சிவராத்திரி தருணத்தில் அப்பர், அவரது சகோதரி திலகவதியார் என இரு சிவ பக்தர்களை சிந்திப்போம். திலகவதியார் இல்லையேல் நாம் அப்பரை நினைக்கக்கூட முடியாது. சிவ பக்தர்களை நினைத்தால் சிவபெருமான் மிக மகிழ்வார் என ஒரு பாடல் கூறுகிறது.

திலகவதியார் காலம் கி.பி. 600- 660 என்பர். பண்ருட்டிக்கு அருகே திருவாமூர் என்னும் தலம் உள்ளது. அங்கு வேளாளர் குலத்தில் குறுக்கையர் என்னும் பிரிவு இருந்தது. அதனில் புகழனார்- மாதினியார் என்னும் சிவபக்த தம்பதியினருக்குப் பிறந்தவர் திலகவதியார். அவருக்குப்பின் ஆண்குழந்தை பிறந்தது. மருள்நீக்கியார் என்று பெயரிட்ட னர்.

திலகவதியார் சிவபக்தியுடன் கல்வியில் நன்கு தேர்ச்சிபெற்றார். அன்னாள் வழக்கப்படி 12-ஆவது வயதில் கலிப்பகையார் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திலகவதியாரின் பண்புகளை உணர்ந்து கலிப்பகையார் குடும்பமே திருமணத்திற்கு முன்வந்தனர். இருதரப்பினரும் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

Advertisment

ss

விதி என்பது உள்ளதா?

அதனைத் தவிர்க்கமுடியாதா என்று சிலர் கேட்பர். விதியை மதியால் வெல்லலாம்; முயற்சி திருவினையாக்கும் என்னும் சொற்றொடர்களும் உண்டு. ரமணர் சிறுவயதிலேயே திருவண்ணாமலை சென்று கோவணம் அணிந்து தியானத் தில் ஈடுபட்டார். பிச்சையெடுத்து உண்டார். இதைக்கண்ட அவரது தாயின் மனம் குமுறியது; பெற்ற வயிறு பற்றியெரிந்தது. எனவே ரமணரிடம், "இந்த பழனியாண்டி வேடமெல்லாம் போதும்; வா, மதுரைக்குச் செல்வோம்'' என்று தாயென்னும் உரிமையுடன் கூறினார்.

அதற்கு இளம்வயது ரமணர், "நடக்கவேண்டிய காரியங்கள் முன்பு நியமித்தபடியேதான் நடக்கும். அதனை நடக்கவிடாமல் தடுக்க முடியாது. நடக்காத காரியங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் நடக்காது. எனவே நடப்பதை அனுசரிப்போம். கவலை வேண்டாம். யாவும் நன்மையிலேயே முடியும்.

அதுவே அவன் விதித்த விதி'' என்றார்.

அவர் ஆன்மிக உலகம் புகழும் ஞானியாகத் திகழ்ந்தார். இதனையே 'எஹற்ங் ஹய்க் எழ்ங்ங் ஜ்ண்ப்ப்' என்னும் தலைப்பில் சிருங்கேரி ஜகத்குரு சந்திரசேகர பாரதியும் கூறியுள்ளார்.

திலகவதி யாருக்கு விதி சதி செய்தது. கணவனாகப் போகிறவன் ஒரு போர்ப்படைத் தலைவன். எதிரிகள் போரிட வந்ததால் க-ப் பகையார் போருக்குச் செல்ல நேர்ந்தது. கடமை என்பது முக்கிய மாயிற்றே! போரென்றால் வெற்றியோ தோல்வியோ- இருதரப்பிலும் போரிடும் வீரர் பலர் இறப்பது இயல்பே. போரில் வென்றால் வெற்றிக்கொடி ஏந்தலாம்; இறக்க நேர்ந்தால் வீரமரணம் எய்தலாம். நடைபெற்ற போரில் கலிப்பகையார் இறக்க நேரிட்டது. அது ஒரு எதிர்பாராத அதிர்ச்சியே. அந்த அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் திலகவதியாரின் தந்தை இறந்தார். ஆக, இப்போது திலகவதியும் மருள்நீக்கியார்ரும் இளவயதிலேயே ஆதரவற்றவர்களாகிவிட்டனர். இது விதி.

