நம் பாரத நாட்டின் நாகரிகத் தொட்டில்களாக விளங்குபவை நதிக்கரைகள். எண்ணற்ற முனிவர்களும் ரிஷிகளும் தவசிரேஷ்டர்களும் மறுமைக்கு வேண்டிய புனிதப்பணிகளைச் செய்ய உகந்தவையாக அமைந்த இடங்கள் இந்த நதி தீரங்களே.
புனித நீராடலுக்கு கங்கை, யமுனை, சரஸ்வதி, குமரி, தாமிரபரணி, நர்மதை, சரயு, கோதாவரி, காவிரி ஆகிய நதிகள் சிறப்புடையனவாகக் கூறப்படுகின்றன. இதில் நர்மதை வெகுவாக சிறப்பிக்கப்படுகிறது. ஏழு தினங்கள் யமுனையிலும், மூன்று தினங்கள் சரஸ்வதியிலும், ஒருமுறை கங்கையிலும் நீராடினால் நம் பாவங்கள் அகலும். ஆனால் நர்மதை நதியை ஒருமுறை தரிசித்தாலே அந்தப் பலன்கள் கிட்டும் எனப்படுகிறது.
நதிகளில், குறிப்பிட்ட பகுதிகளைத்தான் நீராடுதுறை என்று சொல்வார்கள். ஆனால் நர்மதை நதியின் இருகரைகளுமே நீராடு துறையாக அமைந்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. நர்மதையின் கரைகளிலுள்ள பழமையான பெரிய யாக குண்டங்களும், ஆசிரமங்களும், அதன் இரு கரைகளுமே சிறந்த தவபூமியாக விளங்கினவென்பதை உணர்த்துவதாக உள்ளன.
தேவர்களின் தலைவன் இந்திரனும்; சந்திரன், செவ்வாய், சனி முதலான கிரகங்களும்; நாரதர், வியாசர், பராசரர், மார்க்கண்டேயர், ஜமதக்னி போன்ற முனிவர்களும்; பாண்டவர்கள், திலீபன், விக்ரமாதித்தன், சாலிவாகனன் முதலிய பேரரசர்களும் நர்மதைக்கரையில் தவமியற்றி பேரின்ப வாழ்வு பெற்றனர் என்பதைப் புராணங்கள் மூலம் அறியமுடி கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற நர்மதை நதி தோன்றிய வரலாற்றைப் பற்றி கர்ணபரம்பரைக் கதையொன்று கூறப் படுகிறது.
மேகலன் என்ற மன்னனின் மகள் நர்மதை.
கண்டோர் விரும்பும் பேரழகு கொண்டவள். இளம் சந்நியாசி ஒருவர் அவள் அழகில் மயங்கி, அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம்கொண்டார். ஆனால் நர்மதையோ சோண பத்ரன் என்ற வீரனைக் காதலித் தாள்.
மன்னன் தன் மகளின் விருப்பப் படி சோண பத்ரனுக்கு அவளை மணம் முடிக்க எண்ணி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். இத்திருமணத்தில் சோணபத்ரனுக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அவன் கங்கை என்ற கன்னியைக் காதலித் தான். அவளும் சோணபத்ரனை விரும்பினாள். மன்னன் மகளை மணந்துகொள்ளாவிட்டால் மன்ன னது கோபத்திற்கு ஆளாக நேரிடும். கங்கையை மணக்காவிட்டால் அவள் கோபம் கொள்வாள். இதன்காரணமாக சோணபத்ரன் தர்ம சங்கடமான நிலையில் இருந்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narmatha.jpg)
திருமண நாளும் நெருங்கிக்கொண்டி ருந்தது. நிலைமையை எப்படிச் சமாளிப்ப தென்று யோசித்த சோணபத்ரன் முதலில் மன்னன் விருப்பப்படி நர்மதையை மணந்து கொள்வது; பின்னர் ஏதாவது காரணம் சொல்லி அவளை ஒதுக்கிவைத்துவிட்டு கங்கையை மணந்துகொள்வதென்ற முடிவுக்கு வந்தான். இதை அவன் கங்கையிடம் கூறினான். அவள் அதை ஏற்றுக்கொண்டாலும், நர்மதையின் வாழ்க்கை சீரழிந்து விடுமே என்று கவலைப்பட்டாள்.
இதற்குத் தீர்வுகாண விரும்பிய கங்கை, நர்மதையை விரும்பிய இளம் சந்நியாசியிடம் சென்று விவரங்களைச் சொல்லி, அவளுக்கு எந்தத் தீங்கும் நேராமல் காப்பாற்ற வேண்டு மென்று கேட்டுக்கொண்டாள். சந்நியாசியும் அவளுக்கு உதவுவதாக வாக்களித்தார்.
