1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஸ்ரீமந் நாரா யண மூர்த்தியை தெய்வமாகக் கொண்ட சூரிய எண்காரர்கள் இவர்கள். இந்த மாதம் இவர்கள் தங்கள் கௌரவம் சார்ந்து வெகு ப்ரயத் தனம் செயவர். அதிலும் தங்களது பூர்வீக பெருமையை தம்கட்டி பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு வேண்டாத பயல், இல்லையே, நாங்க வேறுமாதிரி கேள்விப்பட் டோமே என பொதுவெளியில் ஆப்படித்து விடுவான். போச்சா பெருமை, பீற்றல் போச்சா என தலையில் அடித்து, நொந்து போய்விடுவீர்கள். இதேபோல் தொழில் மேன்மை பெரும்போது, அரசு வரி வசூல் சம்பந்த தாக்கிது வரும். ஆனாலும் நீங்கள் சற்று சுதாரித்து, அரசியல்வாதி ஒருவரின் துணையுடன், இப்பிரச்சினையை தீர்த்துவிடுவீர்கள். இந்த மாதம் பணவிற்கு பஞ்சமிருக்காது. உங்கள் கைபேசி, யோகமான தகவல் கொண்டுவரும். உங்களில் சிலர், உங்கள் வாரிசின் அரசுப் பணிக்கு, கையூட்டு கொடுத்து பெற்றுவிடுவீர்கள். இப்போது நடக்கும் திருமணத்தில் கலப்பும், கலாட்டாவும் கலந்துகட்டி அடிக்கும். வெளிநாடு சம்பந்த பணி மற்றும் வெளிநாட்டு கல்வி இவற்றில் தடைகளை சந்திக்க நேரிடும். வீடு சம்பந்த விஷயங்களை இந்த மாதம் தள்ளிப்போடவும். பெரும் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை தேவை. உங்கள் பெற்றோரிடம் நிறைய பணம் புழங்க வேண்டாம். தேவைக்கு மட்டும் கொடுத்து வைக்கவும். இன்னல் நேரிடும். முக்கிய அதிர்ஷ்ட சுப விசேஷங்களை கையாள செல்லும்போது, விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பதும், துர்க்கைக்கு வஸ்திரம் சாத்துவதும், இடையூறுகளை தவிர்க்கச் செய்யும். அரசியல்வாதிகளின் வெற்றியில், சில இன்னல் பின்னி இருக்கும். அரசுப் பணியாளர்கள் நல்ல பதவியை பெறும் நேரத்தில், பழைய குற்றச்சாட்டை உங்கள் எதிரி கிளப்பிவிடுவார். ஆக, இந்த மாதம் எல்லாம் கிடைத்தாலும், ஏனோ முழுமையாக அனுபவிப்பதில் ஒரு தடை நின்று கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: தில்லை காளியை வணங்கலாம். துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை ராகு நேரத்தில், எலுமிச்சை மாலை சார்த்தி, விளக்கேற்றி வணங்கவும். ஒரு பித்தளை தட்டில், கொஞ்சம் உளுந்து, கொஞ்சம் கோதுமை வைத்து, கோவில் அர்ச்சகரிடம் கொடுத்துவிடுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
திருப்பதி வேங்கடாசலபதியை தெய்வமாகக்கொண்ட, சந்திர எண்காரர்கள் இவர்கள். இந்த வைகாசி மாதத்தில் உங்களுக்கு பணம் செழிப்புடன் இருக்கும் எனில் எவ்விதம் பணவரவு இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு பணி கிடைக்கும். சிலருக்கு பணியில் பதவி உயர்வு உண்டு. வியாபாரம் நல்ல வழிகள் மட்டுமல்ல, கள்ள வழிகளிலும் செல்வத்தை உங்களிடம் கொண்டு வந்துசேர்க்கும். தொழிலில் கைபேசிமூலம் வரும் தகவல்கள், நன்மைகளையும், பெருமையையும், செலவையும் ஒருங்கே கொண்டுவரும். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். சம்பளம் அதிகம் கேட்பார்கள். தொழில், வியாபாரம் ஏதாவது ஆரம்பிக்கலாமா என எண்ணம் உள்ளவர்கள், இந்த மாதம் ஆரம்பித்துவிடுங்கள். சிலகால கோட்சாரம் மிக அற்புதமாக அமையும். இந்த அற்புதமான நிலை, செயல்களை மிக எளிதாக செயல்படுத்த உதவும். எனவே 2-ஆம் எண்ணில் பிறந்த சந்திரன் சார்ந்த வர்கள் இந்த காலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இப்போது அரசு சார்பில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். உங்கள் வாரிசுகளின் சில வேண்டாத பழக்கம் தெரியவரும். விளையாட்டு சார்ந்து வெளியூர் செல்வீர்கள். கலை உலகினர், குறுக்குவழியில் பணி வாய்ப்பு பெறுவீர்கள். அரசியல்வாதிகள், மிக பெரிய அதிர்ஷ்டம் பெறுவீர்கள். முனைவர், டாக்டரேட் போன்ற பெரிய கல்வியில் உள்ளோர், எளிதாக முன்னேறவும், பெரிய மதிப்பும் பெறுவீர்கள். தொழில் முதலீடு உண்டு. தொழில் சார்ந்த கட்டடம் வாங்குவீர்கள். தம்பதிகளுக்குள் சற்று பிணக்கு வரும். திருமண விஷயத்தில், யாராவது பெரியவர்கள் குழப்பம் உண்டாக்கிவிடுவர். மூத்த சகோதரி, அரசியல் அல்லது அவரளவில் ஒரு தொழில் அல்ல வேலை கிடைக்கப்பெறுவர். உங்கள் மாமியார் புத்திசாலித் தனமாக ஒரு வில்லங்கம் ஆரம்பித்துவிடுவார். இந்த மாதம் நிறைய நன்மைகளை தர காத்திருக்கிறது; பயன்படுத்திக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: கனக துர்க்கையை வணங்கவும். அருகிலுள்ள துர்க்கைக்கு, குங்குமம், அரளி மலர்கொண்டு வணங்குவது நல்லது. துர்க்கை, காளி கோவிலில் பணிபுரியும் குருக்கள், அர்ச்சகருக்கு தேவைக் கேட்ட றிந்து உதவவும். ஒரு பித்தளை தட்டில் உளுந்தும், அரிசியும் வைத்து, வயதான பெண்ணிற்கு கொடுக்கவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடும் தெய்வமாகக்கொண்ட குரு எண்காரர்கள் இவர்கள். இந்த மாதம் அரசுப்பணி கிடைக்கும். சிலர் வாரிசு அடிப்படையில் அரசு வேலைக்கு காத்திருந்தால் இம்மாதம் கிடைக்கப்பெறும். வெளிநாட்டு பணவரவு சம்பந்த தரவுகள் வரும். பிற இன பணியாளர்கள் கிடைப்பர். இளைய சகோதரனின் வெளிநாட்டு, வெளியூர் கல்வி சார்ந்த தகவல் வரும். வீடு கட்ட, மனை முதலீட்டுக்கு அரசு வகை கடன் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, பூர்வீக வீடு சம்பந்த பயணம் உண்டு. கலப்பு காதல் திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள், குழந்தைகள் விஷயமாக சிறுசிறு சண்டை ஏற்படும். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும். நரம்பு சம்பந்த வலி அல்லது அஜீர்ணக் கோளாறு வரக்கூடும். உங்கள் அறிவின் முதிர்ச்சியினால், தொழிலில் நல்ல ஆதாயமும், பெருமையும் கிட்டும். அரசியல்வாதிகள் தங்கள் பூர்வீக இடத்தில் மிகப்பெருமை பெறுவர். உங்களில் சிலரின் மூத்த சகோதரருக்கு வாரிசு வாய்ப்பு கிடைக்கும். சமையல் கலைஞர்கள் மிக பாரம்பரியமான, திருமணம் போன்ற விசேஷங்களைக் கவனிப்பீர்கள். உங்கள் நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். அது அரசு பணி அல்லது திருமணம் அல்லது சொந்தத் தொழில் அல்லது வாரிசாகவும் இருக்கலாம். கலைத்துறையினர் தனது சொந்த ஊரில் வீடு கட்டுவர். அடிக்கடி பயணம் செய்ய நேரிடும். எனினும் பயணத்தில், பிற மத, பிற இன ஆட்களின் தொடர்பு ஒரு இம்சையை, விரயத்தை இழுத்து விட்டுவிடும்; கவனம் தேவை. சிலர் வீட்டிலிருந்தே, வெளிநாட்டு வேலைகள் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவீர்கள். இந்த மாதம் அரசுப்பணி கிடைக்க வாய்ப்புகள் மிக அருகில், பிரகாசமாக உள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 14, 25.