திலகவதியாரோ திருமணம் என நடக்காவிட் டாலும், அது நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், தான் விதவையாகிவிட்டதாக மனம் நொந்தாள்.

அந்நாட்களில் விதவைத் திருமணம் என்பதுபற்றி யாரும் நினைத்ததுகூட இல்லை. எனவே அவளும் இறந்துவிடலாம் என்று நினைத்தாள். அவளது தம்பி மருள்நீக்கியாரோ, "இப்போது எனக்கு உறவு, ஆதரவென்று உன்னைத்தவிர வேறு எவருமில்லை. நீ இறக்க நிச்சயித்தால் நானும் உன்னுடன் தற்கொலை செய்துகொண்டு விடுகிறேன்" என்றான். திலகவதிக்கு மிகுந்த தர்மசங்கடமாகிவிட்டது. தான் தற்கொலை செய்வதுடன், தன் தம்பியின் தற்கொலையின் பாவமுமல்லவா வந்துசேரும் என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தம்பி வாழவேண்டும் என்னும் எண்ணத்துடன் தன் முடிவை மாற்றினாள்.

திலகவதி என்னும் பெயர் இருந்தாலும், தான் விதவையென்று நினைத்ததால் நெற்றியில் திலகமிட மனமில்லை. எனவே திலகவதியார் மருள்நீக்கியாருக்காகத்தான் வாழ்ந்தாள் என்று கூறவேண்டும். மருள்நீக்கியார் படித்து மேன்மைபெற பெரிதும் உதவினாள்.

திருவாமூரைவிட்டுத் திருவதிகை வந்து கோவிலில் சிவத்தொண்டுகள் செய்தாள்.

அக்காலத்தில் பாடலிபுத்திரத்தில் சமணமதம் தீவிரமாக பரவியிருந்தது. தமிழகத்தில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னனும் சமணமதம் சார்ந்தான்.

மருள்நீக்கியார் சமணமதக் கொள்கைகளை ஆராய ஆவல் கொண்டார். சமண பிட்சுவாகி, அவர்கள் மடத்திலேயே சேர்ந்து, அவர்கள் மதக் கொள்கைகளை கிரகித்தார். அவரது ஆழ்ந்த மேதாவித்தனம் சமணர்கள் தருமசேனர் என்னும் பெயரை அவருக்கு வைத்தனர். சமணப்பள்ளியின் தலைவராக்கி போதிக்கவைத்து, சமணர்கள் தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்பினர். நாட்கள் இவ்வாறு கடந்தன.

தம்பியின் இந்த செயலில் திலகவதியாரின் மனம் மிகவும் வெதும்பியது. நாமோ சைவர்கள். சிவபெருமானை ஆழ்ந்து துதிப்பவர்கள். கட்சிக்காக என் வாழ்வை நடத்தும்போது, தம்பி சமணமதம் சார்ந்து அதற்காக பிரச்சாரம் செய்கிறானே என மிகவும் வருந்தினாள். சிவனே, இதற்கு தாங்கள்தான் ஒரு வழிகாட்டவேண்டும் என்று ஆழ்ந்து வேண்டினாள். சிவனுக்கு பரம தயாளன், மார்க்கபந்து, தீனதயாளன், ஆபத்பாந்தவன் போன்ற பெயர்கள் இருந்தாலும், ஆசுதோஷி என்னும் பெயரும் உண்டு. பக்தர்களின் வேண்டுதல்களில் உடனே மகிழ்ந்து வேண்டுவன தருபவன் என்று பொருள். சிவ என்னும் சொல்லுக்கு நல்லதே செய்பவன் என்று பொருள். சங்கர என்னும் சொல்லுக்கு மங்களமே செய்பவன் என்று பொருள். பெயருக்கேற்ப ஒரு நல்ல மாற்றம் செய்திடலி திலகவதியாரின் வேண்டுகோளை நிறைவேற்ற மனம் கொண்டார் திருவதிகை வீரட்டானேஸ்வரர்.

