கோவிலில் உற்சவம் துவங்கப்படு வதற்கு பல நாட்கள் முன்னதாகவே தேவாலயம், ஆலயத்தினுடைய மண்டபங்கள், வாகனங்கள், தேர் வீதியுலாவுக்கான தளவாடப்பொருட்கள், உபசரிப்புக்கொடை, தீப இஷ்டி (தீவட்டி), வண்ணக் கொடிகள், தீபதண்ட வகைகள், விதானம் (மேல்கட்டு விரிப்பு), பதாகை (புகழ்ப்பலகை, சின்னங்களின் பதாகை), அஷ்டமங்களம், தசாயுதங் கள், பலவகை இசைக்கருவிகள் முதலான வற்றை தூய்மைப்படுத்தியும், புதுமைப் படுத்தியும் உரிய சீர்திருத்தங்கள் செய்து முடித்திடவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samycar.jpg)
ஆலயம், கோபுரம், மண்டபம், ஓய்வு மண்டபங்கள், ஆலய சுற்றுப்பகுதிகள், வீதிகள் ஆகிய வற்றை சமப்படுத்தி, அங்கிருக்கும் புற்கள், செடிகொடிகள், முட்கள், தடைகள், தூசிகள் போன்றவற்றை அகற்றவேண்டும். ஊர், வீதி, ஆலயத்தை வாழைமரம், மாவிலை, தென்னங் குலை, கரும்பு, தோரணமாலை முதலிய வற்றால் நன்கு அலங்கரிக்கவேண்டும். சர்வ வைபவங்களுடன் முதலில் கிராம தேவதையான பத்ரகாளிக்கு அவளது கோவிலில் காளி உற்சவத்தைச் செய்து, பின்பு விநாயகருக்கு சிறப்புப் பூசையுடன் அப்பம், மோதகம் நிவேதித்து உற்சவத்தைச் செய்து, பிறகு மறுநாள் சிவோற்சவத்தின் துவக்கத்தைச் செய்திடுவதே ஆகம முறையாகும்.
இவ்விதமாக வீதிகள், வாகனாதிகளை அலங்கரித்து, சிறிய தேரிலோ, கேடகத்திலோ, எடுப்புப் பல்லக்கிலோ பலவகை அலங் காரத்தோடும், புஷ்ப பிரபைகளுடனும் கூடியவாறு தேவியுடன் தேவனை மூலஸ்தானத்திற்கு கொண்டுசென்று ஆவாகித்து, பூசித்து, தூபதீபங்களைச் செய்து புஷ்பாஞ்சலிகளால் அர்ச்சிக்க வேண்டும். பின்னர் சக்திபேரம் முதலாக, பக்த பேரத்தோடும் கூடியதாக, சிவபெருமானது கிராம பிரதட்சிணமாக, நகர்வல வீதி உலாவரும் சுற்றுப்பயணப் புறப்பாட்டைத் துவக்கவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samycar1.jpg)
திருவீதி உலா வரவேண்டியதன் விதிமுறையில், முன்னதாக அலங்காரத் துடன் கூடியவையாக பேரி (முரசு), உடுக்கை, படஹம், தம்பட்டம், ஜல்லரீ (ஜால்ரா), சங்கு, எக்காளம் (கரஹளம்), மத்தளம், மிருதங்கம், குழல், தாளவகைகள், பஞ்சமுக வாத்தியம் முதலான 18 வகையான வாத்தியங்களுடன், பயணத்தில் வீதியில் உடன்செல்லும் சைவர்களும், இவர்களுக்கிடையில் முறையே அதிகார நந்திகேச்வரரும், பிறகு விநாயகர், பிறகு சுப்ரமண்யர், நடுவில் தேவியுடன் கூடிய சோமாஸ்கந்தர், முன்போ அல்லது பின்புறத் திலோ பக்தபேரங்கள், அதன்பிறகு சண்டேச்வரர் என்று இம்முறையிலேயே தெய்வங்களின் மூர்த்தங்கள் நகர்வலப் புறப் பாட்டை மேற்கொள்ளவேண்டும்.