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபடவும். அருகிலுள்ள துர்க்கைக்கு அபிஷேகத்திற்கு இளநீர், பால், கரும்புச் சாறு என இவை கொடுக்கலாம். துர்க்கை சந்நிதி அர்ச்சகருக்கு, சுத்தமான குடிநீர் வாங்கிக்கொடுங்கள். ஒரு பித்தளை தடடில், கொஞ்சம் உளுந்து, கொஞ்சம் வெள்ளை கொண்ட கடலை வைத்து பிராமண அர்ச்சகரிடம் கொடுக்கவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
துர்க்கையை வணங்கும் தெய்வமாகக் கொண்ட, ராகு எண்காரர்கள் இவர்கள். நல்ல காலத்திலேயே ஒரு மாதிரி மௌன கோபம்கொண்ட ஆட்கள் நீங்கள் இந்த மாதம் கொஞ்சம் காளி அவதாரம் எடுத்ததுபோல் திரிவீர்கள். இதற்கு முக்கிய காரணம், உங்களைப் பற்றிய அவதூறுகளை காது கொண்டு கேட்பதால் வரும் ஆவேசமாகும். இதில் என்ன கொடுமை என்றால், அந்த வதந்தி எல்லாம் உண்மையாகவே இருந்து தொலையும். ஆனாலும் உங்களுக்கு நம்ம கம்பெனி ரகசியத்தை இவன் எப்படி கண்டுபிடிக்கலாம் என்ற கோபம்தான் வரும். இது எப்படி இருக்கு? வழக்கமான லஞ்ச பண கொடுக்கல்- வாங்கல் ஓஹோதான். என்ன ஒன்று எப்போதும்போல அசால்ட்டாக வாங்க முடியாமல், கொஞ்சம் ஒளிச்சு, மறைச்சு வாங்க வேண்டியிருக்கும். இந்த மாதம் உங்கள் தொழில் சார்ந்த அரசு ஒப்பந்தம் கிடைக்கும். வாடகை வீட்டை சிலர் ஒத்திக்கு எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு, வங்கி வேலை, ஆசிரியப்பணி இவை கிடைக்கலாம். இந்த மாதம் உங்களின் அடாவடி சொற்கள், ஒரு இளம் பெண்ணிடம் செமத்தியாக அறை வாங்க வைத்துவிடும்; கவனம் தேவை. உங்கள் தொழிலில் பணிபுரியும் பணியாளர்கள் சற்று சண்டைக்கு வருவார்கள். உங்கள் கல்யாண பேச்சுக்கள்.வேகமெடுக்கும்போது, உங்களின் இளைய சகோதரி, ஏதாவது வில்லங்க வார்த்தைகளை உதிர்த்துவிடுவாள். உங்களில் சிலர் கண் பாதிப்பு அல்லது தோளில் எங்காவது இடித்துகொள்வது எனும் பாதிப்பை அடைவீர்கள். வெளிநாடு சம்பந்த யோகம் உண்டு. உங்கள் தொழில் சார்ந்த, அரசு வரி பற்றிய தகவல் வரும். அரசியல்வாதிகள், வழக்கம்போல் குறுக்குவழியில் செலவளித்து, நேர்வழியில் வெற்றியை எடுத்துவைத்துக்கொள்வர். அரசியல்வாதிகள், சமையல் கலைஞர்கள், மூத்த சகோதரன் இவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு. கலைஞர்கள் பேசும்போது, ஏறுக்கு மாறாக உளறும் வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும் அருகிலுள்ள காளிக்கு, குங்குமம் மற்றும் சின்ன பித்தளை தட்டில் கொஞ்சம் உளுந்தை வைத்து, அந்த குருக்களிடம் கொடுக்கவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஸ்ரீ சரஸ்வதியை வணங்கும் தெய்வமாகக்கொண்ட, புதன் எண்காரர்கள் இவர்கள். இந்த மாதம் பண நடமாட்டம் மட்டுப்படும். கணக்குப்படி பணவரவு நிறைய வரவேண்டும். ஆனால் நிஜத்தில் பணம் வருவேனா என அடம்பிடிக்கும். பணம் கொடுக்க