ஆதிசங்கரர் ஞான மார்க்கத்திற்கு அத் வைதம் என்னும் தத்துவத்தை- ஜீவாத்மா வும் பரமாத்மாவும் ஒன்றே என்று வேதரூபமாக உணர்த்தினார். இதனை வேதங்கள் "பிரக்ஞானம் பிரம்ம'- உணர்வே இறைவன் (ரிக்வேதம்- ஐதரேய உபநிடதம்), "அயம் ஆத்மா பிரம்ம'- இந்த ஆத்மாவே இறைவன் (அதர்வண வேதம்- மாண்டூக்கிய உபநிடதம்), "தத் த்வம் அசி'- நீ அதுவாக உள்ளாய் (சாமவேதம்- சாந்தோக்கிய உபநிடதம்), "அஹம் பிரம்மாஸ்மி'- நானே இறைவன் (யஜுர் வேதம்- பிருஹதாரண்ய உபநிடதம்) என்று கூறுகிறது.
வியாசரும் ஆதிசங்கரரும் இறைவனை உணர்ந்திட- இறைவனில் லயித்திட ஞான மார்க்கத்தில் பல கிரந்தங்கள் எழுதினர்.
அதேசமயம் அனைவராலும் ஞான மார்க்கத்தில்- அருவ வழிபாட்டில் ஆழ்ந்திட இயலாதே என்று, வியாசர் பதினெட்டு புராணங்கள் எழுதினார். பல உப புராணங்களும் உள்ளன. அவை பகவானின் பல்வேறு அவதாரங்கள், லீலைகள், துதிகள் நிறைந்தவை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sakthipeedam.jpg)
எந்த உருவ லீலைகளில் ஆழமுடியுமோ அதனில் ஆழ்ந்து நற்கதி, முக்தியடையலாம் என்பதே தத்துவம்.
ஆதிசங்கரர் மேலும் ஷண்மதம் என்று தெய்வ உருவ வழிபாடுகளை வகுத்தார். காணாபத்தியம்- கணபதி வழிபாடு, சைவம்- சிவ வழிபாடு, சாக்தம்- சக்தி வழிபாடு, வைஷ்ணவம்- விஷ்ணு வழிபாடு, கௌமாரம்- முருக வழிபாடு, சௌரம்- சூரிய வழிபாடு.
ஒவ்வொரு வடிவத்திற்கும் சில புராணங்கள் இருந்தாலும் தனித்தனி துதிகளும் செய்தார். பல பக்திமான்கள் அவ்வாறே பலவில ரூப லாவண்ய லீலைகளைத் துதிகளாகச் செய்தனர். இதற்கு பக்தி மார்க்கமென்று பெயர். இதன்மூலமும் இறைவனை அடையலாம் என்பதே தத்துவம். அதன்வழியே பல கோவில்கள் அமைந்தன. ஆழ்வார்கள் 108 திவ்ய தேசங்கள் என பெருமாளைப் பாடியுள்ளனர். நாயன்மார்களின் பாடல்பெற்ற 274 சிவாலயங்கள் உள்ளன. அவையன்றி வேறுபல சிவத் தலங்களும் உள்ளன. அனேகமாக எல்லா சிவத்தலங்களிலும் அம்பாள் இருப்பாள்; கணபதி, முருகனும் இருப்பர். சூரியனுக்குத் தனிக்கோவில் உண்டு; நவகிரக சந்நிதியில் உருவமும் உண்டு. கடவுளை ஆழ்ந்து துதித்து வழிபட மனசாந்தி, சுக அனுபவங்கள், முக்திப் பேறு என அனைத்தையும் அடையலாம் என்பதே தத்துவம்.
நவராத்திரி, விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்கள் அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தவையாகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாக அன்னையை வழிபடுகிறோம்.
கன்னிப்பெண், சுமங்கலி, வயதான சுமங்கலி ஆகியோரையும் அம்பாளாக பாவித்து வழிபடும் வழக்கமுண்டு. அம்பாளைத் துதிக்க பல சகஸ்ர நாமங்கள் உள்ளன.
அவற்றுள் உன்னதமானவை லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி ஆகியவையாகும். அவற்றைச் சொல்லி வழிபடலாம். கோவில்களில் ஸ்ரீசக்கர பூஜை, நவாவரண கீர்த்தனம் நடத்தப்படுகின்றன.
சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்கள் என்றாலும், சக்தி பீடங்கள் என்னும் பிரத்தியேக தலங்கள் அம்பாளுக்கென்று உள்ளன. அந்த தலங்களில் அம்பாளை வழிபாடு செய்வது மிகச் சிறந்தது. அவை தோன்றியவிதம் குறித்து சிந்திப்போம்.
"யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம' என்பது துர்கா சப்தசதியில் வரும் துதி. எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் சக்திவடிவில் இருக்கிறாளோ அவளுக்கு வணக்கம் என மூன்றுமுறை கூறுகிறது.
