னநிறைவோடு வணங்கினால் மனங் குளிரச் செய்யும் மகேசன் உறைந்தி டும் திருத்தலங்கள் இம்மண்ணில் எண்ணிலடங்காதவை. அவற்றுள் மண்ணையெல்லாம் பொன்னாக்கும் பொன்னி நதிக்கரை என்றால் அலாதி விருப்பம் அந்த அரனாருக்கு...

அப்படியொரு அற்புதத் திருத்தலமாகத் திகழ்கிறது ஐராவதம் ஆராதித்த மேல மருத்துவக்குடி. ஆதியில் வில்வக்காடாய்த் திகழ்ந்த இப்பதி பூகயிலாயம், தட்சிண கயிலாயம், கதம்பவனம், வில்வாரண்யம், ஐராவதபுரம், மருத்துவாக்புரம், ஆதிசேஷபுரம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப் பட்டுள்ளது.

அகத்தியர், வாமதேவர், கௌசிகர், காளவர், விசுவாமித்திரர், வேதமுனி, கரஸர், காலர், வியாசர், குத்சர், பரத்வாஜர், ஜாபாலி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சந்திரன், இந்திரன், மருத்துவாசுரன், பிரம்மா, அக்னிதேவர், ஸ்ரீ லக்ஷ்மிதேவி, ஆதிசேஷன் போன்றவர்கள் இத்தல ஈசனை வழிபட்டு வரங்கள் பல பெற்றுள்ளனர்.

துர்வாச முனிவரின் சாபத்தால் நிலைகுலைந்த ஐராவதம் சாபநிவர்த்தி அடைந்த திருத்தலம். மிகவும் விசேடமான- விருச்சிக ராசிக்கு உகந்த விநாயகர் வீற்றருளும் பதியிது.

Advertisment

அன்னை அபிராமி உறையும் ஆறு ஆதாரத் தலங்களுள் ஒன்று. சத்தியவிரதன் என்பவனது பாம்புக்கடி விஷத்தைப் போக்கிய மிருதசஞ்சீவினி தீர்த்தத்தைத் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற திருப்பதி.

அப்பர் பாடிய வைப்புத்தலமான திருவிடைக்குளம் என்னும் க்ஷேத்திரமும் இதுவே. இத்தலத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் இரண்டைப் பாடியுள்ளது சிறப்பு.

அத்துடன் பட்டினத்தாரும், வள்ளல் இராமலிங்கரும் போற்றிப் பாடியுள்ளனர் இவ்வாலய ஈசனை.

Advertisment

அப்பய்ய தீட்சிதரின் வம்சாவளியால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது விசேடம். தோல் வியாதிகளைப் போக்கும் தலமாகவும், திருமணத் தடைகளை நீக்கும் பதியாகவும், விருச்சிக ராசி க்ஷேத்திரமாகவும் திகழ்கின்றது இந்த மேலமருத்துவக்குடி.

மருத்துவாசுரன்

கௌட தேச பிராமணன் ஒருவன் எள் தானம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டதால் மேருமலைபோல் அவனது பாவம் மிகுந்து, வாயு மண்டலம் வரை உயர்ந்தது. இதனால் கரியநிறம் கொண்ட பிரம்ம ராட்சஸன் ஆனான். மருத்துவாசுரன் என்னும் பெயர் கொண்டான். பல மிருகங்களையும், பட்சிகளையும் தின்று, பின்னர் வாமதேவ முனிவரையும் பிடித்துத் தின்ன முற்பட்டபோது, முனிவர் தரித்திருந்த விபூதியும், ருத்திராக்ஷமும் அவன்மீது பட்டு, அவன் பழைய நிலையை அடைந்தான். பின் வாமதேவ முனிவரின் ஆலோசனைப்படி வில்வ வனமான இத்தலத்தில் சிவனை நோக்கி 12 வருடகாலம் தவமியற்றி, 12 சிம்ம பலத்தினைத் தனது கரங்களில் பெற்றான்.

