மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என்பவரது வரலாறு சேய்த் தொண்டர் புராணத்தில் (பாடல்கள் 2484-2497) உள்ளது. இவரது காலம் 1836-1884 என்பர். அவர் வரலாறு குறித்து சற்று சிந்திப்போம்.

பழனி- திரு ஆவினன்குடி தலம் நக்கீரர் பாடிய மூன்றாவது ஆற்றுப்படைத் தலமாகும். மலையின்கீழே திரு ஆவினன்குடி தலம் உள்ளது. நெல்- வனம் இருந்தது. மகாவிஷ்ணுவால் புறக்கணிக்கப்பட்ட மகாலட்சுமி (திரு), விஸ்வாமித்திரர் படையை வென்ற அகங்காரத்தினால் வலிமையிழந்த காமதேனு (ஆ), தன்னால் தான் உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என்னும் கர்வத்தால் சிவசாபம் பெற்ற சூரியன் (இனன்), பூமாதேவி (கு), தட்ச யாகத்தில் வீரபத்திரரால் ஒளியிழந்த அக்னி (டி) ஆகியோர் முருகனை வழிபட்டு நலம்பெற்ற தலம். எனவே திரு ஆவினன்குடி என்பது காரணப்பெயர்.

கடைச்சங்க காலத்தில் இத்தலம் பொதினி என்று அழைக்கப்பட்டுள்ளது. அகநானூறு, "பொன்றுடை நெடுநகர் பொதினி' என்று கூறுகிறது. பொதினியே பழனி என மருவியதென்பர்.

அவ்வையார் இத்தலத்தை "சித்தன் வாழ்வு' என்று கூறுகிறார். முருகனின் பல பெயர்களில் ஒன்று சித்தன் என்பது.

Advertisment

போகர் சித்தர் அமைத்த நவபாஷாண சிலையையே நாம் மலையில் தண்டம் ஏந்திய, இரு கரங்களுடன் உள்ள பழனி ஆண்டவராகக் காண்கிறோம்.

சிவனும் பார்வதியும் கயிலையில் அமர்ந்திருக்க, நாரதர் ஒரு பழம் கொணர்ந்தார். கணபதி, முருகன் இருவருமே "எனக்கு' என்றனர். அதை இரண்டாக்கித்தர முடியாதென்பதால், "உலகை முத-ல் யார் வலம்வருகிறார்களோ அவருக்கே பழம்' என்றார். முருகன் தன் மயில் வாகனத் தில் ஏறி வேகமாகச் சென்றார். கணபதி தன் தொந்தியைத் தடவியபடி, "எலி வாகனம் மயிலைப்போல் வேகமாகச் செல்லாதே' என்று சிந்தித்து, சிவ- பார்வதியை வலம்வந்து, "உலகம் யாவும் உம்முள் அடக்கம். எனவே உலகை வலம்வந்துவிட்டேன். பழம் தருக' என்று கூற, சிவன் பழத்தை கணபதிக்குத் தந்தார். (இதே நிகழ்ச்சியை ஆந்திர மாநிலத்திலுள்ள ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலம் தலத்திற்கும் கூறுவர். அங்கேயும் தனிக் கோவில் உண்டு. வருட விழாவும் நடக்கும்.)

உலகைச் சுற்றிவந்த முருகன் அண்ணன் கரத்தில் பழம் இருப்பது கண்டு கோபம்கொண்டு, ஆண்டிக் கோலம்பூண்டு, தண்டத்துடன் மலையில் அமர்ந்தான். சிவ- பார்வதி வந்து, "நீயே பழம்; உனக்கொரு பழம் தேவையா?' என்றனர். அதனால் பழனி என்ற பெயர் உண்டாயிற்று என்பர். பழனங் கள்- வயல்கள் நிறைந்திருப்பதால் பழனாபுரி, பழனி எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர். முருகனது கோபம் அதிகமானதால் அவனைக் குளிரச்செய்ய பெருமளவு அபிஷேகங்கள் நடக்கும் தலம் பழனி. தாய்- தந்தையர்மீதுதான் கோபமே தவிர, பக்தர்களுக்கு அவன் பழமானவன். இனிமையானவன். ஞானம், அருள் வாரிவழங்கும் ஞானப்பழம் அவன். அவனது நவபாஷாண உருவ அபிஷேக நீரே வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் வயிற்றுவலியைத் தீர்த்தது.

