acs

2016ஆம் ஆண்டுக்குப்பின் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டையென்பதே அடையாளமென மாறிப்போன நிலையில், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதை வைத்து, சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடம் ஆயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது அம்பலமாகியுள்ளது. இந்தியா முழுமைக்குமான ஆதார் ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கிவருகிறது. இதன்கீழ் நாடு முழுக்க 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கும் பணிகள் நடக்கின்றன. இதில், பெங்களூர் மண்டலத்தின்கீழ் தமிழ்நாடு செயல்படுகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் வங்கிகள் என 46 ஏஜென்சிகள் மூலமாக ஆதார் அட்டை நிறுவனம் செயல்படுகிறது. இதில், மெட்ரோ சிட்டி பகுதிகளுக்கு கூடுதலாக, ஆதார் ஆணையத்தின்கீழ், அரசும், தனியாரும் 50:50 என்ற விகிதத்தில் இணைந்து செயல்படுகின்றன.

Advertisment

இந்த வகையில் சென்னையில் கோயம்பேடு 10 ஸ்கொயர் மால் முதல் தளத்தில் செயல்படும் ஆதார் அட்டை அலுவலகத்தில், ஆதார் அட்டை புதுப்பித்தல், திருத்தம் செய்தல் என அனைத்தும் செய்து தரப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு அங்கீகரித்த புகைப்படமுள்ள அடையாள அட்டையை ஆதாரமாக வைத்து மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் ஆதார் அட்டையில் பிழைத்திருத்தம் செய்ய ஆயிரக்கணக்கில் கொள்ளையடிப்பதாக நக்கீரன் அலுவலகத்தில் ஒருவர் புகாரளித்து புலம்பினார். 100 ரூபாயில் முடியும் விஷயத்திற்கு ஆயிரக்கணக்கில் வசூலா என்பதைக் கண்டறிய நாமே களத்தில் இறங்கினோம்.

புகாரளித்தவர் குறிப்பிட்ட செனாய் நகர் இ-சேவை மையத்திற்கு பயனாளி போன்று சென்று, ஆதார்கார்டிலுள்ள பிறந்த தேதியில் திருத்தம் செய்ய வேண்டுமெனக் கேட்டதும், அங்கு பணிபுரிபவர், ""ஆதாரமாக ஓட்டர் ஐ.டி., அல்லது பத்தாம் வகுப்பு மார்க்ஷீட் இருக்கிறதா?'' எனக் கேட்டார். கைவசம் பான் கார்டு, கல்லூரி டி.சி., மார்க்ஷீட் இருப்பதாகக் கூறினோம். ஆனால் அதையெல்லாம் ஆதாரமாக ஏற்கமுடியாதெனக் கூறியவரிடம், ""அரசாங்கம் சொன்னபடி தான் ஆதாரத்தை வைத்திருக்கிறோமே, இதற்குமேல் வேறென்ன வேண்டும்?"" என்றதும், ""இதை வைத்தெல்லாம் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது. நீங்கள் கோயம்பேட்டிலுள்ள 10 ஸ்கொயர் மாலுக்கு சென்றுதான் மாற்ற வேண்டும்'' எனத் திருப்பியனுப்பினார்.

