மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை பிறந்தவர்களுக்கான பலன்கள்

மேற்கண்ட மாதத்தின் நாட்களில் பிறந்தவர்களின் கூட்டு எண் 9. ராசி மேஷம். உங்கள் எண்ணின் நாயகனும், ராசிநாதனும் செவ்வாய் ஆவார். இந்த மாதம் உங்களின் மனபலம் மிக அதிகமாக இருக்கும். ஒருத்தனுக்கு பணம் கையில் நிறைய புழங்கும் நேரம், தைரியம் தானாக பொங்கும். இந்த மாதம், தனவரவு நேர்வழியிலும், எதிர்மறை வழியிலும் வந்துகொட்டும். வரும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், பல விதங்களிலும் செலவளிப்பீர்கள். உங்களில் ஒருசிலர் மட்டும் நன்கு முதலீடு செய்வீர்கள். அது பங்கு பத்திரம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும். உங்களின் கடன் இப்போது அடையும் கால கட்டமாகும். வீடு மாற்றம், வாகன மாற்றம் என்பது ஒரு தடங்கலுக்குப் பின் நிறைவேறும். உங்கள் இளைய சகோதரனின் வெளிநாட்டு பயணம் ஒரு இடையூறுக்கு உட்பட்டு, பின் தொடரும். பணியாட்கள் சிரமம் கொடுத்து சரியாகிவிடுவர். உங்கள் வாரிசுகள்மூலம் வரும் துன்பம் துடைக்க, பெரிய செலவு ஒன்று செய்வீர்கள். பூர்வீக சொத்தை பற்றி ஒரு முடிவும், இந்த மாதம் எடுக்கவேண்டாம். குலதெய்வக் கோவிலுக்கு செல்லும்போது, பயணத்தில் தடைகள் வரும். உங்கள் வேலையில் சிக்கலும், மாறுதலும் வந்து பின் சரியாகும். திருமண பேச்சுகளில் ஆரம்ப ஜோர் இருக்குமேயொழிய அப்புறம் இழுத்துக்கொண்டே போகும். ஒரு அவமானம், விபத்து வந்து நீங்கும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் சின்ன இடையூறுகளுடன் நல்ல லாபம் கிடைக்கும். இந்த அரசியல்வாதிகள் மறைமுக செலவும் மறைமுக வருமானமும் பெறுவர். உங்களில் சிலர் குடும்பத்தோடு வெளியூர் வெளிநாடு மாற்றம் பெறுவீர்கள். இது அனேகமாக வேலை சார்ந்து அமையும். குலதெய்வக் கோவிலுக்கு செல்லும் முன்பே, காணிக்கையை, மஞ்சள் துணியில் முடிச்சிட்டு, பூஜை செய்துவிட்டு கிளம்பவும். கோவிலிலுள்ள பூசாரிக்கு, நல்ல பண உதவிசெய்யவும். திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.

ஏப்ரல் 20 முதல் மே 20 வரை

கூட்டு எண் 6 உடையவர்கள். உங்களின் ராசி ரிஷபம். எண்ணின் நாயகன் சுக்கிரன். இந்த மாதம் சற்றும் நினைத்தறியா யோகங்களைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டில், அல்லது உங்களுக்கு திருமணம் நடப்பதால், செலவு ரொம்ப அதிகமாகும். உங்கள் தாயாரின் மிகப்பெரிய ஆசையை நிறைவேற்றுவீர்கள். அரசு சம்பந்த வீடு வாங்குவதற்கு நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் மருமகன் ரொம்ப எடக்கு மடக்கு செய்து பின் சமாதானமாகிவிடுவார். நீங்கள் முன்பு கொடுத்த பெரிய கடன் தொகை, இப்போது திரும்பக் கிடைக்கும். வேலையில், அன்பளிப்பு கொடுத்து, பதவி உயர்வு வாங்கிவிடுவீர்கள். நீங்கள் சந்திக்கும் ஆட்களும், உங்கள் பங்குதாராரும், மனைவியும் வரவையும், செலவையும் ஒரே கோட்டில் கொண்டு வந்துவிடுவர். உங்களுக்கு வரும் ஒரு அவமானம் மற்றும் கஷ்டம் நீங்கிவிடும். உங்களின் திட்டங்களுக்கு உங்கள் தந்தை எரிச்சல்படுவார். தொழிலில் மறைமுக பரிவர்த்தனை அதிகம் அமையும். இந்த எண் அரசியல்வாதிகள், தங்கள் இன்னொரு அரசியல்வாதி நண்பருடன் பதவி பரிமாற்றம் செய்துகொள்வர். அதுவும் பெண் அரசியல்வாதி, இதன்மூலம் மிகப்பெரிய பதவி பெறுவார். நீங்கள் கொண்டிருந்த ஆசைகள், லட்சியம் அனைத்தும் குறுக்கு வழியில் நிறைவேறும். நீங்கள் ரொம்ப நாளாக கடலுக்கு அருகில் வீடு அல்லது ரிசார்ட் சம்பந்த ஆசை பலிக்கும். குலதெய்வ சந்நிதியில், நல்ல இனிப்புடன் சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடவும். கோவில் அர்ச்சகருக்கு, தாம்பூலத்துடன் வேஷ்டி, புடவை காணிக்கை கொடுக்கவும்.