சிருஷ்டி வளர பிரம்மதேவர் மாயாதேவி யுடன் பிரஜாபதி என்னும் பத்து பிள்ளைகளைப் படைத்தார். முதலாமவன் தட்சப் பிரஜாபதி. அவன் தரணிமூலம் ஆயிரம் பிள்ளைகள் பெற்றான். அந்த ஆயிரம் பிள்ளைகளும் நாரதரின் உபதேசம் கேட்டு இல்லறத்தைத் துறந்து துறவறம் ஏற்றனர். எனவே கோபம்கொண்ட தட்சன், "எப்போதும் திரிந்துகொண்டு, கலகம் மூட்டுபவனாய் இருப்பாய்' என்று சபித்தான். பிறகு தட்சன் அசக்னி என்பவளை மணந்து அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களை பிரஜாபதி- 10, காஸ்யபர்- 13, சந்திரன்- 27. தஸ்சயர்- 4, பூதர், ஆங்கீரசர், கீரிசுவா ஆகியோருக்கு 6 என்ற எண்ணிக்கையில் திருமணம் செய்துவைத்தான்.
பிரம்மதேவனுக்கு ஒரு ஆண் பிள்ளை யுண்டு. அவனே மன்மதன். அவனுக்கு தட்சனின் மகளான ரதியை மணம் செய்வித்த னர். அப்போது பிரம்மா மன்மதனுக்கு ஐந்து மலர்க் கணைகளைத் தந்து, "இவை மயக்குதல், மகிழ்தல், வெறி, விரகம், கிளர்ச்சி ஆகியவற்றை எய்யப்பட்டவர்களிடம் ஏற்படுத்தும். இது சிருஷ்டி பெருக உதவும்'' என்று கூறினார். அதை பரிசோதிக்க எண்ணிய மன்மதன், பிரம்மதேவன்மீதே அதை வீச, பிரம்மதேவன் தன்முன் நின்றிருந்த சந்தியா எனும் இளம்பெண்ணை நேசிக்க ஆரம்பித்தார். சிவபெருமான் பிரம்மதேவனைக் கடிந்துகொள்ள, பிரம்ம தேவன் மன்மதனிடம், "நீ சிவ சாபத்தால் எரிந்துபோவாய்'' என்று சாபமிட்டார்.
பிறகு பிரம்மா தட்சனை நோக்கி, "நீ பகவதியை மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால், அவளே உனக்கு மகளாகப் பிறப் பாள்; சிவன் உனது மருமகனாவார்'' என்றார்.
அவ்வாறே தவம்செய்ய, தேவி அவனது மகளாக- தாட்சாயணியாக அவதரித்தாள். சிவபெருமானிடம் தட்சன், "தங்கள் யோகத் தன்மையை விடுத்து என் மகளை மணக்க வேண்டும் என்று வேண்ட, தாட்சாயணியும் தவம்செய்ய, திருமணம் நடந்தது.
ஒரு முறை தட்சன் தன் மருமகன் சிவனையும் மகளையும் காண கயிலை சென்றான். சிவகணங்கள் அவனைத் தடுத்தன. அதனால் கோபம்கொண்ட தட்சன் திரும்பி வந்து விட்டான். பிறகு ஒரு யாகத்தைத் தொடங்கினான். அதற்கு சிவனையும் மகளையும் அழைக்கவில்லை. மற்ற தேவர்களை அழைத்து விமர்சை யாக நடத்தத் தொடங்கினான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sakthipeedam1.jpg)
இதையறிந்த தாட்சாயிணி, யாகத்தில் கலந்துகொள்வதற் காக சிவபெருமானை அழைக்க, சிவன் மறுத்தார்.
சிவன் தடுத்தும் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அவமதிக்கப் பட்டதால் நொந்து யாகத்தீயில் விழுந்தாள்.
இதையறிந்த சிவன் கோபம்கொண்டு வீரபத்திரரைத் தோற்றுவிக்க, அவர் யாகத்தை அழித்து தட்சனின் தலையை வெட்டி யாகத் தீயில் இட்டார். சிவன் சதிதேவியின் (தாட்சாயணி) உடலைத் தோளில் இட்டவாறு ஊழித் தாண்டவம் புரிந்தார். இதனால் அண்ட சராசரங்களும் ஆடின. அனைவரும் கதி கலங்கி நிற்க, மகாவிஷ்ணு நிலைமையை உணர்ந்து தனது சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலைத் துண்டுத் துண்டுகளாக வெட்டி னார். அவை விழுந்த இடங்களே சக்திபீடங் கள் என்று அழைக்கப்படுகின்றன. உடை, ஆபரணங்கள் விழுந்த இடங்கள் உப சக்திபீடங்கள் ஆகின என்பர். அத்தகைய இடங்களில் தோன்றிய கோவில்கள் தேவியின் அருளைப் பெரிதும் பொழியும் புனிதத் தலங்களாக விளங்குகின்றன.
