தமிழக சட்டசபையின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடந்து கொண்டிருந்த பிப்.26-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை டெல்லியில் அறிவித்தார் தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா.
""நல்லவேளை நாலரை மணிக்கு அறிவிச்சார் அரோரா. இன்னும் ரெண்டு மணி நேரம் லேட்டா அறிவிச்சிருந்தார்னா, பல கோடி ரூபாய்க்கு அரோகரா போட்டு முதல்வர் எடப்பாடி என்னென்னமோ திட்டங்களை, அறிவிப்புகளை வெளியிட்டு திக்குமுக்காட வச்சிருப்பார்'' என சோஷியல் மீடியாவிலும் மீம்ஸ் க்ரியேட்டர்களும் பொளந்து கட்டினார்கள்.
கடந்த ஜனவரி மாதம் இராமநாதபுரத்தில் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை 14 ஆயிரம் கோடியில் துவங்கி வைத்தார் எடப்பாடி. இதுமட்டும் நிறைவேறினால் தென் தமிழகமே தன்னிறைவு அடையும் என பெருமை பேசினார் எடப்பாடி. யாருக்கு ’தன் நிறைவு என்பது வேற விஷயம். ஆனால் இந்தத் திட்டத்திற்கு அப்போதே எதிர்ப்பைக் கிளப்பியது கர்நாடக அரசு.
ஆனாலும் அசராத எடப்பாடி, அதே பிப்.26-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேட்டூர் அருகே நங்கவள்ளியில் 565 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி-சரபங்கா நீரேற்றுத் திட்டத்தைத் துவக்கி வைத்து, குபுகுபுவென நீர் பாய்ந்து வருவதையும் கண்ணால் பார்த்துவிட்டு, பாசன வசதி, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சிலாகித்துப் பேசிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டார் எடப்பாடி.
ஆட்சி முடியப் போற நேரத்துல நல்ல காரியம் தானே பண்ணிருக்காருன்னு நினைக்கலாம். ஆனா அந்த நல்ல காரியத்தை எதுக்காக பண்ணுனாரு, எப்படி பண்ணுனாருங்குறது தான் முக்கியம்.
2020 மார்ச்.04-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டத்தின் நோக்கமே மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சரபங்கா நதிக்குக் கொண்டு சென்று அங்கிருந்து மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி சுற்று வட்டாரங்களில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவது என்பது தான்.
எட்டு வழிச்சாலையைக் கடுமையாக எதிர்த்தது போலவே இந்தத் திட்டத்தையும் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் விவசாயிகள். அப்படி என்னங்க இந்தத் திட்டத்தில் குளறுபடி என தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் தங்கவேல் ஆகியோரிடம் கேட்டோம்.
""முதல்வரின் கனவுத் திட்டம்னு தம்பட்டம் அடித்தார்கள் ஆளும்கட்சியினர். ஆனால் எங்க கனவில் மண்ணள்ளிப் போட்ட திட்டம் தான் இது. இந்த திட்டத்திற்காக நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகளை மிரட்டினார்கள் ஆளும் கட்சிப் புள்ளிகள். பட்டா நிலங்களை திட்ட அலுவலரின் பெயரில் அடாவடியாக பத்திரப் பதிவு செய்தார்கள். இதை எதிர்த்து கோர்ட்ல கேஸ் போட்டோம்.
பனை, தென்னை, தேக்கு, பழவகை மரங்கள் என மொத்தம் பத்தாயிரம் மரங்களை ஈவிரக்கமின்றி வெட்டித் தள்ளினார்கள். 36 போர்வெல், 16 கிணறுகள், 11 வீடுகள் குளோஸ். இவ்வளவு அக்கிரமம் பண்ணி ஆரம்பித்து, இப்ப முதல்வர் துவக்கியும் வைத்துள்ள இத்திட்டத்தில் 25% வேலைகள் கூட முடியல.
இரண்டாவது, திப்பம்பட்டியிலிருந்து இரண்டு ராட்சத குழாய் மூலம் வெள்ள உபரிநீரை எடுத்து வந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கோனூரில் வடக்கு, கிழக்கு நோக்கி பைப் லைனைப் பிரித்து, எடப்பாடியில் இரண்டையும் ஒன்றாக இணைத்தால் காவிரியில் கலந்துவிடும். அவ்வளவு தான் திட்டம் சக்சஸ்ங்குறாரு எடப்பாடி.''
உபரி நீர் இல்லாத போது நீரை உறிஞ்சி எடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அனுமதிக்காது. இந்த திட்டம் என்பது காண்ட்ராக்ட் எடுத்த கம்பெனிக்கும் கொடுத்தவர்களுக்கும் மட்டும்தான் பயன்படும் என்பது அப்பட்டமான உண்மை. சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதும் சத்தியமான உண்மை. இதைவிடக் கொடுமை, இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்துக் கொடுத்ததாகச் சொல்லி, கர்நாடகாவின் கிருஷ்ணா ரெட்டிக்குச் சொந்தமான மெகா இன்ஜினியரிங் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் கம்பெனியை புகழ்ந்து தள்ளினார் எடப்பாடி’ என கொந்தளித்தனர்.
திட்டம் முழுமையாக முடிந்துவிட்டதா என சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, “மொத்தம் 120 கி.மீ.பைப் லைனில் 12 கி.மீ.தான் முடிஞ்சிருக்கு’’ என்பதுடன் முடித்துக் கொண்டனர்.
அப்ப 565 கோடி?
அரோகரா தான்.