a

மே 21 முதல் ஜூன் 20 வரை பிறந்தவர்கள்

இவர்களின் கூட்டு எண் 5. ராசி மிதுனம். அதிபதி புதன். இந்த மாதம் உங்கள் தொழில் சற்று பின்னடைவதுபோல் தோன்றினாலும், பின் அதிக உழைப்பும், நல்ல லாபமும் வரும். அரசுவகையில் வரி கட்டுவது பற்றிய தரவுகள் கிடைக்கும். உங்களில் சிலர், அரசின் சட்ட வழிப்படி, தொழில் கட்டடத்தை மாற்றவேண்டி வரும். அது மால்களாகவும் இருக்கலாம். கை வண்டியாகவும் இருக்கலாம். காதல் திருமணம், ஒருவித கொடுக்கல்- வாங்கல் முறையில் நடக்கும். உங்களின் சில பெண் வாரிசுகள், தொழில் முனைவர் ஆகிவிடுவர். அல்லது கல்வி விஷயமாக வேறிடம் நகர்வார். திருமணம் அல்லது வேலை விஷயமாக கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலரின் திருமணம் வெளிநாட்டில் நடக்கும். சில தம்பதிகள் குழந்தைகள் கல்வி விஷயமாக வேறு வேறு இடத்தில் வசிக்க நேரிடும். உங்கள் தந்தை கொடுக்கும் இன்னல், உங்களுக்கு நன்மை செய்யும். தொழில் சம்பந்தமாக அரசியல்வாதிகளை சந்திக்க வேண்டியிருக்கும். சில அரசியல்வாதிகள் சேவை செய்வதற்காக தான் வசிக்கும் இடத்திற்கும், பிறந்த இடத்திற்குமாக அதிகமாக அலைவர். உங்களில் சிலர் புது தொழில் தொடங்க முதலீடு செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் உதவி இருக்கும். உங்கள் தாயார், அவரின் கௌரவம் குறைந்த தாக வருத்தப்படுவார். குலதெய்வக் கோவிலுக்கு, வணங்க செல்லும்போது, நிறைய பச்சை காய்கறிகள், இலை, தேங்காய் இவை வாங்கிக்கொண்டு போய் கொடுக்கவும். அங்குள்ள அர்ச்சகருக்கு, பேனா, செய்தித்தாள் சந்தா, கைபேசி கட்டணம் இவை கொடுத்து உதவுங்கள்.

Advertisment

ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை

இவர்களின் கூட்டு எண் 2 மற்றும் 7 ஆகும். இவர்களின் ராசி கடகம். அதிபதி சந்திரன். இந்த மாதம் அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய பணம் வரும். அதுபோல் நீங்கள் அரசாங்கத்துக்கு கட்டவேண்டிய கிஸ்தி எல்லாம் கட்ட வேண்டியிருக்கும். உங்கள் தாயார் மற்றும் மூத்த சகோதரிமூலம் பெரிய அதிர்ஷ்ட நிகழ்வு கிடைக்கும். உங்கள் வாரிசு வெளிநாடு செல்வார். வாரிசு சம்பந்தமாக கடன் வாங்க வேண்டியிக்கும். கடன் பெருக்கம் உண்டு. உங்களின் மூத்த சகோதரியால், தம்பதிகளுக்குள் சண்டை வரும். உங்கள் இளைய சகோதரனின் திருமணம் சில இம்சைகளுடன் நடக்கும். இந்த எண் அரசியல்வாதிகள், மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவர். அதிலும் பெண் அரசியல்வாதிகள், தாங்கள் பிறந்த இடம் சம்பந்தமான மேன்மை கிடைக்கும். பிற இன மறுமணம் நடக்கும். தொழில் சார்ந்த வெளிநாட்டு பயணம் உண்டு. உங்கள் மாமியார் இடம் நகர்வார் உங்கள் மாமனார் சிறு சங்கடத்துக்கு பிறகு சரியாகிவிடுவார். உங்கள் பெற்றோர் மிக மேன்மை கிடைக்கப் பெறுவார்கள். ஒரு செல்வந்தர் மற்றும் அரசியல்வாதி வீட்டிலிருந்து மருமகள் வருவாள். உங்களுக்கு வரும் மருமகள் அரசியல் ஈடுபாடுடன் இருப்பார். அரசு சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்கள், மீண்டும் வந்துசேர்வர். பங்கு வர்த்தக முதலீடு உண்டு. குலதெய்வக் கோவிலுக்கு, உங்கள் கௌரவ மேம்பாட்டிற்கு நிறைய செலவழிப்பீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு பித்தளை, செம்பு சார்ந்த பொருட்கள் காணிக்கை செலுத்தவும். அங்குள்ள அர்ச்சகருக்கு சமையல் சார்ந்த பொருட்களை கேட்டறிந்து உதவிசெய்யவும்.

