1. ராமேஸ்வரத்தில் வீபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் தனியே பிராகாரத்தில் உள்ளது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால், முன்புறம் அந்த ஜோதி யின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.
2. ராமேஸ்வரம் கோவிலிலுள்ள அதிகார நந்தி வாகனம், விக்ரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்றி ருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது.
3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்திதேவர், சுவாமிக்குப் புறங் காட்டாமல், சுவாமிக்குப் பின்புறமாக, சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு.
4. கோவிலின் முதல் பிராகாரத்தில் 144 விக்ரகங்களும், இரண்டாம் பிராகாரத்தில் 17 விக்ரகங்களும் பூஜைக் காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவைதவிர கோவிலிலுள்ள 381 விக்ரகங் களுக்கும் நாள்தோறும் பூஜை நடத்தப் படுகிறது.
5. வெள்ளிக்கிழமை இரவு மலை வளர்க் காதலி அம்மன் கொலுமுடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிராகாரத்தில் பவனி வரும்பொழுது, மேல் கோபுர வாசலுக்கு அருகிலுள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்குப் பரிவட்டம் சூட்டும் முறை இன்றும் இருந்துவருகிறது.
6. தாய்லாந்து மன்னர்கள் முடிசூடும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கொன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடுமி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் ராமேஸ்வரத்திலிருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள்.
7. பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் கருதப் படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்னும் ராமேஸ்வரம். மற்ற மூன்று தலங்களும் வடநாட்டில் அமைந்திருப்பன. இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதார்நாத் என்னும் வைணவத் தலங்கள்.
8. ராமேஸ்வரம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்த சேதுபதி மன்னர்களை கௌரவிக்கும் வகையில், சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோவில் ஒன்று ராமேஸ்வரம் கோவிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
9. ராமேஸ்வரம் கோவிலின் வழிபாடுகள், விழாக்கள் ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெற சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
10. விழாக்காலங்களில் இரவு நேரங்களில் கோவிலை அடுத்த பரந்த வெளிகளில் இராமாயணக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில், எளிய இனிய ஒயிலாட்டக்காரர்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் முன்பு நடைபெற்றுவந்தன. இப்போது அந்த வழக்கமில்லை.
11. ராமேஸ்வரம் கோவிலின் மண்டபங்கள், சந்நிதிகள் முதலியவை பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 40 அடி நீளமுள்ள பெருங்கற்களி னால் செய்யப்பட்ட உத்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
12. செதுக்கி மெருகிடப் பட்ட ஒருவகைக் கருப்புக் கல்லால் கருவறை கட்டப் பட்டுள்ளது.
13. இக்கோவிலிலுள்ள நந்தி வேலைப்பாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்த நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உடையதாக விளங்குகிறது.
14. மூன்றாம் பிராகாரத்திலிருக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை உருவங்கள் தத்ரூப மாகக் காட்சியளிக்கின்றன. அவ்வுருவங்கள் உயிருள்ளவை போன்றே விளங்குகின்றன.
15. அனுப்புமண்டபம், சுக்கிரவார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை விசாலமாகவும் காற்றோட்டம் மிக்கவையாகவும் அமைக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்புடையது.
16. கோவிலிலுள்ள உலோகத்தினால் செய்யப்பட்ட குதிரைச் சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக- கலைத்திறன் மிக்க தாகக் காணப்படுகிறது.
17. ராமநாதர் கோவிலி-ருந்து 1903, 1905, 1915-ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தார் பல கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் பதிவுசெய்துள்ளனர்.
18. அம்பிகை சந்நிதியிலுள்ள தூண் ஒன்றின்மீது "இரணிய கர்ப்பயாஜி விஜய ரகுநாத சேதுபதி கட்டத்தேவர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
19. முதல் பிராகாரத்திலிருந்து வெளி வரும் வாயிலிலுள்ள கதவுக்கு மேல்புறமுள்ள ஒருகல்வெட்டில், "சைவ ஆகமங்களில் வல்லவரான ராமநாதர் என்னும் பெருந் துறவி, அழிந்துபோன பிராகாரத்தைக் கட்டினார்' என்று கூறப்பட்டுள்ளது.