Advertisment

sasd

திருவதிகைத் தல சிவனது பெயர் அதிகை வீரட்டனாரேஸ்வரர். அம்பாள் பெயர் அதிகை நாயகி, திரிபுரசுந்தரி. இது கயிலைக்கு நிகரான தலம். இங்கு சிவன் புரிந்த திருவிளையாடல் என்னவென்று பார்ப்போமா?

திலகவதியார் கனவில் சிவன் தோன்றினார்.

"திலகவதியே, கவலை வேண்டாம். தரும சேனன் முற்பிறவியில் முனிவராக இருந்து எம்மைக் குறித்துத் தவம்செய்தான். தவத்தில் சில தவறுகள் நேர்ந்தால், அவன் மனம் தற்போது சைவத்தைவிட்டு சமணமதம் தழுவலாயிற்று. அவனுக்கு சூலைநோய் உண்டாக்கி அவதியுறச் செய்து யாமே அவனை ஆட்கொள்வோம்' என்றருளினார். திலகவதியார் திகைத்தாள்.

தர்மசேனருக்கு வயிற்றில் சூலைநோய் வந்தது. நாளாக நாளாக வலி வலுத்தது. சமணர்கள் தந்த மருந்துகளால் நோய் குணமாகவில்லை. சமண மரபுப்படி மந்திரம் செய்தனர். மந்திரநீர் தெளித்தனர். உட்கொள்ளவும் செய்தனர். மேலும் வலி அதிகரித்தது. மந்திரம் சொல்லி மயிற்பீலியால் மந்திரித்துடன் தடவினர். எந்த செயல்களாலும் வலி குறையாமல் மேலும் அதிகமாயிற்று. புழுபோல் துடித்தார். சமணர்கள் எவ்வாறு அவரது நோய் தீர்ப்பது என்று புரியாமல் கலக்கமுற்றனர்.

இந்த அதிவேதனையை சமணர்களால் தவிர்க்க இயலாது என்பதை உணர்ந்த தருமசேனருக்கு தன் சகோதரி திலகவதி யாரின் நினைவு வந்தது. தனது தோழனிடம், திலகவதியாரிடம் சென்று தனது நிலையைக் கூறி அவளை அழைத்து வரும்படி அனுப்பினார். அவர் வந்து திலகவதியாரிடம் கூற, "நான் சமணபூமியில் கால்வைக்க மாட்டேன்'' என்று கோபமாய்க் கூறி மறுத்தாள். ஆயினும் மனம் "சிவனே, அவன் உடல் சீராகி உன்னைச் சேரவேண்டும். கனவு பலிக்கவேண்டும்' என்று வேண்டியது.

மறுநாள் விடியற்காலை தருமசேனர் எவருக்கும் தெரியாமல் சமண உடைகளைக் கலைந்தார். வெள்ளை ஆடைகளை அணிந்து திருவதிகை வந்து சேர்ந்து தமக்கை யின் பாதம் பணிந்தார். "வலி பொறுக்கமுடிய வில்லை. சமண மருத்துவம் வலியை அதிக மாக்கியது. இதற்கு விடிவு கிடையாதா?" என்று வேண்டினார். "சிவனருளால் அவன் வலிதீரும்; சமணமதம் விட்டு சிவனைப் பணிவான்' என்று மனம் கூறியது.

திலகவதியார், "தம்பி, எழுந்திரு. மடத்திலுள்ள விபூதியை ஒரு கைப்பிடியளவு எடுத்து உன் உடல் முழுக்கப் பூசு. சிறிது உண். திரிபுரமெரித்த சிவபெருமான் உன் சூலைநோயை எரிப்பார். சமண சமயத்தைவிட்டு, சிவனுக்கு உழவாரப் பணி செய்வதையே உனது லட்சியமாகக் கொள்'' என்றாள்.

திலகவதியார் தன் தம்பியுடன் ஆலயப் பிராகாரம் வலம் வந்தார். சிவனை வணங்கி, "எனது தம்பி உம்மைநாடி வந்துள்ளான். அவனது நோயைத் தீர்த்து, அவனை நீரே ஆட்கொள்ளும்' என உள்ளமுருக வேண்டினாள்.