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை

Advertisment

இவர்களின் கூட்டு எண் 1, 4 ஆகும். இவர்களின் ராசி சிம்மம். அதிபதி சூரியன் ஆவார். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்கள் நொந்து நூலாகிவிடுவர். உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே உங்களுக்கு புரியாமல் போய்விடும். பண வரவு சரளமாக இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக வரும். உங்களின் குயுக்தியான யோசனையும், முயற்சியும், தொழிலில் குழப்பத்தை ஏற்படுத்தும். உங்கள் இளைய சகோதரியால், ஒரு கௌரவக் குறைவு ஏற்படும். உங்கள் பெற்றோரால் நிறைய உதவியும் கொஞ்சம் இன்னலும் சேர்ந்து கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பங்குகள் இறங்குவதும், எதிர்பாராத பங்குகள் ஏற்றமும் இருக்கும். உங்களின் காதல் திருமணம் ஈடேற, மிக முயற்சி எடுப்பீர்கள். ஆனாலும் ஏதோ காரணத்தால் தடை உண்டாகும். அரசியல்வாதிகள் பணியாளர்களின் லஞ்ச பணம் விஷயமாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்களில் பெரும்பாலோர் வாழ்வின் இன்னலுக்கு ஒரு இளம்பெண் காரணமாக அமைவார். ஒரு படி ஏறினால், படி படிகள் சறுக்கும் அளவிற்கு வாழ்வு நிலை அமையும். குலதெய்வக் கோவில் வழிபாட்டின்போதும் ஒரு இம்சை வந்துவிடும். உங்கள் மாமியாரும், உங்கள் வாரிசும் மோதல் கொள்வர். இதில் உங்கள் மாமனாரும் சேர்ந்துகொள்வார். இந்த மாதம் ரொம்ப சூதனமாக நடந்து கொள்ளவேண்டும். குலதெய்வக் கோவிலுக்கு போகும்போது நிறைய வெல்லம், நெய்யுடன் சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வணங்குங்கள். அங்குள்ள அர்ச்சகரிடம் கேட்டு, விளக்கு சம்பந்தமான காணிக்கை செலுத்தவும்.

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை

இவர்களின் பிறப்பு கூட்டு எண் 5. ராசி கன்னி. அதிபதி புதன். இந்த மாதம் நீங்கள் யாரை சந்தித்தாலும், அவர்கள் கொஞ்சம் அழவைத்து, வேடிக்கை பார்த்துவிட்டு, பின் நீங்கள் கேட்கும் உதவியை செய்துகொடுப்பர். பண விஷயத்தில் நிறைய வரவும், நல்ல யோகமும் உண்டு. திருமணம், பெரிய இடத்தில் அமைந்து குடும்பம் குதூகலம் பெறும். உங்கள் பணியாளர்கள், தொழில் செய்யும் இடத்தில், ஏதாவது வேண்டாத்தனம் செய்துவிடுவர். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. உங்கள் பெற்றோரும், உங்கள் மனைவியும், பணம், நகை, சொத்து என இதில் எதையாவது பண்ட மாற்றாக கொள்வர். வாரிசுகள் வேலைக்குச் செல்வர். சிலரின் திருமணம் பெண் எடுத்து, பெண் கொடுக்கும் அளவில் அமையும். தொழில் செய்யும் இடத்தில் நெருப்பு ஆபத்து உள்ளது. பங்குதாரர் அல்லது கூட்டாளிகள் பிரிந்துவிடுவர். உங்கள் மாமனார் அடிபடும் வாய்ப்புண்டு. குலதெய்வக் கோவிலுக்கு செல்லும்போது பூஜைக்கு நிறை மலர் மாலைகள் காணிக்கை ஆக்குங்கள். அர்ச்சகரின் தேவை கேட்டு பக்தி புத்தகம், நோட்கள் இவை வாங்கிக் கொடுங்கள்.

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை

உங்களின் பிறப்பு கூட்டு எண் 6. ராசி துலாம். அதிபதி சுக்கிரன்.இந்த மாதம் எதிர்பாராத நன்மை வந்து கதவை தட்டும். உங்கள் வாழ்க்கை துணைக்கு கிடைக்கும் எதிர் பாராத பணவரவு, உங்களின் கடனை அடைத்து, நிம்மதி ஆக்கிவிடும். சிலரின் திருமணம்மூலம், அரசு பணி கிடைக்கும். உங்கள் இளைய சகோதரனால் உண்டாகிய இன்னல் நீங்கும். தொல்லை கொடுத்த பணியாளர் வேறிடம் செல்வர். கைபேசியின் பழுது சரியாகும். ஒப்பந்த சிக்கல் நீங்கும். உங்கள் தாயாரின் உடல்நிலை சீராகிவிடும். உங்கள் வாரிசுகளின் வேலை மாற்றம் நன்மை தரும். உங்களின் கடன், நோய், எதிரிகள் என இவற்றின் தொந்தரவு நீங்கும். அரசியல்வாதிகள் நிறைய அலைச்சல் மேற்கொள்ள வேண்டிவரும். அவர்களின் சில செலவுகளை மறைமுகமாக செய்யவேண்டி இருக்கும். உங்கள் மாமனார் கொண்டு வரும் ஒரு இம்சை, இன்பமாக முடியும். குலதெய்வக் கோவிலுக்கு சிறப்பான வஸ்திரமும், இனிப்பு வைத்து வழிபடுங்கள். அர்ச்சகரின் தேவைக் கேட்டறிந்து, எலக்ட்ரிக் இசை கருவி அல்லது பழங்கள் வாங்கிக் கொடுங்கள்.

அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை

இதில் பிறந்தவர்களின் கூட்டு எண் 9. ராசி விருச்சிகம். அதிபதி செவ்வாய். இந்த மாதம் காதல் கொண்டோர், திருமணம்செய்து, பின் ஊரைவிட்டு வேறிடம் சென்று விடுவர். இந்த காதல் வேறு வேறு மதம் சார்ந்ததாக இருக்கும். இந்த காதல் கல்யாணம், உங்களின் கடனை அடைத்துவிடும். இதில் சிலர் வேலையை விட்டு விலக நேரிடும். உங்களின் சிலரின் வீடு விற்பனை ஆகும். சொந்த ஊரில் நடக்கும் திருமணங்களுக்கு, அலைச்சலும், செலவும் அதிகமாக இருக்கும். உங்களின் வெகுநாள் நோய்க்கு, உங்களின் பூர்வீக இடத்தில் மருந்து கிடைக்கும். மது அருந்துவது அதிகமாக இருக்கும். விருப்பமான மறுமணம் நடக்கும். அரசியல்வாதிகள், தங்களின் மேன்மைக்கு சில நகிடுத்தனங்களை நிறைய செய்வர். அதில் சில ஒழுக்கங்கெட்ட செயலாக இருக்கும். உங்களின் மருமகன் குடித்துவிட்டு மட்டையாகிவிடுவார். உங்கள் வாரிசுகளின் செயல்களில் கவனம் இருக்கட்டும். போதை சம்பந்தமாக காவல்துறையில் சிக்கிக்கொள்ள நேரிடும். உங்களுக்கு பெரிய விபத்து தடுக்கப்பட்டு, சிறு சிராய்ப்போடு போகும் குலதெய்வக் கோவிலுக்கு மின்சாரம் சம்பந்தமாக காணிக்கை செலுத்தவும். அர்ச்சகரின் தேவை கேட்டு கேஸ் சிலிண்டர் வாங்கிக் கொடுங்கள்.

நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை

இதில் பிறந்தவர்களின் பிறப்பு கூட்டு எண் 3 ஆகும். ராசி தனுசு. அதிபதி குரு ஆவார். இந்த மாதம் வீடு சம்பந்த மாக கேட்ட கடன் கிடைக்கும். சிலர் வீட்டைவிற்று கடனை அடைப்பீர்கள். சிலர் வாடகை வீடு மாற்றுவீர்கள். உங்கள் வேலையை வீட்டுக்கருகில் மாற்றிக்கொள்வீர்கள். உங்கள் தாயார், உங்களின் மூத்த சகோதரனை பார்க்க கிளம்புவர். அது வெளிநாடாகவும் இருக்கக்கூடும். சில காதல் பிரிவினை ஆகும். உங்கள் வாழ்க்கைத்துணை வெளிநாட்டில் வேலை கிடைத்து கிளம்பிவிடுவார். அரசு சம்பந்தமாக மறைமுக சிக்கல் வரும். அதிலும் குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையினர், அதிக லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும். தொழிலும் இவ்விதம் அமையும். அரசியல் வாதிகள், தங்கள் பிறந்த ஊரில், கடுமையான சேவை கள் செய்து ஜெகத் ஜோதியாக பிரபலமாகி மின்னுவர். அத்தனையிலும் கள்ளத்தனம் இருக்கும். சில தம்பதிகள், குழந்தைகள் கல்வி விஷயமாக வேறு வேறு இடத்தில் வசிக்க நேரிடும். குலதெய்வத்துக்கு வஸ்திரம் சார்த்தி வழிபடவும். அர்ச்சகருக்கு வஸ்திரம் வாங்கிக் கொடுக்கவும்.

டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை

இதில் பிறந்தவர்களின் பிறப்பு கூட்டு எண் 8 ஆகும். ராசி மகரம். அதிபதி சனி. இந்த மாதம் உங்களுக்கு அலைச்சலும் விரயமும் அதிகமாக இருக்கும். அது சிறு தூர அலைச்சல், நீண்டதூரப் பயணம் என அமையும். இந்த மாதம் சினிமா, டிராமா, டி.வி. இசை என இவை சார்ந்த ஒப்பந்தம் எடுப்பீர்கள். மேலும் மன உறுதியுடன் விளையாட்டில் பங்கேற்பது, தைரியமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது, உங்கள் குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் மனசார்புடன் முடிவுகள் எடுப்பது, தொழிலில் சில முக்கிய முடிவுகளை, வெகு தைரியமாக எடுப்பது என சில அரிய பெரிய செயல்களை அசால்ட்டாக செய்துமுடிப்பீர்கள். வீடு விற்பது, வாடகைக்கு போவது, -சுக்கு எடுப்பது என சற்றும் அசராமல் முன்னோக்கி செல்வீர்கள். உங்கள் இளைய சகோதரம், அரசுவகையில் ஏதாவது வம்பில் மாட்டிக் கொள்வார். உங்கள் பணியாளர்கள் கைபேசி சம்பந்தமாக வில்லங்கத்தில் ஈடுபடுவர். உங்கள் வேலை விஷயமாக வரும், அதுவும் வெளிநாட்டில் இருந்து வரும் குறுந்தகவல், நிறைய சிரமம் கொடுத்து மீட்கும். உங்கள் தொழிலை, எதிர்மறை சிந்தனையால் வளமாக்குவீர்கள். இந்த அரசியல் வாதிகள் வழக்கு காரணமாக, வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். உங்கள் தொழில் செய்யும் இடத்தை மாற்றவேண்டி வரும். காதல் விஷயங்கள் ஒரு மார்க்கமாக நகரும். இந்த மாதம் உங்களின் மன உறுதி வெளியாகி, நல்ல பலன் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில், வஸ்திரமும், விளக்கெரிக்க நல்லெண்ணெயும் வாங்கிக் கொடுங்கள். அர்ச்சகருக்கு பழைய பொருளை மாற்றி, அவரிடமிருந்து கேட்டறிந்து, புது பொருளாக வாங்கிக் கொடுங்கள்.

ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை

பிறந்தவர்களின் கூட்டு எண் 8. ராசி கும்பம். அதிபதி சனி ஆவார்.இந்த மாதம் பண வரவு அதிகமாக வரும். அது நேர்வழியில்தான் வரும் என்று கூற இயலாது. உங்கள் தாயார் அல்லது உங்கள் வீடு மூலம் நல்ல பண சேர்க்கை உண்டு. பூர்வீக இடத்தில் சற்று பின்னடைவு, சண்டை ஏற்பட்டு பின் சரியாகும். உங்களுக்கு வாய் சும்மா இருக்காது. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்றை பேசிவிடுவீர்கள். இதில் உங்களுக்கு கிடைக்கும். காசு பணம் சற்று திமிரான பேச்சைத் தரும். காதலில் தீவிர போக்கைக் கடைப்பிடிப்பீர்கள். உங்கள் பெற்றோர் அல்லது வீடு, மனை, வயல், அடுக்குமாடி என இவ்வினங்கள் நிறைய பணம் கொண்டுவந்து கொட்டும். இதனால் உங்கள் வாரிசுகள். காசை மது, போதை என கண்டபடி செலவழிப்பார்கள். உங்கள் பங்குதாரர், கூட்டாளி இவர்கள் இஷ்டம்போல் பணத்தை கையாள்வார்கள். இந்த மாதம் உங்கள் தொழிலில் வெகு மேன்மையும், உயரிய கௌரவமும் கிடைக்கும். உங்கள் மாமனார் உடல்நலனில் கவனம் தேவை. அரசியல்வாதிகள். தாங்கள் பிறந்த ஊரில், பேசி பேசியே பெரும் பெருமை பெறுவார். கூடவே அங்குள்ள பள்ளிகளுக்கும். விவசாய பெருமக்களுக்கும் நிறைய காசு செலவழித்து நல்லபெயர் பெற்றுவிடுவர். இந்த எண்காரர்கள், வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும், தொழில் செய்யும் இடத்துக்கும், பிறந்த ஊருக்குமிடையே அலைந்துகொண்டே இருக்க நேரிடும். குலதெய்வக் கோவிலுக்கு சமையலுக்கு தேவை யான பொருட்களை கேட்டு செய்யுங்கள். அர்ச்சகருக்கு, பயண வசதியான பொருட்டு தேவையான உதவிகளைச் செய்யவும்.

பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை

மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்களின் கூட்டு எண் 3. ராசி மீனம். அதிபதி குரு. இந்த மாதம் உங்களுக்கு விரமும் விவேகமும் பொங்கி பிரவகிக்கும். இந்த வீரம் சிலசமயம் அடி கொடுக்கும். சிலசமயம் அடிவாங்கும். இந்த மாதம் உங்களுக்கு ஏகப்பட்ட வௌங்காத யோசனைகள் வந்துகொண்டே இருக்கும். பக்கத்தில் க்ராஸ் ஆகும். பெண்ணை வெடுக்கென்று கிள்ளிவிடலாமா, பாரின் மதுவை குடித்து மட்டையாகலாமா, அரசு சட்டத்தை மீறி, கொஞ்சமாக போதை பொருள் விற்கலாமா அல்லது கொல்லைபுறத்தில் போதை செடியை பயிரிட்டு கொள்ளலாமா, கடனை திருப்பி கேட்டவனை நாலு உதை உதைக்கலாமா தொழில் கண்டிப்பாக கலப்பட பொருளை விற்றுவிட்டுத்தான் மறுவேலை எனும் கேப்மாரித்தனமான எண்ணம், எல்லாம் மானாவாரியாக மண்டையைக் குடையும். அரசியல்வாதிகள் பொய் சொல்லவும். இவர்களை பற்றிய பெருமை பரப்பு செய்திகளை வெளியிடவும் ஒரு குழுவை நியமித்துக் கொள்வர். உங்கள் மாமனாரும், மாமியாரும் தங்கள் தங்கள் இடங்களை மாற்றி வசிக்க நேரிடும். உங்கள் திருமண விஷயம் சற்று பின்னடைந்து பின் நேர் சீராக நடக்கும். அரசு வேலையில் இருப்போர் மீது எதிர்மறை செய்திகள் கைபேசியில் வரும். உங்களின் மன உறுதி உங்கள் நோய், எதிரிகளை விரட்டிவிடும். இந்த மாதம் பயணத்தின்போது, அடிபட வாய்ப்புண்டு. குலதெய்வக் கோவிலுக்கு, வஸ்திரம் மற்றும் அபிஷேகம் செய்து வணங்கவும். அர்ச்சகருக்கு மற்றும் அவர் மனைவிக்கும் தாம்பூலத்துடன் வேஷ்டி, சேலை வைத்துக் கொடுக்கவும்.

__________________

பங்குனி மாத கிரக நிலைகள்!

சூரியன்

இந்த பங்குனி மாதம் சூரியன் மீன ராசியில் உள்ளார். இது கால புருசனின் 12 எனும் விரயவீடு. எல்லா வருடமும் இவ்வமைப்பில் இருப்பினும், இந்த வருட பங்குனி மாதத்தில் கூடவே உச்ச சுக்கிரன், நீசபங்க புதன், ராகு என இவர்களுடன் அமர்ந்துள்ளார். அரசாங்கத்தின்மீது அதிக அளவில் கெட்ட பெயர் சுமத்தப்படும். அரசு அதிகாரிகளின், ஒழுக்கம்பற்றி, அலசி காயப்போடப்படும். அரசாங்கத்தை எதிர்த்து எதிர் கட்சியும், கூட்டணி கட்சிகளும் சேர்ந்து பெருங்கூப்பாடு போடும். அது மாணவர் நலன், வேலை, காதல் சமாச்சாரம், கலை உலகம் இவை சார்ந்து எதிர்ப்புகள் அதிகமாகும். கள்ளப்பணம்+அரசாங்கம் என்ற அளவில் எதிர்ப்பான பரப்புரை அமையும். அரசாங்கம் ஆரோக்கியம் பற்றி கவலைப்படவேயில்லை என்கிற குற்றச்சாட்டு ஒலி ஓங்கும். ஆனால் இதை தேமேன்னு பார்த்துக்கொண்டு ஆளுங்கட்சி தன் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கும்.

சந்திரன்

சந்திரன் ரிஷப ராசியில், குருவின்கூட ஓடுவார். இந்த நாட்களில் மக்களுக்கு பணம், தங்கம்மேல் வெகு ஆசை ஏற்படும். கடைக்கு போனால் இரண்டு கம்மலை அபேஸ் பண்ணலாமா எனும் எண்ணம் வரும். சிறு பயணங்களின்போது பணத்தை நைஸாக எடுத்துவிட வேண்டும் எனும் எண்ணம் பரபரக்கும். இதனால் காவல்துறை அல்லாடும். இதற்கெல்லாம் காரணம், சிறு அளவு தங்கமும் பெரிய விலையில் இருப்பதால் ஆகும். தங்கவிலையும் அதிகரிக்கவே செய்யும். சந்திரன் மிதுனத்தில் செல்லும்போது பள்ளிக்கூட பையன்கள், பெற்றோரிடமும் டீச்சரிடமும் கோபித்துக் கொண்டு பக்கத்து சந்தில் போய் ஓடிப்போய் மறைந்து கொள்வர். காவல்துறையினர் அலைந்து திரிந்து கண்டுபிடித்து கொடுப்பார். சந்திரன் கன்னி ராசியில், கேதுவுடன் செல்லுபோது அரசாங்கம் தொல்லைக்கு உட்படும். அது எதிரி கட்சிகளின் போராட்டம், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, கூட்டணி கட்சிகளின் குதர்க்க நடவடிக்கை என எல்லாம் சேர்ந்து, அரசாங்கத்தை அழச்செய்யும். சந்திரன், கும்ப ராசியில் சனியோடு செல்லும்போது, பல அரசியல்வாதிகளின் பண மதிப்பு, சொத்து விவரம், முறையற்ற இணைப்பு, வெளிநாட்டு முதலீடு என எல்லாம் விவரமும் வெளியாகிவிடும். இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, கூட்டணி கட்சி எல்லா தளத்து அரசியல்வாதிகளும் அதிரிபுதிரி ஆவர் என்பது முக்கியமான செய்தியாகும். சந்திரன் மீன ராசியில், சூரியன், ராகு, உச்ச சுக்கிரன், நீசபங்க புதன் இவர்களுடன் கூடி கும்மியடிப்பார். இவர்கள் இருப்பது காலபுருசனின் விரய வீட்டில். எனவே அரசாங்கம் நிறைய ஆட்களை வெளியேற்றும். அதிக மாற்றங்களை கொண்டுவரும். எனவே அரசாங்கம், தனது ஒழுக்கத்தையும், கட்டமைப்பையும், சிஸ்டத்தையும் காப்பாற்றிக்கொள்ள நிறைய ஆட்களை பலிகடா ஆக்கிவிடும். இது எதிர் கட்சியிலும் இவ்விதமே நடக்கும் என்பது கூடுதல் தகவல். எனவே அரசாங்கத்தில் உள்ளோர், அரசியலில் அங்கம் வகிப்போர் அனைவரும் இந்த பங்குனி ஆரம்பிப் பதற்குள், உங்களை பத்திரப் படுத்திக்கொள்ளுங்கள்.

