கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளநகர் என்னும் ஒரு குக்கிராமத்தில் அருளாட்சி செய்து வருகின்றனர் இறைவன் உடையபுரீஸ்வரர், இறைவி உடையாம் பிகை. இவர்களின் மகிமை, புகழ், பெருமை கடல்கடந்த நாடுகளிலும் பரவியுள்ளது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் சிறிய அளவில் கோவில்கொண்டிருக் கும் அம்மையும் அப்பனும் எப்படி வெளிப்பட்டார்கள்- அவர்களது பெருமை, கருணை எப்படிப்பட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இறைவன் உலகமக்களுக்குக் காட்சி கொடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டு மென்று முடிவுசெய்துவிட்டால் அவர் எந்த உருவத்தில் வேண்டுமானாலும், எந்தவிதத் தில் வேண்டுமானாலும் தங்களை வெளிப் படுத்திக்கொள்வார்.

அப்படி பூமிக்குள்ளிருந்து தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர் அம்மையும் அப்பனும்!

பல நூற்றாண்டுகளுக்குமுன்பு சிவபக்தர் ஒருவர் விவசாயம் செய்ய தனது நிலத்தை உழுதுகொண்டிருந்தார். ஓரிடத்தில் அவரது ஏர்க்கலப்பை நகராமல் நின்றுவிட்டது. எவ்வளவு அதட்டி ஓட்டி யும் மாடுகளால் நகர முடிய வில்லை. பூமியில் குத்திட்டு அமர்ந்துவிட்டது ஏர்க் கலப்பை. இது என்ன விந்தை யென்று அந்த விவசாயி மாடுகளை அவிழ்த்து விட்டுவிட்டு, கலப்பை சிக்கிநின்ற இடத்தைத் தோண்டிப் பார்த்தார். என்ன அதிசயம்! அங்கே செம்மண்ணாலான அழகான சிவலிங்கம் வெளிப்பட்டது. அதே இடத்தில் மேலும் தோண்டியபோது அம்பாள், நந்தி இருவரும் வெளிப்பட்டனர். மெய் சிலிர்த்துப்போன அந்த சிவபக்தரான விவசாயி, அதே இடத்தில் சிறிய அளவில் கோவில் அமைத்து வழிபாடு செய்துவந்தார்.

Advertisment

உடை (ஏர்க்கால்) தடுத்துக் கிடைக்கப் பெற்றதால் சிவனுக்கு உடையபுரீஸ்வரர், உடையாளீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு உடையாம் பிகை என்ற பெயரும் உருவா னது.

சுயம்புலிங்கமான இவருக்கு சிறிய அளவில் ஆலயம் எழுப்பும் பணி நடந்து கொண்டி ருந்தபோது, அதேபகுதியில் இன்னொரு நந்திசிலை கிடைத்துள்ளது. அப்படிக் கிடைத்த இரண்டு நந்திகளையும் கோவில் முன்பு பிரதிஷ்டைசெய்து வழிபட்டு வந்தனர்.

Advertisment

rr

அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நீண்டநாட்களாக குழந்தை பாக்கியமில்லை. அவர் பல்வேறு மருத்துவர்களைச் சென்று பார்த்துள்ளார். அவர்கள், "உங்களுக்கு கர்ப்பப்பை சுருங்கியுள்ளது. குழந்தை பிறப்பது சிரமம்' என்று கைவிரித்து விட்டனர். இதனால் மனமும் உடலும் சோர்ந்துபோன அந்தப் பெண்மணி இவ்வாலய இறைவனையும் அம்பாளை யும் வழிபட்டு வந்துள்ளார்.

இறைவனின் கருணை யால் கருவுற்ற அந்தப் பெண் பத்து மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இக் கோவிலுக்கு வந்து இறைவனையும் அம்பாளை யும் வழிபட்டுள்ளார். அப்போது உடல் சோர்வால் களைத்துப்போன அவர் நந்தியின் அருகில் அமர்ந்து, அப்படியே நந்தியின்மேல் சாய்ந்தபடி அயர்ந்து தூங்கிப் போனார். திடீரென அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, வலியால் துடித்த அந்தப் பெண் நந்தியைத் தன் இரு கைகளால் பற்றிக்கொண்டு கதறினாள். பிரசவ வேதனையில் நந்தியைப் பற்றியிருந்த அந்தப் பெண்ணின் கை அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அப்போது அந்த நந்தி அம்பாள் இருக்கும் திசையை நோக்கித் திரும்பி நின்றது. அதேநேரம் அந்தப் பெண் ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது!