வேண்டியவர்கள் உங்களிடம் ஆயிரம் துன்ப துயர சொந்த சோகத்தை பகிர்ந்துவிட்டு, கூடவே சார் இந்த மாதம் இன்னும் கடன் கொடுங்கள். அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என்பர். மேலும் மேலும் பணம் கொடுத்தால் நஷ்டம். கொடுக்காவிட்டால் கௌரவ பங்கம் என்றாகிவிடும். இதனால் உங்கள் வார்த்தைகள் சற்று சுள்ளென்றிருக்கும். திருமணம் செய்ய வரன் பார்க்கும்போது, வரன்கள் எல்லாம் கலப்பாக இருப்பதாக புரோக்கர் கூறுவார். கல்யாண புரோக்கர் வேலை செய்பவர்களுக்கு சற்று கலவரமான காலமிது. கல்யாணம் தாமதமாகும். பையன்கள் கோபத்தில் நாலு அப்பு அப்பிடவும் கூடும். சிலரின் வாரிசுகள் தங்கள் தந்தையிடம் திருமண தாமதம் குறித்து வாக்குவாதம் செய்வர். இதற்கு எரிச்சல் பட்டு, பாவம் தந்தைகளும் நிறைய செலவுசெய்வர். உங்களில் சிலர், வெளிநாட்டு வேலை சம்பந்தமாக சில ஏஜென்சியிடம் சந்திப்பு நடத்துவீர்கள். உங்களில் சிலர் இரண்டாவது குழந்தையின் பொருட்டு, செயற்கை கருத்தரிப்பை நாடுவீர்கள். அரசு வீடு சம்பந்த முதலீடு உண்டு. இந்த மாதம் பணவரவு தடைப்படுவதோடு ஏதோ ஒரு கௌரவக் குறைச்சல் உங்களைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதற்கு உங்கள் வார்த்தைகள், திருமண பேச்சு, வாரிசுகளின் உபத்திரவம் என காரணம் இருக்கும். சாப்பாடு ஒவ்வாமை ஆகி, பேதியாகும் வாய்ப்புண்டு. இந்த மாதம் வாயையும், வயிற்றையும் கொஞ்சம் கண்ட்ரோலாக வைத்திருந்தால் ஒரு மாதிரி ஒப்பேற்றிவிடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: திருவேற்காடு கருமாரியம் மனை வணங்கவும் அருகிலுள்ள அம்மனுக்கு, குங்குமம் எலுமிச்சையோடு, கொஞ்சம் பாசிபயறு சுண்டல் நைவேத்தியம் விநியோகமும் செய்யவும். ஒரு சின்ன பித்தளை தட்டில், கொஞ்சம் உளுந்தும், பாசி பருப்பும் வைத்து முஸ்லிம் தம்பதிக்கு கொடுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஸ்ரீமகாலட்சுமியை, வணங்கும் தெய்வமாககொண்ட சுக்கிரன் எண்காரர்கள் இவர்கள். உங்களில் சிலர் திருமணம் முடிந்து, வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். திருமணத்தின்போது, சில கை கலப்புகள் கேரண்டி, உங்கள் வார்த்தைகளில் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தை வந்துவிழும். இதனைக் கேட்டு கொண்டிருக்கும் நபர்கள், சண்டைக்கு வராமல் என்ன செய்வர். சிலசமயம் கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் ஒருமாதிரி சமாளித்துவிடுவீர்கள். உங்கள் எதிரிகள் ஏதோ ஒரு காரணத்தால் இடம் மாறிவிடுவர். ஆனால் அந்த இடத்தை உங்கள் பணியாளர் பிடித்து, பாடாய்படுத்துவார். உங்கள் வழக்குகளில் இருந்து வரவேண்டிய பணம் வந்துவிடும். தம்பதிகளுக்குள் பணம் விஷயமாக சண்டை வரும். வியாபார பங்குதாரரிடம் பண கணக்கு பற்றி கேட்டால் அவர் கோபித்துக்கொள்வார். ஆன்மிக பயணம் உண்டு. ஒரு மதக்குருவை சந்திக்கக்கூடும். அரசியல்வாதிகள், அடிவாங்கும் நிலமை வரும். அவர்கள் செய்த அரிய பெரிய சேவை மற்றும் பணிகள் குறித்து, மக்கள் அரசியல்வாதிகளை ரவுண்ட் கட்டிவிடுவர். அல்லது ஏதேனும் முன்புள்ள வழக்குகள் சம்பந்தமாக தாக்கிது, நோட்டீஸ் வரும். சமையல் கலைஞர்கள் சற்று தங்களிடம் வேலை செய்யும் ஆட்கள் மூலம் நெருக்கடிக்கு ஆளாகலாம்; கவனம் தேவை. உங்கள் மூத்த சகோதரர் கைபேசி செய்திமூலம் கலவரத்துக்கு ஆளாவார். சினிமா போன்ற கலைஞர்கள் வாய்ப்பும், வசவும் சேர்ந்தே பெறுவர். டி.