Advertisment

அதன்படி, 10 ஸ்கொயர் மாலுக்கு சென்றால் அங்கே எக்கச்சக்கமான கூட்டம்! டோக்கன் வாங்கிக்கொண்டு காத்திருந்தோம். அங்கிருப்பவர்களெல்லாம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆவடி, தாம்பரமெனப் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். அங்கெல்லாம் இ-சேவை மையங்களில் செய்துதர மாட்டார்களா என விசாரித்தபோது, அவர்கள் கேட்ட ஆதாரமில்லாததால் இங்கே அனுப்பிவிட்டார்களெனக் கூறினார்கள். அங்கே காலை முதல் மாலைவரை காத்துக்கிடந்து நொந்து வெளியேறியபோது, விஜய் என்பவர் எங்களை அணுகி விவரங்களைக் கேட்டவர், ""இவங்க இப்படித்தான்... நான் சொல்பவரிடம் சென்றால் ஒரே நாளில் முடித்துத் தருவார்'' எனக்கூறி, 10 ஸ்கொயர் எதிரிலுள்ள அரும்பாக்கம், ஜெய்நகர், 18வது தெருவிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ""அந்த வீட்டினுள் ராஜா என்பவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொன்னால் முடித்துக் கொடுப்பார்'' என்றார். அதேபோல் வீட்டினுள் சென்று ராஜா என்பவரிடம் விவரத்தை சொல்லி, ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றித்தரக் கேட்டதும், ஆதார் அட்டையிலிருந்த 12 எண்களை கணினியில் போட்டுப் பார்த்துவிட்டு, ""இதை மாற்றிவிடலாம்... அதற்கு 6,700 ரூபாய் ஆகும்"" என்றதும் தூக்கிவாரிப் போட்டது. ""விஜய் சார் சொன்னதால்தான் இந்த ரேட், மத்தவங்களுக்கு 9,700 ஆகும்'' என்றார். சந்தேகத்தைத் தீர்க்க, மற்றவர்களிடம் வாங்கிய கணக்கையும் காட்டினார். அவரிடம், ""நாளைக்கு வருகிறோம்'' எனக் கூறிவிட்டு கிளம்பினோம். அதிகபட்சம் 100 ரூபாயில் முடியும் விஷயத்துக்கு 9,700 வரை கேட்பது கொள்ளையோ கொள்ளை.

இவர்களது லிங்க் குறித்து புலனாய்வு செய்ததில், 10 ஸ்கொயர் மால் அலுவலகத்திலுள்ள உயரதிகாரியின் மெயிலுக்கு ராஜா மெயில் அனுப்பினால், அந்த ஆதார் அட்டைக்கு தேவைப்படும் மாற்றத்தை அந்த அதிகாரி செய்துகொடுப்பாராம். இதற்கான ஆட்களைப் பிடித்துக்கொடுக்கும் வாட்ச்மேன் விஜய்க்கு 700 ரூபாய், டீலர் ராஜாவுக்கு 2,000 ரூபாய், உயரதிகாரிக்கு 4,000 ரூபாய் எனப் பணத்தைப் பிரித்துக்கொள்வார்களென்று அங்கே பணியாற்றும் பெண் அதிகாரி தெரிவித்தார். நேர்மையான முறையில் திருத்தம் செய்யக் கேட்பவர்களிடமே இவ்வளவு கமிஷன் அடிப்பவர்கள், கமிஷனுக்காக போலி ஆதார் கார்டு செய்து தரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இது எவ்வளவு பெரிய மோசடி!

சென்னையைப் போலவே ஆதார் கார்டில் பிழைத்திருத்தம் செய்யவேண்டிய தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களனைவரும் மதுரையிலுள்ள ஒன்றிய அரசின் ஆதார் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டு அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்ததால் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள ஒன்றிய அரசின் ஆதார் தலைமையகத்தில் விசாரணையில் இறங்கினோம்.

அங்கு ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்காகக் குவிந்துள்ள கூட்டத்தில் சிக்கி மயங்கிய பெரியவரை ஆசுவாசப்படுத்தி விவரம் கேட்டபோது, ""அய்யா என் பெயர் சபூரான். திருச்சியை சேர்ந்தவன். என்னோட ஆதார் அட்டை தொலைஞ்சுபோனதால் திருச்சி ஆட்சியர் அலுவலகத்திலிருக்கும் இ-சேவை மையத்துக்கு போனேன். அவங்க தான் மதுரையிலிருக்கும் தலைமை அலுவலகத்துக்கு போங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. காலைல ஏழு மணிக்கெல்லாம் வந்து டோக்கன் போட்டுக் காத்திருக்கேன். கூட்ட நெரிசல் ரொம்ப இருக்கு தம்பி. முன்னல்லாம் ஊர்லயே பண்ணுவாங்க, இப்ப மத்திய அரசோட கட்டுப்பாட்டில் இருக்குன்னு சொல்லி, மதுரை இல்லன்னா சென்னைக்கு போகச்சொல்றாங்க'' என நொந்துகொண்டார்.