செவ்வாய்

செவ்வாய் ஆளுங்கட்சியைக் குறிப்பார். அவர் இருப்பது ஒரு தைரிய ஸ்தானத்தில். எனவே நல்ல தைரியத்துடன் ஆளுங்கட்சி இருக்கும். எனினும், சற்றே எண்ணக்குழப்பம் ஏற்படும். கூடியமட்டும் சிக்கலையும், சிடுக்கையும் நீக்கி, குற்றங்குறையில்லாமல் அரசாங்கத்தின் செயல்பாடுகளை நேர் சீராக்க வெகு சிந்தனையும், யோசனையும் மண்டைக்குள் பிராண்டும். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல், நாங்கள்ளாம் யாரு சூனா, பானா என்று கெத்தாக அலைவர்.

புதன்

இது எதிர்கட்சியைக் குறிக்கும். இப்போது எதிர்கட்சிக்கு பெரிய சந்தேகம் வரும். ஏம்ப்பா நாம நல்லாயிருக்கோமா- இல்லையா என்று பக்கத்தில் உள்ளவர் களை கிள்ளி கேட்பார்கள். இவரது அடிப்பொடிகள், அண்ணே நம்மளைவிட கூட்டணி கட்சி ஓஹோன்னு இருக்கு. அதுகூட சேர்ந்து போராட்டம் பண்ணுவோம் என்று கூற, ஒருமனதாக தீர்மானம் போட்டு, எதிர்கட்சி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து நிறைய இடம் பயணம் செய்து போராட்டம் கோஷம் போடுவது என அதகளம் செய்யும் எதிர்கட்சி எந்தக் காரணத்தைக்கொண்டும், கூட்டணி கட்சியை முறித்துக்கொள்ளக்கூடாது. கூட்டணி கட்சி விலகினால், எதிர் கட்சியின் நிலை புஸ்தான்.

குரு

குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனையில் உள்ளனர். இப்போது குரு, மிருகசீரிட நட்சத்திரம் எடுக்கிறார். குரு தங்கத்தைக் குறிப்பார். தங்க கடத்தல், தங்க நகை திருட்டு, சிறு தூரப் பயணங்களில் தங்கம், பணத்தை கையாடல் செய்வது, தங்கத்தாலியை வாகனத்தில் சென்று கொண்டே அறுத்துக்கொண்டு ஓடுவது என தங்கம் சம்பந்தமாக நிறைய குற்றங்கள் நாள்தோறும் நடக்கும். அவ்வளவு ஏன் தங்கத்திற்காக கொலையும் நடக்கும். மக்கள் தங்க நகை அணிவதை குறைத்துக் கொண்டு, ஐம்பொன் நகைகளை அணியுங்கள்.

சுக்கிரன்

சுக்கிரன் இப்போது வக்ரத்தில் உள்ளார். ஒரு உச்ச கிரகம், வக்ரம் அடையும்போது, அது நீசமாகிவிடும். எனில் அவர் குருவுடன் பரிவர்த்தனை. அதனால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். இந்த அழகில் நீச புதன், சூரியன், ராகு இவர்களும் உள்ளனர். இப்போது சுக்கிரனின் நிலை வெகு குழப்பமாக உள்ளது. அதனால் இளம் பெண்கள் முக்கிய முடிவுகளை இப்போது எடுக்க வேண்டாம். திருமணம் பற்றிய தீர்மானங்கள் இந்த மாதம் தள்ளி போடவும். வெள்ளி விலை, தங்க விலையோடு போட்டி போடவா, வேண்டாமா என யோசிக்கும். கூட்டணி கட்சிகள்தான், எந்த பக்கம் போவது, எந்த கட்சியுடன் நல்லுறவு வைத்துக்கொள்வது, எந்த கட்சியுடன் பேச்சு "கா'விடுவது என தலைசுற்றி போய்விடும். கூட்டணி கட்சிகளுமே கொஞ்சம் அமைதி யாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சனி

