கில உலகத்தின் நாயகனான சிவ பெருமானுக்கு எத்தனைப் பிள்ளைகள் என்று கேட்டால், எல்லாரும் கூறுவது விநாயகப் பெருமானையும் முருகப் பெருமானையும்தான். ஆனால் சிவபெருமானுக்கு நான்கு பிள்ளைகள். சிவனின் மூத்த மகன் விநாயகர், முருகன், வீரபத்திரர், சொர்ண காலபைரவர் ஆகியோரே அவர்கள்.

இவர்களில், சிவனின் வியர்வையிலிருந்து உருவானவர்தான் கல்யாணசுந்தர வீரபத்திரர்.

இவர் எங்கு அருள்பாலிக்கிறார்? தில்லைக் கூத்தன் நடனமாடும் தில்லை எனப்படும் சிதம்பரத்தில்தான்.

சிதம்பரத்தில் தேரோடும் மேற்கு வீதியினரு கில் உள்ளது ஸ்ரீ.கல்யாணசுந்தர வீரபத்திர சுவாமி திருக்கோவில். இந்தக் கோவில் இருக்கும் தெருவின் பெயரும் வீரபத்திர சுவாமி தெரு என்றே அழைக்கப்படுகிறது.

Advertisment

vve

இந்த ஆலயத்தில் கல்யாணசுந்தர வீரபத்திர சுவாமி, கல்யாணி கதம்பவன வாசினியுடன் திருமணக் கோலத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக் கிறார். இந்த ஆலயம் மிகப் பழமைவாய்ந்த ஆலயம். மன்னர் ராஜேந்திர சோழனால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள், கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் அமைத்தது போக மீதமிருந்த கற்களால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. பிற்காலத்தில் முகலாய மன்னர்களால் இந்த ஆலயம் சில சேதாரங்களை சந்தித்தது. சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதை இன்றும் சில சிலைகளிலுள்ள பின்னங்களில் காணலாம்.

இந்த ஆலயத்திலுள்ள கல்யாண சுந்தர வீரபத்திர சுவாமி சிவனின் வியர்வையிலிருந்து உருவானவர் என்பதால், சுவாமியின் தலையில் ஒரு சிவலிங்கம், பிறை, சூரியன் ஆகியவை உள்ளன. இவரது கையில் மான் மற்றும் வாள் உள்ளன. கல்யாண வீரபத்திரரின் கீழ்ப்பீடத்தில் தட்சன், அவரது மனைவி, நந்திகேஸ்வரர் உள்ளனர்.

சிதம்பரத்திலுள்ள நடராஜர் ஆலயத்தில், முத்துக்குமாரசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின்போது, வீரபாகு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இங்குவந்து கல்யாணசுந்தர வீரபத்திரரிடம் நல்லெண்ணெய், சீயக்காய் இரண்டையும் கொடுத்து வணங்கிவிட்டு, முதல் உத்தரவு வாங்கிச்செல்வார்கள். பிறகுதான் சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில் இருபுறமும் இரு விநாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள். ஒருவர் தேரடி விநாயகர்; மற்றொருவர் வெள்ள விநாயகர். இவை இரண்டும்தான் முதன்முதலில் ராஜேந்திரசோழன் அமைத்தது. பிறகுதான் வீரபத்திர சுவாமி கோவிலைக் கட்டினார். கோவிலின் முகப்பிலிருக்கும் வெள்ள விநாயகருக்கு இரண்டு திருக்கரங்கள் மட்டுமே உள்ளது தனிச்சிறப்பாகும்.

இந்த ஆலயம் திருமணத் தடை நீங்க மிகமிக விசேஷ மான ஆலயம். திருமணத் தடையுள்ளவர்கள் மூன்று அமாவாசை தினங்களில் இங்குவந்து பிரார்த்தனை செய்யலாம்.