தகவலறிந்த அந்தப் பெண்ணின் உறவினர் கள், ஊர்மக்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அம்பாளின் கருணையால் அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவமானதை அறிந்தனர்.

அப்போதுமுதல் இந்த அன்னையின் பெயர் சுகப்பிரசவ நாயகி என்றும், அந்த நந்திக்கு சுகப்பிரசவ நந்தி என்றும் பெயர் உருவாகி அதுவே நிலைத்து நிற்கிறது.

நவீன மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில், குழந்தைகளைப் பெற்ற தாய்மார் கள் பலர் எண்பது வயது, தொண்ணூறு வயது வரை திடகாத்திரமாக இருந்தனர். அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களின் உணவுப் பழக் கத்தாலும் உடலுழைப்பைச் செலுத்தாத காரணத்தாலும் மருத்துவமனைகளைத் தேடிச் செல்கின்றனர். அங்கே அவர்களுக்கு சிசேரியன் என்ற அறுவை சிகிச்சைமூலம் வயிற்றைக் கிழித்து குழந்தை எடுக்கப் படுகிறது. அப்படிப்பட்ட இந்தத் தலை முறைப் பெண்களுக்கு சுகப் பிரசவம் என்பதே அரிதாகிவருகிறது. விஞ் ஞான வளர்ச்சி மருத்துவத் தில் அபாரமாக இருந்தாலும், அன்னையின் சக்தி அதைவிட அபாரமானது என்பதை வெளிப்படுத்துகிறாள் இவ்வாலய அன்னையான சுகப்பிரசவ நாயகி.

ff

இப்போதும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் கோவில் பூசாரி, அறங்காவலர் போன்றவர்களுக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் சொல்கிறார் கள். உடனே ஆலயத்தின்முன் இருக்கும் பிரசவ நந்தியின் காதில் கர்ப்பிணிப் பெண்ணின் பெயரைக் கூறிவிட்டு, அம்மனை நோக்கி நந்தி யைத் திருப்பி வைப்பார்கள். அதிலிருந்து சுமார் அரை மணி நேரத்திற் குள் சம்பந்தப் பட்ட பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கி றது; நடந்துவருகிறது! பிரசவ நேரத்தில் கோவில் சம்பந்தப்பட்ட பூசாரி, அறங்காவ லர் யாரும் இல்லையென்றாலும்கூட, மற்ற யார் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரை நந்தியின் காதில் கூறிவிட்டு, நந்தியை அம்மனைநோக்கி திருப்பிவைத்தால் நிச்சயம் சுகப்பிரசவம் நடக்கிறது. சுகப்பிரசவமான தகவல் கிடைத்தபிறகு மீண்டும் நந்தியைப் பழைய நிலைக்குத் திருப்பி வைத்துவிட வேண்டும்.

மேலும், கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் "அம்பாள் சுகப்பிரசவ நாயகி பார்த்துக்கொள்வார்' என்று உண்பதும் உறங்குவதுமாக இருக்கக்கூடாது. மனதளவிலும் உடலளவிலும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்காக வீட்டுவேலை செய்வது, சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் நல்லது. பெண்களுக்கு மட்டுமல்ல; ஆடு, மாடுகள் உட்பட எந்த உயிரினமாக இருந்தாலும் பிரசவிக் கும் நேரத்தில் நந்தியை அம்மன் பக்கம் திருப்பினால் அவற்றுக்கும் சுகப்பிரசவமாகி விடுகிறது.

"இந்த ஆலய அம்மன் சுகப்பிரசவ நாயகியின் புகழ் கடல்கடந்தும் பரவியுள் ளது. பலர் பல ஊர்களிலிருந்தும் பல நாடு களிலிருந்தும் தங்கள் பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் எங்களுக்கு போன் மூலம் தகவல் கூறுவார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்று அம்பாளை வேண்டிக் கொண்டு, அந்த நந்தியின் காதில் பெண்ணின் பெயரைக் கூறிவிட்டு நந்தியைத் திருப்பி வைத்த சிறிய நேரத்தில் சுகப்பிரசவ மாகிவிடும். சுகப்பிரசவமானவுடன் அந்த சந்தோசமான தகவலை சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் எங்களுக்குத் தெரிவிப்பார்கள். அதன்பிறகு நந்தியை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்பிவைத்து தீபாராதனை செய்வோம்'' என்கிறார்கள் ஆலய பூசாரி நடராஜன், கோவில் அறங் காவலர் இளநகர் காஞ்சிநாதன் எனும் ஸ்ரீனிவாசவரதன் ஆகியோர்.

