கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டது கல்வராயன் மலை. கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு, கல்வராயன் மலை கோடை விழா அரங்கில், ரூ.118 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார். முக்கியமாக 4302 மலைவாழ் மக்களுக்கு வனஉரிமைச் சான்று வழங்கி, சுமார் 50 ஆண்டுகாலமாக போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு வெளிச்சத்தை உருவாக்கி தந்துள்ளார்.
இதுகுறித்து வனச்சான்று வாங்கிய மகிழ்ச்சியிலுள்ள அத்திப்பாடி செல்வம் நம்மிடம், "எங்கள் பாட்டன், முப்பாட்டன், அவரது பாட்டன், முப்பாட்டன் எல்லாம் இந்த மலையிலேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மறைந்தவர்கள். உணவுக்கு காட்டிலுள்ள மரங்களை வெட்டி ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு தேவையான அளவுக்கு நிலமாக்கி பல ஆண்டுகளாக பயிர் செய்துவந்தனர். இந்த மலைகளுக்கு உரிமையாளரான ஜாகீர்தார்களுக்கு வரிகட்டிக்கொண்டு இருந்தனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜாகீர்தார்களை ஒழித்துவிட்டு அவர்களின் சொத்துக்களை நாட்டுடமையாக்கினார். அப்போது நிலங்கள் வனத்துறைக்கு உரிமையானதாக மாறிவிட்டது. எங்களின் நிலங்கள் என சொல்வதற்கு படிப்பறிவற்ற எங்கள் முன்னோர்களிடம் எந்த சான்றுகளும் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு 2 அல்லது 3 பேருக்கு மட்டும் அரசு வனப்பட்டா வழங்கி யிருந்தது. மற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கவில்லை. மலைவாசிகள் மலைமீதிருந்த நிலத்தின் உரிமையை இழந்தனர்'' என்றார்.
அதன்பின் நடந்தவற்றை நம்மிடம் பேசிய அண்ணாதுரை, "எங்கள் முன்னோர்கள் பயிர் செய்த நிலத்தில் அவர்களது வாரிசுகளான நாங்கள் பயிர்செய்தால் அபராதம் 80,000, ஒரு லட்சம்னு போட்டாங்க. பயிர் செய்யமுடியாத நிலை உருவானது. காட்டுக்குள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றாலும் மரக்குச்சி உடைத்தாலும் ஆயிரக்கணக்கில் அபராதம் போட்டனர். இதனால் வாழ வழியில்லாது மைசூர், கேரளாவுக்கு தேயிலை பறிக்க செல்லத்துவங்கினோம். இப்படி இரண்டு தலைமுறைகளாக நாங்கள் இழந்தது அதிகம்'' என்றார்.
மொட்டையனூர் கிருஷ்ணனோ, "மலையில் சுமார் 15,000 குடும்பங்கள் உள்ளன. 2008-ல் கலைஞர் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்தார். இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ. உதயசூரியன், அதிகாரிகள் நிலங்களுக்கான வனஉரிமை சான்றிதழ் தந்துள்ளார்கள். முதல் கட்டமாக 4000 பேருக்கு வனஉரி மைச் சான்று கிடைத்துள்ளது, இன்னும் 4000 பேருக்கு தரவுள்ளார் கள். வருங்காலத்தில் இதனை மாற்றி வனஉரிமை பட்டாவாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள் கிறேன்''’என்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பழங் குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர் நம்மிடம், "சுமார் 1000 ஹெக்டர் நிலங் களுக்கான வனச்சான்றிதழ் மக்க ளுக்கு தரப்படுகிறது. அவர்களுக்கு தரப்பட்டுள்ள நிலத்தில் கிணறு வெட்டலாம், பயிர் செய்யலாம், அவர் களின் வாரிசுதாரர்களும் அடுத்தடுத்த தலைமுறையும் பயன்படுத்திக் கொள்ளலாம், வனத்துறை நிலம் என்பதால் விற்பனை மட்டும் செய்யமுடியாது'' என்றார்.