மருத்துவக் கனவிலிருக்கும் குழந்தைகளின் உயிர்களை நீட் பறித்துவிடாமல் தடுக்கும்விதமாக மசோதா தாக்கல்செய்து கொண்டு வரப்பட்டது,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மசோதா தாக்கலாகும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆதரவளித்து வர வேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/medical-dream.jpg)
நீட் நுழைந்த காலகட்டத்தில் அதாவது, 2018-ல் 5 அரசுப் பள்ளி மாணவர்களும், 2019-ல் 6 அரசுப் பள்ளி மாணவர்களுமே மருத்துவம் படிக்க தேர்வாகியிருந்தனர். ஆனால், 7.5% உள் இடஒதுக்கீடு கிடைத்தபிறகு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவ, மாணவிகள் 2021-2022 கல்வியாண்டில் 555, 2022-2023 கல்வி ஆண்டில் 584, 2023-2024 கல்வியாண்டில் 625 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத் திருந்தது. இந்த கல்வியாண்டில் 622 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில், புதுக்கோட்டை மாவட் டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 19 பேரின் மருத்துவக் கனவும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மொத்தம் 38 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவும் நனவாகியுள்ளது.
வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயராஜ், பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் படித்த உணவகத் தொழிலாளி மகள் ஆர்த்தி, தச்சுத் தொழிலாளி மகள் சுபஸ்ரீ, ஓட்டலில் வேலைசெய்யும் தொழிலாளி மகன் சுதாகர், அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை, கோழி இறைச்சிக்கடை தொழிலாளி மகன் கடல் வேந்தன், முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான ஜெயந்தி ஆகிய 5 மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகி யிருப்பதால் வயலோகம் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநயா, நீட் கோச்சிங் சென்டர்களுக்கே செல்லாமல் வீட்டிலிருந்து பல்வேறு ஆன்லைன்களின் மூலம் படித்து நீட் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று 7.5% உள் இடஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார்.
கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய கூலி வேலை செய்த ரெங்கசாமி இறந்தபின் குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கினார் அவரது மனைவி அன்னபூரணி. இவரது, மூத்த பெண்தான் அபிநயா. கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு +2 படித்தவர், நீட் தேர்வெழுதி மருத்துவம் படிக்கவேண்டும் என்று சொன்ன போது மகளின் ஆசையை நிறைவேற்ற கடன் வாங்கி திருச்சியில் ஒரு தனியார் கோச்சிங் சென்டருக்கு அனுப்பினார். ஆனால் போதிய மதிப்பெண் பெறவில்லை. குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்ட அபிநயா "இந்த முறை எனக்காக கடன் வாங்கவேண்டாம். வீட்டிலிருந்தே படிக்கிறேன்'' என்று சொல்லி, இணைய வழியில் நீட் தேர்வு பற்றி வரும் பாடங்களை ஓய்வு, உறக்கமின்றி படித்து மருத்துவக் கல்லூரி சீட் பெற்றுள்ளார்.
மருத்துவக் கட்டணம் அரசு கொடுத்தாலும், மற்ற செலவுக் குக்கூட அபிநயாவின் தாய் தவித்துக்கொண்டிருக்கிறார் என நக்கீரன் இணையத்தில் வந்த செய்தியைப் பார்த்து, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், மாணவியைப் பற்றி தொலைபேசியில் நம்மிடம் கேட்டறிந்தார். அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்று, கல்வி உதவித் தொகை வழங்கி, “"எதற்கும் கலங்காமல் படிக்கவேண்டும். படிப்பிற்கு பணம் தடையாக இருக்கக்கூடாது, கல்விதான் நிரந்தரமான சொத்து. உங்களுக்கு என்ன தேவையென்றாலும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம். கல்விக்காக செய்ய தயாராக இருக்கிறேன்'' என்றார்.
அதேபோல, கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ஜனார்த்தனனுக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.
மாணவன் ஜனார்த்தனன் நம்மிடம் கூறும்போது, "அன்றாடம் வீட்டுக்கு வீடு பால் வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவன். கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பள்ளிக்கு வந்தால் மதிய உணவு கிடைக்கும். 10-ஆம் வகுப்பு வரை அதனை சாப்பிட்டுதான் படித்தேன். சில நாட்கள் வீட்டில் உணவே கிடைக்காது. +1 சேர்ந்த பிறகு உங்களுக்கு மதிய உணவு இல்லை என்று சொன்னபோதுதான் பசியோடு படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல நாட்கள் காலை உணவும் மதிய உணவும் கிடைக்காமல் பசியோடு வகுப்பில் இருக்கும்போது ஆசிரியர்கள் நடத்தும் பாடம் புரியாது. இப்ப நீட் தேர்வில் 550 மதிப்பெண் பெற்று 7.5% உள்இடஒதுக்கீடு கலந்தாய்வில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர இடம் கிடைத்துள்ளது''” என்றார்.
அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவர்கள் ஆக இட ஒதுக்கீடு மிக முக்கிய காரணமாக உள்ளதால் நீட்டை ரத்து செய்யும்வரை ஆய்வுக்குழு அறிக்கைப்படி 10% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந் துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/medical-dream-t.jpg)