"மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்று ஒரு பழமொழி உண்டு. எது இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றதோ, அதுவே இதில் இருக்கின்ற உயிர் உள்ள, உயிரற்ற அத்தனை விஷயங்களின் தேவைகளையும் அது தானா கவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதில் இயற்கை எனும் இறைவன் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது இறைவனைப் பற்றி நினைப்பதே இல்லை. நமக்கு துன்பம் வரும்போது மட்டுமே, ஏறாத மலைகள் இல்லை, போகாத கோவில்கள் இல்லை, வழிபாடு செய்து வணங்காத தெய்வங்கள் இல்லை, செய்யாத பரிகாரங்கள் இல்லையென்று மனம் மிகக் கடுமையாக பல்வேறு வகைகளில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. இறைவன்மீதும் இயற்கைமீதும் உண்மையான பக்தி செய்ய விரும்புபவர்கள், வாழ்வியல் ஞானி மருத்துவ மேதை திருவள்ளுவர் எழுதி அருளிய இரண்டு திருக்குறள்களை கருத்தில் கொண்டாலே, நாம் செய்யும் பக்தியின் உயரம் தெரிந்துவிடும்.

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை

யாண்டும் அஃதுஒப்பது இல்.'

ஆசை அறவே அற்ற நிலை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகத்தில் வேறு எதுவுமில்லை. அதற்கு நிகரானது வேறு எங்குமில்லை.

bk

மனித இனத்தின் அனைத்து துன்பங்களுக்கும் "ஆசை' காரணம் அல்ல. "பேராசையே' பெரும் நோய்க்கு காரணமாக இருக்கிறது. அவ்வாறு ஆசை இல்லாத மனதோடும், எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல், இறை சிந்தனையில் நாம் இருப்போமானால், பிரபஞ்ச பேராற்றலின் கருணை எனும் அன்பு வளையத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கமுடியும். இது வெறும் பேச்சல்ல. அவரவர்கள் நடைமுறைப்படுத்தி பார்க்கும்பொழுதுதான் இதிலுள்ள உண்மைத் தன்மை புரியும்.!

"இன்பம் இடையறாது ஈண்டும்

Advertisment

அவாஎன்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.'

ஆசை என்று சொல்லப்படும் கடும் துன்பம் ஒருவருக்கு ஒழியுமானால் (அவர் வீடு பெற்றபின்பு மட்டு மன்றி, அதற்குமுன்பு) இவ்வுலகில் இன்பம் இடைவிடாது வந்து சேரும்.

Advertisment

எனவே நாம் மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என்று நினைத்தால் திருவள்ளுவர் கூறும் வழியை பின்பற்றலாம்.

"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.'

எதன்மீதும் விருப்பமும், வெறுப்பும் இல்லாத இயற்கையாக இருக்கும், இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எந்த இடத்திலும், எந்த காலத்திலும் துன்பம் என்பது இல்லவே இல்லை.

s

இவற்றைப் புரிந்துகொண்டாலே உண்மையான பக்தி எது என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த மூன்று மட்டுமே ஒரு தனி மனிதனின் தார்மீகமான அத்தியாவசிய தேவையாகும். இதைத் தாண்டி எந்த ஒரு விஷயத்தின்மீது ஆசை இருப்பினும், அது அழிவையே கொடுக்கும். இம்மூன்றின் மீதுள்ள சராசரி தேவையை புரிந்துகொண்டோம் என்றால், பேராசை எனும் பெரும் துயரில் சிக்கிக் கொள்ளமாட்டோம். இவற்றைத் தாண்டி உனக்கு ஆசை ஏற்படலாம்! அது எதன்மீது ஆசை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த ஆசை எப்படியிருக்கவேண்டும் என்றால், ஏதாவது ஒரு உயிருக்கு உண்ண உணவு கொடுக்கும் ஆசையாக இருக்கவேண்டும். அந்த ஆசைக்கு ஒரு குறையும் ஏற்படாது. இயற்கையும் இறைவனும் உன்னைப் படைத்தது, நீ சுயநலமானவனாக இருப்பதற்கு அல்ல. உன்னால் ஏதேனும் பிறிதொரு உயிர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். வாழும் காலம்வரை ஓரறிவு படைத்த உயிர்கள்முதல் ஆறறிவு படைத்த மனித உயிர்கள்வரை உள்ள ஏதாவது ஒரு உயிருக்கு நீ உபயோகமானவனாக இருக்க வேண்டும் என்பதையே இயற்கையுள் இருக்கும் இறைவனின் விருப்பமாகும். இதைப் பற்றி திருக்குறள் கூறும் கருத்தியலை பார்ப்போம்.

"வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.'

ஏழைகளுக்கு, அவர்களுக்கு வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே "ஈகை' என்னும் மிக உயரிய அறச்செயலாகும்.

அத்தகைய தேவையில்லாத மற்றவருக்கு கொடுப்பதெல்லாம் கடன் கொடுக்கும் தன்மையை உடையதாகும். இத்தகைய அறச்செயலை செய்வதற்கு கால நேரம் எதுவுமிருக்கிறதா? என்று ஒரு கேள்வி எழும்பொழுது, பின்வரும் திருக்குறள் அதற்கு பதிலாக அமைகிறது என்பது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.'