திருமண நாள் வந்தது.
அதைக்காண எட்டுத் திக்குகளிலிருந்தும் பலதரப்பட்ட வர்களும் வந்து குழுமியிருந்தனர். முகூர்த்த நேரத்துக்கு சற்று முன்னர் சந்நியாசி மன்னனிடம் சென்று, "அரசே, உமக்கு மங்களம் உண்டாகட்டும். உமது மகள் நல்வாழ்வு பெறவேண்டுமென நீ விரும்பினால் அவளை இப்போதே எனக்கு தானம் செய்து விடுங்கள். சோணபத்ரனுக்கு கங்கை என்ற காதலி இருக்கிறாள். அவளைத் திருமணம் செய்துகொள்ளவே அவனுக்கு விருப்பம். நான் தவவலிமை மிக்கவன். அவன் உடல் வலிமையுள்ளவன். நான் எந்த விதத்திலும் குறைந்த வனல்ல. ஆகவே நர்மதையை எனக் குத் திருமணம் செய்து கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினார்.
முற்றும் துறந்தவரான சந்நியாசி இவ்வாறு கூறியதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற மன்னன், "முனிவரே, தாங்கள் கூறுவது ஏற்புடையதல்ல. நர்மதையின் கணவன் சோணபத்ரன் என்பதை நான் எப்போதோ முடிவுசெய்துவிட்டேன். என் முடிவை மாற்றிக்கொள்ள இயலாது'' என்று கூறினான்.
சந்நியாசி எவ்வளவோ கூறியும் மன்னன் ஏற்காததால் கோபம்கொண்ட சந்நியாசி, "மன்னா, நிறைந்த இந்த சபையில் என்னை அவமதித்துவிட்டாய். அதற்கான கூலியை நீ பெறத்தான் வேண்டும். சோணபத்ரனும் கங்கையும் தங்கள் விருப்பப்படி சேர்ந்துவாழ நதியாக மாறி ஒன்றுகலக்கட்டும். மணவாழ்வு கிடைக்கப் பெறாத நர்மதை நதியாக மாறி என்றும் கன்னியாகவே இருக்கட்டும். நான் எத்தனை முறை கூறியும் ஏற்காத கல்மனம் கொண்ட நீ பெரும் கற்பாறைகள் கொண்ட பர்வதமாக மாறுவாய்'' என சாபமிட்டார்.
சந்நியாசியின் சாபம்
அப்போதே பலித்தது. மன்னன் நின்ற இடத்திலேயே மலையாக மாறினான். அம்மலையிலிருந்து சோணாநதி உற்பத்தியாகி பாய்ந்தோடி வந்து கங்கையுடன் கலந்தது. நர்மதையும் அதே மலையிலிருந்து நதியாகத் தோன்றி மேலைக்கடலில் கலந்தாள்.
பூகோளரீதியாகவும், விந்திய சாத்புரா மலைத் தொடர்களுக்கிடையே அமைந் துள்ள மைக்காலா பீடபூமியில் நர்மதை நதி உற்பத்தியாகி, தென்மேற்காக ஓடி கடலில் கலக்கிறது. இதே பீடபூமியிலுள்ள ஸோன் மோடா என்ற இடத்தில் சோணா நதி தோன்றி, எதிர்திசையில் (வடகிழக்காக) ஓடி பாட்னாவுக்கு அருகே கங்கையோடு கலக்கிறது. இதில் உற்பத்தியாகும் மற்றுமொரு நதி மகாநதி. இவை மூன்றும் உற்பத்தியாகும் ஸ்தானம் மைக்காலா பீடபூமியிலுள்ள அமர்கண்டக் என்ற புண்ணிய தலம்.
அமர்கண்டக்கில் கேந்திர ஸ்தானமாக விளங்குவது நர்மதை நதி உற்பத்தியாகும் குளமும், அதனருகில் இருக்கும் சிவன் கோவிலுமே. ஆதிகாலத்தில் நர்மதை நதி மூங்கில் புதர் ஒன்றிலிருந்து உற்பத்தியானதாகக் கூறப்படுகிறது. அந்த புதர் இருந்த இடத்தில் நர்மதேஷ்வரர் கோவில் கொண்டிருக்கும் சிவன் கோவில் உள்ளது. அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து நர்மதேஷ்வரரை வழி படுகிறார்கள் என்பதும், அதன் காரணமாக அத்தலம் ஆன்மிக சாத்வீக அலைகள் பெருகி, அங்கு அமைதி நிலவுகிற தென்பதும் பக்தர்களின் நம்பிக்கை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/narmatha-t.jpg)