அக்னி, எமன் மற்றும் இந்திரனை வென்றான். இந்திரன் பயந்து, பூவுலகில் இந்த வில்வவனத்தில் ஈசனை சரணடைந்தான். சிவனது கட்டளைப்படி கயிலாய நந்தவனக் காவலனான மணிபத்திரன், மருத்துவாசுரனின் மார்பில் அடிக்க, பின் அகோரமூர்த்தியால் வதைக்கப் பட்டான். இதனால் இப்பதி அவனது பெயரிலேயே மருத்துவக்குடி என்று ஆனது.

ஐராவதம்

திரேதாயுகத்தில் விஜயதசமியன்று, மற்ற திக்பாலகர்களுடன் பூவுலகில் சிவ பூஜைகளை முடித்துக்கொண்டு அமராவதிப் பட்டிணத்தை நோக்கி தனது வாகனமான ஐராவதத்தின்மீது சென்றுகொண்டிருந்தான் தேவேந்திரன்.

அப்போது எதிர்கொண்ட துர்வாச முனிவர், கயிலாயத்தில் சிவபெருமானைப் பூஜித்த சிவ நிர்மால்யமான எருக்கும்பூ மாலையை தேவேந்திரனுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்தார். அம்மாலையை வாங்கிய இந்திரன், அதைத் அணிந்துகொள்ளாமல், அலட்சியமாக ஐராவதத்தின்மீது வைத்தான். அதை தனது துதிக்கையால் எடுத்த ஐராவதம், உதறித் தெறித்து காலில் இட்டு மிதித்தது. இதைக்கண்ட துர்வாசர் கடுங்கோபம் கொண்டார்.

dd

"இந்திரனே! உனது ஆணவத்தால் யாருக்கும் கிடைக்காத மிக உயர்ந்த சிவ நிர்மால்யத்தை அவமதித்தாய். அதனால் நீ உனது பதவியையும், எல்லாவித செல்வங்களை யும் இழப்பாய்'' என்று சபித்தார். ஐராவதத்தை, நிறம் மாறி, தந்தங்கள் இழந்து, காட்டு யானையாக மதம்பிடித்து அலையும்படியும் சபித்தார்.

இந்திரன் நடுநடுங்கிப் போனான். ஐராவதமோ பயத்தால் பதைபதைத்தது. இந்திரனும், ஐராவதமும் உடனே துர்வாசரை விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டதோடு விமோசனமும் வேண்டி நின்றனர்.

மனமிரங்கிய மாமுனிவர் துர்வாசர், "பூவுலகில் வில்வ வனமாகத் திகழும் மருத்துவக் குடியில் சென்று வழிபட, இறைவன் திருவரு ளால் சாபம் நிவர்த்தியாகும்'' எனக் கூறி அங்கிருந்து மறைந்தார்.

அடுத்த கணமே அனைத்தையும் இழந்த அமரர் தலைவன் அகிலமெங்கும் திரிந்தான். ஐராவதமும் காட்டு யானையாக மாறி, பார்முழுதும் திரிந்து பரிதவித்தது. இறுதியாக ஐராவதமும் இந்திரனும் வில்வ வனத்தை அடைந்தனர்.

ஐராவதம் இங்கு பரவியிருந்த வெண் மணலைக்கொண்டு, தனது துதிக்கையால் சிவலிங்கம் பிடித்து, அருகிலிருந்த திருக் குளத்திலிருந்து நீர் எடுத்துவந்து, ஐயனை மனமொன்றிப் பூஜித்தது. உடன் இந்திரனும் மனமுருகி வழிபட்டான்.

இவ்வாறு பலகாலம் பூஜை செய்துவந்த வெண்யானைக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இறைவன் காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார். ஐராவதம் இரண்டு கோரிக்கைகளை ஈசனிடம் முன்வைத்தது.

"அடியேன் இங்கு வழிபட்டதன் காரண மாக இந்தத் தலம் ஐராவத க்ஷேத்திரம் என்று அழைக்கப்படவேண்டும். தங்களுக்கு ஐராவதேஸ்வரர் என்கிற திருநாமம் வழங்கப்படவேண்டும்.''