20. பள்ளியறையிலுள்ள வெள்ளி ஊஞ்சலின் முன்பக்கம் விஜயரகுநாத சேதுபதியால் அளிக்கப்பட்டது என்றும், வெள்ளியின் நிறையும் மதிப்பும் கல்வெட் டில் குறிக்கப்பட்டுள்ளன.
21. முதல் பிராகாரத்தின் வட சுவரிலுள்ள கல்வெட்டில், சகம் 1545-ஆம் (கி.பி. 1623) ஆண்டில் நடமாளிகை மண்டபம், அர்த்த மண்டபத்தை உடையான் சேதுபதி கட்டத் தேவர் மகன் கூத்தன் சேதுபதி கட்டத்தேவர் கட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
22. அம்பிகை சந்நிதியிலுள்ள கொடி மரத்தில், கோபதிப்பர் சகம் 1390-ஆம் (கி.பி. 1468) ஆண்டில் அதை நிலைநிறுத்தியதாகக் கூறும் எழுத்துகள் காணப்படுகின்றன.
23. ராமநாதர் கருவறை நுழைவாயிலிலுள்ள கன்னடக் கல்வெட்டொன்று ராமநாதருக்கு கவசம் அளிக்கப்பட்டதைக் கூறுகிறது.
24. தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.
25. ராமேஸ்வரம் கோவிலின் கருவறை யில் ராமநாத சுவாமிக்கும் ஏனைய இறைமேனிகளுக்கும் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங் களில் சில நூற்றாண்டுகளாக ஈடுபட்டி ருப்பவர்கள் மராட்டிய பிராமணர்கள் ஆவர். இது தமிழகத் திருக்கோவில்களின் வழிபாட்டு நடைமுறைகளுக்கு வேறுபட்ட ஒன்றாகும்.
26. ராமேஸ்வரத்தில் பூஜைசெய்யும் மராட்டிய பிராமணர்கள் 512 பேர் என்பதும், அவர்கள் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து வருவதும் தெரியவருகிறது. இவர்களைப் பண்டாக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
27. ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் இராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமை யுடையது.
28. காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ் வரத்திற்குச் சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட் டால்தான் காசியாத்திரை முழுமைபெறும் என்பது இந்து சமயத்தவரின் கொள்கை- நம்பிக்கை.
29. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்புடையது.
30. பாடல் பெற்ற சிவத்தலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலத்தை திருஞானசம்பந்த சுவாமிகள் இரண்டு திருப்பதிகங்களாலும், திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தாலும் போற்றிப் பாடியுள்ளனர்.
31. இத்தலத்திற்கு தமிழிலும், வடமொழியிலும் நூல்கள் உண்டு. மிகப்பழைய நூல்களிலெல்லாம் இத்தலம் குறிக்கப்பெற்றுள்ளதால், இதன் பழமைச் சிறப்பு நன்கு விளங்குகிறது.
32. ராமேஸ்வரத்திற்கு "ஷகந்தமாதன பர்வதம்' என்ற புராணப்பெயரும் உண்டு.
33. ராமேசுஸ்ரம் கோவில் பிராகாரங் களின் மொத்த நீளம் 3,850 அடி. இக்காலத் தைப்போல போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் இத்துணைக் கற்களைக்கொண்டு ராமேஸ்வரம் தீவில் இத்திருக்கோவிலை முன்னோர்கள் எவ்வாறு எழுப்பினார்கள் என்பது வியப்பாக உள்ளது.
34. பெர்கூசன் என்னும் அறிஞர், "திராவிடக் கட்டடக் கலையமைப்பின் சிறப்பை ராமேஸ்வரம் கோவிலில் முழுமையாகக் காணமுடியும். அதேநேரத்தில் கட்டடக் கலையின் குறைபாடுகளுள்ள ஒரு கோவிலைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் அதற்கும் ராமேஸ்வரம் கோவிலைத் தான் காட்டமுடியும்' என கூறியுள்ளார்.
35. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்ற மன்னன் இக்கோவிலைப் புதுப்பித்ததாகத் தெரிய வருகிறது.
36. சுவாமி விவேகானந்தர் 1897-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் கோவிலுக்கு வருகை தந்து, "உண்மை வழிபாடு' என்னும் பொருள் பற்றி அரிய சொற்பொழிவாற்றினார்.
37. ஆனி மாதம் நடைபெறும் பிரதிஷ்டை விழாவும், ஆடி மாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழாவும், ராமேஸ்வரம் கோவிலில் நடக்கும் மிகவும் சிறப்பான திருவிழாக்களாகும்.
38. தென்பாண்டி நாட்டில் தேவாரப் பாடல்பெற்ற பதினான்கு திருத்தலங்களுள் ஒன்றாகிய ராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.
39. ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கிழக்குக் கோடியிலுள்ள ராமேஸ்வரம் என்னும் தீவின் வடபாகத்தில் ஆலயம் அமைந்துள்ளது.
40. இத்தலத்திற்கு "தேவநகரம்', "தேவை' என்னும் திருப்பெயர்களும் உண்டு.
41. கந்தமாதனம், தனுஷ்கோடி, தர்ப்பசயனம் ஆகிய மூன்றும் உள்ளதால், "முக்திதரும் சக்தியுடைய தலம்' என்ற சிறப்பை ராமேஸ்வரம் பெற்றுள்ளது.
42. இராமபிரான் ராமேஸ்வரத்தில் மட்டுமல்ல; வேதாரண்யம், பட்டீஸ் வரத்திலும் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
43. ராமேஸ்வர சேதுக்கடல் தீர்த்தம், இரண்டு லட்சம் மைல் சுற்றிச் சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
44. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடலின் கீழுள்ள மூலிகைகள் கடலின் மேல்மட்டத்துக்கு வந்து, சேதுக்கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
45. கயிலாய மலையிலுள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ்கோடியில் சங்கமமாவதாக நம் முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.
46. ராமேஸ்வரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் அந்த காலத்தில் 36 நாட்கள் தங்கியிருந்து தீர்த்தமாடிச் செல்வார்கள். அது மெல்ல மெல்ல குறைந்து தற்போது ராமேஸ்வரத்துக்கு ஒரேநாளில் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
47. ராமேஸ்வரம் தல யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் தேவிபட்டினம் சூரியனாகக் கருதப்படுகிறது. பாம்பன் பைரவராகவும், ராமேஸ்வரம் அம்பாளாக வும், தனுஷ்கோடி சேதுவாகவும், திருப்புல் லாணி மகாவிஷ்ணுவாகவும், உத்தரகோச மங்கை நடராஜராகவும் கருதப்படுகிறது.
48. ராமேஸ்வரம் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடும்போது நிதானமாக நீராடவேண்டும். சில வழி காட்டிகள் பக்தர்களை "எக்ஸ்பிரஸ்' வேகத்தில் நீராடவைத்து விடுகிறார்கள்.
49. ராமேஸ்வரம் கோவிலிலுள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சத்துக்கள், மின்காந்த அலைகள் உள்ளன. தீர்த்தம் நமது தலையில் நன்கு பட்டால்தான் அந்த சக்திகளை முழுமையாகப் பெறமுடியும்.
50. ராமேஸ்வரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளைக் கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது.
51. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1,008 அபிஷேகச் சங்குகள் உள்ளன.
52. ராமேஸ்வரம் கோவிலில் முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர்.
53. ராமேஸ்வரம் மூலவரைத் தொட்டுப் பூஜைசெய்யும் உரிமை காஞ்சிப் பெரியவர், சிருங்கேரி மகா சந்நிதானம், நேபாள நாட்டு மன்னர் ஆகிய மூன்று பேருக்கும் மட்டுமே உண்டு.
54. ராமபிரான் சூரிய குலத்தைச் சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேஸ்வரம் தலம் திகழ்கிறது.
55. ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜைசெய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சந்நிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
56. ராமேஸ்வரம் தலத்தில் மனமுருகி வழிபட்டால் புத்திரப்பேறு, நாகதோஷ நிவர்த்தி இரண்டையும் உறுதியாகப் பெறலாம்.
57. ராமேஸ்வரம் தலம் தோன்றி பத்து சதுர்யுகங்கள் ஆகின்றன என்கிறது ஒரு குறிப்பு. அதன்படி கணக்கிட்டால் ராமேஸ்வரம் கோவில் தோன்றி சுமார் நான்கு கோடி ஆண்டுகள் ஆகின்றன.
58. இராமனுக்கு உதவிய குகனின் வழித்தோன்றல்கள்தான் சேதுபதி மன்னர் கள் என்று கருதப்படுகிறது.
59. ராமேஸ்வரம் கோவில் கட்டுமானத் துக்கு இலங்கை திரிகோண மலையிலிருந்து பிரம்மாண்டமான கருங்கற்கள் வெட்டியெடுத்து வரப்பட்டன.
60. 1693-ல் ராமேஸ்வரம் கோவிலைத் தகர்க்க முயன்றனர். சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வெகுண்டெழுந்து ராமேஸ்வரம் கோவிலைக் காப்பாற்றினார்கள்.
61. ராமேஸ்வரம் கோவிலுக்கு அள்ளியள்ளிக் கொடுத்த சேதுபதி மன்னர் களுக்கு, "ஆண் வாரிசில்லாமல் போகும்' என்று தாயுமானவர் சாபமிட்டாராம். எனவேதான் அந்த அரச குடும்பம் பலமுறை வாரிசின்றிப் போனதாக சொல்கிறார்கள்.
62. 1803-ல் சேதுபதிகளின் வாரிசு பலவீனத் தால் ராமேஸ்வரம் ஆலய உரிமையை மன்னர் குடும்பம் இழந்தது. 1853-ல் ஆங்கிலேயர்கள், நிர்வாகத்துக்காக ஒரு குழுவை ஏற்படுத்தி னார்கள். பாஸ்கர சேதுபதி மன்னர் லண்டன் பிரிவியூ கவுன்சில்வரை சென்று போராடி 1893-ல் ஆலய உரிமையை மீட்டார்.
63. 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி ஆலய நிர்வாகத்தை ஏ.எல்.ஆர். அருணாச்சலம் செட்டியார் ஏற்றார்.
64. ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகளைச் செய்ய வடமாநில கோடீஸ்வரர்கள் பலர் முன்வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை செயல்வடிவம் பெறாமல் போய் விட்டன.
65. கோவில் ராஜகோபுரத்தில் பலமுறை பழுது ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது.
66. ராமேஸ்வரம் கோவிலுக்கு 1975-ஆம் ஆண்டுக்குப்பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பாபிஷேகம் சீராக நடத்தப்படவில்லை.
67. ராமேஸ்வரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடு வதால், கோவிலின் பெரும்பகுதி எப்போதும் ஈரமாக மாறிவிடுகிறது. சிலர் அதில் வழுக்கிவிழுகிறார்கள். இதைத் தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தால் நல்லது.
68. ராமேஸ்வரம் ராமநாதரை நேபாள மன்னர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, மைசூர், திருவிதாங்கூர் மன்னர்களும் வழிபட்டுப் பலன் பெற்றுள்ளனர்.
69. 1925-ல் ராமேஸ்வரம் கோவிலில் கடலரிப்பு ஏற்பட்டது. அம்பா சமுத்திரத்திலிருந்து 25 லட்சம் ரூபாய் செலவில் கருங்கற்கள் கொண்டுவந்து கடலரிப்பைத் தடுத்து ஆலயத்தை விரிவுபடுத்தினார்கள்.
70. ஆங்கிலேயர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவிலே மிகச்சிறந்த ஆலயமென்று ராமேஸ்வரம் கோவிலைக் கூறினார்கள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...