வி. கலைஞர்கள், செய்தி துறையினர், அரசுவகை இன்னலை சந்திப்பர். இந்த மாதம் காவல்துறை சார்ந்து கவனமாக இருக்கவும். உங்கள் தந்தை மற்றும் மாமனார் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களுக்கு ஏற்பட இருந்த விபத்து தெய்வ அருளால் நீங்கிவிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை தரிசிக்கவும். அருகிலுள்ள துர்க்கைக்கு குங்குமம் கூடவே நிறைய பழங்கள்கொண்டு அர்ச்சிக்கவும். ஒரு பித்தளை தட்டில் கொஞ்சம் உளுந்தும், கொஞ்சம் பழங்களும் வைத்துகூட வேலை செய்யும் முஸ்லிம் பெண்ணிற்கு கொடுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
விநாயகரை வணங்கும் தெய்வமாகக்கொண்ட கேது எண்காரர்கள் இவர்கள். இப்போது நடக்கும் திருமணம் சற்று கலப்பு மணமாக அமையும். உங்கள் பணத்தட்டுப்பாட்டை, உங்கள் வாழ்க்கைத்துணை சரிக்கட்டி விடுவார். வியாபார விஷயமாக வெளியூர் அலைச்சல் நிறைய இருக்கும். நீங்கள் சந்திக்கும். நபர்கள், சற்று கரடு முரடாக இருப்பர். சற்று கள்ளம் நிரம்பியவர்களாக, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவராக இருப்பர். சுதனமாக நடந்துகொள்ளவும். பணம் கொடுக்கல்- வாங்கலின்போது, அதனை வாய்வார்த்தையாக இல்லாமல், அதனை எழுத்துபூர்வமாக பதிவு செய்துகொள்ளவும். இது வாழ்வின் அனைத்து தரப்பினருக்குமான அறிவுரை ஆகும். வாரிசுகள் வழியில் நிறைய செலவுண்டு. அது மேற்கல்வி, வெளிநாட்டு பயணம், அரசுபணி என ஏதோ ஒன்றின் வழியே செலவு அதிகமாகும். தொழிலில் மேன்மையும், இன்னலும் சேர்ந்தே வரும். உங்கள் மாமியாரின் நலத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் வாய்ப்புகளில் தடங்கலும், தடையும் பெறுவர். அரசியல் வாதிகள் ரொம்ப செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எத்தனை செலவு செய்தாலும், அரசியல்வாதிகளுக்கு அது பாதகமாகவே அமையும். உங்களுக்கு வரும் பணியாளர்கள் சற்று பொல்லாதவர்களாக அமைவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: திருநாகேஸ்வரம் சென்று வணங்கலாம். அருகிலுள்ள துர்க்கைக்கு குங்குமம், எலுமிச்சம் பழம் கொண்டு வணங்கவும். ஒரு பித்தளை தட்டில் கொஞ்சம் உளுந்தும், கொஞ்சம் கொள்ளும் வைத்து, ஒரு கிறிஸ்துவ வயதான பெண்ணிற்கு கொடுக்கவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கும் தெய்வமாகக்கொண்ட சனி எண்காரர்கள் இவர்கள். வெளிநாட்டு பணவரவுகள் பற்றிய தகவல்கள் கைபேசியில் வரும். வீடு வாங்க கேட்டிருந்த கடன் அனுமதி கிடைக்கும். உங்கள் உடன்பிறந்த இளைய, மூத்த சகோதரர்கள் பூர்வீக வீடு சம்பந்தமாக, உங்கள் தந்தையை டார்ச்சர் செய்வர். இதனால் அநேகமாக, இந்த மாத சொத்து பிரிவினை பத்திரம் எழுதக்கூடும். பத்திரிகையில் வேலை செய்பவரில் சிலர், தாங்கள் பணிபுரிந்த இடத்தில் மீண்டும் சேரமுடியும். சிறு