பிறப்பு என்பது, உறங்கினவன் திரும்ப விழிப்பதைப் போன்றது. இறப்பு என்பது உறங்குவதை போன்றது.

bb

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. நாம் உறங்குவதற்குமுன்பு நம்மால் செய்யமுடிந்த அறச்செயல்களை இந்த பிரபஞ்சத்திலுள்ள ஏதேனும் ஒரு உயிருக்கு செய்துவிடவேண்டும் எனும் உயரிய கருத்தே மிகச்சிறந்த எதிர்பார்ப்புகள் இல்லாத பக்தியாகும். நிலையில்லாதது மனித வாழ்க்கை. அது உயிருள்ள போதே, மற்ற உயிர்களுக்கு பயனுள்ளதை செய்யவேண்டும் என்பதே அதுவே மிக உயர்ந்த பக்தி எனும் அறம் ஆகும். இதைப்பற்றி பிரபஞ்ச மெய்ஞானி திருமந்திர சிற்பி திருமூலர் அருளியதை பார்க்கலாம்.

"ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின

கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்

பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை

அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.'

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் ஒவ்வொன்றாக கழிந்து கொண்டே இருக்கின்றன. இப்படி பல யுகங்கள் போய்விட்டன. மனிதன் கட்டிய மனக்கோட்டைகள், ஆசை, கனவுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக குறைந்து குன்றிவிட்டன. சாறு பிழிந்த சக்கைபோலத் தங்கள் பெரும் துன்பத்துக்கு இடமான உடல் மெலிந்து, தளர்ந்து ஒருநாள் அழிந்தும் (இறந்தும்) போகும். இதையெல்லாம் பார்த்தபிறகும், அறம் செய்வதே தலை சிறந்த பக்தி என்பதை அறியாத மக்கள் இருந்து என்ன பயன்? உயிருள்ளபோதே பயனுள்ள நல்ல விதமான அறச் செயல்களை இவர்கள் ஏன் செய்ய நினைப் பதில்லை? அறச் செயல்களை செய் வதை நினைக்க வேண்டும் என்பதே திருமந்திர சிற்பியின் கருத்தாகும்.

"பரவப் படுவார் பரமனை எத்தார்

இரவலர்க்(கு) ஈதலை யாயினும் ஈயார்

கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்

நரகத்தில் நிற்றீரோ நன்னெஞ்சி னீரே.'

எல்லாராலும் போற்றி வழிபடுகின்ற, சிவப் பரம்பொருளை வணங்காதவர்கள், இல்லையென்று வருபவர்களுக்கு தன்னிடம் மிஞ்சியுள்ளதைக்கூட கொடுத்து உதவமாட்டார்கள். ஒரு சிறு குடத்தில் நீரை மொண்டு ஊற்றிச் செடிகளைக்கூட வளர்க்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் முடிவில், நரகத்தில் நின்று துன்பப்பட வேண்டிவரும். எனவே, நல்ல மனம் கொண்டவர்களே, நினைத்துப் பாருங்கள். இருக்கும்பொழுதே அறம் எனும் நல்லது செய்யுங்கள். தனது ஆசை எப்படி இருக்கவேண்டும் என்பதை அருட்பெருஞ்ஜோதி திரு. அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் இறைவனிடம் வேண்டுவதைப் பார்க்கலாம்.

"கருணையே வடிவாய் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமாதிகளைக்

தருண நின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும் வன்புலை கொலை இரண்டும்

ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந்தனிலே

மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்.'

மற்றவர்களுக்கு ஏற்படும் கொடிய துன்பங் கள், அச்சங்கள் முதலானவற்றினைத் தக்க தருணத்தில் காத்தருளும் பரம்பொருளே! உன் அருளினாலே, கருணை வடிவாய் நின்று அவர்களுக்கு இன்பம் தரவேண்டும். உலகில் வன்மைத் தன்மையினதான தீய நெறிகளிலிருந்தும், கொலைபாதகச் செயல்களை அகற்றிய வழியில் உலகை நடக்கச் செய்யவும், பிற உயிர்களுக்கு உதவவும் ஆசை. பிரபஞ்சத்தில் பொருந்தியுள்ள உனது புகழை நினைத்து வாழ்த்தவும், உன்னை வணங்கவும் எனக்கு ஆசை. என் தந்தையே, என் ஆசையை நிறைவேற்றுவாயாக.

இவ்வாறாக அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் இறைவனை நோக்கி தன் ஆசை எப்படி இருக்கவேண்டும் என்று இறைஞ்சுகிறார். பிற உயிர்களுக்கு உதவவும், அவற்றின்மீது கருணையோடு இருப்பதுமே நமது ஆசையாக இருக்க வேண்டும்.

அறத்தில் சிறக்கும் அன்பு உள்ளம் கொண்டவர்களைத் தன் கருணைக் கரத்தில் தாங்கி காப்பாற்றுவான் இயற்கையுள் இருக்கும் சிவமெனும் பரம்பொருள்.

"அறமே சிறந்த பக்தி' அரனே தருவான் மிக உயர்ந்த சக்தி.