எட்டுப் பட்டைகளையுடைய சிவலிங்கத் தைக் கண்டவுடன் தருமசேனரின் மெய் சிலிர்த்தது. கை கால்கள் நடுங்கின. கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. சமணமதக் கொள்கைகளைப் படிப்பித்த அவரது வாய் சிவனைப் பாட வேண்டுமென மனம் உந்தியது. திக்கித்திக்கி வார்த்தைகள் எழுந்தன. பாடத் தொடங்கினார்.

பதிகம் பாடி முடித்தபோது இறைவன் வைத்தியநாதரின் அருளால் அவரது நோய் தீர்ந்தது. "ஐயனே, நான் உன்னை நாடிப் பணியத்தான் இந்தக் கொடும் நோயைத் தந்தாயோ! என்னை மன்னித்தருள்வாய்' என வேண்ட, கருவறையிலிருந்து அசரீரி, "தித்திக்கும் செந்தமிழ் சொல்வளத்தால் எம்மைப் பாடிய நீ திருநாவுக்கரசர் என எங்கும் கொண்டாடப்படுவாய்' என ஒலித்தது. ஆக, மருள்நீக்கியார் தருமசேனராகி, பின்னர் திருநாவுக்கரசரானார். ஞானசம்பந்தரால் அப்பர் எனப்பட்டார்.

திலகவதியார் திருநாவுக்கரசரிடம், "சிவன் கோவில்களுக்கு உழவாரப் பணிகள் செய்து சிவனருளால் உய்ந்திடுவாயாக. சிவத்தலங்கள்தோறும் சென்று சிவனை ஆழ்ந்து பாடுக'' என்றாள்.

தருமசேனர் திருவதிகை சென்று சிவனைப் பாடினார்; சூலைநோய் நீங்கப்பெற்றார்; இனி சமணமடம் திரும்பமாட்டார்; சிவன்கோவில் உழவாரப் பணிகள்தான் செய்வார் என்று கேட்க சமணர்கள் மனம் சம்மதிக்குமா? இதை அரசனுக்கும் தெரிவித்து, பல இடையூறுகளையும் திருநாவுக்கரசருக்குச் செய்தனர்.

சுண்ணாம்புக் காளவாயில் இட்டனர்.

பின்னர் யானையை வைத்து மிதிக்கச் செய்தனர். பெரிய கல்லுடன் கட்டி அவரை கடலில் தள்ளினர். அனைத்துத் துன்பங்களிலிருந்தும் அவர் பதிகங்கள் பாடி சிவனருளால் விடுபட்டாரெனின், சிவமகிமையை என்னே கூறுவது!

இந்த நாளிலும் திருவதிகைக் கோவில் கிணற்றுநீரை எடுத்து திருநீறுடன் கலந்து, பதிகம் பாடி அருந்தி, மருந்துகளால் குணமடையாத நோய்களும் நீங்கப் பெற்றவர்கள் பலர். இத்தல சிவனை அப்பர் 16 பதிகங்கள் பாடியுள்ளார். சுந்தரர் ஒரு பதிகமும், சம்பந்தர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

திலகவதியார் தன் தம்பிக்காக உயிர் வாழ்வேன் என்று உறுதிபூணாதிருந்தி ருந்தால், சமணமதம் சேர்ந்து தருமசேனரான அவரை, திருவதிகை சிவனை வணங்கி மீண்டும் சிவனையே வழிபட வேண்டும் என வேண்டாது இருந்திருந்தால் நமக்கு அப்பர் பாடிய 125 தல தேவாரப்பாடல்கள் கிடைத்திருக்குமா? அப்பரின் திரு நட்சத்திரம் சித்திரை மாத சதயம். அந்த நாளில் விழா கொண்டாடுகிறார்கள்.

தருமசேனரைத் திருநாவுக்கரசராக்கிய சிவபக்தை திலகவதியார் திருப்பாதங்களைப் பணிவோம்.