உலாவரும்பொழுது அர்ச்சகரும் அதிகாரிகளும் தவறாமல் உரியமுறையில் தேவனின் உடனேயே வரவேண்டும். பயணத்தின் துவக்கம் முதல் வீதி உலா வருதலின் முடிவுவரை தொடர்ந்து வரவேண்டும். காப்புக் கட்டிக்கொண்டுள்ள ஆசாரியர் அல்லது அவரால் நியமிக்கப் பட்டவர், சீடர், உறவினர் ஆகியோரில் ஒருவர் தவறாமல் தேவனுக்கு வலது பக்கத்தில் இருந்துகொண்டு, வீதியுலா வருகையில், மூலமந்திரம் அல்லது அகோர மந்திரத்தை எண்ணிக்கை கணிப்பின்றி ஜபித்தவாறு உடன்வரவேண்டும். தேவனுக்கு இடதுபாகத்தில் அரசன் அல்லது தர்மாதிகாரி ஒருவர் சாமரம் வீசியவாறோ, வணங்கியபடியோ உடன்வரவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samycar2.jpg)
இவ்வாறு தேவனுக்கு எதிர்புறத்தில் நர்த்தகர், குழல் ஊதும் வம்சகர், பாடுகிற காயகர், மிருதங்கம் வாசிக்கிற மத்தளகர் ஆகியோரும், இருபக்கங்களில் நிருத்தத் துடனேயே வருகின்ற ருத்திரகணிகா நாட்டிய மாதர்கள், முன்புறத்தில் மகாசைவர்கள், பின்புறத்தில் வேதாதி கோஷங்களை எழுப்பியவாறு தொடரும் வேதப்பிராம்மணர் கள், அதனைத்தொடர்ந்து நால்வகை வருணத் தார்களான மாஹேச்வர அடியார் பெரு மக்கள், பொதுமக்கள் யாவருமாக அன்புடன் மதித்து, இறைவனுடன் பின்தொடர்ந்து செல்லவேண்டும். இவ்விதம் உற்சவத்தில் இறைவனோடு செல்பவர்கள் அச்வமேதயாகம் செய்த பயனை அடைவார்கள்.
வீதி சுத்தம் செய்யப்படாத நிலையிலும், வீதியில் புனிதம் மற்றும் மகிழ்ச்சியற்ற நிலையிலும், அலங்கரிக்கப்படாத நிலையிலும், குப்பைகளை நீக்கிப்பெருக்கி வீதியை சுத்தம் செய்து நீர் தெளிக்கப்படாத நிலையிலும், வாத்திய ஓசை இல்லாமலும், பக்தர் கூட்ட தொடர்ச்சி இல்லாமலும், தனியாகவும் தெய்வத்திற்குப் புறப்பாட்டை ஒருபோதும் செய்யக்கூடாது.
மேலும், மழையில் தெய்வம் நனையாதவாறு மேல்கூரை (விதானம்) நான்கு காலில் மூலைகளில் உடனேயே பிடிக்கப்பட வேண்டும். ராஜாவுக்குரிய உபசரிப்புகள், கொடை, சாமரம் போன்றவை தவறாது உடனிருத்தல் அவசியம். இவை குறைவுபடின் பரிகாரத்தைச் செய்யநேரிடும். இவ்விதமாக தேவனை யானகிரமத்தில் மகிழ்வித்தல் முறை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samycar3.jpg)
உற்சவ ஊர்வலத்திற்கு பகலில் ரங்கம், மஞ்சம், சிவிகை (பல்லக்கு), விமானம், கேடகம், பிரபையுடன் கூடிய பீடவகைகள் போன்றவற்றில் உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்யலாம். உற்சவத்திற்கான வாகனங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவகையில் ஆகமங்களில் கூறப்பட்டபோதிலும், அவற்றுள் ஏதேனும் ஒருவரிசை முறையினைப் பின்பற்றிக் கையாளுதல் முறையாகும். சில தினங்களிலோ, ஒருநாள் விழாவிலோ, பகலிலோ சிறப்பு வாகனங்களைக் கைக்கொள்ளலாம். தேர்த்திருவிழாவானது எப்பொழு தும் பகலில் மட்டுமே தேரேற்றம் (ரதாரோஹணம்) செய்யப்பட்டு, மாலையில் ரதாவரோஹணம் (தேரிறக்கம்) செய்யப்பட்டு உரிய மூலஸ்தானத்தை அடைவிக்க வேண்டும். கட்டுத்தேர் (சிறுதேர், சப்பரம், முத்துத்தேர், கிண்ணித் தேர்கள்) வகைகளை மட்டுமே இரவில் செய்யலாம்.
தேவதைக்கேற்ப வாகனங்களின் வகைகளும் வரிசை முறைகளும், உற்சவத்தின் நாள் கணக்கிற்கேற்ப வாகனம் வேறுபாடு உடையதாகும். இவற்றை ஆகமங்களில் உள்ளவாறு அறிந்து தேர்வுசெய்து, அதனைப் பிறகு மாற்றாது தொடர்ந்து பின்பற்றவேண்டும். பெருவிழாவில் விரும்பியவாறு இதனைச் செய்யக் கூடாது. வீதி உலாமுடிந்து, மீண்டும் ஆலய கோபுரத்தடி அல்லது வாயில் எதிரில் சுவாமி வரும்பொழுதில், அங்கு சிறிதுநேரம் இளைப்பாறச் செய்து, சகலரும்- வாத்தியக்காரர்கள், நாட்டிய நங்கையர் முதலாக வலம்வருதலாகிற பரிவேஷணத்தையும்; ருத்ரகணிகையர் காளிதீபம், கும்பதீபம் தாங்கி, திருஷ்டிதோஷம் நீக்கிடும் தீபநீராஞ்ஜனத்தையும் செய்துமுடித்து, பிறகு ஆரத்தி எடுத்து, இறைவனுக்கு பாததீர்த்தம் அளித்து வரவேற்று கோவிலுக்குள் புகச்செய்து, உரிய மண்டப இருக்கையில் சேர்த்து பின்பு நீராட்டிப் பூசித்தல் யானகிரமம் எனப்படுகிறது.
சுவாமி புறப்பாட்டு விதிமுறை
தினமும் இருவேளை வீதி உலா வருவதைச் செய்தல் அவசியம். உற்சவத்தில் யான பேரமான உற்சவ மாகேசமூர்த்திகள் முதல் நாளிலிருந்து ஒன்பது நாட்களுக்கு முறையே சந்திரசேகரர், அர்த்தநாரீசர், விருஷபாரூடர், கௌரீசம்வாத லீலாமூர்த்தி, கஜஹாரீ, உமேசர் (சாம்பவர்), கல்யாண சுந்தரர், திரிபுரக்னர், காலஹாரீ (மிருத்யுஞ்ஜயர்) என்று அறியவும். ஒன்பது நாளுக்கும் இவ்விதம் ஒன்பது மூர்த்திகள் இல்லாதபொழுதில், எல்லாநாளும் சோமாஸ்கந்தர் பேரம் ஒன்றே சிறந்ததாகும்.
அந்தந்த தேவதைக்குத் தகுந்த வாகனங்களை முறைப்படி அறிந்து, அவற்றையே உபயோகிக்கவும்.
சிவனுக்கு முறையே சூக்ஷ்மாகமத்தின்படி புறப் பாட்டுமுறை, கப்ளீ, பூதம், குண்டோதரன், விருஷபம், முத்துப்பிரபை, யானை, புஷ்பக விமானம் (பூப்பலக்கு), சியந்தனம் (சப்பரத்தேர்), குதிரை, சிவிகை (பல்லக்கு) என்பவை ஒன்பது தினங்களின் புறப்பாட்டு வாகனங்கள் ஆகும். வாகனங்கள் இல்லாதபொழுதில் சிவிகையில் (பல்லக்கில்) யானத்தைச் செய்யவேண்டும். மழை முதலான ஏதோ ஒரு காரணத்தினால் கிராமப் பிரதட்சிணம் செய்யப்படவில்லை என்றால் திசாஹோமத்தைச் செய்யவேண்டும். மேலும், ஒவ்வொரு கிரியையும் உரியகாலத்திற்குள் செய்துமுடித்து, உற்சவத்தை காலத்திற்குள் செய்வதே பயன்தருவதாகும் என்கிறது காமிகாகமம்.
