மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைக் குழு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையின் பொதுக் கணக்குக் குழு இந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தவேண்டும். இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின்போது, மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது ஒழுக்கமின்றி நடந்துகொண்டதாகக் கூறி, இந்தப் பொதுக் கணக்குக் குழுவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர்ரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்திருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
முதலில் இந்த ஏழரை லட்சம் கோடி முறைகேடு விவகாரத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.
பாரத்மாலா திட்டம் என்பது இந்தியா முழுவதும் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலையமைக்க பிரதமர் மோடி தலைமை வகிக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்த தொகை ரூ.15 கோடி. ஆனால் செலவிட்ட தொகை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32 கோடி. 5.34 லட்சம் கோடியில் 34,000 கிலோமீட்டர் சாலை அமைக்கவேண்டும் என்பது திட்டம். ஆனால் இதுவரை போடப்பட்ட 26,000 கிலோமீட்டருக்குச் செலவிடப்பட்ட தொகை 8.46 லட்சம் கோடி. இதிலேயே 3.12 லட்சம் கோடி அதிகமாகிவிட்டது. மிச்சமுள்ள 8,000 கிலோமீட்டரையும் சேர்த்தால் தொகை திட்டமிட்டதைவிட 100 சதவிகிதத்துக்கும் அதிகமாகிவிடும்.
அதுபோக ஹரியானாவின் துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை 1 கிலோமீட்டருக்கு 18 கோடி. ஆனால் செலவிடப்பட்ட தொகை 1 கிலோமீட்டருக்கு ரூ.250 கோடி. திட்டமிட்டதைவிட 278 மடங்கு கூடுதல் செலவு மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. ஆனால் விரைவுச் சாலையை ஒட்டி அணுகுசாலைகள், மேம்பாலங்களைக் காரணம் காட்டிச் செலவை நியாயப்படுத்த முயல்கிறது பா.ஜ.க. இதுபோக சுங்கச்சாவடியில் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து ஆய்வுசெய்த சி.ஏ.ஜி., 5 சுங்கச்சாவடிகளை மட்டும் சாம்பிளுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்தச் சுங்கச்சாவடிகளில் விதிகளுக்குப் புறம்பாக ரூ.132 கோடியே 50 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்திருக்கிறது. இந்தியாவில் 600 சுங்கச்சாவடிகள் இருக்கிறது என்பதை கணக்கில் வைத்தால், மக்களைச் சுரண்டிப் பறித்த தொகை எங்கேயோ போய்விடும்.
மூன்றாவதாக ஆயுஷ்மான் பாரத் திட்டம். காப்பீட்டுத் திட்டமான இதில் ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம்வரை சிகிச்சை வழங்கலாம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு இரண்டோ, மூன்றோ செல்போன் எண்களை மட்டும் இணைத்து ஊழல் நடந்திருக்கிறது. இதில் 88,760 பேருக்கு, இறந்துபோன பின்பும் சிகிச்சையளிப்பதாகச் சொல்லி காப்பீட்டுத் தொகை வசூலிக் கப்பட்டிருக்கிறது. சுமார் 22 கோடியே 44 லட்சம் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தப் பயனாளிகளில் 1.24 கோடி பேர் போலி பயனாளிகள் என்கிறது அறிக்கை.
அப்படியெனில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தால் உண்மை யாகப் பயனடைந்தவர்கள் யார் என கேள்வியெழுப்புகின்றன எதிர்க்கட்சிகள். அந்தக் கேள்வியின் மூலம் அவர்கள் குறிப்பிடாத அந்தப் பயனாளிகள், ஆளுங்கட்சியினரும் காப்பீட்டு நிறுவனங் களும் தனியார் மருத்துவமனைகளுமே என்கின்றனர் இந்த விவகாரத்தை உற்றுக்கவனித்து வருபவர்கள்.
ராமர் கோவிலுக்கு என்று சொல்லி மிகக்குறைந்த விலையில் வாங்கப்பட்ட நிலங்கள், மிகப்பெரிய விலைக்கு கோவிலுக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ராமர் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள், ராமருக்கே நாமம் சாத்தியிருக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தில், ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்து கிறோம் என்று சொல்லி, விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு சலுகைகள் தரப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு ரூ.8 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
கிராமப்புற அமைச்சகத்தின் ஏழைகள், வயோதிகர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் தொகை 19 மாநிலங்களில் தூய்மை இந்தியா திட்டத்துக்கான விளம்பரப் பலகைகள் வைக்கத் திருப்பிவிடப்பட்டிருக்கிறது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம் குறைபாடுள்ள விமான வடிவைமைப்பு திட்டத்தை அங்கீகரித்ததால் நிறுவனத்துக்கு ரூ.154 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுபோக ஒன்றிய சிறுபான்மைத்துறை அமைச்சகத்தில் நடந்த 145 கோடி அளவிலான ஊழலொன்றையும் சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டியுள்ளது. இத்துறையின் அமைச்சர் ஸ்மிர்தி ரானி என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஸ்காலர்ஷிப் வழங்குகிறோம் என்ற போர்வையில் 53 சதவிகித போலி மாணவர்களை பயனாளிகளாகக் காட்டி ஊழல் நடந்துள்ளது. 34 மாநிலங்களைச் சேர்ந்த 100 மாவட்டங்களில், 830 சிறுபான்மையினருக்கான நிறுவனங்களில் ஊழல் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு இந்த 830 நிறுவனங்களுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போலிப் பயனாளிகளுக்கு, போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகள் திறக்க வங்கிகள் எப்படி அனுமதித்துள்ளன என கேள்வியெழுந்துள் ளது. அதாவது, மேல்மட்ட அளவிலான சம்மதம் இல்லாமல் இத்தனை பெரிய ஊழல், தொடர்ச்சி யாக ஐந்தாண்டுகள் நடைபெற்றிருக்கமுடியாது.
