28-ஆவது சர்க்கம்

ஜெயந்தனை மறைத்தல் அரக்கன் சுமாலி வசுவினால் கொல்லப் பட்டு சாம்பலாக்கப்பட்டு விட்டதையும், தனது சேனை தேவர்களால் தாக்கப்பட்டு அஞ்சி ஓடுவதையும் கண்ட இராவணனின் மகன் மேகநாதன், அனைத்து அரக்கர் களையும் திரும்ப அழைத்து தானே போர்முனையில் முன்வந்து நின்றான். காட்டுத்தீ வேகமாகப் பரவுவதைப்போல ஒளிவீசுவதும், எண்ணியபடி எங்கும் செல்லக் கூடியதும், மங்கலமுடையதுமான மிகப்பெரிய தேரில் ஏறிச்சென்று அவன் தேவர்கள் படையை எதிர்த்தான். பலவகையான ஆயுதங்களைக் கொண்டு தங்களது படைக்குள் புகுந்து வரும் மேகநாதனைக் கண்டதுமே, அனைத்து தேவர்களும் நான்கு திசைகளிலும் ஓடத் தொடங்கினர்.

போர் செய்வதில் மிகுந்த விருப்பத்து டன் வந்து நிற்கும் மேகநாதன் எதிரில் எவராலும் நிற்கமுடியவில்லை. அப் போது சிதறியோடும் தேவர்கள் அனைவரையும் அழைத்த இந்திரன், "நீங்கள் அஞ்சவேண்டாம். ஓடிப்போகாதீர்கள். போர்செய்ய திரும்ப வாருங்கள். எந்த போர்களிலும் தோல்வியைக் கண்டிராத என் மகன் ஜெயந்தன் போர்க்களத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறான்'' என்று கூறினான்.

இந்த நிலையில் இந்திரனுடைய மகனான ஜெயந்தன், வெகு அற்புதமாக அலங்கரிக் கப்பட்ட தேரிலேறி போர் புரிவதற்காக வந்தான். உடனே தேவர்கள் அனைவரும் ஜெயந்தனை சூழ்ந்துகொண்டு இராவணனின் மகனோடு போர்புரியத் தொடங்கினர்.

Advertisment

ஒரு பக்கம் மகேந்திரனுடைய மகன்; இன்னொரு பக்கம் அரக்கர் தலைவனுடைய மகன். எனவே அந்த உயரிய நிலைக்கு ஏற்றவகையில் தேவர்- அரக்கர்களிடையே போர் நிகழ்ந்தது. இராவணனின் மகன் மேகநாதன், தங்கத்தால் அழகுபடுத்தப்பட்ட பானங்களை ஜெயந்தனின் தேரோட்டியான மாதவி மகன் கோமுகனின்மீது ஏவினான். இந்திரனின் மகன் ஜெயந்தன், மேகநாதனின் தேரோட்டியை காயப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட இராவணனின் மகன், ஜெயந்தனை படுகாயத்துக்கு ஆளாக்கினான்.

கோபத்தால் நிரம்பி வழிந்த பலசாலியான இராவணனின் மகன், கண்களை அகலத் திறந்துகொண்டு இந்திரனின் மகனை அம்பு மழையால் மறைத்தான். மேலும் கோபம்கொண்ட மேகநாதன் கூர்மையான முனைகளைக் கொண்ட பலவகையான ஆயுதங்களை தேவர் படையின்மீது செலுத்தித் தாக்கினான். சதக்னீ, உலக்கை, ஈட்டி, கதை, கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களையும், பெரிய மலைச் சிகரங்களையும் எதிரிகள்மீது வீசினான் இராவணனின் மகன்.

இவ்வாறு மேகநாதன் எதிரிப் படையினரை மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டிருந்தான். அப்போது அவன் ஏற்படுத்திய மாயையி னால் அங்கே காரிருள் சூழ்ந்தது. அனைவரும் மிகுந்த துன்பத்திற்கு ஆட்பட்டனர். அப்போது ஜெயந்தனை சூழ்ந்துகொண்ட தேவர் படையினர் அம்புகளால் தாக்கப்பட்டு பல்வேறு துயரங்களை அனுபவித்தனர்.

Advertisment

இவன் அரக்கனா அல்லது தேவனா என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. இரண்டு படையினருமே சிதறி நாற்புறங்களிலும் ஓடினர்.

கடும் இருளால் மூடப்பட்டு ஒருவரை யொருவர் அடையாளம் காண முடியாததால், தேவர்கள் தேவர்களையும், அரக்கர் கள் அரக்கர்களையும் கொன்றனர். இந்த கலவரத்தைப் பயன்படுத்தி சிலர் போர்க் களத்திலிருந்து தப்பிச்சென்றனர்.

இதனிடையே சக்திவாய்ந்த அரக்கர் தலைவர்களின் ஒருவனான புலோமா என்பவன், இந்திரனின் மகன் ஜெயந்தனை யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு தூக்கிச் சென்றான்.

புலோமா அரக்கனாக இருந்தாலும், தேவேந்திரனின் மனைவி இந்திராணியின் தந்தையென்பதால் ஜெயந்தனுக்கு தாய் வழிப் பாட்டனார். எனவே அவன் தன் பேரனை எடுத்துச்சென்று கடலுக்குள் புகுந்துகொண்டான். இந்த நிலையில் இருள் விலகியது.

ஜெயந்தன் காணாமல்போகவே, அவனை அரக்கர்கள் கொன்றுவிட்டதாகக் கருதிய தேவர் படையினர் அனைவரும் நான்கு திசை களிலும் ஓடிச் சென்றனர். தனது படைவீரர் களால் சூழப்பட்டிருந்த மேகநாதன் மிகுந்த சினம்கொண்டு தேவர்களைத் தாக்குவதற்காக அவர்களை நோக்கி ஓடிச்சென்று பெருங் குரல் எழுப்பினான். அப்போது தனது மகன் காணாமல் போனதையும், தேவர் படையினர் சிதறியோடுவதையும் பார்த்த தேவேந்திரன், சுமலியைப் பார்த்து, தேரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான். உடனே அவன் தெய்வீக ஆற்றல் உடையதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான பெரிய தேரொன்றைக் கொண்டுவந்து நிறுத்தினான்.

அவனால் செலுத்தப்படும் அது மிக வேகமாகச் செல்லக் கூடியது.

அப்போது மின்னல் கொடிகளுடன் சேர்ந்த மேகங்கள் தேரின் முற்பகுதியில் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டு பெரும் ஓசையை உண்டாக்கின. தேவர்களின் தலைவன் போர் செய்வதற்காகப் புறப் பட்டபோது, கந்தர்வகள் ஒன்றாகக் கூடி பலவகை இசைக் கருவிகளை மீட்டினர்.

அப்சரக் கூட்டத்தினர் நடனமாடினர். அமரர் கோனாகிய இந்திரன்- ருத்ரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், சாத்யர்கள், மருத்கணங்கள் முதலியோர் பல்வேறு படைக்கலன்களை ஏந்தியவாறு சூழ்ந்துவர புறப்பட்டு வந்தான். அவன் புறப்பட்டபோது பயங்கரமான காற்று வீசியது. சூரியன் ஒளியை இழந்தான். மாபெரும் எரிகொள்ளிகள் வானிலிருந்து விழுந்தன.

இதற்கிடையே ஆற்றல்மிக்க பெருவீர னான இராவணன் விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட திவ்யமான தேரில் ஏறிக் கொண்டான். அந்தத் தேரில் மயிர்க் கூச்செறியத் செய்யும்படியான பெரிய உருவம் கொண்ட சர்ப்பங்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றின் மூச்சுக்காற்றால் அந்த போர்க்களமே பற்றியெரிவதுபோன்ற சூழல் நிலவியது. அரக்கர்கள் அந்தத் தேரைச் சூழ்ந்துநின்றார்கள்.

போர்க்களத்தை நோக்கிச் சென்ற இராவணன், இந்திரன் எதிரே போய் நின்றான்.

அவன் தன் மகன் மேகநாதனைத் தடுத்து நிறுத்தி, தானே போர்புரிய ஆயத்தமானான்.

மேகநாதன் போர்முனையிலிருந்து திரும்ப வந்து தன் தேரில் அமர்ந்துகொண்டான்.

பிறகு தேவர்களுக்கும் அசுரர்களுக்கு மிடையே மிகப்பெரிய போர் தொடங்கியது. வானத்திலிருந்து மேகங்கள் ஆயுதங்களைப் பொழிவதைப்போல அந்தப் போர்க்களத்தில் அஸ்திரமழை பொழிந்தது. அப்போது கும்பகர்ணன் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு வேண்டியவர்- வேண்டாதவர் என்பது புரியாமல் அனைவருடனும் போரிட்டான். அவன் தன் பற்களாலும் தோள்களாலும் கால்களாலும், நீண்ட வேல், அம்புகள் முதலியவற்றாலும்- கையில் எது கிடைத்ததோ அதைக் கொண்டு தேவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தான்.

rr

அவன் மிக பயங்கரமானவர்களான ருத்ரர்களுடன் மோதினான். அவர்கள் அவனைத் திரும்பத் தாக்கி, அவனது உடலில் காயம் ஏற்பட சிறு இடம்கூட இல்லாதபடி செய்தனர். கும்பகர்ணனின் உடல் முழுவதும் ஆயுதங்களால் தாக்கப்பட்டு ரத்தத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தது. அப்போது அவன் மின்னல், இடியுடன் கூடிய மேகம் நீரைப் பொழிவதுபோல காணப்பட்டான்.

ருத்ரர்களும் மருத்கணங்களும் ஒன்று சேர்ந்து அரக்கர் படையை எதிர்த்துப் போரிட்டனர். கூர்மையான பல்வேறு படைக்கலன்களால் தாக்கப்பட்ட அரக்கர் படையினர் போர்க்களத்திலிருந்து ஓடிச் செல்ல முற்பட்டனர்.

அரக்கர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

வெட்டப்பட்ட பலர் தரையில் விழுந்து புரண்டனர். பல அரக்கர்கள் உயிர் பிரிந்த நிலையில் தங்கள் வாகனங்களில் விழுந்து கிடந்தனர். சில அரக்கர்கள் தேர், யானை, கழுதை, ஒட்டகம் நாகம், குதிரை, பன்றி, பிசாசு முகம்கொண்ட வாகனங்களை இரு கரங்களாலும் அணைத்துக்கொண்டு செயலற்றுக் கிடந்தனர். உணர்வுபெற்ற சிலர் எழுந்து நின்றதும் தேவர்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இவ்வாறு அரக்கர்கள் அனைவரும் கொல்லப்பட்டுத் தரையில் கிடந்த காட்சி ஒரு மாயாஜாலம் போன்ற வியப்பை ஏற்படுத்தியது.

போர்க்களத்தில், ஆயுதங்கள் என்னும் முதலைகள் ஆற்றில் மிதந்துசெல்வதுபோல ரத்த ஆறு ஓடியது. அதன் கரைகளில் காக்கை களும் கழுகுகளும் பறந்துகொண்டிருந்தன. இதற்கிடையே வீரம் பொருந்திய இராவணன், அரக்கர்படை அனைத்தும் தேவர்களால் கொல்லப்பட்டதைக் கண்டு பெருங்கோபம் கொண்டு, மிகப்பெரிய கடல்போல அகன்று நின்றுகொண்டிருந்த தேவர் படைக்குள் புகுந்து எதிர்ப்பட்டவர்களைக் கொன்றான். இந்திரனுக்கு எதிரில் வந்து நின்றான்.

இந்திரன் தனது மிகப்பெரிய வில்லின் நாணைப் பேரொலி எழுப்பும் வண்ணம் வளைத்தான். அந்த நாணோசை பத்து திசைகளிலும் எதிரொலித்தன. அந்த மாபெரும் வில்லை வளைத்து அக்னி, சூரியனுக்கு இணையான ஆற்றல் பொருந்திய அம்புகளைச் செலுத்தினான்.

அதுபோன்றே தோள்வலிமை மிக்க இராவணன் உறுதியாக நின்று, தன் வில்லி-ருந்து அம்புகளைச் செலுத்தி இந்திரனை மூடி மறைத்தான். சரமாரியாக அவர்கள் இருவரும் போர்செய்தனர். நான்கு திசைகளிலும் எந்தப் பொருளும் கண்களுக்குப் புலப்படாதபடி காரிருள் சூழ்ந்தது.

29-ஆவது சர்க்கம்

இந்திரன் பிடிபடுதல் போர்க்களத்தில் காரிருள் சூழ்ந்ததும், தேவர்கள்- அரக்கர்கள் அனைவரும் தங்களது ஆற்றலில் செருக்குற்றவர்களாக ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திப் போரிட்டனர். அப்போது மாபெரும் அரக்கர் படையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே எஞ்சியிருந்தது. மற்ற அனைவரும் எமனுலகுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

அடர்ந்த இருள்சூழ்ந்த அந்த போர்க் களத்தில் ஒருவரையொருவர் அடையாளம் தெரியாமல் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டனர். இந்திரன், இராவணன், அவனது மகன் மேகநாதன் ஆகிய மூவர் மட்டுமே அந்த பேரிருளால் மனம் மயங்காமல் இருந்தனர். சேனையில் பெரும்பகுதி கணநேரத்தில் அழிக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபம்கொண்ட இராவணன் பேரொலி எழுப்பினான்.

தனது தேர்ப்பாகனைப் பார்த்து, "எதிரிப் படையின் எல்லைவரை படைகளின் நடுவிலேயே தேரை செலுத்து. என்னுடைய போரிடும் ஆற்றல் அனைத்து தேவர்களையும் பலவகையான ஆயுதங் களால் தாக்கி எமனுலகுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்திரன், குபேரன், வருணன், எமன் ஆகியவர்களை ஒன்றாக அழித்து, அவர்கள்மேல் நான் நிற்பேன். நீ கவலைகொள்ளாதே. தேரை விரைவாகச் செலுத்து. மறுபடியும் சொல்கிறேன். எதிரிப் படையில் எதிர்ப்புற எலைலைவரை செலுத்து. இப்போது நாம் நந்தவனத்தில் இருக்கிறோம். உதயகிரி வரை என்னை அழைத்துச் செல்" என்றான்.

அவனுடைய உத்தரவைக் கேட்ட தேர்ப்பாகன், மனோவேகம் கொண்ட குதிரைகளை எதிரிப் படையின் நடுவில் செலுத்திச் சென்றான்.

இராவணனின் உறுதியான அந்த எண்ணத்தைப் புரிந்துகொண்ட இந்திரன் தேரில் இருந்தபடியே போர்க்களத்திலிருந்த தேவர்களைப் பார்த்து, "நான் கூறுவதைக் கேளுங்கள். இப்போது எது நல்லதென்று எனக் குத் தோன்றுகிறதோ அதைக் கூறுகிறேன். பத்து தலைகள்கொண்ட இந்த அரக்கனை உயிருடன் நாம் கைப்பற்றிவிட வேண்டும். எல்லையில்லாத ஆற்றலுடையவன் இவன். வாயுவேகம் கொண்ட தேரில் நமது படையின் நடுவே வழி உருவாக்கிக்கொண்டு, உயரமாக ஆர்ப்பரித்தெழும் கடல் அலைகள் போல முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

பிரம்மாவிடம் பெற்ற வரத்தினால் அச்சமின்றி இருக்கிறான். இப்போது இவனைக் கொல்லமுடியாது. நீங்கள் கவனமாக இருந்து இவனைக் கைப்பற்ற முயலுங்கள். பலிச் சக்கரவர்த்தியின் வலிமை அடக்கப்பட்ட பின்னரே மூவுலகங்களையும் நான் அனுபவித்து வருகிறேன். அதேபோல இவனைத் தடுத்து நிறுத்துவதே முக்கியமானதென்று எனக்குத் தோன்றுகிறது" என்றான்.

அடுத்து இந்திரன் இராவணனை விடுத்து வேறிடம் சென்று, அரக்கர்களை அஞ்சி நடுங் கச்செய்து போர்புரியத் தொடங்கினான்.

போரில் பின்வாங்கும் குணமில்லாத இராவணன் வடக்குப் பக்கத்திலிருந்து எதிரிப் படைக்குள் நுழைந்தான். இந்திரன் தெற்குப் பகுதியிலிருந்து நுழைந்தான். தேவர் படைக்குள் நூறு யோசனை தூரம் சென்றுவிட்ட அரக்கர் தலைவன், தேவர்களின் படை முழுவதையும் அம்பு மழையால் மூடினான்.

தனது படைவீரர்கள் அழிந்துபோவதைக் கண்ட இந்திரன் சற்றும் மனம் கலங்காமல், இராவணனை நாற்புறமும் சூழ்ந்துகொண்டு அவனை போரைக் கைவிடச் செய்தான்.

இதற்கிடையே அரக்கர்கள் இந்திரனால் இராவணன் பிடிபட்டதைக் கண்டு, 'நாம் அழிந்தோம்..!' என்று அலறத் தொடங்கினர்.

அதுகண்டு பெருங்கோபம் கொண்ட மேகநாதன் அவ்விடத்திற்கு தேரில் வந்து, பயங்கரமான அந்தப் படைக்குள் கோபத்துடன் நுழைந்தான்.

படைகளுக்கிடையே நுழைந்த மேகநாதன், பரமேஸ்வரனிடம் முன்னர் பெற்ற மாயக் கலையைப் பயன்படுத்தி தன்னை மறைத்துக்கொண்டு, கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் எதிரிப்படைகளைத் தாக்கினான். அவன் வலிமைமிக்க மற்ற தேவர்கள் அனைவரையும் புறந்தள்ளிவிட்டு, இந்திரனை நோக்கி வேகமாகச் சென்றான்.

தேவேந்திரனின் கண்களுக்கு இராவணனின் மகன் தென்படவில்லை. மாவீரர்களான தேவர்களால் தாக்கப்பட்டு தன் கவசங்களைப் பறிகொடுத்தபோதிலும், மேகநாதன் சற்றும் அச்சம் கொள்ளவில்லை. அவன் இந்திரனின் தேர்ப்பாகனான மாதலி தேரை ஓட்டிக்கொண்டு தன்னைநோக்கி வருவதைக் கண்டு, குறிதவறாத தனது கணைகளால் அவனை சிதைத்து, அம்பு மழையால் இந்திரனை மூடி மறைத்தான். தேரையும் பாகனையும் இழந்த இந்திரன், ஐராவத யானையின்மீது ஏறிக்கொண்டு இராவணனின் மகனைத் தேட ஆரம்பித்தான்.

மாயாசக்தியினால் மிகவும் வலிமை பெற்றிருந்த மேகநாதன், பார்வைக்குப் புலப்படாதவனாக ஆகாயத்தில் இருந்துகொண்டு இந்திரனை மாயையால் பிணித்து, அம்புகளைச் செலுத்தி மிகவும் துன்புறுத்தினான். இந்திரன் மிக களைப்படைந்துவிட்டான் என்பதை நன்றா கத் தெரிந்துகொண்ட மேகநாதன், அவனை மாயையால் கட்டித் தன் படைகளிருந்த பகுதிக்குக் கொண்டுவந்தான்.

