""தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.''
பிறக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் என்பதாம். விதியைவிட வலிமையானது ஒன்று இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கமுடியும்? சரி. எப்படியாவது முயற்சி செய்து துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம் என்று வெவ்வேறு வகையில் முயன்றாலும் அங்கும் அந்த முயற்சி நிறைவேறாத படி ஊழ் வினைதானே வந்து முன்னே நிற்கிறது என்று அறத்துப் பாலில் கடைசி அதிகாரத்தில் ஊழ்வினையின் தாக்கத்தை பற்றி கூறிய வள்ளுவர் விதியை மதியால் வெல்லலாம் என்று பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்.
எல்லாமே செயலின் விளைவுதான். வாழ்வு, தாழ்வு, நோய் ஆரோக்கியம், செல்வம் எல்லாமே வினைகளின் எதிரொலிதான். இதில் இழப்புகள் ஏற்படுவது இயற்கை. இதைச் சரிசெய்வதே பரிகாரம். சீட்டுக்கட்டில் நமக்கு விழுந்த அட்டைகளின் வலிமை அல்லது வலிமையின்மைதான் அறத்துப்பாலில் சொல்லப்பட்ட ஊழ். நாம் விளையாடுகின்ற விளையாட்டில் திறமைதான் (மதி) பொருட்பாலில் சொல்லப்பட்ட ஆள்வினை உடைமை. இந்த மதியை எப்படி, எந்த இடத்தில் எப்படிப்பட்ட சூழலில் பயன்படுத்தினால் வெற்றி காணலாம் என்பதை பார்ப்போம்.
அழகிய வனத்தில் எளிய விலங்குகள் கூட்டமாக வசித்துவந்தன. புற்களையும், சிறுசெடி, கொடிகளையும் உண்டு வாழ்ந்தன. அங்கு புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அவை சிறு விலங்குகளை வேட்டையாடி தின்றன. இதனால் மான், முயல் போன்ற விலங்குகள் பயந்து நடுங்கின. அவை "பயத்தை தீர்க்க, கடவுள்போல யாரும் வரமாட்டார்களா' என பிரார்த்தித்து காத்திருந்தன. ஒருநாள்... மேய்ச்சலில் இருந்து தப்பிய ஆடு, வழிமாறி அந்தக் காட்டிற்கு வந்தது. மான், முயல் போன்ற சிறு விலங்குகளை சந்தித்து, "பசிக்குது... உணவு கிடைக்குமா....' என கேட்டது. அவை காட்டிய இடங்களில் மேய்ந்து பசியாறியது ஆடு. தாவர உண்ணி விலங்குகள் எல்லாம் சோகமாக இருப்பதைக் கண்டது ஆடு. அதற்குக் காரணம் புலிகளின் அச்சுறுத்தல் என்பதை தெரிந்து கொண்டது.
அன்றிரவு விலங்குகள் தூங்கியபின் கடும்தவம் மேற்கொண்டது ஆடு. அப்போது, உதவிய விலங்குகளின் பயத்தை தீர்க்க முயலவேண்டும் என முடிவுசெய்தது. அதற்காக தீவிரமாக சிந்தித்தது. மறுநாள் அதிகாலை பலத்த இடியுடன் கனமழை பெய்தது. விடிந்ததும் வெளியே சென்ற ஆட்டிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது; சிறிது தூரத்தில் மின்னல் பாய்ந்து புலி ஒன்று இறந்து கிடந்தது. அதைக்கண்டதும் ஒரு திட்டம் மனதில் பிறந்தது. மற்ற விலங்குகளை அழைத்து ரகசியமாக அந்த திட்டத்தை கூறியது ஆடு. அவை மகிழ்ந்து ஒத்துழைப்பதாக கூறின.
உடனே புலி போன்ற மாமிச உண்ணி விலங்குகள் வேட்டையாட வரும் வழியில் புலியின் உடலைப் போட்டது. அந்த உடலைத் தின்பதுபோல தாவர உண்ணி விலங்குகள் நடித்துக்கொண்டிருந்தன. வேட்டையாட வந்த புலிகள் இதைக் கண்டதும் பயத்தில் உறைந்து நின்றன. "மிரண்டபடி என்னடா இது' என திகைத்தன.அப்போது கொடூரமான குரலில் "புலிகளே... உங்களைக் கொல்லும் யுக்தியைக் கண்டுபிடித்து விட்டோம்; இனி எங்களை நெருக்க முடியாது; மீறினால் இந்தப் புலிக்கு ஏற்பட்ட நிலைமைதான் உங்களுக்கும்...' என்று சத்தமிட்டது ஆடு.
