நயினார் நாகேந்திரனுக்காக கடத்த முயற்சிக் கப்பட்ட 4 கோடி ரூபாய் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. மனுத் தாக்கல் செய்திருக்கும் விவகாரம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.யின் சம்மனுக்கு ஆஜராகாமல் தப்பித்து வருகிறார்கள் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள்.
தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி ஏ.சி. கோச்சில் பயணித்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாயைக் கைப்பற்றியதுடன், அவர் களை கைது செய்து விசாரித்தது பறக்கும்படை. நயினாருடைய பணம் என்பதையும், அவர்தான் பல்வேறு இடங்களிலிருந்து சேகரித்து எடுத்து வரச் சொன்னார் என்பதையும் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தனர் அவரது ஆட்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்போது ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் இந்த வழக்கு பறக்கும் படை போலீசாரிடமிருந்து தமிழக அரசின் சி.பி. சி.ஐ.டி. போலீசா ருக்கு மாற்றப்பட்டது. அவர்களின் அதி தீவிர விசாரணை யில், தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் களின் தேர்தல் செலவுகளுக் காக பா.ஜ.க. தலைமை வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணம் என்பதையும், அந்த பணம் வேட்பாளர்களின் நிலைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டது என்பதையும், அதில் நயினாருக்கான பங்கில் ஒருபகுதிதான் இந்த 4 கோடி என்பதையும் கண்டுபிடித்து அதற்கான ஆதாரங்களையும் சேகரித்தது சி.பி.சி.ஐ.டி.
குறிப்பாக, ரயிலில் பிடிபட்ட நயினாரின் ஆட்கள் மூவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படை யில் பா.ஜ.க.வின் தொழில்துறை பிரிவு மாநில தலைவர் கோவர்த்தனனை தங்களின் விசாரணை வளையத்துக்குள் சி.பி.சி.ஐ.டி கொண்டுவந்தது, மேலும், அவர் நடத்திவந்த கொரியன் ரெஸ்ட்டா ரெண்ட் மற்றும் க்ளப்பில் ரெய்டு நடத்தி சில ஆதாரங்களைக் கைப்பற்றினர். இந்த நிலையில், கோவர்த்தனிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், பா.ஜ.க.வின் மாநில பொரு ளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் 21-ந் தேதி கோவையில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்தியிருக் கிறார்கள். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘"ரயிலில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் வழக்கின் விசா ரணையில் பல விசயங் கள் எங்கள் அதிகாரி களுக்குக் கிடைத் திருக்கிறது. அது மட்டு மல்ல; ஏற்கனவே, நயினாரின் ஆட்களிடமும் கோவர்த்தனிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களும் மிக முக்கிய மானவை. இந்த தகவல்கள் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நோக்கி நீண்டன.
அதனடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் களோ, "வட மாநிலங்களில் தேர்தல் நடந்துகொண்டி ருக்கிறது. அதற்கான தேர்தல் பிரச்சார பணி களுக்காக நாங்கள் செல்ல வேண்டும்' என கூறி சம்மனுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர். மற்றொரு நாளில் வருவதாக கால அவகாசம் கேட்டு கடிதம் தருகிறார்கள்.
சம்மனுக்கு ஆஜராகாமல் வாரணாசிக்குப் போய்விட்டார் நயினார் நாகேந்திரன். பா.ஜ.க. பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சம்மனுக்கு ஆஜராக பயம். அதனால்தான் ஏதேதோ காரணம் சொல்லி ஆஜராவதை தள்ளிப்போட முயற்சிக்கின்றனர்.
இதனையெல்லாம் தெரிந் துதான், எஸ்.ஆர்.சேகரிடம் கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் தலைமையி லான போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
இரண்டு மணி நேரம் நடந்த அந்த விசாரணையில், கடத்த முயற்சிக்கப் பட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது? என போலீசார் கேட்ட கேள்விக்கு, யாருடைய பணம்னு தெரியாது என எஸ்.ஆர்.சேகர் சொல்ல, பா.ஜ.க. வேட்பாளர்களுக்காக கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட பணம்னு எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது என போலீஸ் தரப்பில் விவரித்துச் சொன்னதற்கு, "அது கட்சி பணம் கிடையாது. அந்த பணத்துக்கும் கட்சிக்கும் எங்களுக்கும் சம்மந்தம் துளியும் இல்லை' என ஒரே அடியாக மறுத்துள்ளார் சேகர்.
இப்படி 4 கோடி ரூபாய் தொடர்பாக கேட்கப் பட்ட பல கேள்விகளுக்கு மறுத்தும், தெரியாது என்றும் பதில் தந்துள்ளார் பா.ஜ.க. பொருளாளர். ஆனால், இதெல்லாம் பொய் என்பதையும், அந்த பணம் நயினாருக்காக பா.ஜ.க. கட்சி அனுப்பி வைத்த பணம்தான் என்பதையும் எங்கள் அதிகாரிகள் அம்பலப்படுத்துவார்கள். அப்போது பா.ஜ.க.வின் முகத்திரை கிழியும்'‘என்று விவரிக்கின்றது சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள்.
