"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ' என நம்முடைய பண்டைய சங்க இலக்கியமான புறநானூறு நூலில் குடபுலவியார் என்கிற புலவரும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலில் சீத்தலைச் சாத்தனார் என்கிற புலவரும் பாடியிருப்பார்கள்.

நாம் வாழும் இந்த பூமியானது எல்லா உயிரினங்களையும் சார்ந்துள்ளது. அதேபோல் எல்லா உயிரினங்களும் பூமியைச் சார்ந்துள்ளது. ஆதியில் இந்த உலகைப் படைத்த பரம்பொருளான இறைவன் மனிதனையும் படைத்தார். அந்த மனிதனுக்குத் தேவையான உணவையும் (அன்னம்) படைத்தார்.

"ஸோபோப்யதப் தாப்யோபிதப்தாப்யோ மூர்த்திரஜாயத

யா வை ஸா மூர்த்திரஜாயதான்னம் வை தத்'

என ஐதரேய உபநிஷத்தின் மந்திரம் கூறுகிறது.

அன்னம் என்றால் உணவு என்று பொருள். பிராண் என்பது நம்மிடமுள்ள இயங்கு சக்தி. இந்த அன்னமும், பிராணமும் ஒன்றாக இணைந்து தான் மனிதனையும், மற்ற உயிரினங்களை யும் வாழச் செய்கிறது. இதன்மூலம் ஆறறிவு படைத்த மனிதன் இறைவனின் அருளால் மேல்நிலையை (மோட்சம்) அடைகிறான். உணவு, உயிர் என்கிற இரண்டையும் பற்றி பிரசன்ன உபநிஷத்து விவரிக்கிறது. ஆக, உணவு என்கிற அன்னம் இருந்தால்தான் உயிர் வாழும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் புறநானூற்றின் புலவரும், மணிமேகலையின் புலவரும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ எனப் பாடியிருப்பார்கள்.

aa

நம்முடைய சங்க இலக்கியங்கள் மற்றும் பிற்கால இலக்கியப் படைப்புகளில் உணவின் அவசியத்தைப் பற்றி பல பாடல்கள் பாடப்பட்டுள்ளது.

பூமியில் வாழும் எல்லா உயிரினங் களுக்கும் உணவு மற்றும் தண்ணீர் முதலில் அடிப்படை அத்தியாவசியமானது.

Advertisment

நம்முடைய மதத்தில் அன்னத்தை இறைவ னாக நினைத்து வழிபடுவதுண்டு. இந்த உணவுதான் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டுகிறது. யஜூர் வேதத்தில் வரும் அன்னஸூக்தம் அன்னத்தின் மகிமையையும், அவசியத்தையும் நமக்கு விவரிக்கிறது. உண்ணும் உணவு நமக்கு நல்ல பலனைத் தரவேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு பரிஷேசனம் செய்துவிட்டு பின்பு சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.

நம்முடைய சனாதன தர்மத்தில் கல்விக்கு ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதிதேவி என்கிற சாரதாம்பானையும், செல்வத்திற்கு திருமகளான லட்சுமி தேவியையும் வழிபடுவது போன்று உணவாகிய அன்னம் என்றும் நீக்கமற கிடைக்க. அன்னபூர்ணேஸ்வரி (அன்னபூரணி)யை வழிபடுவதுண்டு.

நம் பாரத தேசத்தில் பல இடங்களில் மாதா அன்னபூரணி தேவிக்கு ஆலயங்கள் இருந்தாலும் காசி (வாரணாசி)யில் கொலுவீற்றிருக்கும் காசி அன்னபூர்ணேஸ்வரிக்கு என ஓர் தனிச்சிறப்பும், மகிமையும் உண்டு. இதற்குக் காரணம் அவிமுக்த க்ஷேத்ரமான புனித கங்கை நதி ஓடும் காசி மாநகரில்தான் ஜோதிர்லிங்கமாக ஸ்ரீவிசுவநாதரும் இறைவி ஸ்ரீ விசாலாட்சியும் அருளாட்சி செய்துவருகிறார்கள்.

Advertisment

இறைவன் ஸ்ரீ விசுவநாதர் வீற்றிருக்கும் காசி (வாரணாசி) தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.