சக்தி பீடங்கள் தோன்றிய இடங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து கருத்து வேறு பாடுகள் உண்டு. வேத காலத்தில் நான்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. கல்கி புராணம் ஏழு என்கிறது. தேவி கீதை 18 என்கிறது. அக்ஷரங் களுக்கேற்ப 51 என்றும் கூறுகிறது. பஞ்ச பீட ரூபிணி என்று பாடல் நிறைவுபெறும். சக்திபீடங்கள் 64 என்னும் கணக்கும் உண்டு. தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைக் குறிப்பிடுகிறது. மத்ஸ்ய புராணமும் மகாபாரதமும் 108 பீடங்கள் என்கின்றன.
நமது உடலிலேயே சக்கரங்களில் சக்திபீடங்கள் உள்ளதாகக் கூறுவர். மூலாதாரம்- காமகிரி பீடம்; அனாகதம்- பூர்ணகிரி பீடம்; விசுத்தி- ஜாலந்தர பீடம்; ஆக்ஞை- ஒட்டியாண பீடம். இந்த நான்கு பீடங் களில் பராசக்தி, பரா பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்னும் வடிவில் தேவி ஆராதிக்கப்படுகிறாள்.
தமிழகத்தில் 16 சக்திபீடங்கள் உள்ளன. தலப் பெயர், அம்பாளின் பெயர், சக்தி பீடத்தின் பெயர் ஆகியவற்றை வரிசைக்கிரம மாகக் கொடுத்துள்ளோம்.
காஞ்சிபுரம்- காமாட்சி- காமகோடி பீடம்.
மதுரை- மீனாட்சி- மந்த்ரிணீ பீடம்.
திருவானைக்கா- அகிலாண்டேஸ்வரி- தண்டினி பீடம்.
இராமேஸ்வரம்- பர்வதவர்த்தினி- சேது பீடம்.
பாபநாசம் (திருநெல்வேலி)- விமலாதேவி- விமலை பீடம்.
திருவாரூர்- கமலாம்பாள்- கமலை பீடம்.
கன்னியாகுமரி- குமரி அன்னை- குமரி பீடம்.
திருவண்ணாமலை- அபிதகுஜாம்பாள்- அருணை பீடம்.
திருக்கடவூர்- அபிராமி- கால பீடம்.
திருக்குற்றாலம்- பராசக்தி- பராசக்தி பீடம்.
கும்பகோணம்- மங்களாம்பிகை- விஷ்ணு சக்தி பீடம்.
திருவெண்காடு- பிரம்மவித்யா- ப்ரணவ பீடம்.
திருநெல்வே-- காந்திமதி- காந்தி பீடம்.
திருவையாறு- தர்மசம்வர்த்தணி- தர்ம பீடம்.
திருஈங்கோய்மலை- ஸ்ரீ ல-தா- சாயா பீடம்.
திருவொற்றியூர்- திரிபுரசுந்தரி- இக்ஷு பீடம்.
இவற்றுள் காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகியவை முக்தி க்ஷேத்திரங்களாகும். சங்கீத மும்மணிகள் அவதரித்த தலம் திருவாரூர். முத்துசுவாமி தீட்சிதர்- ஸ்ரீவித்யா உபாசகர் இந்த அனைத்து சக்திபீடங்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். தியாகராஜரும் சியாமா சாஸ்திரிகளும் சில தலங்களை தரிசித்துள்ளனர். ராம பக்தரான தியாகராஜர் திருவாரூர் மட்டுமல்லாது திருவையாறு, காஞ்சிபுரம், திருவொற்றியூர் அம்பாளைப் பற்றிப் பாடியுள்ளார்.
ஸ்யாமா சாஸ்திரிகள் ஆழ்ந்த தேவி பக்தர். காமாட்சியைத் தவிர வேறெவரையும் பாடாதவர். தேவி நினைவூட்ட, மீனாட்சி யையும் பாடியுள்ளார். தீட்சிதர் எழுதிக் கிடைத்துள்ள 500 பாக்களில் 197 பாக்கள் அம்பாளைப் பற்றியதே என்றால் அவரது அம்பாள் ஈடுபாட்டை சிந்திக்கவேண்டும்! தீபாவளியன்று எட்டயபுரத்தில் மீனாட்சி தேவியின் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்ட வண்ணம் தேவிபதம் அடைந்தார். கமலாம் பாள் நவாவரணம் பாடியவர் தீட்சிதர்; காமாட்சி தேவிக்கு நவாவரணம் பாடியவர் ஊத்துக்காடு கிருஷ்ண பக்த வெங்கட சுப்பையர்.
நவராத்திரி சமயத்தில் தேவியை வணங்கி, சக்திபீடங்களை நினைவுகூர்ந்து அன்னை யின் அருள்பெறுவோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/sakthipeedam-t.jpg)