எஸ்.ஆர். சேகரிடம் சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பேசிய அவர், ‘"என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு சட்டரீதியாக பதிலைத் தெரி வித்திருக்கிறேன். ரயிலில் பிடிபட்ட 4 கோடிக்கும் எங்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தமில்லை என கூறிய பிறகும், சம்மந்தம் இல்லாத பல கேள்விகளைக் கேட்டனர். இந்த வழக்கை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறோம்; அதில் உத்தரவுகள் வரும். அதற்குள் பா.ஜ.க.வை களங்கப்படுத்த அரசியல் காரணங்களுக்காக போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையை சட்டரீதியாக எதிர் கொள்வோம்'' என்றிருக்கிறார் எஸ்.ஆர்.சேகர்.
இந்த நிலையில்தான், 4 கோடி ரூபாய் வழக்குக்கு எதிராக க்வாஸ் பெட்டிஷனை தாக்கல் செய்திருக்கிறார் கேசவவிநாயகம். சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அந்த மனுவில், ரயில் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பண விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய (க்வாஸ்) வேண்டும். அரசியல் காரணங்களுக்காக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பணத்தை பா.ஜ.க. கட்சியுடன் தொடர்புபடுத்தும் முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. "போலீசாரின் விசாரணை ஒருதலைபட்ச மாக இருக்கிறது. அதனால், இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரை நீக்க வேண்டும்'’என்றெல்லாம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள கேசவ விநாயகம், சி.பி. சி.ஐ.டி. போலீசின் டி.எஸ்.பி.க்கு எதிராகவும், பறக்கும் படை டீமை சேர்ந்த செந்தில் பாலமணிக்கு எதிராக வும் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.
கேசவவிநாயகத்தின் மனு அட்மிட்டாகி நீதிபதி சரவணன் முன்பு வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 22-ந்தேதி இந்த வழக்கின் விசாரணை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரவில்லை. வெள்ளிக் கிழமைக்குள் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
சி.பி.சி.ஐ.டி.க்கு எதிராக பா.ஜ.க. தரப்பில் போடப்பட்டிருக்கும் இந்த க்வாஸ் பெட்டிஷன் பரபரப்பை ஏற்படுத்திய அதே வேகத்தில் சில சர்ச்சைகளும் சட்டரீதியாக எழுப்பப்படுகின்றன. அதாவது, நம்மிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற பா.ஜ.க. வழக்கறிஞர்கள், ‘’அந்த 4 கோடி ரூபாய் வழக்கில் சிக்கியவர்கள் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடைய ஆட்கள். அவர்கள் மீதுதான் எஃப்.ஐ. ஆர். போடப்பட்டுள்ளது. கேசவ விநாயகத்தின் மீது எஃப்.ஐ.ஆர். இருப்பதாகத் தெரியவில்லை. யார் மீது எஃப்.ஐ.ஆர். இருக்கிறதோ அவர்கள்தான் க்வாஸ் பெட்டிசனை சட்டரீதியாக போட முடியும்.
ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் போடாமல், கேசவ விநாயகம் எந்த அடிப்படையில் இந்த பெட்டிசனைத் தாக்கல் செய்தார் எனத் தெரியவில்லை. ஒருவேளை, கோவர்த்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேசவ விநாயகத்தின் பெயரை சொல்லியிருந்து, அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. தனக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக கேசவவிநாயகம் நினைத்து இந்த பெட்டிசனை போட்டிருக்கலாம். ஆனாலும், தனக்கு எதிரான சம்மனை ரத்துசெய்ய மனுவில் கோரிக்கை வைக்கலாமே தவிர, எஃப்.ஐ.ஆரை நீக்க அவர் கோர முடியாது. நீதிமன்ற விசாரணையின் போதுதான் இதற்கு தெளிவு கிடைக்கும்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
கேசவவிநாயகத்தின் க்வாஸ் பெட்டிசன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர், கட்சியின் மாநில தலைவர் ஆகியோர் மீது செம கோபத்திலிருக்கிறாராம் நயினார் நாகேந்திரன். அதாவது, "பிடிபட்ட பணம் என்னுடையதல்ல; அந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை; தொடர்பும் இல்லை' என தொடர்ந்து நயினார் நாகேந்திரன் சொல்லிவருகிறார்.
அப்படியிருக்கையில், "பிடிபட்ட பணத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்மந்தமில்லை' என எஸ்.ஆர்.சேகர் வெளிப்படையாக சொல்லியிருப்பதும், கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கேசவவிநாயகம் குறிப்பிட்டிருப்பதும்தான் நயினாரின் கோபத்துக்கு காரணம். பிடிபட்டது கட்சிப் பணம் இல்லை எனில், அது என்னுடைய பணம்தான் என இவர்கள் காட்டிக் கொடுக்கிறார்களா? இதற்கெல்லாம் காரணம் மாநில தலைவர்தான் என நயினார் கோபம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவி வருகிறது.
ஆக, விடாது கருப்பு என்பதுபோல பா.ஜ.க. தலைவர்களை நெருக்கிக்கொண்டிருக்கிறது 4 கோடி!