அதைக்கேட்ட புலிகள் பயந்து அலறியபடி ஓடின. தாவர உண்ணி விலங்குகள் நெகிழ்வுடன் ஆட்டுக்கு நன்றி தெரிவித்தன. தற்செயலாக நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திய ஆட்டின் மதியைப் போல; பிறக்கு உதவிபுரியும் பெருமித உணர்வுடன் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியோடு மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்பையும், வெற்றியையும் தரவல்லதொரு உன்னதமான திருத்தலம்தான் சீர்காழி வட்டத்திலுள்ள தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விடங்கேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ விடங்கேஸ்வரர்.
இறைவி: அ/மி தில்லைநாயகி.
விசேஷ மூர்த்தி: சந்திரன்.
ஊர்: தில்லைவிடங்கன்.
அஞ்சலகம்: திட்டை.
வட்டம்: சீர்காழி.
மாவட்டம்: மயிலாடுதுறை.
தலவிருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: சந்திரபுஷ்கரணி.
""பிறையினை தலையில் கொண்ட பரமனின் பாதம் பற்றி குறைகளை சொன்னால் ஈசன் கருணையால் கிட்டும் வெற்றி மறைமதி, நிறைமதி நாளில் மகத்தான பூஜை ஏற்று மதி செஞ்சடையுடையோன்தில்லை விடங்கன் தாளைப்போற்று'' பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும், பொறுப்பாளர் திரு. செந்தில் பிள்ளை அவர்களது கண்காணிப்பில் அனுதினமும் இரண்டுகால பூஜைகள் முறைப்படி நடக்கின்றது. தில்லை நடராஜர் ஆலயத்திற்கு நெருங்கிய தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
மனம்போல் மாங்கல்யம், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற சொற்றொடர்கள் பண்டைக் காலத்திலிருந்து கேள்விப்பட்டுள்ளோம். மணவாழ்க்கை மனிதர்களால் நிச்சயிக்கப்படுவதுபோல் தோன்றினாலும் உண்மையில் அதனை இறைவனே நிர்ணயிக்கிறார் என்பதுதான் நிஜம்.
அத்தகைய மணவாழ்வு மனம்போல் அமைகிறதா என்பதுதான் கேள்வி. பூர்வ புண்ணியம், ஜாதக கிரக அமைப்பு இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் திருமண வாழ்க்கை பிரச்சினைக்கு காரணமாகச் சொன்னாலும் ஈசனருள் இருந்தால் மனம் போல் மணவாழ்வு அமையும் என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை. அந்த வகையில் மனம்போல் மணவாழ்வு அமைய அருளும் மகேசன் எழுந்தளியுள்ள தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற திருத்தலம்தான் சீர்காழி வட்டத்திலுள்ள தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் உறையும் தில்லைநாயகி சமேத ஸ்ரீ விடங்கேஸ்வரர் ஆலயம்.
அதுமட்டுமல்ல; விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. மதி என்ற சொல்லுக்கு சொந்தக்காரன் மனோகாரனாகிய சந்திரனின் சாபத்தை நீக்கிய சங்கரன் உறையும் தலம் என்பதால் சந்திரதோஷப் பரிகார தலமாகவும், மனம் சார்ந்த; மணம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் தலமாக விளங்குகிறது.
தலவரலாறு:
முன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகப் பறிபோனது. மனம் வருந்திய சந்திரன் நாரத மகிரிஷியிடம் தன் துன்பத்தை எடுத்துரைக்க அவர் பூலோகத்தில் தில்லையில் பொற் சபையில் அருள்பாலிக்கும் அம்பலவாணரை வேண்டித் தவமியற்று. நற்பலன் கிட்டும் என ஆசிவழங்கினார். அதன்படி சிவபூஜை செய்யவந்த சந்திரன் தில்லைக்குத் தெற்கே நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே அமையப்பெற்ற பசுமையான-அமைதியான ஓர் இடத்தை தேர்வுசெய்து அங்கே தன் பெயரால் ஒரு புஷ்கரணி நிறுவி, அதன் மேற்குக்கரையில் ஒரு சிவலிங்கத்தை (விடங்கேஸ்வரர்- உளிபடாத திருமேனியர்) ஸ்தாபித்தான். அந்த லிங்கத்திருமேனியை தில்லை நாயகராகப் பாவித்து தவமிருந்தான். உரியகாலத்தில் எம்பெருமான் அம்மையுடன் தோன்றி ஆசிவழங்கினார். அம்மையப்பன் அருளால் சாபம் நீங்கப்பெற்றான் சந்திரன். விடங்கத்திருமேனியில் இருந்து தில்லை நாயகியுடன் தோன்றிய இறைவன் சந்திரனின் சாபம் நீக்கிய இடமே இன்று தில்லைவிடங்கன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவி தில்லைநாயகியின் பெயரும் இறைவன் விடங்கேஸ்வரர் பெயரும் இணைந்து இத்தலம் தில்லைவிடங்கன் என்றழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். சில இடங்களில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர்களிலேயே ஊர் பெயர் அமைவதுண்டு. மாயூரநாதர் அருள்பாலிக்கும் தலத்தின் பெயர் மயூரம். இது பின்னர் மாயவரம் என்றாகி தற்போது மயிலாதுறை என அழைக்கப்படுகிறது. வைத்தியநாத சுவாமி அருள்பாலிக்கும் தலம் வைத்தீஸ்வரன் கோவில். இப்படி பல தலங்கள் இருப்பினும் இறைவி- இறைவன் பெயர்கள் இணைந்த தலத்தின் பெயர்கள் அமைவது மிக அபூர்வம்.
சிறப்பம்சங்கள்:
இறைவன் திருநாமம் ஸ்ரீவிடங்கேஸ் வரர். இறைவியின் திருநாமம் அருள்மிகு தில்லைநாயகி.
திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள் தில்லை நாயகியிடமும், திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் விடங்கேஸ்வரரிடம் தனித்தனியாக பிரார்த்தனை செய்தால் தங்கள் மனம்போல் மாங்கல்யம் கிடைக்க இத்தல அம்மையப்பன் அருள்புரிவார் என்று மகிழ்வோடு கூறுகிறார்கள் கிராம வாசிகளும், பலன் பெற்றவர்களும்.
வேண்டுதல் நிறைவேறி விரும்பத்தக்க வகையில் விவாகம் அமைந்தவர்கள் தில்லைநாயகி அம்பாளுக்கு நேர்த்திக் கடனாக தாலி அணிவித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
நன்றாக படித்தும், படித்த படிப்பிற்கேற்ற பணி கிட்டவில்லையே என்று வாட்டத்துடன் உள்ளோரும் இங்கேவந்து ஈசன்முன் தங்கள் கல்வி சான்றிதழை வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை செய்த சில நாட்களிலேயே தகுதிக்கேற்ற பணிகிட்ட பரமன் பரமகருணை புரிகிறார் என்று கூறுகிறார் ஆலயப் பொறுப்பாளர் செந்தில்பிள்ளை அவர்கள். மேலும் அவர் கூறுகையில், ஆயிரம் செலவங்கள் இருந்தாலும் புத்திரபாக்கியம் என்பது பெரும் செல்வம். அது கிட்டாமல் வருந்துவோர் இங்குவந்து தில்லைநாயகிக்கு மனம் நிறைந்த மலர்களால் மாலை சூட்டி நெய்தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்தியத்தை படைத்து வழிபட்டால் அம்மன் அருளால் அவர்கள் விரைவிலேயே அன்னையாகும் பாக்கியத்தை பெறுகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தைகளுக்குத் தாயாகும் வரத்தை அருளியவள் இந்தத் தாய் என்று பூரிப்போடு சொல்கிறார்கள்.
ஆண்டுத் திருவிழாவாக மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடக்கும் சோம வார பூஜையில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு பிராகாரத்தை 108 முறை வலம்வந்து வழிபட்டால் தங்கள் மனதில் நினைத்த காரியம் நடக்க வழிபாடுகள் மேற்கொள்கிறார்கள். அவை விரைவிலேயே ஈடேறுவதாகவும் கூறுகிறார்கள் என்கிறார் செயல் அலுவலர்.
