சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் திடீரென்று நீக்கப்பட்ட விவகாரம் மாங்கனி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளாக இருந்தவர் ஜி.வெங்கடாசலம். எடப்பாடியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட இவர், ஜனவரி 28ஆம் தேதி, திடீரென்று மா.செ. பதவியிலிருந்து கட்டம் கட்டப்பட்டு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் என்ற "டம்மி' பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார். சூட்டோடு சூடாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு ஆகிய இருவரையும் சேலம் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
வெங்கடாசலம் நீக்கப் பட்டதன் பின்னணி குறித்து இலைக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தோம். "கடந்த 2001-2006வரை வெங்கடாசலத்தின் மனைவியும், 2006 - 2011 வரை வெங்க டாசலமும் சேலம் மாநக ராட்சி கவுன்சிலராக இருந்தனர். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமிதான் அவரை "அம்மா' விடம் அறிமுகப்படுத்தி, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சேலம் மேற்கில் சீட் வாங்கிக் கொடுத்து, எம்.எல்.ஏ.வாக்கினார். மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பரோட்டா மாஸ்டராக வேலைபார்த்த வெங்கடாசலம், எம்.எல்.ஏ.வாக இருந்த பத்தாண்டு காலத்தில் எக்கச்சக்கமான சொத்து களை வாங்கிக் குவித்துவிட்டார். மகன், மகள், மைத்துனர், நெருக்கமான உறவினர்கள் பெயர் களில் 10 பேருந்துகள், சேலம், வாழப்பாடி, எடப்பாடி, ஓமலூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் 8 பெட்ரோல் பங்குகள் இயங்கு கின்றன. சேலம் முல்லை நகரில் அபார்ட் மென்ட், சென்னையில் 3 இடங்களில் அபார்ட் மென்ட், உள்ளூரில் அவருக்கும், மகளுக்கும் லிப்ட் வசதியுடன் சொகுசு வீடுகள் இருக்கின்றன. சேலம் அங்கம்மாள் காலனி, ஓமலூர் அருகே எல்லாயூர், காமலாபுரம், வட்டக்காடு, வெள் ளாளகுண்டம், மங்களபுரம் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் 100 ஏக்கருக்கும் மேலான நிலபுலன்கள் என 500 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துக்களை வாங்கிக் குவித் துள்ளார். எடப்பாடியை தனிமையில் சந்தித்தால் வெங்கடாசலம் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து விடு வார். இதெல் லாம் வெறும் நடிப்பு என்பதே அவ ருக்கு பின்னர்தான் தெரிய வந்தது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கில் போட்டியிட்டு தோற்றுப்போனார். தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தை, முறையாக பட்டுவாடா செய்யாமல் பதுக்கிக்கொண்டார். சொந்த கஜானாவைத் திறந்து செலவழிக்க மறுத்துவிட்டார். கடந்த மூன்றாண்டுகளாகவே கட்சி வளர்ச்சிக்காக எந்தப் பணியையும் செய்யவில்லை. கட்சியிலுள்ள நிர்வாகிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பதவியில் நியமித்தார். இந்நிலையில்தான், எடப்பாடியாரின் நீண்டகால நண்பரும், மொரப்பூர் மாஜி எம்.எல்.ஏ.வுமான சிங்காரம், சேலம் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரிடம் இலைக்கட்சி நிர்வாகிகள், வெங்க டாசலம் பற்றி பக்கம்பக்கமாக ஆதாரத்துடன் புகார்களைக் கொட்டினர். இதுகுறித்த விரிவான அறிக்கையை எடப்பாடியாரிடம் சமர்ப் பித்ததை அடுத்தே, அவரை மா.செ. பதவியிலிருந்து கட்டம் கட்டினார்'' என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
வெங்கடாசலத்திடம் கட்சி நிதியாக கணிசமாகக் கோடிகளை தலைமை கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரம், சட்டமன்றத் தேர்தலின்போது சில தொகுதி களின் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக் கொண்டாராம். அதன்பிறகே, வெங்கடா சலத்தை முற்றாக ஒதுக்கி வைக்காமல், பெயரளவுக்கு ஒரு பதவியில் நியமித்தார் என்கிறார்கள் சீனியர் ர.ர.க்கள். சேலம் மாநகர் மாவட்டத்திற்கு தற்போது புதிய பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான எம்.கே.செல்வராஜ், ஏற்கெனவே மா.செ. பதவியில் 11 ஆண்டுகள் இருந்திருக் கிறார். தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த எம்.கே.செல்வராஜ், நடுவில் சிறிதுகாலம் ஓ.பி.எஸ். அணிக்கு தாவிவிட்டு மீண்டும் எடப்பாடியுடன் ஐக்கியமாகிவிட்டார். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர் என்பதால் அவரை "டிக்' செய்தாராம் எடப்பாடி.
மற்றொரு பொறுப்பாள ரான ஏ.கே.எஸ்.எம்.பாலு, எடப் பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி. கட்சியில் பிளவு ஏற் பட்டபோதுகூட அவர் இ.பி.எஸ். பக்கமே நின்றார். பெரும்பான் மையாக உள்ள வன்னியர் சமூகத்தைக் குறிவைத்து, பாலுவை நியமித்திருக்கிறார் எடப்பாடி.
மற்றொரு மூத்த நிர்வாகி ஒருவர், "சேலம் தெற்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வான பாலசுப்ரமணி யத்தின் பெயரும் மா.செ. பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலாளராக இருந்த சுகுமாருக் கும், பாலசுப்ரமணியத்துக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை யில், பாலசுப்ரமணியம் மீது அதிருப்தி கிளம்பியது. மாவட்டப் பொறுப்பாளரான சிங்காரம் அவரை 'நோஸ்கட்' செய்வதற் காகவே, அவருடைய சமூகத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சக்கரவர்த்தி ஆகிய இருவரை பகுதிச் செயலாளராக நியமித்தார்'' என்றார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட பொறுப்பாளரான சிங்காரத்திடம் கேட்ட போது, "யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமானது இல்லை. கட்சித் தலைமையின் முடிவை விமர்சிப்பது அழகல்ல'' எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
மாஜி மா.செ. வெங்கடாசலத்திடம் விளக்கம் பெற செல்போனில் பலமுறை அழைத்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில், பதவியிழந்த தரப்பினர், த.வெ.க.வுக்கு தாவ நூல் விடுவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது!