ஒரு எறும்பு உணவு தேடிச்சென்று, உணவிருக்கும் இடத்தை அடையும்பொழுது, தான் மட்டும் பசியாறிக்கொள்ளாமல், தனது சக எறும்புக் கூட்டங்களும் உணவிருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அவ்விடத்தை அடைய வசதியாக வாசனை திரவியம் ஒன்றை சுரந்துகொண்டே செல்லும். அத்திரவியத்தின் வாசனையை முகர்ந்துகொண்டே, அந்த எறும்பை வரிசையாகப் பின்தொடர்ந்து மற்ற எறும்புகளும் உணவிருக்கும் இடத்தை அடைகின்றன. பொதுவாக நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால் அதை நாம் மட்டுமே அனுபவித்து மகிழ்வோம். ஆனால் நிறைமொழி மாந்தர்கள் அவ்வாறு இல்லாமல், தாங்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப் பார்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம்'' என்பது திருமூலர் வாக்கு. தனக் குக் கிடைத்த மந்திரத்தை உலகிற்கெல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.
இறைவன் படைத்த உயிரினங்களில் ஆறரிவு கொண்ட மனித இனம் மட்டுமே இறைவனை அறிந்து, அவனை அடையும் பேரின்பத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
கடவுள் இருக்கிறாரா?
இல்லையா? என்ற கேள்விக்கு கடவுள் உண்டு என்பதும் கடவுள் இல்லை யென்று சொல்வதும் அவரவர் மனம் எடுக்கும் முடிவு ஆகும். இதைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில்
"தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை'
என்று எழுதியுள்ளார். அறிவை அறிவால் உணர்ந்து தெளிந்த ஒரு மனிதனால் மட்டுமே ஞானத்தை அடையமுடியும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். உண்மைக் கடவுளை அவரவர் அனுபவத்தால் உணரமுடியுமே தவிர, பிறரால் சுட்டிக்காட்ட முடியாது.
பலரும் பலவகைகளில் இறைவனை அறிந்து வழிபடுகிறார்கள். பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் நமது அறிவினால் இறைத்தன்மையோடு பொருந்துவதை பகுத் துப் பகுத்து ஆராய்ந்து இறைவனை நாம் அறிய வேண்டும். அவ்வாறு உண்மை இறைவனை அறிந்த ஞானிகளும், சித்தர்களும் அந்த இரகசியத்தை தனக்குள் மறைத்து வைக்காமல் இறைவனை அனைவரும் அடையும்வகையில் பல ஆன்மிக நூல்களை வழங்கிச் சென்றுள்ளனர்.
குருவருளால் அவர்களைப் பின்தொடர்ந்து நான் அனுபவத்தில் உணர்ந்த இறைசக்தியை அனைவருக்கும் எடுத்துக்கூறுவதை எனது கடமை யாக எண்ணுகிறேன். பஞ்சபூதங்கள் மற்றும் ஓரறிவு உயிரினங்கள்முதல் ஆறறிவுகொண்ட உயிரினங்களைக்கொண்ட பிரபஞ்சத்தை கண்களுக்குப் புலப்படாத ஒரு சக்தியானது உருவாக்கி இயக்கிவருகிறது. அச்சக்தியையே நாம் விரும்பும் வடிவத்தில் கடவுளாக வழிபடுகிறோம். கடவுள் தன்மையாக நமக்குச் சொல்லப்பட்டவையானது, கடவுளுக்கு உருவம் கிடையாது, கடவுள் இல்லாத இடமே இல்லை, கடவுள் பாகுபாடு இன்றி அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கிறார் என்றும், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இறைவனின் இத்தன்மையானது; காற்றின் தன்மைக்கு அப்படியே பொருந்துவதை அனைவரும் அறியலாம். பெற்ற குழந்தை இருக்கும் இடத்தில் தாய் இருப்பதுபோல உயிர்கள் வாழும் இடத்தில் காற்றில்லாத இடமே இல்லை.
தாயின் கருவரையிலிருந்து வெளியேறிய குழந்தை பூமியில் விழுவதற்குள் அதன் முதல் தேவை பஞ்சபூதங்களில் ஒன்றாகிய காற்றே ஆகும். எனவேதான் மூச்சுக்காற்றை பிராண வாயு என்கிறோம். பிறந்த குழந்தைக்கு அடுத்ததேவை, இருக்க இடம், பசிக்கு உணவாக அமுது போன்ற இயற்கையின் துணையுடன் வாழ்ந்து இறுதியில் விடுவதும் மூச்சுக்காற்றே ஆகும். உயிர்கள் உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் இருந்து விடலாம். ஆனால் மூச்சுக்காற்றை சுவாசிக் காமல் சில நிமிடங்கள்கூட இருக்கமுடியாது.
இவ்வுலகில் சூரியன் உதிக்காத நாடுகள் கூட சில உண்டு. நிலவுகூட மாதத்தில் ஓர் நாள் தோன்றுவது இல்லை. விண்ணையும், மண்ணையும், கடலையும் எல்லை பிரிந்த மனிதனால் காற்றை மட்டும் பிரிக்க முடியவில்லை. விண்ணிற்கும், மண்ணிற்குள் ளும், கடலுக்குள்ளும் செல்பவர்கள் கொண்டு செல்லக்கூடிய அத்தியாவசியமான தேவை முக்கியத்துவமான ஆக்சிஜன் எனும் செயற்கைக் காற்றே ஆகும். நமக்கு உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் மருந்துவர்கள் நம்மிடம் அந்த நோய்க்குத் தகுந்த வாறு வெயிலில் செல்லவேண்டாம், குளிரில் இருக்கவேண்டாம் என்றும் சொல்வார்கள்.
ஆனால் எந்த நோய்க்கும் காற்றே இல்லாத இடத்தில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வதில்லை. அதுமட்டுமின்றி மனிதன் கண்டுபிடித்த எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் இயங்குவதற்கும் காற்றே ஆதாரமாக உள்ளது. இறைவனும் அதை உணர்த்தவே "கொரோனா' ரூபத்தில் அவதாரம் எடுத்தான். அந்த நெருக்கடியான சூழலிலும் நம்முள் மூச்சுக் காற்றாய் உள்ள இறைசக்தியை உணராமல், வெளியில் தேடிக்கொண்டும், இந்தக் கடவுள் பெரியவர், அந்தக் கடவுள் சிறியவர் என்ற அறியாமையால் இறைசக்தியை உணர்ந்து, பேரின்பம் அடையும் நமது இலக்கை நிறைவு செய்யாமல் நமது அரிதான மானிடப் பிறப்பை வீண் செய்கிறோம் என்பதே உண்மை. இறைத் தன்மையோடு பொருந்தும் காற்றை உலகமக்கள் அனைவரும் பொதுவான இறைசக்தியாக ஏற்றுக்கொண்டால் ஆன்மிகத்தின் பேரில் எந்தப் பிரிவினையும் இன்றி ஒற்றுமையாக "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று போற்றி வாழ்ந்தால் அனைவரும் பேரின்பம் அடையலாம்.