மகாசிவராத்திரி 1-3-2022

சிவனுக்கு ஒரே இரவு சிவராத்திரி. நான்கு காலமும் ஏகாதச ருத்ரம், சமகம் ஜபம்செய்து, சிவனுக்கு விதவித அபிஷேகம் செய்து வழிபடும் நாள்.

ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதி மறைந்த நாளும் சிவராத்திரியே! திருமூலரின் திருமந்திரம் சிவமகிமை குறித்து என்ன கூறுகிறது?

"அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்

Advertisment

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!'

Advertisment

ss

இங்கு அன்பு என்பது பக்தியையும் சக்தியையும் (அம்பாள்) குறிக்கும். சக்தியில்லையேல் சிவன் சவம் என்பர். பக்தியில்லையேல் அவனும் சவமே!

"பராபரன் எந்தை பனிமதி சூடி

தராபரன் தன் அடியார் மனக்கோவில்

சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்

மராமரன் மன்னி மனத்து றைந்தானே.'

யாவருக்கும் மேலானவன் என் தந்தை. பிறை சூடியவன். அடியார் உள்ளம் உறைபவன். தேவர்கள் தலையில் ஒளிமயமானவன். குண்டலியின் தலைவன் சிவன் என் உள்ளத்தில் அமர்ந்தவனே:

"ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்தெட்டே'

பொருள் என்ன?

ஒரு பொருளான சிவபெருமானே இனிய சக்தியுடன் இரண்டாய் உள்ளான்.

திருமால், நான்முகன், ருத்ரன் என மூன்று நிலையில் இருப்பவன்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்ந்தவன். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறிகளையும் வென்றவன்.

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் விரிந்தவன். அதன் மேலான ஏழாவது இடமான சக்கர தளத்தில் விளங்குபவன்.

நிலம், நீர், காற்று, தீ, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா எனும் எட்டுப் பொருட்களையும் உணர்ந்து அதில் கலந்து விளங்குபவன்.

44

அடியார்களைப் பாடிய சுந்தரருக்கு முன், கி.பி. 660-700 வருடங்களில் வாழ்ந்தவர் நந்தனார். சிதம்பரேசன்மீது ஈடுபாடு கொண்டு, தான் ஹரிஜன வகுப்பில் பிறந்திருந்தாலும், "அவரை நாளை தரிசிப்பேன்' என்று திடவிசுவாசத்துடன் நாளைக் கழித்ததால், அவர் பெயரைரே "திருநாளைப் போவார்' என்று சுந்தரர் கூறுவார். அவ்வாறே ஒருநாள் தில்லை ஈசனுடன் நந்தனார் கலந்த வரலாறு யாவரும் அறிந்ததே.

நந்தனாரை நினைவுகொண்டால், ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியை மறக்கமுடியாது. ஏன்? அவர் "நந்தனார் சரிதம்' என்று கதாகாசேலட்பம், நாடகம் போன்று நந்தனார் சிவபக்தி லீலைகளைப் பாடியவர்.

அவர் பாடல்கள் பஜனை சம்பிரதாயத்திலும், சங்கீத கச்சேரிகளிலும், நடனத்திலும் ஆடிப் பாடப்படுகிறது. திரைப்படமும் எடுத்துள்ளனர். கதாகாலட்சேபத்திலும் காணலாம்.

இவர் சங்கீத மும்மணிகளின் காலத்தைச் சேர்ந்தவர் என்பவர்.

முத்துஸ்வாமி தீஷிதர் காலம் 1775-1834

ஸ்யாமா சாஸ்திரிகள் காலம் 1762-1827

தியாகராஜர் காலம் 1767-1847

ஸ்வாதித் திருநாள் காலம் 1813-1848

கோபாலகிருஷ்ண பாரதி காலம் 1810-1881

(மறைந்தது 1896 என்றும் கூறுவர்.)

நாகப்பட்டினம் அருகே நரிமணம் எனும் கிராமத்தில், ராமஸ்வாமி என்பவருக்கு மகனாக பரத்வாஜ கோத்திரத்தில் 1-1-1810-ல் பிறந்தவர். நட்சத்திரம் தெரியவில்லை. தகப்பனார் ராமஸ்வாமி பாரதி. ஆக பாரதி என்பது குடும்பப் பெயர் போலும்; விருதுப்பெயர் அல்ல. இளவயதிலேயே தாய்- தந்தையை இழந்து, அனந்தராமய்யர் என்ற உறவினரால் வளர்க்கப்பட்டார். அவரது ஆதரவில்லாவிடில் அவர் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.

இவர் பாடியது முழுக்க முழுக்கத் தமிழில்- அதுவும் நளினமான தமிழில். தமிழில் பாடிய ஒரே சங்கீத நிபுணர் கோபாலகிருஷ்ண பாரதி. பக்தி தவழும் பாடல்கள். (ஊத்துக்காடு வெங்கடகவி, கோடீஸ்வர ஐயர், நாமக்கல் கவிஞர், வேதநாயகம் பிள்ளை, சுப்பிரமணியபாரதி யாவரும் தமிழில் பாடியுள்ளனர்.) அவரது சரிதம் சிறிது சிந்திப்போம்.

தகப்பனாரும் தாத்தாவும் வீணை வித்வான்கள். ஆக சங்கீதம் வம்சப் பரம்பரையாக ரத்த சம்பந்தம் பெற்றது. நன்னிலம் அருகே முடிகொண்டான், கூத்தனூர் (சரஸ்வதி கோவில்) தலங்களில் வசித்துள்ளார். பின்பு மயிலாடுதுரை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் வாழ்ந்தார்.

மாயூரம் கோவிந்த தாசரிடம் அத்வைத சாஸ்திரம், யோக சாஸ்திரம் கற்றார். கானம் கிருஷ்ண ஐயரிடம் கர்நாடக சங்கீதமும், ராமதாசரிடம் ஹிந்துஸ்தானி சங்கீதமும் கற்றார். சிவஞான சீலராகத் திகழ்ந்தார். கைவல்ய நவநீதம், ப்ரபோத சந்த்ரோதயம், தாயுமானவர், ராமலிங்க சுவாமி பாடல்கள் அவர் மனதை ஈர்த்தன.

சொக்கப்பிள்ளையிடம் தமிழிழையும், அப்பய்ய நாதரிடம் சமஸ்கிருதமும் கற்றார். 25 வருடங்கள் முடிகொண்டான் கிழக்கு அக்ரஹாரத்தில் வசித்தார். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் லயித்து, இயற்பகை நாயனார் சரிதம், திருநீலகண்ட நாயனார் சரிதம், காரைக்கால் அம்மையார் சரிதமும் பாடல்களாகச் செய்தார்.

சங்கீதம் கேட்பது, பாடுவது, இயற்றுவது ஒரு சிறந்த கலை. கலைவாணி அருளல்லாமல், குருவருள் அல்லாமல் அது சுலபமாய்க் கிடைக்காது.

அவரது சிவபக்தியே, நந்தனாரின் சரிதத்தைப் பாடல்களாகப் பாடவும், ஹரிகதா காலட்சேபத்தில் உபயோகிக்கவும், நாடகத்தில் பயன்படுத்தவும் ஏதுவாகின. நளின தமிழானதால் கேட்பவர்கள் மனதில் சங்கீதரசனையுடன், சிவபக்தியைத் தூண்டுவ தாக அமைந்தது. உஞ்சவிருத்தி எடுத்தே ஜீவனம் செய்தார். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், அவர் பாடல்களை "கர்நாடக இசைக்கு ஒரு சிறந்த பொக்கிஷம்' என்றார்.

அவர் பாடல்கள், தமிழும் அறிந்த ஃபிரஞ்ச் கலெக்டர் சீசே அவர்களைக் கவர, அவர் 17-11-1861 முதல் புத்தகமாக வெளியிட்டாரெனின் அதன் மேன்மை, ஆழம், சொல்நயம், லயம், சங்கீதரசம், பக்திமயம் உணரலாம்.

தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர், தன் கதாகாலட்சேபத்தில் நந்தனார் சரிதப்பாடல்களைப் பாடிப் பரவினார். மூன்று திரைப்படங்கள் நந்தனார் மீது, இவரது பாடல்களைப் புகுத்தியுள்ளது என்றால் பாட்டுரசம், மக்கள் விருப்பம் உணரலாம். பாபநாசம் சிவன் பாடல் இயக்கிட, தண்டபாணி தேசிகர் நடித்துப் பாடியுள்ளார். பாலசரஸ்வதி பரதநாட்டியத்தில் புகுத்தி வெளிப்படுத்தி னார்.

