47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்தபடி, பேக்கிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், தேன், உணவு தானியங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட பல பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதுவரையிலும், ஃபிரிட்ஜ், சோஃபா, ஏ.சி., டி.வி. எனப் பெரிய பொருட் களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் லாபம் பார்த்த ஒன்றிய அரசு, தற்போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல விளிம்பு நிலை மக்களையும் நேரடியாகப் பதம்பார்க்கத் தொடங்கிவிட்டது.
வடமாநிலங்களில் கோதுமையே பிரதான உணவு என்பதுபோல், தென்னிந்திய மக்களுக்கு அரிசிதான் பிரதான உணவு. சர்க்கரை வியாதி குறித்த பயம் தொற்றியபின், கோதுமை உணவுப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. தற்போது அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரி காரணமாக, ஒரு கிலோ அரிசி விலை 3 முதல் 4 ரூபாய் வரை ஏறக்கூடும். 1,250 ரூபாய் விலையிலுள்ள 25 கிலோ அரிசி மூட்டைகள் விலை 50 முதல் 100 ரூபாய் வரை உயரும் அபாயமுள்ளது. இந்த விலையேற்றம் நேரடியாகவே மக்களைத் தாக்கும். தவிர, நெல் மூட்டைகளை அரிசி யாக்கும் ஆலைகளுக்கும் பாதிப்பு என்பதால், அரிசி மீதான 5 சதவீதம் ஜி.எஸ்.டி.யைக் கண்டித்து, ஜூலை 16ஆம் தேதி, தமிழகத்திலுள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், பத்தாயிரம் மொத்த அரிசிக்கடைகள் மற்றும் முப்பதாயிரம் சில்லரை அரிசி விற்பனைக் கடைகள் அனைத்தும் ஒரு நாள் அடையாள, கடையடைப்பை நடத்தின.
இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை அதிபர்கள் சம்மேளனத்தின் இணைச் செயலாளரும், நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அரிசி விற்பனையாளர் சங்கத் தலைவருமான அன்பழகன் கூறுகையில், "அரசு ரேசன் மூலம் மக்களுக்குத் தருகின்ற அரிசியை எங்களைப் போன்ற அரிசி ஆலை களின் மூலமாகத்தான் தயாரிக்கிறது. இதற்காக அரசின் வேளாண் விற்பனை மையம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை எங்களிடம் கொடுத்து அரிசியாக்கு கிறது. இந்த வேலையோடு, நாங்கள் தனியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிற நெல்லை அரிசியாக்கி வியாபாரிகளுக்கு சப்ளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக வேளாண் விற்பனை மையத்திற்கு ஏற்கனவே ஒரு சதவிகிதம் செஸ் வரி கட்டி வருகிறோம். அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங் களிலுள்ள 108 அரிசி ஆலைகளிலும் மாதம் சுமார் 5 ஆயிரம் டன் நெல் அரிசியாக்கப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில், பெரும்பாலானவர்கள் அன்றாட உணவிற்கு ஒரு கிலோ, இரண்டு கிலோ என சில்லரையாகவே வாங்குகிறார்கள். இச்சூழலில், ஜி.எஸ்.டி. வரிக்குப்பின் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 4 ரூபாய் ஏறும். அது அவர்களால் தாங்கமுடிகிற காரியமா? இதுமட்டுமல்ல, நெல் அரிசியாகும்போது ஜி.எஸ்.டி., அரிசியின் உமிக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., உமி தவிடாகி விற்பனைக்கு வரும்போது அதற்கும் ஜி.எஸ்.டி. இப்படி ஒரே புராடக்ட்டிற்கு மூன்று வகையில் மறைமுகமாக 15 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது. விற்கிற வியாபாரிகள் மொத்த ஜி.எஸ்.டி.யையும் தன் பாக்கெட்டி லிருந்தா கட்டுவார்கள்? விற்பனையின் மூலம் மக்கள் மீது தானே சுமத்து வார்கள்? மனிதனின் பசியாற்றுகிற அரிசிக்குமா 3 வகை ஜி.எஸ்.டி.?
இந்திய உணவுக் கழகத்திலிருக் கும் நெல்லில், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ளவை வருடந் தோறும் கெட்டுப்போவதை தடுக்கும்வகையில் முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தாலே அரிசிக்கு ஜி.எஸ்.டி. போடவேண்டிய நிலை இருக்காது. பாவப்பட்ட ஏழை மக்களின் வயிற்றிலடிக்கிற விஷயம் என்பதால் தற்போதைக்கு ஒருநாள் அடைப்பு செய்துள்ளோம். மத்திய அரசு ஜி.எஸ்.டி.யைத் திரும்பப் பெறாவிட்டால் இனி இந்த போராட்டம், ரேசனுக்காக அரசு தரும் நெல்லை அரவை செய்யாது புறக்கணிப்பதாக மாறும்''’என்கிறார்.
சங்கரன்கோவிலில் லோடு மேன் கூலி வேலைபார்க்கும் கருப்பசாமி. "நிரந்தரமான வேலையில்லாத பொழப்பு. முறையா லோடு வேல கெடச்சா சாப்பாடு ஓடும். சில நேரம் அதுக்கும் திண்டாட்டம் தான். மனுசன் சாப்புடுற அரிசிக்கு மட்டுந்தான் வரியில்லாம இருந்திச்சி. இப்ப அதுக்குமே வரின்னா எங்க பொழப்பு என்னாவுறது? வேலைவாய்ப்பு இல்லாம கொரோனாவுக்குப் பொறவு எங்க வாழ்க்கையே பொசுங்கிப்போய் கெடக்குறது. ஒங்களுக்குத் தெரியலியா? வரின்னு குடுக்க எங்ககிட்ட என்னயிருக்கு? சோத்துக்கே ஆபத்து'' என நொந்து போய் கேட்டார்.
சராசரி குடும்பத்தைச் சேர்ந்த பொன்னம்மாளோ, "தன்னோட உதிரத்தப் பாலாக்கி மனுசங்களுக்காக பசு பால் குடுக்குதே, அது ஒங்களுக்குப் பொறுக்கலையா? அந்தப் பாலுக்கும் வரி, அது தயிரானாலும் வரி, மோரானாலும் வரியா? பச்சப் புள்ளைக்கு குடுக்குற பாலுக்கும் வரி போடுதீகளே, இது கடவுளுக்கே அடுக்குமா ராசா?'' என்றார் விசனத்தோடு. தங்கள்மீது ஏற்றப்படும் சுமைகளையும், வேதனைகளையும் தாங்க மாட்டாமல் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக் கிறார்கள் மக்கள்.