இந்திரன் போர்க்களத்திலிருந்து பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் எதுவும் புரியாமல் திகைத்து நின்றார்கள்.

போரில் வெற்றி காண்பவனும் இந்திரனின் பகைவனுமான அந்த மாயாவி மேகநாதன் கண்களுக்குப் புலப்படவில்லை. ஆனால் மாயா சக்தியினால் பலவந்தமாக இந்திரன் இழுத்துச் செல்லப்படுவது கண்களுக்குத் தெரிந்தது. அப்போது தேவர்கள் மிகவும் கோபம்கொண்டு இராவணனை எதிர்த்து நின்று அம்பு மழையினால் அவனை மூடிமறைத்தனர். ஆதித்தியர்களும், வசுக்க ளும் ஒன்றாகச் சேர்ந்து இராவணனை எதிர்த் தார்கள். போர்க்களத்தில் பகைவர்களால் தாக்கப்பட்ட இராவணன், அவர்களது எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் திணறினான்.

இராவணனுடைய உடல் முழுவதும் எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு நலிவடைந்திருந்தது; மனமும் தளர்ந்திருந்தது.

இந்த நிலையில் அவனைக் கண்ட மேகநாதன், மற்றவர் காணமுடியாத மாயாநிலையிலும் தனது தந்தையிடம், "தந்தையே, வாருங்கள்... நாம் திரும்பிச் செல்வோம். போர்புரிவதை இத்துடன் நிறுத்திக்கொள்வோம். நாம் வெற்றி பெற்றுவிட்டோம். கவலையை விட்டுவிட்டு அமைதியுடன் இருங்கள்.

தேவர் படைக்கும், மூன்று உலகங்களுக்கும் தலைவனான இந்த இந்திரன் நம்மால் பிடிக்கப்பட்டு விட்டான். தெய்வத்தின் அருளால் தேவர்களின் ஆணவம் அடக்கப் பட்டது.

உங்கள் எதிரிகளை வீரத்தால் வென்று மூன்று உலகங்களின் போகங்களையும் எண்ணியபடி அனுபவியுங்கள். இங்கு இனி நமக்கு வேலையில்லை. இப்போது தொடர்ந்து போர் புரிவதில் அர்த்தமு மில்லை" என்றான்.

பின்னர் தேவர் கூட்டம் போர் புரிவதை நிறுத்தினர். இராவணன் தன் மகன் கூறியதைக் கேட்டு தெளிந்த மனமுடையவனானான். போரிலிருந்து விலகிய அந்த வலிமைமிக்க தேவர்களின் எதிரியான- புகழில் சிறந்த அரக்கர் தலைவன் தன் மகனின் சொற்களை அக்கறையுடன் கேட்டு, தன் மகனைப் பார்த்து, "அளவற்ற உடல் வலிமையும் ஆற்றலும் பெற்ற தேவர்களின் தலைவனும், தேவர்களும், நிகரில்லாத ஆற்றல்கொண்ட உன்னால் வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறார் கள். என் பரம்பரையின் பெருமை உன்னால் ஓங்கி செழித்துவிட்டது. படைகள் சூழ, இந்திரனைத் தேரில் ஏற்றிக்கொண்டு நகரத்திற்கு செல். உன்னைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் நானும் பின்னால் வருகிறேன்" என்றான்.

பின்னர் படைவீரர்கள் சூழ்ந்துவர, தேவர்கோனான தேவேந்திரனைத் தேருடன் கைப்பற்றிய பெரும் வீரனான இராவணனின் மகன், தன் இல்லம் நோக்கிச் சென்றான். தனக்குத் துணையாக போர்க்களத்தில் போரிட்ட அரக்கர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்தான்.

(தொடரும்)