துங்கேஸ்வர் மந்திர்...
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. பால்கார் மாவட்டத்திலுள்ள வசை என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இது மலையின் உச்சியில் இருக்கிற சிவன் ஆலயம். 2,177 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் பிரதான வாசலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதிகாலை 5.00 மணிக்குத் திறக்கப்படும் இந்த ஆலயம் மாலை 6.00 மணிக்கு மூடப்பட்டுவிடும்.
இந்த ஆலயத்தைப் பற்றிய கதை இது...
பண்டைக் காலத்தில் இந்த பகுதியில் துங்கன் என்ற பெயரில் ஒரு அரக்கன் இருந்திருக்கிறான்.
அவனால் பொதுமக்களுக்கு ஏராளமான இன்னல்கள் உண்டாகி இருக்கின்றன. இந்த விஷயத்தை அறிந்த பரசுராமர், அந்த அரக்கனை வதம் செய்திருக்கிறார். அதன் அடையாளமாக உண்டானதே இந்த ஆலயம்.
இந்த ஆலயம் இருக்கும் இடத்தில்தான் பரசுராமர் தியானம் செய்திருக்கிறார். ஆதி சங்கராச்சாரியார் இங்குவந்து தியானத் தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது இந்த இடத்திற்குப் பெயர் "ஷுபார்க்.' இப்போது அதற்குப் பெயர் "நலஸோபரா.'
இந்த ஆலயம் ஏராளமான மரங்கள் அடர்ந்திருக்கும் வனப் பகுதியில் இருக்கிறது.
இயற்கையின் அழகு ஆட்சி செய்யும் இடத்தில் அமைந்திருப்பது இந்த ஆலயத்திற்கு சிறப்புத் தன்மையை அளிக்கிறது.
இந்த ஆலயத்தின் கலசம் மிகவும் அருமையாக அமைக்கப் பட்டிருக்கிறது. "துங்கேஸ்வர் மந்திர்' மிகச்சிறந்த அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது.
நிறைய கண்ணாடி வேலைப் பாடுகள் இங்கு இருப்பதை நாம் பார்க்கலாம். ஒரு இடத்தில் ஒரு தீபம் எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும்.
ஆலயத்தின் மையப் பகுதியில் ஒரு அருமையான லிங்கம் இருக்கிறது. பித்தளையால் செய்யப்பட்ட ஒரு நாகம் இந்தக் கோவிலில் இருக்கிறது. அது பகவான் சிவனுடன் ஒட்டி இருக்கும்வண்ணம் இருக்கிறது. சிவனின்மீது கலசத்திலிருந்து நீர் எப்போதும் சொட்டிக் கொண்டே யிருக்கும்.
இந்த ஆலயத்தில் அதிகாலை 5.00-6.00 மணிக்கு முதல்மாலை 5.00-6.00 மணி ஆகிய நேரங்களில் ஆரத்தி பூஜை நடக்கிறது. மதியம் 12.00 மணிக்கு நைவேத்தியம் நடத்தப்படும். அப்போது பகவானுக்குப் பிரசாதம் படைக்கப் படும்.
இந்தக் கோவிலின் உச்சியில் ஒரு திரிசூலம் இருக்கிறது.
கீழேயிருந்து மலையின்மீது உள்ள ஆலயத்திற்குச் செல்வதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் 150 ரூபாய் வாங்குகிறார்கள்.
சென்னையிலிருந்து இந்த ஆலயத் திற்குச் செல்ல விரும்புபவர்கள் மும்பைக்குப் பயணிக்க வேண்டும். பயண நேரம் 24 மணிகள். அங்கிருந்து 57 கிலோமீட்டர் தூரத்தில் "துங்கேஸ்வர் ஆலயம்' இருக்கிறது.