ந்திய ஒன்றியத்தில் உள்ள பல மாநிலங்கள் 12-ம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்தள்ளன. ஒன்றிய சி.பி.எஸ்.சி. கல்வி வாரியமும் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. அந்த வரிசையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார். கொரோனா நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதி தந்திருந்தாலும் கல்வியாளர்களில் ஒருதரப்பு, "இந்தத் தேர்வு ரத்து என்பது மத்திய அரசு நடத்தும் நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பை ஆதரிப்பதுபோல் உள்ளது' என்கிறார்கள்.

+2result

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வேலூர் மாவட்ட தலைவர் கௌதமபாண்டியன் நம்மிடம், "இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பினார்கள். அந்த புத்தகங்கள் பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு போய்ச் சேரவேயில்லை. அதேபோல் தமிழகம் முழுக்க சில பள்ளிகளில் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள், சில ஆசிரியர்களின் முன்முயற்சியால் நடைபெற்றது. அப்படி நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளில் பெரும்பாலான கிராமப்புற மாணவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. செல்போன்-இன்டர்நெட் என நிறைய பிரச்சினைகள் உண்டு.

அதேநேரத்தில், தனியார் பள்ளிகள் புத்தகங்கள் வழங்கிவிட்டு ஆன்லைன் வழியாக தினசரி பாடங்கள் நடத்தினார்கள். இப்படிப்பட்ட நிலையில் தேர்வு வைத்திருந்தால் தனியார் பள்ளி மாணவர்கள் எழுத்து தேர்வில் அதிகளவு வெற்றி பெற்றிருப்பார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் தோல்வியை சந்தித்திருப்பார்கள். தேர்வு நடத்தியிருந்தால் அது சமமான தேர்வாக இருந்திருக்காது. அதேபோல் கொரோனா நேரத் தேர்வு குறித்த அச்சத்தில் மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டு தேர்வுக்கு செல்லலாம் என்றால், 18 வயதுக்குள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி கிடையாது. இதனையெல்லாம் ஆய்வில் எடுத்துக்கொண்டுதான் தமிழ்நாடு அரசு 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது, இதனை வரவேற்கிறோம்'' என்றார்.

Advertisment

+2 result

தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது, மதிப்பெண் எப்படி போடுவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள் என, விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த அரசு முதுகலை கணித ஆசிரியர் கவிஞர் ஸ்டாலினிடம் கேட்ட போது, "தேர்வு ரத்து என அரசு அறிவித்துள்ளதே தவிர ஆல் பாஸ் எனச் சொல்லவில்லை. அதேபோல் மதிப்பெண் எப்படி வழங்கப்படும் என்பதையும் சொல்லவில்லை. எனக்கு தெரிந்து 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண், பள்ளிகளில் மாதாந்திர தேர்வு நடந்தது, அதில் எடுத்த மதிப்பெண்களை கணக்கிட்டு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் போடலாம். இந்த முறையில் தனியார் பள்ளிகள் மதிப்பெண் உயர்த்தி வழங்கலாம் என்கிற குற்றச்சாட்டு மறுப்பதற் கில்லை. அதனைத் தவிர்க்க கல்வித்துறையிடமே ஒவ்வொரு மாணவரின் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மதிப்பெண் உள்ளது. அதேபோல் தேர்தலுக்கு முன்பே செய்முறை தேர்வு பள்ளிகளில் நடந்துமுடிந்து, அதற்கான மதிப்பெண் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளோம். இந்த மூன்றையும் கணக்கிட்டு பன்னிரெண்டாம் வகுப்புக்கான மதிப்பெண்களை வழங்கலாம்.

d

Advertisment

இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அது, கடந்த ஆண்டு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் 10 பேர் வரை ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பெயிலாகியுள்ளார்கள். இந்தாண்டு அவர்கள் 12-ஆம் வகுப்பு படிக்கிறார்கள். செய்முறை தேர்வு முடித்துள்ளார்கள். 11ஆம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிட்டு மதிப்பிடும்போது இவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் கல்வித்துறை அதிகாரிகள், அரசு, இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டி ருப்பதன் மூலமாக நீட் தேர்வுக்கு மாநில அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது என சொல்லப்படும் புகார்கள் குறித்து, கல்வியாளர் முனைவர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, "தேர்வு ரத்து என்பது நீட் வேண்டும் என்பவர்களுக்கு சாதகமானதே. 12-ஆம் வகுப்புக்கு எப்படி மதிப்பெண் வழங்கினாலும், இது படிக்காமல், தேர்வு எழுதாமல் பெற்ற மதிப்பெண். இது உயர் கல்வியைப் பாதிக்கும். உயிர் காக்கும் மருத்துவப் படிப்பை பாதிக்கும். அதனால் நீட் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிற வாதம் சட்டப்படி அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும்'' என்றார்.

dd

திருப்பத்தூரை சேர்ந்த பொறியியல் பேராசிரியர் பவித்ராவிடம் கேட்டபோது, "மத்திய கல்வி வாரியம் உட்பட பல மாநிலங்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு ஜே.இ.இ தேர்வும் நடத்தப் படுகிறது. மற்ற பெரும் பாலான படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் அட்மிஷன் நடக்கிறது. நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்க்கிறது, நீட் பாதிப்பு குறித்து ஆய்வுச்செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பை அக்குழு அறிக் கையாக வழங்கும்போது மதிப்பெண் அடிப்படையி லேயே அட்மிஷன் வழங்க சட்டப்படி வலியுறுத்த முடியும்'' என்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டு அடுத்தகட்ட நடவடிக் கைக்கு தயாராகிவருகிறார்.