அப்படிப்பட்ட சுகப்பிரசவநாயகி திருக்கோவிலில் இரண்டு நந்திகள் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். ஒவ்வொரு பிரதோஷ வழிபாட்டிலும் பெண்கள் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். கார்த்திகை தீபத் திருநாள், தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

இக்கோவிலில் மூலவராக இருக்கும் செம்மண்ணாலான சிவலிங்கத்தின்மீது ஏர்க்கலப்பைக் கொழு முனை பட்ட வடு உள்ளது. சுயம்புலிங்கத்தின் நடுவில் மற்றொரு லிங்கம் இருப்பதுபோன்ற அமைப்பு காணப்படுகிறது. இது எங்கும் காணமுடியாத சிறப்பம்சம் என்கிறார்கள் இவ்வூர் மக்கள். இந்த சிவலிங்கத்திற்கு அனைத்துவிதமானஅபிஷேகங்களும் நடைபெறுகிறது. எல்லா ஆலயங்களிலும் செய்வதுபோன்று பால், தயிர், எண்ணெய், இளநீர், சீகைக்காய் பொடி தூவி, தண்ணீர்கொண்டு கழுவி, அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. இதனால் செம்மண்ணால் சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கம் கரைவதில்லை!

இவ்வாலய இறைவனையும் அம்பாளை யும் பெண்களின் சுகப்பிரசவத்திற்காக மட்டும் வழிபடுவதில்லை; கடன்தொல்லை தீர- வியாபாரத்தில் செழிப்பு பெற- திருமணத் தடை நீங்க- குழந்தைப் பேறு உட்பட அனைத் திலும் சுபிட்சம் கிடைக்க ஏராளமான ஆண்- பெண் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

ff

மிகவும் பழமையான கோவில் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல சித்தர்களும் இவ்வாலய இறைவனையும் அம்பாளையும் வந்து வழிபட்டுள்ளனர்.

மருத்துவ வளர்ச்சி அபரிதமாக வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாகிப்போன நிலையில், அதை எளிதில் நடத்திக்காட்டும் கருணைக்கு இந்தக் கோவில் ஒரு எடுத்துக்காட்டு என்கிறார் கள் சுகப் பிரசவமான பெண்கள்.

அம்பாள் சக்திக்கு அளவில்லை.

அன்னை ஆதிபராசக்தி ஆதியும் அந்தமுமானவள். அப்படிப்பட்ட அன்னை தட்சனின் மகளாகப் பிறந்து, யாகத்தின்போது அவமரியாதை செய்யப்பட்ட காரணத்தி னால் தீயில் இறங்கி உயிரைவிட்டாள். அவளது உடலை ஈசன் தோளில் சுமந்து அண்டம் அதிரும்படி கோபத்தில் தாண்டவமாட, உலகம் அழியும் நிலை உருவானது.

அப்போது திருமால் ஏவிய சக்கரத்தினால் அன்னையின் உடல் ஐம்பத்தோரு பாகங்களாக பூமியில் விழுந்தன. அவை தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சக்தி பீடங்களாக பிரசித்திபெற்று விளங்கு கின்றன. அப்படிப்பட்ட அன்னை தனது பக்தர்களைக் காப்பாற்ற எடுத்த வடிவங்கள் எண்ணிலடங்காதவை. அத்தகைய ஒரு வடிவத்தில்தான் அன்னையானவள் இளநகர் கிராமத்தில் சுகப்பிரசவ நாயகியாகத் தன்னை நம்பி வணங்கும் பக்தைகள் பிரசவிக்கும் நேரத்தில், தாயாகச் சென்று சுகப்பிரசவம் நடத்திக் காத்தருள்கிறாள்.

அன்னை ஆதிபராசக்தி அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்துள்ளாள். அதேநேரத்தில் தனது பக்தர்களைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றவும் மறப்பதில்லை. அதிலும் தனது சக்தி அம்சமாக விளங்கும் பெண்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாளா? ஒரு பெண் ணுக்கு பிரசவமென்பது மறுபிறவி என்பார் கள். அத்தகைய பெண்களுக்கு சுகப்பிரசவம் அளித்துக் காத்தருளும் அன்னையையும் இறைவனையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அவர்கள் அமைவிடம் நோக்கிச் செல்ல வேண்டும்தானே...

காஞ்சி மாநகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள உத்திரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ளது இளநகர் கிராமம். இங்குதான் ஆலயம் உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலைவழியே, வந்தவாசி செல்லும் மார்க்கத்தில் பெருநகர் உள்ளது. அதனருகிலேயே அமைந்துள்ளது இளநகர் கிராமம். ஆலயத் தொடர்புக்கு: அறங்காவலர் ஸ்ரீனிவாசவரதன், அலை பேசி: 98409 55363.