இவ்விரு கோரிக்கைகளையும் ஏற்ற எம் பெருமான், அப்படியே ஆக அருள்புரிந்தார். மேலும் இறைவன், "இங்கு எம்மை திங்கட் கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைசெய்து வழிபடுபவர்களுக்கு சகல சாபங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்; உடம்பிலுள்ள தோல் நோய்கள் நீங்கி, உடல் பொலிவுபெறும்'' என்றும் திருவருள் கூட்டுவித்தார்.

அபிராமித் தலங்கள்

சோழ தேசத்தை ஆட்சிசெய்த மன்னர்கள் திருக்கடையூரையும், அதைச் சுற்றியுள்ள ஐந்து தலங்களையும் சேர்த்து, ஆறு ஆதார பீடங் களாக, ஆறு அபிராமித் தலங்களை மந்திரப் பூர்வமாக ஸ்தாபனம் செய்தனர். அதில் முதலாவதாக சஹஸ்ராரம்- திருக்கடையூர் அபிராமியையும், இரண்டாவதாக ஆக்ஞா- மேலமருத்துவக்குடி (இந்த தலம்) அபிராமி யையும், மூன்றாவதாக அனாகதம்- வானாபுரம் அபிராமியையும், நான்காவதாக மணிப்பூரகம்- குழையூர் அபிராமியையும், ஐந்தாவதாக சுவாதிஸ்டானம்- இளந்துறை அபிராமியையும், ஆறாவதாக மூலாதாரம்- திருமலைராயன்பட்டினம் அபிராமியையும் ஆறு சக்கரங் களாக வகுத்து, கருங்கல் சந்நிதி களாக நிறுவினர்.

இங்குள்ள அம்பாள் ஆக்ஞா சக்கரமென்னும் புருவ மத்தியில் வீற்றிருப்பதால், கன்னிப் பெண் களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், சிறந்த மண வாழ்க்கை அமையவும், தம்பதிகள் குடும்பத்தில் அன்யோன்யமாக வாழவும், நல்ல சத்புத்திரர்களைப் பெறவும் அருள்பாலிக்கிறாள்.

விருச்சிக கணபதி

தக்ஷனின் சாபத்தால் சந்திர னுக்கு க்ஷயரோகம் ஏற்பட்டு, தனது பதினாறு கலைகள் குறைந்து பொலிவிழந்தார். அப்போது விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரத்தில், சந்திரன் நீசம்பெறும் காலத்தில் கணபதியை வேண்டிட, கணபதியின் கருணையால் இந்த மருத்துவக்குடி தலத்திற்கு வந்து, தனது பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, ஐராவதேசுவரர்- அன்னை அபிராமி மற்றும் கணபதியை அபிஷேகித்து வழிபட்டார். கணேசரது அருளினால் கார்த்திகை மாதம் (விருச்சிக மாதம்) திங்கட்கிழமையன்று சாபம் நீங்கி, பதினாறு கலைகளும் வளரப்பெற்று ஒளிமயமாகி, தனது பழைய நிலையினை அடைந் தார் சந்திர பகவான்.

இத்தல கணபதியை வழிபட, பெண்சாப விமோசனமும், தம்பதிகள் அன்யோன்யமும் உண்டாகிட வேண்டுமென்ற சந்திரனது கோரிக்கையை ஏற்றார் கஜமுகர். மேலும் விருச்சிக கணபதி என்னும் திருநாமமும் இவருக்கு உண்டாயிற்று.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகள்கொண்ட ராஜகோபுரம் எழிலுற அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், விசாலமான வெளிப் பிராகாரம். நேராக நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம். வடபுறத்தில் அம்பிகையின் தனிச் சந்நிதி ஒரு திருச்சுற்றுடன் திகழ்கிறது. முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய அமைப்பிலான சந்நிதிகள் வரிசையாகத் திகழ, அம்பிகையாக அபிராமி எழில் கொஞ்சும் வடிவில் தென்திசை பார்த்து, புன்னகைபூத்து நிற்கிறாள். மேலிரு கரங்களில் அக்ஷமாலையும் நீலோற்பலமும் கொண்டு, கீழிரு கரங்களில் அபய முத்திரை காட்டியும், இடக் கரத்தை இடுப் பில் மடித்துவைத்தும் அருள்பாலிக்கிறாள்.