Advertisment

பழனி என்றால் காவடிகளும் நினைவுக்கு வரும். காவடியாக முத-ல் சிவகிரி, சக்திகிரியை ஏந்தியவன் அகத்தியருடன் வந்த இடும்பன்தானே! இன்று தமிழகம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் காவடி எடுப்பது ஒரு முக்கிய வழிபாடாகத் திகழ்கிறது என்றால், அதற்குக் காரணமான அகத்தியரை நம்மால் மறக்கமுடியுமா? முருகனிடம் உபதேசம் பெற்றவரல்லவா அகத்தியர்! இதனை அருணகிரிநாதர்-

= தித்திக்கு முத்தமிழினைத் தெரியவரு பொதிகைமலை முனிவர்க்கு உரைத்தவனை-

= சீல அகத்திய ஞானத் தேனமுதைத் தருவாயே-

= சிவனைநிகர் பொதிய முனிவரை மகிழ இரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே-

= இயலும் இசையும் நடனமும் வகைவகை சத்யப் படிக்கினிது அகத்தியர்க்குணர்த்தி அருள் தம்பிரான்- என்றெல்லாம் புகழ்கிறார்.

இப்போது மாம்பழக் கவிச்சிங்க நாவலர் சரிதத்திற்கு வருவோம்.

அருணகிரியார் கந்தர் அலங்காரத்தில், "படிக்கின்றிலை பழனித் திருநாமம்' என்று கூறுகிறார். இதன் தத்துவம் என்ன? கங்கை என்று மூன்றுமுறை சொன்னாலே கங்கையில் நீராடிய பலன் கிட்டுமென்று கூறுவார்கள். அருணாசல என்று தலத்தின் பெயரை நினைத்தாலே (ஸ்மரணாத் அருணாசலே) முக்தி கிட்டுமென்பர். "தத் பாவம் பவதி'- எதை நினைக்கிறாயோ அவ்வாறே ஆவாய் எனப் பொருள். ஆக, பழனி என்று நினைத்தாலே ஞானம் பெருகும். பழமே வெற்றி என்று கூறுவர்.

மாம்பழம் என்பது அவர்களது குலப்பெயராம். இனிய, மதுரமான உரைசெய்பவர்கள் என்பதால் இவ்வாறு பெயர். சிற்பக்கலை வல்லுநர் குலத்தில் வந்தவர்கள் முத்தையா ஆச்சாரியார்-

velan

அம்மணியம்மை தம்பதியர். அவர்களது இரண்டாம் குழந்தையே மாம்பழம். மூன்றா வது வயதில் வைசூரி நோய் வர, அது உடல்முழுவதும் பரவி குணமாகவில்லை. எனவே ஒரு வாழையிலையில் குழந்தையை இட்டு பழனிமலை ஏறிச்சென்று முருகன் சந்நிதிமுன் வைத்தனர். பவரோக வைத்தியநாதப் பெருமானை வேண்டினர்.

அச்சமயம் அசரீரி வாக்கு, "யாமிருக்க பயமேன்? குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல். அவன் நலமடைவான்' என்று கூறியது. அது முருகன் வாக்கே என்று வீட்டுக்கு வந்தனர். நாளடைவில் உடல் நலமடைந்தது. ஆனாலும் கண்கள் பார்வையை இழந்தன. பழனி ஆண்டவனே கதியென்று பெற்றோர் குழந்தையை மீண்டும் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர்.

அர்ச்சகர் அபிஷேக நீர், பஞ்சாமிர்தம், விபூதிதந்து, "பழனி ஆண்டவன் காத்தருள்வான்; கவலை வேண்டாம்' என்றார். பின்னர் வீடு திரும்பினர்.

அன்றிரவு முத்தையா கனவில் முருகப்பெருமான் ஒரு வயோதிகர் வடிவில் தோன்றி, "புறக்கண்கள் பாதிப்பென்பது ஊழ்வினையால் வந்தது. கவலை வேண்டாம்; யாம் ஞானக்கண் தருவோம். எம் புகழ் பாடுவான்' என்று கூறி மறைந்தார்.

"நாள் என் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என் செய்யும்' என்பார் அருணகிரியார். "வினை ஓட விடும் கதிர்வேல்' என்பார். "வேலுண்டு வினையில்லை; சேவலுண்டு ஏவ-ல்லை; மயிலுண்டு பயமில்லை; குகனுண்டு குறைவில்லை' என்பர்.

சிவபெருமான் கண்ணப்பருக்கு கண் வழங்கவில்லையா? மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரமருளவில் லையா? சுந்தரருக்கு பார்வை தரவில்லையா? குமரகுருபரரின் வாய்பேசா குறையைத் தீர்த்து கவிபாடும் ஆற்றலை முருகப்பெருமான் தரவில்லையா? காமாட்சியம்மன் மூகனுக்கு (ஊமை) தாம்பூலம் தந்து 500 கவிகள் பாடவைக்கவில்லையா? முருகம்மையாரின் துண்டுபட்ட கை வளரவில்லையா? ஆதிசங்கரரின் எட்டு வயது ஆயுள் என்பது 16, 32 என அதிகரிக்கவில்லையா? அவ்வாறா யின் ஏன் இவருக்கு கண்பார்வையை முருகன் வழங்கவில்லை? ஆண்டவன் லீலைகள் நமக்குப் புரியாது.