மார்கழியில் வரும் ஆரூத்ரா தரிசனம் ஈசனின் அம்சமான சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார ஆராதனைகள் நடத்தி, நைவேத்தியம் செய்து வேண்டுவோர் இல்லத்தில் களிப்பு நிறையும் என்பது ஐதீகம்.
சீர்காழி வட்டத்திலுள்ள நவகிரக தலங்களைப் பற்றி அந்தக் கால கட்டத்திலேயே அகத்திய நாடியில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்-
1. சூரியன்- திருக்கோலக்கா
2. சந்திரன்- தில்லைவிடங்கன்
3. செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோவில்
4. ராகு- நாகேஸ்வரமுடையார் கோவில் (கடைவீதி, சீர்காழி)
5. குரு- மகேந்திரப்பள்ளி
6. சனி- நீமமேலி
7. புதன்- திருவேண்காடு
8. கேது- செம்மங்குடி
9. சுக்கிரன்- ஸ்ரீ சட்டைநாதர் கோவில், சீர்காழி.
இதில் தில்லைவிடங்கன் சந்திரதோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் அதனதன் கர்மவினைகளுக்கேற்ப பிறவி எடுத்து, பல்வேறு தோஷங்களால் அவதியடைந்து, நோய் நொடியால் பாதிப்படைகின்றன. அதனால்தான் நோய் நொடியின்றி வாழ்ந்திடவேண்டி இறைவனிடம் அனைவரும் வேண்டுகின்றனர். அதையடுத்து சிவபெருமானை வணங்குவதால் உடலில் இருக்கும் நோய் மற்றும் குறிப்பாக மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். மேலும் ருத்ர மூர்த்தியாகிய சிவபெருமானை போற்றும் சக்திவாய்ந்த ருத்ர மந்திரத்தை படித்துவந்தால் கிரக தோஷங்கள் உட்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்குவதோடு தங்களது மனபாரத்தை இறக்கிவிடலாம் என்கி றார் ஆலய அர்ச்சகர்.
ருத்ரமந்திரம்
"நமஸ்தே அஸ்து பகவன்
விச்வேஸ்வராய மஹா தேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய
காலாக்னீ ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதாசிவாய ஸ்ரீமன்
மஹா தேவாய நம.''
பொருள்: மூவுலகிற்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்கு நன்றி செலுத்துவதோடு, முக்கண்களை கொண்டவரும், மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரை துதிக்கிறோம். உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டராகவும் கொடியதை அழிக்கின்ற ருத்ரராக சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவபெருமானை போற்றுகிறோம் என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.
பலன்கள்:
சிவபெருமானுக்கு உகந்த தினமான சோம வாரம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று பாலாபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரத்தை 27 முறை படிப்பதால் கிரகதோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நம்மைவிட்டுபறந்துபோகும். இந்த மந்திரத்தை தினத்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒன்பது முறை அல்லது 27 முறை சொல்லிவந்தால் கடுமையான நோய்கள் விலகி நிம்மதியாக இருக்கலாம். மனதிற்கு காரகன் சந்திரன்; சந்திரனின் தோஷத்தை நீக்கிய சங்கரன் உறைகின்ற தில்லைவிடங்கன் தலத்தில் சோமவாரத்தில் பாராயணம் செய்தால் எப்படிப்பட்ட மனக்கலக்கமும் சரியாகி நல்ல தீர்வு கிடைக்கும் என்று அகத்திய நாடியில் குறிப்பிட்டதுபோல் தில்லைவிடங்கன் தலத்திற்கு வாருங்கள்; எல்லையில்லா ஆற்றல் தருவதோடு ஆனந்த நிலையையும் ஸ்ரீவிடங்கேஸ்வரர் தருவார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகரான கல்யாண்குமார் சிவாச்சார்யார்.