இரண்டாம் வாயில் முன்மண்டபம் திறந்த வெளி மண்டபமாக நிற்கிறது. மூன்றாம் வாயிலை அடைகிறோம். மூடுதளமாக மகா மண்டபம், இடை மண்டபம் மற்றும் கருவறை ஆகிய அமைப்பில் இறைவனின் திருச்சந்நிதி காணப்படுகின்றது. அர்த்த மண்டபத்தில் கணபதி மற்றும் கந்தன் தரிசனமளிக்கின்றனர்.

கருவறையுள் கவின்மிகு வெள்ளை நிறத்தி னில் லகுலீசராக (சிறிய வடிவில்) அருட் காட்சி தந்தருள்கிறார் ஐராவதேஸ்வரர். ஐராவதம் என்னும் வெள்ளை யானையால், வெண்மணலால் உண்டான இப்பெருமான் அகிலம் உய்ய அற்புதமாய் அருள்புரிகிறார்.

இறைவனை தரிசித்த பின்னர் ஆலய வலம்வருகையில், தென்மேற்கு மூலையில் வாமன ரூபராய் திருவருள் பொழிகிறார் விருச் சிக விநாயகர். மேற்கில் வள்ளி- தெய்வானை சகிதராக அருள்கின்றார் ஞானஸ்கந்தர். வடமேற்கில் கஜலட்சுமியின் திவ்ய தரிசனம்.

ஏனைய கோஷ்ட தெய்வங்கள் ஆலயத்தை முறையே அலங்கரிக்க, கலையெழில் அமைப் பாய்த் திகழ்கிறது கோவில். சோழர்கால கல் வெட்டுகள் பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன.

தல விருட்சமாக வில்வம் திகழ்கிறது. தல தீர்த்தங்களாக சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், எம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காஷ்யப தீர்த்தம், கௌதம தீர்த்தம், சேஷ தீர்த்தம், மிருத சஞ்சீவினி தீர்த்தம் ஆகியவை உள்ளன.

தினமும் மூன்றுகால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம் காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் திறந்திருக்கும். இவ்வாலய கும்பாபிஷேகம் கடைசியாக 2006-ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

பரிகாரங்கள்

விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள், சனி- செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் விருச்சிக விநாயகருக்கு அபிஷேகம் நடத்தி அர்ச்சனை செய்திட சிறப்பான பலன் கள் உண்டு.

கல்யாண வரம் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் அபிராமி அன்னைக்கு அபிஷே கம் நடத்தி, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய, சிறந்த பலன்களைப் பெறலாம்.

கந்தர் சஷ்டியில் முருகருக்கு சாற்றிய மாலையை அணிந்து, திருமண வைபவத்தில் தரும் இனிப்பை உண்டு, கல்யாணப் பிராப்தி யும், பிள்ளை வரமும் பெற்றுள்ளனர் பலர்.

சிறப்புப் பரிகாரமாக 12 ஜோதிர்லிங் கங்களை வரைந்து, 1008 தீபங்களை ஏற்றி, லிங்கங்களுக்கு தனித்தனி பிரசாதங்களை நிவேதித்து வழிபடும் அன்பர்கள் கோரிய வரங்களைப் பெறுகின்றனர்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் பாலைப் பருகிட, நாட்பட்ட தோல் வியாதிகள் நீங்குகின்றன.

இத்தலத்தின் விசேஷமான ஒன்பது தீர்த்தங்களில் நீராடி, ஐராவதேசுவரரையும், அன்னை அபிராமியையும் வழிபட பிள்ளைப்பேறு, குருதுரோக பாவ நிவர்த்தி, மரணபய நீக்கம், கேட்கும் வரம், நவகிரக தோஷ நிவர்த்தி போன்ற உயரிய பலன்களைப் பெறுவது திண்ணம்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்திலுள்ள இந்தத் திருத்தலம், கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்து சாலை யிலுள்ள ஆடுதுறையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு: சிவஸ்ரீ சம்பந்த குருக்கள், 94438 53212.