சங்கீதமோ நாட்டியமோ, கலாரசிகர் களால்தான் மேன்மையுறுகிறது. ரசிகர்கள் ரசிக்காவிடில் கலை நசித்துபோகும்.

தியாகய்யாவின் பஞ்சரத்ன கிருதிகள்போல், நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகத்தில் பாடல்கள் அமைத்துள்ளார். தரு, சிந்து, தண்டகம், கும்மி மெட்டுகளிலும் பாடல்கள் உண்டு. அவரது பாடல்களின் முத்திரை அடி கோபாலகிருஷ்ணன் அல்லது பாலகிருஷ்ணன்.

ஒருமுறை கோபாலகிருஷ்ண பாரதியார், சங்கீத தியாகராஜரை சந்தித்தார். தான் கோபாலகிருஷ்ணன் என்று கூறவில்லை. "மாயவரத்தின் அருகி-ருந்து வந்தேன்' என்றதும், அங்கு கோபாலகிருஷ்ண பாரதி என்ற சிவபக்தர், பக்திரசம் பொழியும் பாடல்கள் புனைந்து பாடுகிறாரே, பார்த்துள்ளீரா- கேட்டதுண்டா?' என்று சிலாகித்துப் பேசினார். அச்சமயமும் தான்தான் கோபாலகிருஷ்ணன் என்று கூறவில்லை.

காவிரியில் நீராடும்போது, "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற பாடலை ஆபோகி ராகத்தில் புனைந்தார். மீண்டும் தியாகய்யா வீடு வர. "பாரதி ஆபோகி ராகத்தில் புனைந்துள்ளாரா?' என்று கேட்க, உடனே அந்த பாடலைப் பாடினார். தியாகய்யா மிகவும் ரசித்தார். "என்னுடைய வந்தனத்தை அவருக்குத் தெரிவிக்கவும்' என தியாகய்யர் கூற, "அடியேன்தான் கோபாலகிருஷ்ணன்' என பாதம் பணிய, தியாகய்யர் அவரை ஆலிங்கனம் செய்தார்.

தியாகய்யா ராமபக்தர்; கோபால கிருஷ்ணர் சிவபக்தர்.

காசியையும், ராமேஸ்வரத்தையும் நினைத்தால் சிவனும் ராமனும் பரஸ்பரம் பக்தர்கள்தானே.

சிவராத்திரியன்றே சிவபக்த கோபாலகிருஷ்ண பாரதியார் தன் பூதவுடல் நீத்து சிவ சாயுஜ்யம் அடைந்தார்.

அவர் 70 ராகங்களில் பாடியுள்ளார். சில அபூர்வமான கௌரிமனோஹரி, சக்கரவாகம், ஸாரங்கி, மாஞ்சி, நவரோஜ், ஸரஸ்வதி, மனோஹரி, தேசிய தோடி, ஜிங்களா, கர்னாடக பேஹாக், ஈசமனோஹரி, பாலஹம்ஸ ராகங்களிலும் பாடியுள்ளார்.

அந்த ஆபோகி ராகப் பாடலை சிந்திப்போம்.

பல்லவி: சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா- தில்லை.

அனுபல்லவி: கிருபாநிதி இவரைப் போலே கிடைக்குமோ இத்தரணிதனில்.

சத்குரு சுவாமிகள். "பகவன் நாம பஜனை சம்பிரதாயத்தில் ஹரிஹர பேதம் கூடாது. தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி என மொழி பேதமும் கூடாது' என இணைத்து, பத்ததி அமைத்தது உயர்ந்த லட்சியமே! பக்திக்கு மொழி, பேதம், மதபேதம், உருவ பேதம் இல்லையே! அவர்மீது ஒரு துதியுடன் நிறைவு செய்வோம்!

"பரமேஸ்வர பரம சங்கீத பக்த ஞான ச்ரேஷ்டம்

ஸ்ரீகோபாலக்ருஷ்ண பாரதி ஸத்குரும் நமாமி!'