திருக்கோவில் அமைப்பு:
சீர்காழிவட்டத்தில் நீர்வளமும் நிலவளமும் மிகுந்த தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் ஊரின் மையத்தில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கிய முகப்புவாயிலின் முன்புறம் சந்திரபுஷ்கரணி தீர்த்தக்குளம் உள்ளது. சந்திரன் சிவவழிபாடு செய்கின்ற சுதைச் சிறப்பத்துடன் அழகிய முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நந்தி பலிபீடம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலப்புறம் தில்லைநாயகி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி சந்திரன், மேற்கு நோக்கி விநாயகர், பாலகிருஷ்ணன், பாலமுருகன் திருமேனிகள் உள்ளன.
அர்த்தமண்டபம் கடந்தால் கருவறையில் கிழக்கு நோக்கியபடி லிங்கத்திருமேனியாக விடங்கேஸ்வரர் அருட்காட்சியளிக்கிறார்.
சுற்றுப் பிராகாரத்தில் ருத்ரலிங்கம், கிணறு, க்ஷத்திர விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை, சூரியன், சந்திரன் சந்நிதிகள் உண்டு. கோஷ்ட தெய்வங்கள் துர்க்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி முறைப் படி உள்ளது. தலவிருட்சம் வில்வமரம் உள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் யாகசாலை, மடப்பள்ளி, திருக்கோவில் அலுவலகம் மற்றும் நந்தவனம் உள்ளது.
சிவனுக்கு மிகவும் பிடித்தமானது பஸ்மாபிஷேகம். (பஸ்ம அபிஷேகம்) பாஸ்மா என்பது விபூதியின் மற்றொரு பெயர். புனித சாம்பல். "விபு' என்ற சமஸ்கிருத வார்த்தையானது உயர்ந்த அல்லது நித்தியமான ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது வழக்கமாக தியாக நெருப்பிலிருந்து வெளிப்படுகிறது. சிவபெருமானின் மாய ஆற்றலையும், அழிக்கும், மாற்றும் மற்றும் உயர்த்தும் ஆற்றலையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவத்துவத்தில் பாஸ்பாவுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பக்தர் அதை தங்கள் உடலின் பல பாகங்களில் குறிப்பாக அவர்களின் நெற்றியில் சிவ உணர்வின் அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள்.
நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டபடி சந்திரனின் சாபம் நீக்கிய தில்லை விடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரருக்கு சோமவாரத்திலே புனிதமான கீர்த்தனைகளின் மத்தியில் சிவலிங்கத்தின்மீது புனித சாம்பலை அதாவது முழுமையாக விபூதியால் மூடப்பட்டு பஸ்மாபிஷேகம் செய்து சிவனை வழிபட்டால் அடியவருக்கு ஈசனின் திருவருள் கிடைப்பதுடன் பல பிறவிகளில் சுமந்து வரும் பெரும் பாவங்களையும் அழிக்கும். குரோதி தமிழ்புத்தாண்டு பிறந்துள்ள இத்தருணத்தில் பஸ்மாபிஷேகத்தை தரிசிப்பதால் அபம்ருத்யு (அகால மரணம்) தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.
எல்லையில்லா ஆற்றலுடன் விடாமுயற்சிக்கு வெற்றியைத் தந்தருளும் தில்லை விடங்கன் அம்மையப்பனை சோமவாரத்திலே தரிசிப்போம். சோகமயமான வாழ்வை இத்தல ஈசன் யோகமயமான வாழ்வாக மாற்றுவார் என்பதில் சிறிதளவு ஐயமில்லை என்கிறார் ஆலயப் பிரதான அர்ச்சகர் கல்யாண்குமார் சிவாச்சாரியார்.
நடைதிறப்பு: காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், விடங்கேஸ்வரர் திருக்கோவில், திட்டை (அஞ்சல்), தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம், மயிலாடுத்துறை மாவட்டம்- 609 111.
பூஜை விவரங்களுக்கு: பொறுப்பாளர் செந்தில்பிள்ளை, அலைபேசி: 93629 67019, டி. கல்யாண்குமார் சிவாச்சார்யார்
அலைபேசி: 98436 80057, 86086 35996.
அமைவிடம்: சீர்காழி பஸ் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தில்லைவிடங்கன். பேருந்து வசதி இல்லை. மினிபஸ், ஆட்டோ மற்றும் கார்மூலம் செல்லலாம்.
படங்கள்: போட்டோ கருணா