அடுத்து, கைக்குழந்தையோடு இருக்கும் கதிரேசன், ""சார், குழந்தைக்கு ஆதார் எடுக்கறதுக்காக அலைய விடுறாங்க. முன்னல்லாம் ஊர்லயே தான் எடுத்தோம். இப்ப எல்லாத்திக்கும் மதுரைக்கு அலைய விடுறாங்க. காலைல வந்து டோக்கன் வாங்கி தனித்தனி ரசீதும் போட்டாச்சு. இப்ப இரவாகிடுச்சுன்னு நாளைக்கு வரச்சொல்றாங்க. தமிழ்நாடு அரசே இதைச் செஞ்சா இம்புட்டு சிரமம் இருக்காதுல்ல சார்'' என்றார். இதேபோல் ராமநாதன் என்ற பெயர் திருத்தத்துக்காக ராமநாதபுரத்திலிருந்து வந்தவர், இதற்காக மதுரையில் இரண்டு நாட்களாக ரூம் போட்டுத் தங்கி அலைகிறாராம்!

ஆதார் குறித்து ஒன்றிய, மாநில அரசின் தலைமையகங்களில் புகாரளித்துள்ள மாயகிருஷ்ணன் கூறுகையில், ""தனியார் வசம் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ள ஆதார் சேவைகளை அரசே எடுத்துச்செய்ய வேண்டும். ஐ.டி.இ.எம்.ஐ.ஏ. என்ற தனியார் கார்பரேட் நிறுவனம், இந்தியர்களின் 140 கோடி டேட்டாவையும் உலகிலுள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்க முடியும். ஏற்கெனவே இதுபோல் விற்கப்படுவதை எதிர்த்து வழக்குகள் நடக்கின்றன. இது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும். ஆதார் சேவை தொடர்பான அனைத்தையும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளோடு இணைந்து செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அலைச்சல், சிரமங்கள், குழப்பங்கள் அனைத்தும் குறையும்'' என்றார்.

ஆதார் அலுவலக தலைமை அதிகாரியை சந்தித்து, ""அந்தந்த மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களிலேயே இந்த திருத்தங்களைச் செய்யும்படி வைத்தால் இப்படி அலைய வேண்டியதில்லையே?'' எனக் கேட்க... ""என் பெயர் விஜய். எல்லா இ-சேவை மையத்திலும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது. பெயர் திருத்தம், அழிந்த ரேகையை மாற்றுவது உள்ளிட்டவற்றை இரண்டு முறைக்கு மேல் மற்ற இடங்களில் செய்ய முடியாது. எங்களால் தான் அதெல்லாம் முடியும். இது மத்திய அரசின் மையமில்லை. இது தனியார் கான்ட்ராக்ட் நிறுவனம். இ-மெயில் லிங்க் மூலம் ஒன்றிய அரசின் ஆதார் தலைமையகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவ்வளவே'' என முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து இந்திய ஆதார் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, ""நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்ற தவறுகள் நடந்திருக்கும்பட்சத்தில் அது குறித்த விவரங்களை ட்ற்ற்ல்ள்://ன்ண்க்ஹண்.ஞ்ர்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் புகாராகப் பதிவு செய்தால் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்கள்.

ஆதார் என்பது அனைத்துக் குடிமக்களுக்கும் அவசியம் எனச் சொல்லும் ஒன்றிய அரசாங்கம், அந்த ஆதார் அட்டையைப் பெறுவது, பிழை திருத்துவது போன்றவற்றை ஆங்காங்கே உள்ள இ-சேவை மையங்களின் மூலமாகவே குறைந்த செலவில் செய்துகொள்ளும்படி எளிமைப்படுத்த வேண்டும். ஆதார் அட்டையின்மூலம் பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிக்கும் மோசடியாளர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.