இந்த மாதம் சனி தனித்து நிற்கிறார். காலபுருச தத்துவப்படி, 11-ஆம் வீட்டில் உள்ளார். இது அரசியலுக் கான இடம். இந்த மாதம் அனைத்து அரசியல்வாதிகளும் என்ன முடிவு எடுப்பது, எந்த வழியில் செல்வது என தீர்மானிக்க இயலாமல் திணறுவர். இது ஆளுங்கட்சி எதிர்கட்சி, கூட்டணி கட்சி என அனைத்து அரசியல்வாதி களுக்கும் பொருந்தும். சூழ்நிலை வெகு குழப்பம் தரும்.

ராகு

இவர் மீன ராசியில், சூரியன், புதன், சுக்கிரன் இவர்களோடு உள்ளார். சும்மாவே ராகுவுக்கு எல்லார் மண்டையை காயவைப்பதில் வெகுபிரியம். இப்போது இத்தனை கிரகமும்கூட இருப்பதால் கேட்கவேண்டுமா. ராகு, எல்லாரையும் சுழற்றி அடிப்பதால், அனைவரும் தலைசுற்றி போவார்கள். அரசியல்வாதிகள், அரசு அதிகாரி கள் என அனைவரின் வழிகளையும் தடை உண்டாக்கி, வழி மாறச் செய்து, மதுரை போகவேண்டிய ஆளை டில்லிக்கு போக வச்ச கதையாக மாறிவிடும். புத்தி குழப்பத்தை, அறிவு தடுமாற்றத்தை உண்டாக்குவார். புத்தி மாறாட்டமாக இருக்கும்போது, எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது உத்தமம்.

கேது

இவர் கன்னி ராசியில், நிறைய கிரக பார்வையில் உள்ளார். இவர் சாரம்பெற்ற சூரியன், அதிகிரக கூட்டணியில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். இதனால் இவர், அரசு அதிகாரிகளிடம் ஒரு பீதியை உண்டாக்கி, வேலையே செய்யவிடாமல், ஒரு சைலண்ட் மோடுக்கு நம்ம ஆபிசர்ஸ்களை போக வைத்துவிடுவார்.

வானிலை

பங்குனி 1, 2, 3-ல் மார்ச் 15, 16, 17 சந்திரன் கேதுவுடன் பயணம். வெயில் இருக்கும்.

பங்குனி 8, 9, 10 மார்ச் 22, 23, 24 சந்திரன் தனுசு ராசியில் செல்வார். அப்போது, செவ்வாயின் நேர் பார்வையைப் பெறுவார். அதனால் வெயில் கொளுத்தும். பங்குனி 12, 13, 14 மார்ச் 26, 27, 28 கும்பத்தில் சனியுடன் பயணம். காற்றில் ஈரப்பதம் இருக்கும். ஆனால் மழை பெய்யாது.

பங்குனி 14, 15, 16 மார்ச் 28, 29, 30. இப்போது மீன ராசியில் சந்திரன் பயணம். கூடவே ராகு, சூரியன், புதன் சுக்கிரனும் உள்ளனர். மீனம் கடல் ராசி. எனவே கடலில் வெகு மாற்றமும், அதிரடியான நிகழ்வுகளும் நடக்கும். ராகு மீன ராசியில் இருப்பதால், ஒரு கிரகண நிலை உண்டாகி, மற்ற ராசிகளின் இயல்பு மறைந்துவிடும். எனவே மழை பொழியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஏதோ ஒரு மாற்றம் நடக்கும்.

பங்குனி 19, 20, 21 ஏப்ரல் 2, 3, 4 அன்று ரிஷப ராசியில் நகர்வு. அங்கு இருக்கும் குரு, சுக்கிரனோடு பரிவர்த்தனை. எனவே மழை பெய்ய வாய்ப்பில்லை. வெயிலும் சுள்ளென்று இருக்காது. மிதமான வானிலை இருக்கும்.

பங்குனி 21, 22, 23 எப்ரல் 4, 5, 6 அன்று மிதுனத் தில் செவ்வாயுடன் ஓட்டம். செவ்வாய் ஒரு நெருப்புக் கிரகம். எனவே மந்தமான வெயில் இருக்கும்.

சந்திரன் மீன ராசியில் செல்லும்போது மட்டும், மக்கள் கவனமாக இருக்கவேண்டும். கடல் சார்ந்த எதிர்பாராத நிகழ்வுகள் உண்டு.

திருக்கணிதப்படி, சனி பங்குனி 15-ல் மார்ச் 29-ல் மீன ராசிக்கு சென்று, இந்த அதிகிரக கூட்டணியில் ஐக்கியமாகிவிடுவார். எனவே அப்போது கடல் தன் நிலையில், நிறைய மாறுபாடுகளை வெளிப்படுத்தும்.