"திரும்பத் திரும்ப பேசுற நீ!' என்பதுபோல திரும்பத் திரும்ப தனது விற்பனையில் தகிடுதத்தங்கள் செய்வதையே வழக்கமாக்கியுள்ளது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறு வனம்! தனது தகிடுதத்தங்களுக்காக அடிக்கடி இந்தியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை குட்டு வாங்கிக்கொண்டே இருந்தாலும் தன்னைத் திருத்திக் கொள்வதாக இல்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பதஞ்சலி நிறுவனத்தின் திவ்யா பார்மஸி சார்பாக விற்பனைக்கு வந்த ஆயுர்வேதப் பொருட்களில், 14 பொருட்களுக்கான விளம்பரங்கள், மருந்துப்பொருள் விற்பனைக்கான விதிமுறைகளை மீறி தவறான முறையில் விளம்பரப்படுத்துவ தாகக்கூறி வழக்கு தொடரப்பட்டதில், தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து நாளிதழ் களில் விளம்பரம் செய்ய வேண்டுமென்று பதஞ்சலி நிறுவனர் ராம்தேவுக்கும், அந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கும் உத்தரவிட்டது.
அதன்படி மன்னிப்பு கேட்டு செய்யப்பட்ட விளம்பரம் மிகச்சிறியதாக இருந்ததால், அதற்கு எதிராக மீண்டும் புகாரளிக்கப்பட, இருவரையும் கண்டித்த சுப்ரீம் கோர்ட், எப்படி பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடப் பட்டதோ, அதேபோல் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டும் விளம்பரம் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. அதையடுத்து, சுமார் 67 நாளிதழ்களில் பெரிய அளவில் தவறுக்கு வருத்தம் தெரிவித்து விளம்பரம் செய்யப்பட்டது. இதுபோல் மாதாமாதம் ஏதாவது பஞ்சாயத்தில் சிக்குவது பதஞ்சலிக்கு வழக்கமானது தான்.
அதேபோல் தற்போது, கற்பூரப் பொருட்களை விற்பனை செய்ததில், ட்ரேட் மார்க் விதிமுறைகளை மீறியதற்காகவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காததற்காகவும் 4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மங்களம் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனம் கோன் வடிவில் தனது கற்பூரப் பொருட்களை விற்பனை செய்தது. அது விற்பனையில் சக்கைப்போடு போட்டதால், அதே வடிவத்தை காப்பியடித்து பதஞ்சலி நிறுவனமும் கற்பூரப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. தங்கள் தயாரிப்பை காப்பியடித்ததால் அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மங்களம் ஆர்கானிக்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், 2023, ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், இனிமேல் அந்த தயாரிப்புகளை விற்கக்கூடாதென்று பதஞ்சலியைக் கண்டித்தது, பதஞ்சலி நிறுவனமும், இனி சர்ச்சைக்குரிய கற்பூரத் தயாரிப்பை விற்க மாட்டோமென்று கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்தது!
ஆனால் மீண்டும் பதஞ்சலி முருங்கை மரம் ஏறியது. சர்ச்சைக்குரிய கற்பூரப் பொருட்களின் விற்பனையைத் தொடர்ந்தது. மும்பையிலுள்ள பதஞ்சலி மெகா ஸ்டோரிலும், ஆன்லைனிலுமாக அந்த தயாரிப்பை தொடர்ச்சியாக பதஞ்சலி விற்பனை செய்வதாகக் குற்றம்சாட்டி மீண்டும் நீதிமன்றத்தை நாடியது மங்களம் ஆர்கானிக்ஸ் நிறுவனம். இதையடுத்து விசாரணை நடத்திய நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் நீதிமன்ற உத்தரவை மீறியதைக் கண்டறிந்தது. அதையடுத்து ஜூன் 2024-ல் பதஞ்சலியின் இயக்குநர் ரஜ்னீஷ் மிஸ்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அதுமட்டுமல்லாது, நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்த பின்னரும், பதஞ்சலி நிறுவனம் ரூ.49,67,861 மதிப்புக்கு கற்பூரப்பொருட்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. பதஞ்சலியின் விநியோகஸ்தர்கள் வசம் ரூ.25,94,505 மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்காக இருப்பதும் தெரியவந்தது. ஆனாலும் அந்த கற்பூரப் பொருட்களை விற்பனை செய்யவில்லை என்று பதஞ்சலி கூறியது. மங்களம் ஆர்கானிக்ஸ் நிறுவனமோ, பதஞ்சலி சொன்னதை மறுத்தது. அதையடுத்து, மும்பை நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில், பதஞ்சலி நிறுவனத்துக்கு 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இனிமேல் கற்பூரப் பொருட்களை விற்பனை செய்யக்கூடா தென்றும் உத்தரவிடப்பட்டது.
சட்டத்தை மதிக்கக்கூடிய நிறுவனமாக இருந்தால் இதையடுத்தாவது திருந்தியிருக்க வேண்டும். ஆனால் பதஞ்சலி, ஒன்றிய அரசின் செல்லப்பிள்ளையாயிற்றே! எனவே அந்த உத்தரவுக்குப் பின்னரும் தனது விற்பனை யைத் தொடர்ந்ததால், கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட தனது தீர்ப்பில், பதஞ்சலி நிறுவனம் அடுத்த இரு வாரங்களுக்குள் 4 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டுமென்றும், இல்லையென்றால் பதஞ்சலி இயக்குநரை கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
மோடியின் ஆட்சிக்குப் பின், ஒன்றிய அரசின் முழு ஒத்துழைப்புடன் அபரிமித மான வளர்ச்சியைக் கண்ட பதஞ்சலி நிறுவனம், கொரோனா காலத்திலும் தங்கள் தயாரிப்பால் கொரோனாவை விரட்டியடிக்கலா மென்று விளம்பரம் செய்து, மருத்துவத்து றையினரின் கடும் கண்டனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. தங்களை வளர்த்துக் கொள்வதற்காக அனைத்து தில்லாலங் கடியையும் செய்துவரும் இந்நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மக்களுக்கு ஆபத்தானது.