங்க அதை ஏற்கவில்லை. அவரை சேர்த்திருந்தால் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்காது' என்றிருக்கிறார் அமித்ஷா.
தினகரன் மீது அமித்ஷா வைத்திருக்கும் அழுத்தமான பார்வையை மறுத்துப் பேசாத எடப்பாடி பழனிசாமி, "பா.ஜ.க.வுடன் கூட்டணியை தொடர எங்களுக்கு விருப்பம்தான். இது வெறும் தேர்தல் கூட்டணியாக இருந்துவிடாமல், மத்திய ஆட்சியிலும் தொடரவேண்டும். அதனால், சி.வி.சண்முகத்தை உங்கள் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளுங்கள். நம் கூட்டணி வெளிப் படையாக ஸ்ட்ராங் ஆகும். அமைச்சரவையில் அ.தி.மு.க.வை இணைத்துக்கொண்டால், நாடாளுமன்ற தேர்தலில் 50:50-க்கு என சீட் ஷேரிங் வைத்துக்கொள்ளலாம். நீங்கள் யாரையெல்லாம் கூட்டணிக்குள் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டிலிருந்து பகிர்ந்து கொடுத்துவிடுங்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நம் கூட்டணியை தொடரலாம்'' என ஒரு திட்டத்தைக் கொடுத்தார்.
"அமைச்சரவையில் அ.தி.மு.க. இணைந் தால் ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு ஆதரவாக தம்மிடம் வலியுறுத்துவதை பா.ஜ.க. நிறுத்திக் கொள்வதோடு, அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமை விசயத்தில் மோடியும் அமித்ஷாவும் தன்னை ஆதரிப்பார்கள்' என்பது எடப்பாடி யின் ராஜதந்திரமாக இருந்தது. அமித்ஷாவோ "பிரதமரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்' என்றதோடு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எடப்பாடியும் அவரது சகாக்களும் சென்னைக்கு திரும்பிய நிலையில், இதுவரை இதுகுறித்து எந்த பதிலையும் டெல்லி தரவில்லை.
இந்த சூழலில்தான், "எடப்பாடியிடம் பேசவேண்டும்' என ஒரு அதிர்ச்சியை சமீபத் தில் கொடுத்திருக்கிறார் தினகரன். அதன்படி தூது செல்ல, இருவரும் பேசவும் செய்திருக்கி றார்கள். அப்போது, "நடந்தவைகளை மறந்து விடுங்கள்; அரசியலில் நாம் இணைந்து பயணிக்க வேண்டும்' என தினகரன் சொல்ல, எடப்பாடிக்கு ஒன்றுமே புரியவில்லை. இதனை யடுத்து, இருவரும் நிறைய விசயங்களை பேசியிருக்கிறார்கள்.
குறிப்பாக, "ஓ.பி.எஸ்.ஸை ஒப்பிடும்போது அ.ம.மு.க.விடம்தான் அ.தி.மு.க.வின் முக்குலத் தோர் வாக்குகளும், தி.மு.க.வின் அதிருப்தி வாக்கு களும் இருக்கின்றன. நாம் மட்டும் இணைந் தாலே போதும் அ.தி.மு.க.வின் முன்பிருந்த பலம் வந்துவிடும். டெல்லியும் இதைத்தான் எதிர்பார்க்கிறது' என தினகரன் சொன்னது எடப்பாடியை யோசிக்க வைத்தது.
பேச்சுவார்த்தை மேலும் நீடித்த நிலையில், "அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் எனக்கு வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் என்னை நம்பியிருந்தவர்களுக்கு 5 சீட் வேண்டும்; ராஜ்யசபா தேர்தல் வரும்போது எனக்கு ஒரு எம்.பி. சீட் வேண்டும்' என்றெல் லாம் கோரிக்கை வைத்திருக்கிறார் தினகரன்.
இதைப்பற்றி மூத்த தலைவர்களிடம் எடப்பாடி ஆலோசிக்க, "ஓ.பி.எஸ்., சசிகலாவை விட தினகரன் பெட்டர்னுதான் தோன்றுகிறது. நீங்க பொதுச்செயலாளராக அவர் ஒப்புக்கொண்டால் பிரச்சனையே இல்லையே. டெல்லியும் தினகரனை சேர்த்துக்கொள்ளுங்கள்னுதான் யோசனை சொல்கிறார்கள். சசிகலா, தினகரனுக்காகத்தான் ஓ.பி.எஸ்.ஸை முக்குலத்தோர் சமூகம் ஆதரிக்கிறது. தினகரனோடு நாம் கை குலுக்கினால் அந்த ஆதரவு ஓ.பி.எஸ்.ஸுக்கு மைனஸ் ஆகும். அப்போது, கட்சி யாரிடம் வலிமையாக இருக்கிறதோ அவர்களைத் தான் பா.ஜ.க.வும் ஆதரிக்கும். ஓ.பி.எஸ்.ஸை பா.ஜ.க. கழட்டிவிடக்கூட தயாராக இருக்கும்' என்றெல்லாம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதுதான், ஓ.பி.எஸ். ஸையும் சசிகலாவையும் இணைத்துக்கொள்ள 100 சதவீதம் வாய்ப்பே இல்லையென்று எடப்பாடி திடமாக சொல்வதன் பின்னணி.
"தற்போது பேச்சளவில்தான் இந்த திட்டம் இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் அனைவரிடமும் இந்த ராஜதந்திரத்துக்கு ஆதரவு இருக்கிறதா என தெரிந்துகொண்ட பிறகே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்று விரிவாக விவரிக்கின்றனர் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.