Advertisment

vv

ஆண்‌- பெண் இருபாலாரும் பரிகாரம் செய்யவேண்டிய பொருட்களைக் கொண்டுவர வேண்டும். குளிமஞ்சள் 11, புது அகல்விளக்கு 2, நெய், பூமாலை, அரளிப் பூக்கள் 51, தேங்காய் 2, வாழைப்பழம் 2- இவற்றைக் கொண்டுவந்து கல்யாணசுந்தர வீரபத்திர சுவாமி, கல்யாணி கதம்பவன வாசினியை அர்சனை செய்து மனமுருகி வேண்டினால் நிச்சயம் விரைவில் திருமணம் நடைபெறும்.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக் கும் கல்யாணி கதம்பவன வாசினி அம்பாளுக்கு ஆடிப்பூர தினத் தில் பெண்கள் வளையல் சாற்றி வழிபாடு நடத்துகின்றனர்.

அதுமட்டுமல்ல; நம்மை எதிர்ப்பவர்கள், நம்மை எதிரியாக நினைப்பவர்களின் சக்தியைக் குறைக்க இந்தத் தலத்தில் சிறப்புப் பரிகாரம் உள்ளது. கல்யாணசுந்தர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செவ்வரளிப் பூக்களால் 11 வாரம் அர்ச்சனை செய்துவந்தால் எதிரிகள் இருக்குமிடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிடுவார்கள் என்று பக்தர்கள் மெய் சிலிர்க்கக் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் வாரம் சூரிய பூஜை வெகு விமரிசையாகக் கொண்டா டப்படுகிறது. கோவில் எதிரிலிருக்கும் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சூரிய ஒளி புகுந்து, கல்யாண சுந்தர வீரபத்திர சுவாமியின் சிரசில் ஒரு வாரகாலம் விழும் அற்புதக் காட்சி யைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இங்கு அருள்பாலிக்கும் பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது. இந்த ஆலயத் திலுள்ள குரு பகவான் சந்நிதியில், குரு பகவானுக்கு நேரே நந்திபகவான் வீற்றிருக்கிறார். இது வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகக் கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில் அண்ணாமலையார் லிங்கவடிவில் லிங்கோத்பவராக அருள் பாலிக்கிறார். அதேபோல் பிரம்மா நான்கு முகத்துடன் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்பு விஷ்ணு துர்க்கை. இந்த துர்க்கையை மாணவர் கள் தேர்வில் வெற்றிபெறவேண்டும் என்பதற் காக வணங்கி நெய்தீபமேற்றிச் செல்கின்றனர்.

அதேபோல் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, கல்லூரியில் மேற்படிப்புக்குத் தேர்வானவுடன் இந்த துர்க்கைக்கு சிறப்புப் பூஜை செய்கின்றனர்.

இந்த ஆலயத்தில் மிகமிகச் சிறப்புவாய்ந்த ஒரு தீர்த்தம்- அக்னி தீர்த்தம் என்னும் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்து தான் தினமும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அபிஷேகத் தீர்த்தத்தை பால்சுரக்கும் மருந் தாக பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். தங்களிட முள்ள பசுக்கள் பால் சரிவர சுரக்காமல் போனால், இந்த தீர்த் தத்தை வாங்கிப் பசுக் களுக்கு உணவோடு கலந்தளிக்கிறார்கள். அடுத்தவேளை பால் அதிகப்படியாக சுரப்ப தாக பக்தர்கள் ஆச்சரியத் தோடு கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல; தாய்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும்போது, சில பெண்களுக்குப் பால் சுரப்பதில் பிரச்சினை இருக்கும். அப்படிப்பட்ட வர்கள் இந்த அக்னி தீர்த்தத்திலிருந்து அபிஷேகம் செய்யப் பட்ட நீரை அருந்தினால் தங்கள் குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பதாக உணர்வுப் பூர்வமாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோவிலின் தனிச்சிறப்பே, அக்னி தீர்த்த நீரால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம்தான். இதைவாங்க வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

திருமணத் தடை நீக்கும் திருத்தலமாக மட்டுமின்றி, பால் சுரக்கும் அதிசய நிகழ்வும் இறைவன் திருவருளால் நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தின் தல விருட்சம் குறுந்தை மரம்; தீர்த்தம் அக்னி தீர்த்தம்.

சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து மேலவீதி வழியாக வந்தால் வீரபத்திரசாமி கோவில் தெருவை அடையலாம். கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 8.00 முதல் 10.00 மணிவரை; மாலை 6.00 முதல் 8.00 மணிவரை.