"இருவர் மண் நீர் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்த சூளை
அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
கோரக்கர்: தென்பாண்டித் தமிழ் மண்ணில் தமிழ் மக்களில் ஒருவராகப் பிறந்து, பகுத்தறி வால் பலவற்றையும் சுயமாக அறிந்து, இயற்கை யின் நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் காரண, காரியங்கள் பற்றிய உண்மைகளை அனுபவத் தால் புரிந்தவரே, உலகில் வாழும் மக்கள் அனைவரும் உங்களின் வழிகாட்டுதலைக் கடைப் பிடித்து, சித்தம் தெளிந்து செயல்பட்டு வாழ்பவர் கள் சக்திபெற அருளாசி புரிந்துவருபவரே, மனிதன் தன் பகுத்தறிவால் எதனையும் ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்து தெளிந்து வாழ்ந்திட பல வழிமுறைக் கருத்துகளை இந்த பகுத்தறிவுக் கழகத்தில் கூறி, மூடனையும் பூரண அறிவுபெறச் செய்யும் பகுத்தறிவுப் பெரியாரே, உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
எங்கள் ஆசானே, ஒரு குழந்தை பிறந்த பிறகு, அதன் முற்பிறவி உயிர், அதன் தொப்புள்கொடி வழியாக உடலுக்குள் நுழைந்து, அசையும் சக்தியை தந்து செயல்படச் செய்யும் என்றும் கூறினீர்கள். அதன் முற்பிறவி உயிர் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி இன்று தெளிவுபடுத் துங்கள்.
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இந்த பூமியிலுள்ள உயிரினங்களின் உடலை இயங்கச் செய்யும் "உயிர்' பற்றிய விளக்கத்தைக் கூறுகி றேன். அதற்கு முன்பு மனிதர்களின் உடல்பற்றி சிறிய விளக்கத்தைக் கூறுகிறேன்.
இந்த பூமியானது மண், நீர், வெப்பம், காற்று ஆகிய நான்கு சக்திகளால் உருவாக்கப்பட்டு, ஆகாயத்தில் சுழன்று மிதந்துவருகிறது. பூமி மண்ணின் ஆதிக்கம் கொண்டது. மண்ணில் கருப்பு மண், செம்மண், துவர்ப்பு மண், மணல் என பலவகை உண்டு. நீரிலும் இதுபோன்று பலவகை குணம், தன்மை உண்டு. வெப்பத்தி லும் பலவகையான வழிமுறைகளில் வெப்பம் தரக்கூடிய நிலைகள் உண்டு. இதுபோன்று காற்றிலும் பலவகையான தன்மைகள் கொண்ட காற்றுகள் உண்டு. இதில் ஒருவகையான காற்று தான் உயிரினங்களை செயல்படவைக்கும் உயிர்க்காற்று, மூச்சுக் காற்றாக்கும்.
இந்த பூமி தோன்றியபோது, அதில் எவை யெல்லாம் உருவாகி இந்த பூமியை செயல்பட வைத்துக்கொண்டிருக்கின்றதோ, அந்த சக்திகள் இந்த பூமி அழியும்வரை அழியாது; அழிக்கமுடியாது. மேலும் இந்த பூமி தோன்றியபோது அதனுடன் தோன்றிய ஐம்பூத சக்திகளான மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம், தங்கம், வெள்ளி, மனிதன், மற்ற உயிரினங்கள், தாவரங்கள் என இன்னும் பல உண்டு. இவற்றைத் தவிர வேறெதுவும் புதியதாக இந்த பூமியில் தோன்றமுடியாது.
கோரக்கர்: ஆசானே, தாங்கள் கூறியதிலிருந்து எனக்குப் புதிதாக ஒரு கேள்வி எழுந்துள் ளது. பூமி அழியும் வரை என்று கூறுகிறீர்கள். இந்த பூமி அழியுமானால் எப்படி அழியும்?
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இந்த பூமியில் தோன்றிய அனைத்தும் அழியும்;
ஆனால் மறுபடியும் அதுவே தோன்றும்.
மனிதன், விலங்குகள் போன்றவை அழிந்து, மறுபடியும் பூமியில் பிறக்கும். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் அழித்தாலும் அழியாது.
தாவரங்கள் காய்ந்து அழியும். அதன் விதை மூலம் மறுபடியும் தோன்றும்.