"மாட்டூர் மட ப்பாச்சி லாச்சிராமம்

முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி' என

திருஞானசம்பந்தரும் (இரண்டாம் திருமுறை)

"மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்

வக்கரை மந்தாரம் வார ணாசி' என

திருநாவுக்கரசர் (ஆறாம் திருமுறை) ஆகியோர் வாரணாசி பற்றி பாடியுள்ளனர்.

பழமையும், பெருமையும், தெய்வீக சிறப்பும்

பெற்ற காசி ஸ்ரீ விசுவநாதர் ஆலயத்திற்கு அருகேதான் அமைந்துள்ளது காசி அன்னபூர்ணேஸ்வரி ஆலயம். தற்போதுள்ள ஆலய கட்டட அமைப்பு 18-ஆம் நூற்றாண்டில் மாராட்டிய மன்னர் பேஷ்வா பாஜிராங் என்பவரால் கட்டப்பட்டது. ஆலயத்தின் மூலவராக கருவறையில் அன்னபூர்ணேஸ்வரி அம்பாள் தனது இடது கையில் கிண்ணத்தையும், வலது கையில் கரண்டி ஏந்தி காட்சிதருகிறாள். அம்பாள் அருகே சிவபெருமான் யாசிப்பது போன்று நிற்கிறார். தீபாவளி சமயத்தில் நடைபெறும் உற்சவத்தின்போது தங்கத்திலான விக்ரகத்திற்கு லட்டு அலங்காரமும், நவம்பர் மாதத்தில் நெல் அலங்காரமும் சிறப்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகும்.

பகவான் வேதவியாசர் காசி மாநகரில் வாழ்ந்த சமயத்தில் அன்னபூர்ணேஸ்வரியின் அருள் அவருக்கு கிட்டியது. காசி மாநகரில் எழுந்தருளிய ஸ்ரீ ஆதிசங்கரர் தேவியை போற்றி "அன்னபூர்ணா அஷ்டகத்தை' இயற்றினார்.

aa

புகழ்பெற்ற காசி அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் கும்பாபிஷேகம் சமீபகாலத்தில் 1977-ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் 35-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள், தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளுடன் இணைந்து நடத்திவைத்தனர். அதன் பின்னர் நீண்டநாட்களாக கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்ததால் காசி அன்னபூர்ணா மந்திர் மஹந்த் (தலைமைப் பூசாரி) ஸ்ரீ சங்கர்புரி மகராஜ் அண்மையில் சிருங்கேரிக்கு சென்று சிருங்கேரி படம் சார்பில் கும்பாபிஷேக வைபவத்தை நடத்தித் தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி மகாசந்திதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் வழிகாட்டுதல் பேரில் இளையவர் ஸ்ரீ விதுசேகர பாரதி சந்நிதானம் சுவாமிகள் வேத முறைப்படி கடந்த மாதம் பிப்ரவரி 7-ஆம் தேதி காலையில் சிறப்பாக நடத்திவைத்தார்.

சிருங்கேரி மடம் சார்பில் புதிய அன்னபூர்ணேஸ்வரி விக்ரகத்திற்கு பிராண பிரதிஷ்டை செய்து, மடம் சார்பில் புதியதாக உருவாக்கப்பட்ட தங்க சிகர கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி கணபதி ஹோமம், சஹஸ்ர சண்டி ஹோமம், கோடி குங்கும அர்ச்சனை, வேத பாராயணம் போன்ற வைதீக சடங்குகள் நடைபெற்றன.

முன்னதாக ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி யின் புதிய விக்ரகத்தை ஜனவரி மாதம் சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் சிறப்பு பூஜையைசெய்து பாதுகாப்புடன் காசிக்கு அனுப்பிவைத்தார்.

நம் நாட்டில் எங்கும் விவசாயம் செழித்து, மக்கள் அனைவரும் குறிப்பாக விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மிக சந்தோஷமாக உணவு உட்கொண்டு நலமுடன் வாழவேண்டுமென அன்னபூர்ணேஸ்வரியை பக்தியுடன் வேண்டுவோமாக!