மகோத்ஸவ காலத்தில் மூலமூர்த்திமுதல் சண்டேசர் வரையிலாக அனைத்து மூர்த்திகளும், யானகமூர்த்தி யுடன் செல்வதாகக் கூறப்பட்டுள்ளதால், மகேசரின் ஊர்வலம் வரும் காலத்தில் மூலபேரத்தை தரிசித்தல் கூடாது. உற்சவர் வெளியில் உள்ளபோது அறியாமை யாலோ, ஆசையாலோ மூலவரை தரிசித்தால், உற்சவரை நிந்தித்த பாவியாகி குருடராவர் என்கிறது ஆகமம்.
விநாயகர் உற்சவத்தின் வாகனமுறை
உற்சவ தின வரிசையாக, காலையில் தேரும் தீர்த்தமும் நீங்கலாக கேடகத்திலும், மாலையில் வாகனத் திலும் செய்திடுக. நாள் 1-ல் மூஷிகம், 2-ல் மயில், 3-ல் பூத வாகனம், 4-ல் விருஷப வாகனம், 5-ல் சக்தி விமானம், 6-ல் யானை, 7-ல் ரதம் (தேர்த் திருவிழா), பிராயச்சித்தம், 8-ல் குதிரை, 9-ல் கிருஷ்ணகந்தம், 10-ல் தீர்த்தம், மஞ்சம் என்பவை கணேசருக்கான வாகனமுறை ஆகும். சுவாயம்புவ ஆகமத்தின்படி வேறுவிதமாகவும் சொல்லப்படும்.
சுப்ரமணியரின் உற்சவ வாகனமுறை
உற்சவ தின வரிசையில், குமார தந்திர நூலின்படி முருகனுக்கான வாகன முறையாவது, பகலிரவாக முறையே 1-ல் பத்ரபீடம், ஹம்சம், 2-ல் கோழி, ஆடு, 3-ல் சூரியபிரபை, மயில், 4-ல் நாகம், சந்திரமண்டலம், 5-ல் மகரம், புலி, 6-ல் மூடுபல்லக்கு, யானை, 7-ல் ரதம், பிராயச்சித்தம், 8-ல் புருஷாமிருகம், குதிரை, 9-ல் எடுப்புப் பல்லக்கு, சிம்மம் (கிருஷ்ணகந்த உற்சவம்), 10-ல் மஞ்சம் (கட்டில்), இராவணன், 11-ஆம் நாள் இரவில் இந்திர விமானம் அல்லது மயில் (சக்தி ஊடல் உற்சவம்).
கிராம தேவதை காளியின் வாகனமுறை
காரணாகமப்படி, இரவில் மட்டும் 1-ல் மஞ்சம், 2-ல் பூதகி, 3-ல் ஹம்சம், 4-ல் யானை, 5-ல் சிம்மம், 6-ல் மஹிஷம் (எருமைக்கடா), 7-ல் காலையில் தேர் (ரதம்), 8-ல் குதிரை, 9-ல் ஆடு, 10-ல் இந்திர விமானம் என்பவையும்; பகலில் எப்பொழுதும் மஞ்சத்திலும், இரவில் வாகனத்திலும் புறப்பாடு என்று அறியலாம்.
பார்வதியின் வாகனமுறை
தேவியின் உற்சவ தினங்களில் காலை- மாலைகளில் வாகனப் புறப் பாட்டு முறையானது, பகலிலும் இரவிலும் முறையே 1-ல் பத்ரபீடம், பத்மபீடம், 2-ல் குதிரை, கிளி, 3-ல் கட்டில், புஷ்பப்பிரபை, 4-ல் மகரம், பீமன், 5-ல் கல்யாணம், விருஷபம், 6-ல் சூர்ணோற்சம், யானை, 7-ல் ரதம், மயில் (கஸ்தூரி பொட்டு, சிவப்புப்பட்டு, வெள்ளை புஷ்பசாற்றுமுறை), 8-ல் மூடு பல்லக்கு விமானம், 9-ல் நாகம், சிம்மம், 10-ல் பத்ரபீடம் ஹம்சம், 11-ல் கேடயம் (தீர்த்தம், அவரோ கம்), விமானம்.
இதுபோன்ற நெறிமுறைகள் உற்சவத்தின்போது சரியாகப் பின்பற்றுதல் அவசியம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/samycar-t.jpg)