பூமியில் காற்று இல்லையென்றால் உயிரினம் அழியும். சூரிய ஒளி இல்லையென்றால் எதுவும் செயல்படாமல் அழியும். நீர் நிலை இல்லையென்றால் உணவின்றி உயிர்கள் மடிந்து அழியும். மண், நீர், வெப்பம், காற்று ஆகியவை எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது உயிரினமில்லாத பூமி அழியும்.
கோரக்கர்: ஆசானே, மறுபடியும் குறுக்கீடு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். இந்த பூமி தோன்றியபோது உருவாகிய உயிர்கள், பொருட்கள் என இவற்றைத் தவிர, புதிதாக வேறெதுவும் தோன்றமுடியாது என்று கூறீனீர்கள். ஆனால் சில தேசத்தார் கடவுள், தெய்வம் போன்றவை அவ்வப்போது தோன்றி, ஏதாவதொரு காரியத்தைச் செய்துவிட்டு பின் பூமியிலிருந்து மறைந்துவிடும் என்று கூறுகி றார்களே?
அகத்தியர்: கோரக்கனே, இந்த பூமி தோன்றிய நாள்முதல் சூரியனின் ஒளி பூமிக்கு வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தந்து வருகிறது. ஆதிநாளிலிருந்து வானத்திலிருந்துதான் மழை பொழிந்து பூமிக்கு நீரைத் தந்துவருகிறது. இன்றும் அதே நிலைதான். ஆதிகாலம் முதல் இன்றுவரை ஆண்- பெண் இணைவால்தான் மனிதன், உயிரினங்கள் பிறந்து வருகின்றன. அன்று காற்றை சுவாசித்து உயிர் வாழ்ந்தனர். இன்றும் காற்றை சுவாசித்துதான் உயிர் வாழ்ந்து வருகிறோம். அன்றும், இன்றும் உணவுண்டு, நீர் அருந்தி வாழ்கிறோம். இது போன்று இன்னும் அனைத்து செயல்களும், இந்த பூமி தோன்றியபோது எவ்வாறு நிகழ்ந் ததோ, அதேபோன்று இன்றும் இயற்கையின் விதிப்படி மாற்றமில்லாமல் நடந்துவருகிறது. ஆனால் சிலர் கூறுவது போன்று பல சக்திகள் அவ்வப்போது வந்து செல்லும் என்றால், அவை இன்றும் வரவேண்டும். அவற்றின் சக்தியால் பூமியிலோ, மனிதர்கள் வாழ்க்கையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதே நாமறிந்த உண்மை.
பிறரை ஏமாற்றிப் பொருள்பறித்து வாழும் சிலர் ஏதேதோ கதைகளைக் கூறிக் கொண்டுதான் இருப்பார்கள். இதனை மக்கள்தான் ஆராய்ந்தறிந்து, அவர்கள் கூறுவதில் உண்மையில்லை என்பதைப் புரிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
மண் முதலான ஐந்து சக்திகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டு இந்த பூமியையும், அதில் வாழும் மனிதர்களையும், உயிரினங்களையும், தாவரங்களையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது என்பதே உண்மை. கோரக்கரே, இன்றும் ஏதாவது கேள்வி உள்ளதா?
கோரக்கர்: இல்லை ஆசானே. இனி தாங்கள் உடலைப் பற்றிக் கூறவந்ததைத் தொடர்ந்து கூறுங்கள்.
அகத்தியர்: இந்த பூமி மண்ணினால் உருவானது. மண்ணுக்கு அசையும் தன்மை கிடையாது. மண் ஒன்றுடன் ஒன்றுசேராமல் துகள்களாக கெட்டித் தன்மை இல்லாமல் இருக்கும். இந்த மண் மற்றொரு சக்தியான நீருடன் சேரும்போது, அதன் தன்மை மாறுபட்டு, அதனுடன் சேரும் நீரின் அளவைப் பொருத்து திடத்தன்மையை அல்லது திரவத் தன்மையை அடையும். நீருடன் சேர்ந்த மண் கெட்டித் தன்மையுடன் இருக்கும்போது, அதில் பல பொருட்கள், உருவங்களைச் செய்யமுடியும். இவற்றுடன் வெப்பசக்தி சேரும்போது, அது இன்னும் வலுவானதாகிவிடும். இதில் காற்று சக்தி இல்லாததால், மண்ணால் செய்த உருவத்திற்கு அசையும் தன்மை இராது. உருவம் இருக்குமே தவிர அதற்கு உயிர் இருக்காது.
