ரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 9 மாதங்களில் இந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங் களை முன்னெடுத்து வரும் அரசு ஊழியர்கள், தி.மு.க. அரசு கமிட்டி அமைத்திருப்பதைக் கண்டித்து கொந்தளிக்கிறார்கள். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (புதிய பென்சன் திட்டம்) எதிர்த்து நீண்ட வருடங்களாகப் போராடிவரும் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், ஜெயராஜராஜேஸ்வரன், பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோரிடம் நாம் விவாதித்த போது, "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பாசம் கொண்டவர் மறைந்த முதல்வர் கலைஞர். அவர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தி.மு.க.வின் வாக்கு வங்கியாகவே இருந்தனர்.

st

இதனை ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடியாததால்தான் எப்போதுமே எங்களுக்கு எதிராகவே இருந்தார். அதனாலேயே அரசு ஊழியர்களின் வாக்குகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. எங்களை பழிவாங்குவதாக நினைத்து மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பாகவே, 2003-ல் அவசரம் அவசரமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தினார் ஜெயலலிதா. இந்தத் திட்டத்தை எதிர்த்துத்தான் கடுமையாகப் போராடி வருகிறோம்.

இந்தச் சூழலில்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவோம் (எண்:309) என 2021-ல் தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்திருந் தார் மு.க.ஸ்டாலின். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தி.மு.க.வுக்கு முழு ஆதரவைத் தந்தனர். ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. இதனை யடுத்து, முதல்வரையும் அதிகாரிகளையும் சந்தித்து, தேர்தல் வாக்குறுதிப்படி எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் எனப் பல முறை வலியுறுத்தினோம்.

Advertisment

ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட எங்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவே இல்லை. தற்போது, எங்களுக்கு எந்த ஓய்வூதியத் திட்டம் பெஸ்ட் என்றறிய ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். எது பெஸ்ட் என்பதை அறிய கமிட்டி எதற்கு? நாங்கள் தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துங்கள் என்கிறோமே! அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரின் கோரிக்கையும் இதுதான்.

உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பழைய ஓய்வூதியத் திட்டம்தான் எங்களுக்கானது என இருக்கும்போது வேறு எதைத் தெரிந்து கொள்ள இந்த கமிட்டி? ஜெயலலிதாவும் இப்படித்தான், 2016 தேர்தல் நெருக்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார். அதை நம்பி அரசு ஊழியர்கள் வாக்களித்தனர். ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் ஜெயலலிதா. அதன்பிறகு, கமிட்டியைப் பற்றியும் கவலைப்படவில்லை, எங்கள் கோரிக்கை பற்றியும் கவலைப்படவில்லை. கமிட்டியின் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி ஆட்சியிலும், "எங்களின் கோரிக்கை என்னாச்சு?' எனக் கேள்வி எழுப்பினோம். கமிட்டியை சுட்டிக்காட்டியதோடு, அவரும் கமிட்டியின் காலத்தை நீட்டித்தபடியே இருந்தாரே தவிர, எங்கள் மீது கரிசனம் காட்டவில்லை. ஒரு கட்டத்தில் தனது அறிக்கை யை எடப்பாடியிடம் சமர்ப் பித்தது கமிட்டி. அதன் அறிக்கையை வெளியிடுங்கள் என நாங்கள் போராடினோம். ம்ஹூம்… அசைந்து கொடுக் கவே இல்லை எடப்பாடி பழனிச்சாமி. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நொந்து போனார்கள்.

Advertisment

இந்த சூழலில்தான், 2021-ல் எங்களுக்கு வாக்குறுதி தந்தார் ஸ்டாலின். சொல்வதை செய்வதும், செய்வதைத்தான் சொல்வதும் தி.மு.க.வின் மந்திர வார்த்தைகள் என்ப தால், ஆட்சிக்கு வந்தால் எங்கள் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்கிற அசாத் திய நம்பிக்கையில் ஆதரித் தோம். ஆனால், முதல்வர் ஸ்டாலினும் 4 ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை. ஜெயலலிதா பாணியில் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருப்பது தான் எங்களை கொந்தளிக்க வைக்கிறது.

தனது அறிக்கையை தாக்கல் செய்ய 9 மாதங்கள், அதாவது அக்டோபர் 2025 வரை கமிட்டிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திலெல்லாம் எல்லா கட்சி களும் தேர்தல் ஜுரத்தில் இருக்கும். 9 மாதங்கள் முடிந்ததும், மேலும் 3 மாதங்கள் வேண்டும் என கமிட்டி கோரிக்கை வைக்கும். அதனையும் தி.மு.க. அரசு வழங்கும். அதற்குள் தேர்தல் வந்துவிடும். அப்போது, 'தேர்தல் முடிந்ததும் கோரிக்கையை நிறைவேற்றுவோம்' என முதல்வர் சொல்வார். பழையபடி இழுத்தடிக்கும் வேலைதான் நடக்கும். அதனால், இந்த கமிட்டி என்பதெல்லாம், காலம் கடத்துவதற்கான தந்திரம் தானே தவிர வேறேதும் இல்லை. ஒரே ஒரு அரசாணையில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிட முதல்வரால் முடியும் என்கிற போது எதற்காக இந்த கமிட்டி? பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்குத் தான் லாபம். அதாவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி, தற்போது வரை அரசின் ஊழியர்கள், ஆசிரியர்களிடம் அரசு பிடித்துள்ள தொகை 40,000 கோடி. அதே அளவுக்கு 40,000 கோடியை அரசும் பங்களிப்பு செய்திருக்கிறது.

அப்படிப்பார்த்தால், அரசு ஊழியர்களின் மொத்தத் தொகை 80,000 கோடி ரூபாய் அரசிடம் இருக்கிறது. அந்த 80,000 கோடியை என்ன செய் தார்கள் என்பதில் இப்போது வரை வெளிப்படைத் தன்மை இல்லை. எங்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால், அரசின் பங்களிப்பான 40,000 கோடியும் அரசே திருப்பி எடுத்துக்கொள்ள முடியும். நிதி நெருக்கடியில் உள்ள தி.மு.க. அரசுக்கு 40,000 கோடி கிடைத்தால் பெரிய லாபம்தானே? ஆனால், இதனை முதல்வரிடம் அதிகாரிகள் சொல்வதே இல்லை'' என்று ஆவேசப்படுகின்றனர் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்.

தி.மு.க. அரசு கமிட்டி அமைத்திருப்பதை அரசியல் கட்சிகளும் விமர்சிக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், "இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார் கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டைவிட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதெல்லாம் ஏமாற்று வேலை!

தமிழ்நாடு அரசு நினைத்தால் நடப்பு மாதத் திலிருந்தே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்த முடியும். ஆனால், அதனை செயல்படுத்த அரசுக்கு மனம் தான் இல்லை. எனவே, குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று, 2026 தேர்த லில் தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவர் என்பது உறுதி'' என்கிறார் அழுத்தமாக!

இந்த நிலையில், கமிட்டி அமைத்திருப்பதை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள் அரசு ஊழியர்கள்!