தற்போது வெளிவந்துள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திண்டுக்கல்லை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் மாணவி நந்தினி! திண்டுக்கல் அண்ணாமலையார் பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி நந்தினி, பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆறு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு எடுத்து, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா உள்பட ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் நந்தினியை வீட்டுக்கு வரவழைத்து ஸ்வீட் கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் நூலை பரிசாகக் கொடுத்தார். மேலும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நடிகர்கள் விஜய், கமலஹாசன் உள்பட பல் வேறு முக்கிய பிரமுகர்கள் மாணவிக்கு வாழ்த்து களைத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர். கவிப்பேரரசு வைரமுத்து, மாணவிக்கு தங்கப்பேனா பரிசளிப்பதாக வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
"அரசு உதவி பெரும் பள்ளியான எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இதே பள்ளியில்தான் படித்தேன். ஆரம்ப காலத்தில் இருந்தே பள்ளியில் முதல் மாணவியாகத்தான் வருவேன். அந்த அளவுக்கு படிப்பில் முழுக்கவனம் செலுத்தி வந்தேன். அதோடு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். தினசரி நடத்தக்கூடிய பாடங் களை அன்றைக்கே படித்து முடித்துவிடுவேன். அதற்காக அதிகாலையிலும், இரவு 12 மணி வரையும் கூட படிப்பேன். அதனாலேயே எங்கள் வீட்டில் டிவி பார்ப்பதைக்கூட பெற்றோர் தவிர்த்து விட்டனர். தச்சு வேலைக்குப் போய்தான் என்னையும், என் தம்பியையும் படிக்க வைத்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்து வருகிறார் அப்பா. சில சமயங்களில் கூலி வேலை கிடைக்காததால் சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கும். அப்பொழுது எங்க அப்பா அம்மா தான் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு எங்களுக்கு மூன்று நேரம் சாப்பாடு போடு வார்கள். அந்த அளவுக்கு எங்க அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.
"நாம ஏழைக் குடும்பம். நம்மளுக்கு படிப்பு தான் சொத்து. அதை மனதில் வைத்துக்கொண்டு படித்தால்தான் நாம் சொந்தக் காலில் நிற்க முடியும். நம்மாலயும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் வரும்' என்று சொல்வார். அந்த தன்னம்பிக்கையுடன் படித்துதான் தற்போது சாதித்துக் காட்டியிருக்கிறேன். என்னைப்போல் மற்ற மாணவ, மாணவிகளும் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் அதிக மதிப்பெண் பெறலாம். நான் பத்தாம் வகுப்பில் 498 மார்க் வாங்கியதின் மூலம் முதல் குரூப்தான் எடுக்கச் சொல்லி ஆசிரியை கூறினார். ஆனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பி.காம்., சி.ஏ. படித்து ஆடிட்டராக வேண்டும் என்பதுதான் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது. என் வெற்றிக்காக பெற்றோருடன் ஆசிரியைகளும் துணை நின்றார்கள். அதை வாழ்நாளில் மறக்க மாட்டேன்'' என்றார் மாணவி நந்தினி
இது சம்பந்தமாக நந்தினியின் தந்தையான சரவணக்குமாரிடம் கேட்டபோது, "எனக்கு எந்த ஒரு வசதியும் இல்லைங்க. என் பிள்ளைகள்தான் சொத்து. தினசரி தச்சு வேலையில் கிடைக்கும் ஐநூறு ரூபாய் சம்பளத்தை வைத்துதான் குடும்பத் தையும் நடத்தி, பிள்ளைகளையும் படிக்க வைக் கிறேன். நந்தினி நல்லா படிப்பதால் பள்ளி ஆசிரியை அனுராதா, என் மகள் படிப்புக்காக செல் வாங்கிக் கொடுத்தார். அதுபோல் மற்ற ஆசிரியைகளும் ஊக்குவித்ததால்தான் இந்த அளவுக்கு மார்க் எடுத்திருக்கிறார். இதனை எப்பவும் மறக்கமாட் டோம். இப்படி ஒரு மகளைப் பெற்றதுக்காக நான் பெருமைப்படுகிறேன்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
மாணவி நந்தினிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கூற விரும்புகிறார் என்று அழைப்பு விடுக்கப்பட்டதால், தனது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் சென்று, சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நந்தினிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முதல்வர், நந்தினி "உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்' என்று உறுதியளித்தார்.
முதல்வர் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி நந்தினி, "இது எனக்கு கிடைத்த பாக்கியம். ஆடிட்டராக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று முதல்வரிடம் கூறினேன். அதற்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்வதாக முதல்வர் ஐயா உறுதி கூறியுள்ளார்'' என்று மகிழ்வுடன் கூறினார்.