மனிதன் முதலான உயிரினங்களில், ஒரு பெண்ணின் கருமுட்டை மண் சக்தியாகும். ஆணின் விந்தணுக்கள் நீர்சக்தியாகும். இவையிரண்டும் இணையும்போது பெண்ணின் கர்ப்பப் பையில் அவள் உடம்பு தரும் வெப்பத்தால் திடமாகி, உருவமாக வளர்ச்சி யடைந்து, ஒரு குழந்தையாகப் பிறக்கிறது. உயிருள்ள ஆண்- பெண் இணைவால் உருவாகும். கரு, உயிருள்ள பெண்ணால் கர்ப்பத்தில் வளர்க்கப்பட்டு, அந்த குழந்தை பிறந்தபின்பு, பிரபஞ்சத்திலுள்ள அதன் உயிர்க் காற்று அந்தக் குழந்தைக்குள் நுழைந்தவுடன் உயிர் உண்டாகிறது.
பூமியில் பிறந்த குழந்தைக்கு உயிர் எங்கிருந்து வந்தது என்பதைக் கூறுகிறேன். உதாரணமாக, பூமியிலிருக்கும் நீர் வெப்பத்தால் ஆவியாகி, வானில் சென்று சேர்கின்றது. அதே நீர்தான் மறுபடியும் மழைநீராக பூமியில் பெய்கிறது. மண்ணில் உருவான நீர் அழிவதுமில்லை; அழிக்கப்படுவதுமில்லை. அதேபோன்று பூமியில் விளையும் தானிய உணவினால் உடல் வளர்கிறது. இறந்த பின்பு அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக விடும். உயிருடன் இருந்தவரை அந்த உடல் சுவாசித்து வாழ்ந்த உயிர்க்காற்று உடலை விட்டுப் பிரிந்துசென்று, இறந்து போன உடல் மறுபடியும் பிறக்கும் வரை காற்று மண்டலத்தில் உலவிக்கொண்டிருக்கும். இந்த உயிர்க்காற்று பூமி மண்டல எல்லையைவிட்டு வேறு கிரகங்களுக்கோ, வேறு உலகங்களுக்கோ செல்லமுடியாது.
ஐம்பூதங்களும் பூமியிலிருந்து மாறுபட்ட நிலையில் மறைந்து சென்றாலும் மறுபடியும் எப்படி பூமியை வந்தடைகிறதோ, அதே போன்று இறந்துபோன ஒரு ஜீவனின் சரீரம், ஆண்- பெண் உறவால் மறுபடியும் இந்த பூமியில் பிறக்கும்போது, இறப்பிற்குமுன் அவர் சுவாசித்து வாழ்ந்து பிரிந்துசென்ற உயிர்க்காற்று, காற்று மண்டலத்திலிருந்து திரும்பவந்து, அந்த உடலுக்குள் நுழைந்து, அதற்கு உயிர் சக்தியைத் தந்துவிடும். இந்த செயலைத் தான் நாம் முற்பிறவி, இப்பிறவி, அடுத் தடுத்து பல பிறவிகள் என்று கூறுகிறோம்.
கோரக்கர்: அகத்தியர் பெருமானே, ஒருவர் இறந்தபின்பு, அவர் உடலை விட்டுச் சென்ற உயிர்க்காற்று, மறுபடியும் அடுத்து பிறக்கும் போது அதே உடலுக்குள் வரும் என்பதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறுங்கள்.
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, ஆணின் விந்திலுள்ள அணுக்கள் விதையாகவும், பெண்ணின் கர்ப்பப் பையில் உருவாகும் கருமுட்டைகள் அந்த விதையை வளரச் செய்யும் மண் தத்துவமாகவும் உள்ளது.
ஆணின் விந்தணுக்களால் உருவாக்கப்பட்ட குழந்தையின் உடம்பிலுள்ள எல்லா பாகங் களிலும், அந்த உயிரணுக்கள் கலந்து பரவியிருக்கும். ஒரு ஆண் குழந்தை எந்த விந்தில் உருவானதோ, உடம்பில் உள்ளதோ, அதன் விந்தணு குணம், தன்மை, சக்தி, செயல்பாடு என மாறாமல் இருக்கும்.