2018-லேயே ஸ்மிர்தி ரானி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 85 கோடியை எடுத்துச் செலவழித்ததில் முறைகேடுகள் இருப்பதாக சி.ஏ.ஜி. அந்த ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில்தான் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கட்டப்படாத பள்ளி, சுடுகாடு, பிற பணிகளைச் செய்ததாக சாரதா மேஜர் கம்தார் மண்டலி என்ற பெயரில் நிறுவனம் பணம் பெற்றிருப்பது அம்பல மானது. ஆக, சி.ஏ.ஜி. அறிக்கையில் ஸ்மிர்தி ரானி யின் பெயர் இடம் பெறுவது இது இரண் டாவது முறை.
2010-ல் இதே போன்ற ஒரு சி.ஏ.ஜி. அறிக்கைதான் காங் கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணமானது. இன் றைக்கு சி.ஏ.ஜி.யின் தலைவரான கிரிஸ் சந்திர முர்மு எழுப்பி யிருக்கும் சந்தேகங் களுக்கு அரசுத் தரப்பிலிருந்து என்ன பதில் சொல்லப்படுகிறது?
மத்திய போக்குவரத்துறை அமைச்சரான நிதின் கட்கரியிடம் தொலைக்காட்சி நேரலை யொன்றில் பாரத்மாலா திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் குறித்து கேட்டபோது, நேரடியான பதில் தரு வதைத் தவிர்த்துவிட்டு, “"உண்மையில் திட்ட மிட்டதைவிட குறைவான செலவில் திட்டங்கள் நிறைவுபெற்று காசு மிச்சம் பிடிக்கப்பட்டிருக்கிறது. சி.ஏ.ஜி. தவறாகக் கணக்கிட்டு அறிக்கை தந்திருக்கிறது. திட்டங்களில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை''’என நழுவுகிறார்.
பா.ஜ.க. தரப்பிலிருந்து எதிர்க்கட்சிகளைத் திட்டியும், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களின் அளவை ஒப்பிட்டும்தான் பதில்கள் வந்திருக்கின்றனவே தவிர, சி.ஏ.ஜி. எழுப்பும் சந்தேகங்களுக்கு தர்க்கப்பூர்வமாகப் பதிலளிக்கும் எந்த ஒரு முறையான விளக்கங்களும் வந்தபாடில்லை.
“ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவொன்றில் சி.ஏ.ஜி. அறிக்கையின் ஸ்க்ரீன்ஷாட்டுடன், "கடந்த 75 ஆண்டுகால ஊழல்கள் அனைத்தையும் மோடி அரசாங்கம் விஞ்சிவிட்டது'”என்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் வருடந்தோறும் 200 சி.ஏ.ஜி. அறிக்கைகள்வரை தாக்கலாயின. மோடி அரசு மாறியபின் வருடம்தோறும் வரும் சி.ஏ.ஜி. அறிக்கைகளின் எண்ணிக்கை குறைந்தபடியே வருகிறது. 2015-ல் 55 அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், 2020-ல் வெறும் 14 அறிக்கைகளே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 75 சதவிகித வீழ்ச்சியாகும்.
ஆதிர்ரஞ்சன் சௌத்ரி விஷயத்துக்கு வருவோம். கிரிஸ் சந்திரமுர்முவையும், அவரது ஆடிட்டர்களையும் பொதுக்கணக்குக் குழு அழைத்து விளக்கம் கேட்டு, அவர் பதிலளித்தபின் தான் சி.ஏ.ஜி. அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்குத் தாக்கல் செய்ய முடியும். சி.ஏ.ஜி. வலைத்தளத்தில் அந்த அறிக்கையை பதிவேற்ற முடியும். ஆனால், அது நடக்கக்கூடாது என்பதற் காகவே, ஆதிர்ரஞ்சன் சௌத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
எத்தனைக்கு எத்தனை இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வரத் தாமதமாகிறதோ… அத்தனை தூரம் மக்கள் இதனை மறந்துபோவார் கள். இப்போது தாமதம் செய்துவிட்டு, வேறொரு தருணத்தில் வெகுதாமதாக அதனை வெளியிட் டால் மக்கள் ஆர்வமிழந்துபோவார்கள். அதனை நோக்கியே மோடி அரசாங்கம் திட்டமிட்டு சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரத்தை நகர்த்திவருகிறது என்கிறார்கள்.
தற்போதைக்கு மோடி அரசாங்கம் சி.ஏ.ஜி.யின் தணிக்கையில்தான் தவறுகள் நேர்ந்திருப்பதாகக் கூறி தப்பிக்கமுனைகிறது. ஏழரை லட்சம் கோடி ஊழலை, மக்களின் பார்வையிலிருந்து மறைப்பதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.
மாறாக, எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கை யையே விவாதப் பொருளாக ஆக்கமுனைந்தாலும், அதில் போதிய வெற்றிபெறவில்லை. 2 ஜி விவ காரத்தில் அப்போதைய சி.ஏ.ஜி. தலைவராக இருந்த வினோத் ராயின் அறிக்கைக்குப் பிறகு, இந்த விவகாரத்தை பொதுமக்களிடம் எடுத்துச்சென்றதில் பா.ஜ.க.விடம் இருந்த வேகமும் விவேகமும் தற்போதைய எதிர்க்கட்சிகளிடம் இல்லாதது பா.ஜ.க.வின் அதிர்ஷ்டம், இந்தியர்களின் துரதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்.