ஒரு அலுவலகத்துக்கு, தினமும் கிளம்பிப்போய் வேலைபார்த்துவிட்டு வீடு திரும்புவதற்குள்ளாகவே நமக்கு முதுகு நிமிர்ந்துவிடுகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு பெண் 25 பள்ளிகளில் ஏககாலத்தில் வேலைபார்த்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார். இவரது சாதனையைப் பார்த்து வாயடைத்துப்போன உ.பி. காவல்துறை, அவரது சாதனையின் ரகசியத்தை விசாரித்து வருகிறது.
காஸ்கஞ்ச் பகுதியின் ஃபரித் பூர் பகுதியிலுள்ள கஸ்தூர்பா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக கடந்த ஒன்றரை ஆண்டாகப் பணியாற்றி வருகிறார் அனாமிகா ஷுக்லா. கஸ்தூர்பா பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
கடந்த மாதம் லோக்கல் செய்திப் பத்திரிகைகளில்தான் இந்த விஷயம் வெளிச் சத்துக்கு வந்தது. கஸ்தூர்பா பள்ளிகளைச் சேர்ந்த 25 பள்ளிகளிலிருந்து அனாமிகா ஷுக்லா எனும் பெயருக்கு மாத ஊதியம் போய்க்கொண்டிருந்தது யாருடைய கவனத்தையோ ஈர்த்திருக்கிறது. அல்லது திட்டமிட்டு யாரோ ஊடகத்தின் காதுகளுக்கு இந்த விஷயத்தை கொண்டு போயிருக்கிறார்கள். கஸ்தூர்பா பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் டிஜிட்டல் டேட்டாபேஸ் உருவாக்கும் போதுதான் இந்தக் குட்டு அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
இதையடுத்து மாநிலமெங்கும் உள்ள 746 கஸ்தூரிபா பள்ளிகளிலும் இதைப்போல வேறெவரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஊதியங்களைப் பெற்றிருக்கிறார்களா என்ற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இந்த விஷயம் வெளிப்பட்டதும், அநாமிகாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்து விசா ரணைக்கு ஆளாகச் சொன்னதாகவும், ஆனால் அனாமிகா வாட்ஸ் ஆப்பிலேயே தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் காஸ்கஞ்சில் வைத்து அனாமிகா கைது செய்யப்பட்டு விட்டதாக தொடக்கக் கல்வி அலுவலர் அஞ்சலி அகர் வால் உறுதிசெய்துள்ளார். விசாரணையில் தனது பெயர் அனாமிகா சிங் எனவும், வேறொரு பெயரைக் கூறிய தாகவும் சொல்லப்படுகிறது. அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அத்தனை பணிக்கான சம்பளமும் ஒரே கணக்கில்தான் போடப்பட்டதா, இல்லை ஒவ் வொன்றுக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை அனாமிகா பயன்படுத்தினாரா என்பது உறுதிசெய்யப்படவில்லை.
அனாமிகாவை கைது செய்வது முக்கியமானதில்லை. அரசு நடத்திவரும் 25 பள்ளிகளில் ஒரே பெண் பணி நியமனம் செய்யப்பட்டு, 13 மாதங்கள் ஊதியமும் பெற்றிருக்கிறார் எனில் அதில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பின்புலம் இல்லாமல் இத்தனை பெரிய ஊழல் நிகழ்ந்திருக்க முடியாது. இதற்குப் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கைது வளையத்தில் வந்திருக்கும் அனாமிகா, இந்த வேலையை வாங்கித் தர உதவியவருக்கு தான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். இந்த ஒரு லட்சம் 25 பள்ளிகளில் எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய் வேலை கிடைத்ததற்குக் கொடுத்த சன்மானம்?
-க.சுப்பிரமணியன்