அவமானங் களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வாரிசுகளின் நடத்தை பற்றிய விரும்பத்தகாத செய்திகள் காதில் விழும் கர்ப்பஸ்திரிகள் பயணம் செல்லக்கூடாது. கவனம் தேவை. பயணங்களில் எங்காவது அடிபடும் வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சற்று சீர்க்கேடடையும். உங்கள் தந்தை, உங்கள் தாயாரின் உடல்நிலை பொருட்டு சற்று கடன் வாங்குவார். ரியல் எஸ்டேட் துறையினர், அதிக வாய்ப்பும், வேலைப்பளுவும் பெறுவர். அரசியல்வாதிகள் சிறுதூரப் பயணம் அதிகம் செல்ல வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளை பற்றிய நிறைய வதந்திகள் கொடிக்கட்டி பறக்கும் இதில் வெளிநாட்டு பண பதுக்கல் முதலிடம் பெறும். உங்கள் இளைய சகோதரன், அரசு சம்பந்தமாக ஒரு இடையூரை இழுத்துவருவார். கலைஞர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: வராஹி அம்மனை வணங்கவும். அருகிலுள்ள துர்க்கையம்மனுக்கு குங்குமம் மற்றும் விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கவும். ஒரு பித்தளை தட்டில், சிறிது உளுந்தும், கொஞ்சம் எள் மிட்டாயும் வைத்து, ஏதேனும் ஊனமுற்றுவருக்கு கொடுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஸ்ரீ சுப்பிரமணியரை தெய்வமாக வணங்கும் செவ்வாய் எண்காரர்கள் இவர்கள். இந்த மாதம் வேலை தேடுவோருக்கு வேலை கிடைத்துவிடும். சம்பளம்தான் வரப் போகிறதே என்ற மிதப்பில் மானாவாரியாக செலவழிப்பீர்கள். ஒரு மாச சம்பளம் கையில் வாங்கவில்லை. அதற்குள் என்ன செலவு பாரு என வீட்டில் உள்ளவர்கள் எரிச்சல்படுவர். இன்னொரு புறமாக, குடும்பஸ்தர்கள், காது குத்து, கல்யாணம், கிரகப் பிரவேசம் என சொந்தக்காரர்கள் நிகழ்ச்சியினால் சுத்தமாக பணம் செலவழிந்துவிடும். பணம் இருக்கிறமாதிரி இருக்கும். திரும்பி பார்த்தால் அத்தனையும் செலவழிந்து விடும். உங்கள் வீட்டிலேயே சுபவிஷயம் நடக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் வாரிசு சம்பந்தமாக நடக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, வேலை ஒப்பந்த ஆர்டர் கிடைக்கப்பெறுவார். அல்லது குத்தகை சம்பந்த பகுதி நேர வேலையில் சேர்வார். இந்த மாதம், உங்களுக்கு எதிர்பாராத நன்மை ஒன்று கிடைக்கும். அது வெளிநாடு சம்பந்தம் அல்லது மனை சம்பந்தமானதாக இருக்கும் குடும்பத்துடன் விமரிசையாக ஆன்மிக பயணம் சென்று மகிழ்வீர்கள். தொழிலில் லாபம் பெருகும். அரசியல்வாதிகள் நல்ல மேன்மை பெறுவர். இவர்கள் செலவழித்த பணம், திரும்ப ரிட்டர்னாகி கைக்கு, பல மடங்காக கிடைத்துவிடும். சமையல் கலைஞர்கள் உங்களின் மூத்த சகோதரர் என இவர்கள், எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வெளிநாடு வேலை வாய்ப்பு பெறுவர். கலைஞர்கள் வாய்ப்பும், வசதியும் பல்கி பெருக காண்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: கோல விழி அம்மனை வணங்கலாம். அருகிலுள்ள துர்க்கைக்கு குங்குமம், எலுமிச்சம் பழம் மற்றும் தீபமுமேற்றி வணங்கவும். ஒரு பித்தளை தட்டில், கொஞ்சம் உளுந்து, கொஞ்சம் துவரம் பருப்பு வைத்து, பிற மத இளம் குடும்பஸ்த பையனுக்கு கொடுத்துவிடவும்.
செல்: 94449 61845