ஓ.பி.எஸ். அணியின் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்துவரும் வைத்திலிங்கத் தின் ரூ.100.92 கோடி சொத்தை சென்னை மண்டல அமலாக்கத்துறை முடக்கியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் டெல்டா மாவட் டங்களில் கோலோச்சிய வைத்தி லிங்கம், அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டபோது எடப்பாடி அணிக்குப் போகாமல், ஓ.பி.எஸ். ஸுடன் கைகோர்த்தார். ஓ.பி.எஸ். அணியின் அ.தி.மு.க. உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருகிறார். இன்றும் ஓ.பி.எஸ். உடன் இணக்கமாக இருக்கும் அவர், அரசியலில் பெரிய அளவில் ஈடுபடாமல் தொழில்சார்ந்த பயணங்களில் மட்டும் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் அவர் மீது சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனை புகார் எழுந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை என இரண்டு துறைகளும் அவருடைய நடவடிக்கைகளைக் கண் காணித்து வந்தன. வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் பூதாகரமான நிலையில், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் முடக்கப் பட்டது.

ss

கடந்த 2011- 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். பெருங்களத்தூரில் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டிவந்தது. அதோடு சேர்த்து ஜி.எஸ்.டி. சாலையில் 57 ஏக்கரில் கூடுதலாக 1,453 குடியிருப்புகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் கட்டுவதற்கு அனுமதி கேட்டு சி.எம்.டி.ஏ. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது. மிகப்பெரும் திட்டமான இதற்கு அனுமதியளிக்க, அந்நிறுவனத்திடம் ரூ.28 கோடியை கமிஷனாகக் கோரினார்.

அதேசமயம் பணம் பெறும் விவகாரம் வெளியே தெரியாமலிருக்க, தனது மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு, நெருங்கிய உறவினரான பன்னீர்செல்வம் ஆகியோரை இயக்குநர்களாக சேர்த்து முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற ஷெல் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்குவதுபோல், தனக்குரிய லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டது என லஞ்ச ஒழிப்புத்துறை 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

மேலும் வைத்திலிங்கம் 2011-ல் வைத்திருந்த 32.47 கோடி சொத்து மதிப்பு, தற்சமயம் 1000 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதையும் லஞ்ச ஒழிப்புத் துறை கண்டுகொண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு தகவல் அனுப்பியது.

இதையடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினார் கள். மேலும் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அக்டோபரில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி னார்கள். தனியார் கட்டுமான நிறுவனம், அதன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

அந்த சோதனைக்குப் பின் அமலாக்கத் துறை பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்து வைத்திலிங்கம் தரப்பிலிருந்து அமலாக்கத்துறை எங்களிடமிருந்து எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்று அறிக்கை வந்தது.

ஆனால், அந்த தனியார் நிறுவனத் திற்கான அனுமதி வழங்கப்பட்ட சி.எம்.டி.ஏ. அலுவலகத்தின் உறுப்பினர், செயலர் உள்ளிட்ட அனைவரிடமும் இரண்டு நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றதோடு, அவர்களிடமிருந்த பல்வேறு ஆவணங்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வைத்திலிங் கத்துக்குச் சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள 2 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் தற்போது அறிவித்துள்ளது.

மேலும் இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செய்துள்ள பணப் பரிவர்த்தனைகள், அவர்கள் அளித்த அனுமதிக்கான ஆவணங்கள் என அனைத்தையும் அமலாக்கத்துறையினர் தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, வைத்திலிங்கம் கைது நெருக்கடிக்கு உள்ளாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

அதேசமயம், பா.ஜ.க.வில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் பிரமுகர்களை இணைக்க, மேற்கு வங்கம், மகாராஷ்டிரத்தில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. சோதனைகள் எப்படி பயன்படுத்தப் பட்டதோ, அதேபோல தற்போதைய சோதனைகள் மூலம் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் இருவரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் பா.ஜ.க.வில் இணைய சம்மதிக்கும் பட்சத்தில் அவர்கள் மீதான வழக்குகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு, போதுமான ஆதாரங்கள் இல்லையென மிஸ்டர் க்ளீன் சர்ட்டிபிகேட்டும் வழங்கப் படலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

பா.ஜ.க.வின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஓ.பி.எஸ். பெரிதும் அதிர்ச்சியடைந் துள்ளார்.

Advertisment