"ஓ.பி.எஸ். -சசிகலாவுக்கு எதிராக தினகரன் அரசியல் செய்கிறாரா?' என அ.ம.மு.க. தரப்பில் விசாரித்தபோது,”"அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என சசிகலா சொல்லி வந்தாலும் அதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. தனக்கு எதிராக உள்ள சில வழக்குகளிலிருந்து வெளியே வருவதற்கும், முடக்கப்பட்ட சொத்துக்களை ரிலீஸ் செய்ய வைப்பதற்கும்தான் அவர் டெல்லியில் தனது லாபியை பயன்படுத்துகிறார்.
டெல்லியும்கூட மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலா அதிகார மையமாக வருவதற்கு உடன் படவில்லை. ஓ.பி.எஸ்.ஸை வலுப்படுத்த அவருக்கு பின்னாலிருந்து உதவுங்கள் என்றுதான் சசிகலா வுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க. வின் தலைமைக்கு சசிகலா வருவது குதிரைக் கொம்பு என்பதை தினகரன் உணர்ந்தே இருக்கிறார்.
அது மட்டுமல்ல, சசிகலா அவரது சகோதரர் திவாகரன் சொல்வதைக் கேட்டுத்தான் நடந்து கொள்கிறார். சசிகலாவை இயக்குவது திவாகரன்தான். சசிகலாவை பொறுத்தவரை, தனது சகோதரனா? தனது அக்கா பசங்களா? என வரும்போது முதல் சாய்ஸ் சகோதரனுக்குத்தான் என தெளிவாக இருப்பவர். திவாகரனிடமும் தனது கணவரின் சகோதரர் எம்.ஆரிடமும்தான் அரசியல்ரீதியாக இப்போதெல்லாம் ஆலோசிக் கிறார் சசிகலா.
பொதுவாகவே திவாகருக்கும் தினகரனுக் கும் ஏழாம் பொருத்தம். இந்த நிலையில், திவாகர னுக்கு சசிகலா கொடுக்கும் முக்கியத்துவத்தை தினகரனும் சரி, அவரது மனைவி அனுராதாவும் சரி விரும்பவில்லை. இதனால்தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், சசிகலாவின் அரசியலை நம்புவதைவிட எடப்பாடி அரசியலை ஏற்கலாம் என தினகரன் ஆலோசித்திருக்கிறார். இந்த பின்னணியில்தான் எடப்பாடியிடம் அவர் பேசியிருக்கிறார்''’என்கிறது அ.ம.மு.க. வட்டாரம்.
எடப்பாடியும் தினகரனும் இணைவார் களா? என்பதே அ.தி.மு.க.வின் மேலிடத்தில் நடக்கும் ரகசியம். கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்தே தீரும். அப்போது, ஓ.பி.எஸ். -சசிகலாவுக்கு எதிராக இணையத் துடிக்கும் எதிரிகளின் திட்டம் முழுவடிவம் பெறும்போது, தமிழக அரசியல் பரபரப்பாகும்.
________________
எம்.ஜி.ஆர். குடும்பத்தைக் குழப்பிய சசி!
அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழாவை கொண்டாட எடப்பாடி, பன்னீர், சசிகலா மூவரும் தனித்தனியாக திட்டமிட்ட ரகசியங்களை பற்றி கடந்த இதழில் நாம் எழுதிய அட்டைப்பட செய்தி, அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலுள்ள காதுகேளாத வாய்பேசாத பள்ளிக் கூடத்தின் ஆடிட்டோரியத்திலும் பள்ளியின் வளாகத்திலும் பொன்விழா நிறைவுக் கூட்டத்தை நடத்த விரும்பினார் சசிகலா. பள்ளி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
நிகழ்ச்சியை நடத்துவது குறித்து, பள்ளி உரிமையாள ரான லதா ராஜேந்திரனின் மகன் குமார் ராஜேந்திரனிடம் அனுமதி பெறுவதற்காக தனது கொழுந்தனார் எம்.ஆர். (எம்.நடராஜனின் சகோதரர்) உள்ளிட்ட சிலரை அனுப்பி வைத்தார் சசிகலா. குமார் ராஜேந்திரனை சந்தித்து அவர்கள் பேச, முடியவே முடியாது என கறாராக தெரிவித்து விட்டார் குமார் ராஜேந்திரன். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய எம்.ஆர்., சசிகலாவை சந்தித்து விபரம் தெரிவித்திருக்கிறார். உடனே குமார் ராஜேந்திரனிடம் பேச சசிகலா போன் செய்தபோது சசிகலாவின் அழைப்பை ஏற்கவில்லை குமார். இதனால் கடுப்பான சசிகலா, "எம்.ஜி.ஆர். தோட்டத்தில்தான் நிகழ்ச்சியை நடத்தியாக வேண்டும்' என்கிற பிடிவாதத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், அதே எம்.ஜி.ஆர். தோட்டத்தில் லதாவின் சகோதரியான சுதா விஜயனின் கட்டுப்பாட்டிலிருக்கும் எல்லைக் குள் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு சுதாவிடம் பேசுமாறு எம்.ஆருக்கு உத்தரவிட, அவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஓ.கே. வாங்கி யிருக்கிறார். இதற்காக, ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் சுதாவின் மகனான நடிகர் ஜூனியர் ராமச்சந்திரனின் உதவியையும் பெற்றுள்ள சசிகலா தரப்பு, நிகழ்ச்சி நடக்கும் ஏரியாவை பார்வையிட்டுள்ளது. எம்ஜிஆர் குடும்பத்துக் குள்ளும் குழப்பத்தை உருவாக்கியுள்ளார் சசிகலா.