தேவார மூவர்களுள் சம்பந்தரும் சுந்தரரும் இருபது வயதிலேயே சிவனடி சேர்ந்தனர்.

அப்பரோ எண்பது வயதிற்குமேலும் வாழ்ந்தாரே. எனவே எல்லாம் ஈசன் செயல் என்று மனம்தேறிய முத்தையா, பார்வை இழந்த தன் மகனுக்கு தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவற்றை போதித்தார். சிறுவனின் முதுகில் எழுத்துகளை எழுதி வார்த்தைகளை உணரச் செய்தார்.

ஊனக்கண் இல்லையெனிலும் ஞானஸ்கந்தனின் அருளால் ஞானக்கண் மிளிர்ந்தது. மாரிமுத்துக் கவிராயர் என்பவரிடம் மேலும் கற்றார். வடமொழியையும் கற்றார். சில வருடங்களிலேயே அந்தாதி, மாலை, உலா, தூது, பிள்ளைத்தமிழ் போன்றவற்றை முறையாகக் கற்று கவிபுனையத் தொடங்கினார்.

அருணகிரியாரின் கந்தரனுபூதி கடைசி வரியான "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்னும் வரியை துதித்துவந்தார். "யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது' என்றுணர்ந்து செயல்பட, கவி மாலைகள் உதிர்ந்தன. பழனிப் பதிகம், குமரகுருப் பதிகம், செந்திற் பதிகம், சிவகிரிப் பதிகம் முதலிய பாக்களைப் பாடி பழநி ஆண்டவனின் திருவடியில் சேர்ப்பித்தார்.

ராமநாதபுர சமஸ்தான முத்துராம-ங்க சேதுபதி தமிழ்ப் பற்றுள்ளவர். அவர் மாம்பழக் கவிஞரின் பாக்களில் மனம் மகிழ்ந்து, "கவிராஜர்' என்னும் பட்டத்தையும், பல விருதுகளையும் அளித்தாராம். மதுரை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை என சென்று பாடி, பக்தர்களாலும் செல்வந்தர்களாலும் ஈர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பெயருக்கேற்ப ஸ்ருங்கார பாக்கள் பலவும் பாடினாராம். சதுரங்க பந்தம், அஷ்டநாக பந்தம், சித்திரக்கவி போன்ற இயற்றுவதற்கு மிகக்கடினமான கவிகளையும் புனைந் துள்ளார். 27 வயதில் திருமணம் புரிந்து, பழனி ஆண்டவன் அருளால் நலமுடன் வாழ்ந்தார்.

அவர்மீது அந்தாதி பாடல் ஒன்றுள்ளது.

"கவிஞர் கொண்டாடும் பழனாபுரிவாழ் கலைஞர் என்ற

புவிபுகழ் முத்தைய சிற்பியின் புத்திரராய் புறக்கண்

அவிரது அகக்கண்ணால் ஐயனைக்கண்டு பாலாட்டி மகிழ்

பவிகங்கொள் மாம்பழ நாயனார் பாதம் பணிந்து உய்வனே.'

அவர் பழனி முருகன்மீது இயற்றிய சில பாடல்கள் விவரம்:

பழனி நான்மணிமாலை (40).

திருப்பழனி வெண்பா (100).

பழனி வெண்பா அந்தாதி (100).

பழனாபுரி மாலை (100).

பழனி கோவில் விண்ணப்பம் (126).

அவர் பாடியவை 1908-ல் இரு பாகங்களாக வெளிவந்தனவாம். எளிமையான தமிழில் அமைந்த பாக்கள். அவற்றுள் ஒரு பாடல் வரியை சிந்தித்து நிறைவு செய்வோமா...

"என்னென்ன விதமாக முன்னின்று சொல்-

முறையிட்ட போதினும் ஏழைமேல்

எள்ளளவு கிருபையும் இலாததேன் உன்மனம்

இரும்போ திரண்ட கல்லோ

அன்னையே சிறுமதலை தன்முகம் பாராமல்

அகலத் துரத்திவிட்டால்

ஆதரிப்பவர்கள் எவர் பூதலத்தில்

இனிய அமுதகவி மாலைசூட்டி

உன்னையே தொழும் அடிமை தன்னை நீ நழுவவிடில்

உன்னை யல்லாமல் வேறோர் உதவியுண்டோ

பல உணர்த்தலென்னே எனை

உவந்தாள்வது உனது கடனால்

தென்னர்கோன் கன்மச்சுரம் கூன் இரண்டையும்

தீர்த்தருள் செய் கார்த்திகேயா

செயமிகத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு

சிவகிரி குமர குருவே.'

மாம்பழக் கவிச்சிங்கர்