தாவரங்களில்கூட ஒரு மரத்தின் விதையை விதைத்தால், அந்த விதை வளர்ந்து அது எந்தவகையான மரத்தில் உருவானதோ, அதன் தோற்றம், பூ, காய், பழம் ஆகியவை மாறாமல் இருக்கும். இதே போன்றுதான் ஆணின் விந்தணுத் தன்மை அதனால் உருவாகும் குழந்தைக்கும் இருக்கும்.
மனித இனத்தில் பாட்டனின் விந்தினால் தந்தை பிறக்கிறான். தந்தையின் விந்தினால் நாம் பிறந்தோம். நமது விந்தின்மூலம் மகன் பிறக்கிறான். மகன்மூலம் பேரன் பிறக்கிறான். இதேபோன்றுதான் உலகில் மனிதனின் உடல், உயிர்காற்று தொடர்பினால் பிறவி நீண்டு தொடர்ந்துகொண்டே போகும். இதனைத் தான் குல விருத்தி, வம்ச விருத்தி என்று கூறுகிறோம். ஒரு மரத்தின் விதைகள்மூலம் பல்லாயிரம் மரங்கள் உருவாவது போன்று, ஒரு மனிதனின்மூலம் அவள் குடும்பத்தில் அவன் அம்சத்துடன் ஏராளமானவர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.
ஒரு குலத்தின் முதன்முதல் தோன்றியவன் உடலின் பாகங்களும், உயிரின் பிரிவுகளும் அந்த வம்சத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் தேடித்தேடி ஒவ்வொரு பிறப்பிலும் வந்து உடல், உயிரைத் தந்துகொண்டே இருக்கும்.
கோரக்கனே, நீ யார் என்று உன்னைப் பற்றிக் கேட்டாயல்லவா. நீ மட்டும் தனித்தவனல்ல.
உன்னுள் நீ உருவாகக் காரணமான உயிரணுக் களுக்கு சொந்தமான உன் முன்னோர்கள் பலர் இருக்கிறார்கள். உனது வம்ச முன்னோர்களின் குணம், சக்தி உன்னுள் உள்ளது. முற்பிறவியில் நீ உன் வம்சத்தில் பாட்டன் ஒருவனாகப் பிறந்திருப்பாய். அதன்பிறகு உன் பாட்டான் விந்தில் பிறந்த உன் தந்தையின் விந்தணுமூலம் இப்பிறவியில் பாட்டனுக்குப் பேரனாக, உன் தந்தைக்கு மகனாகப் பிறந்திருக்கிறாய்.
ஒரு குடும்பத்தில் பாட்டன் பேரனாகப் பிறப் பான். பேரன் பாட்டனாகப் பிறந்திருப்பான். நாம்தான் நமது முன்னோர்கள். நமது முன்னோர் கள்தான் நாம். ஒவ்வொரு மனிதனின் பிறப் பின் தொடர்ச்சியும் ரகசியமும் இதுதான்.
கோரக்கர்: ஆசானே, நான் யார் என்று கேட்டதற்கு, எனது முன்னோர்களின் கூட்டுசேர்க்கைதான் நான் என்று கூறுகிறீர்கள். இதனை நான் எப்படித் தெரிந்துகொள்வது?
அகத்தியர்: கோரக்கனே, ஒருவனின் உடல் தோற்றத்தில், அவனின் கண், காது, மூக்கு, நெற்றி போன்ற உறுப்புகளிலும், நடை, உடை, பேச்சு, குணம், செயல், எண்ணம், ஆசை, கோபம் போன்றவற்றிலும் அவன் முன்னோர் களின் சாயல், இருக்கும். இதனைக்கொண்டு முற்பிறவியில் நீ யாராக இருந்தாய் என்பதை அறிந்துகொள்ளலாம். உன் உடம்பும், உயிரும் உன் முன்னோர் உனக்குத் தந்தது. அவர்கள் இறப்பின்மூலம் பிரிந்த உடலும், உயிரும் மறுபடியும் அதே வம்சத்தில் பிறந்த குழந்தைக்குத் தேடி வந்துசேரும். இத்துடன் சபை கலையட்டும். மற்றவற்றை நாளைய தமிழ்ச் சபையில் அறியலாம்.
"பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
பாழ்த்தப் பிணங் கிடக்கு தென்பார் உயிர் போச்சென்பார்
ஆரப்பா அறிந்தவர்கள் யாருமில்லை
ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்
காரப்பா தீயுடன்தீச் சேருமென்பார்
கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா
சீரப்பா காமி கள்தா மொன்றாய்ச் சேர்ந்து
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.'
(அகத்தியர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)