துருவன்
மகாவிஷ்ணுவின் அம்சமான பிரமதேவரின் குமாரர் சுயம்புவமனு ஆவார். இந்த சுயம்புவமனுவிற்கும், சத்ருபைக்கும் இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவரின் பெயர் பிரியவிரதர். இன்னொருவரின் பெயர் உத்தான பாதர்.
இந்த உத்தானபாதருக்கு, சுனீதி, சுருசி என்ற இரு மனைவியர் இருந்தனர்.
இவருக்கு மூத்தவளான சுனீதியிடம் ப்ரியமில்லாமலும், இளைய மனைவி சுருசியிடம் மிகவும் நெருக்கத்துடனும் இருந்தார்.
சுனிதிக்கு துருவன் என்ற மகனும், சுருசிக்கு உத்தமன் என்ற மகனும் இருந்தனர். ஒருநாள், துருவன், தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து விளையாட ஆசைப்பட்டான்.
ஆனால் அவனின் சிற்றன்னை, அவனைத் தள்ளிவிட்டு, "நீ என் வயிற்றில் பிறந்தால்தான் அரியாசனம் ஏறமுடியும். அதற்கு பகவானை நோக்கி தவம் செய்' என்று கடுமையாக கூறினாள்.
இதைக்கேட்ட இவனின் அன்னையும், அவள் கூறியது சரிதான். நீ நாராயணனின் பாதத்தை வணங்கி, அவள் வயிற்றில் பிறப்பதற்கு வரம் வாங்கு என்றாள்.
இளம் பாலகனான துருவன், காட்டை நோக்கி செல்லத் தொடங்கினான். இதைக்கண்ட நாரதர், அவனை தடுக்க முயற்சித்தார். ஆனால் துருவனோ பிடிவாதமாக, நாராயணனை தரிசிக்கும் வழியை மட்டும் உபதேசியுங்கள் என்றான். நாரதரும், நீ மனதை அடக்கி புலன் இன்பங்களை நீக்கி, அவரை துதி செய்துவந்தால், அவர் நேரில் தோன்றி அருள்செய்வார் என்று கூறிவிட்டு சென்றார்.
துருவன் யமுனை ஆற்றங்கரையிலுள்ள மதுவனத் தில் கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தான். முதல்நாள் நன்னீரில் நீராடி, இரவு உபவாசம் இருந்தான். இலந்தைப்பழம், விளாம்பழம் போன்றவற்றை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உட்கொண்டான். முதல் மாதம் கழிந்தது. இரண்டாம் மாதம் முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை உலர்ந்த இலை, பச்சைப்புல் போன்றவற்றை மட்டும் உண்டு உபவாசம் இருந்தான். மூன்றாம் மாதம் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தினான்.
நான்காம் மாதம் அதையும் நீக்கிவிட்டு, பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை காற்றை மட்டும் சுவாசித்து வந்தான். மற்ற நேரங்களில் மூச்சை அடக்கி வைத்திருந்தான்.
அப்போது ஒரு காலை மட்டும் பூமியில் ஊன்றி, கட்டைபோல் அசைவற்று பிரமத்தை தியானம் செய்தான்.
அவனுடைய கடுமையான தவத்தைக் கண்டு மூவுலகமும் நடுங்கியது. எல்லா உலகத்தவர்களும் மூச்சுவிட முடியாமல் திணறினர்.
இதனைக்கண்ட இந்திரன் முதலானோர் விஷ்ணுவிடம் சென்று, உலகிற்கே பிராண நிரோதம் ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என வேண்ட, விஷ்ணுவும், மதுவனத்திற்கு, கருட வாகனத்தில் தனது பக்தனை காணச் சென்றார்.
அவரைக் கண்டவுடன் பரவசமடைந்தான். அவரை துதிக்க விரும்பினான். ஆனால் சிறுவனாதலால் வார்த்தைகள் புலப்படாமல் தவித்தான்.
இதைக்கண்ட நாராயணர், தனது கையில் இருந்த சங்கத்தால் அவன் கன்னங் களை மெல்ல வருடினார்.
வேத சொரூபமாகிய அந்த சங்கம், கன்னங்களில் பட்டவுடன், ஜீவன் ஈஸ்வரன் என்ற உண்மை தெரிந்தது. மனமகிழ்வுடன், பகவானை தோத்திரம் செய்தான்.
இதனைக்கேட்ட பகவான் மனமகிழ்ந்து, மூவுலகங்களும் உன்னை வணங்கும்படி செய்கிறேன். சப்தரிஷிகளும் நட்சத்திரங்களாக மாறி உன்னை சுற்றிகொண்டிருப் பர் என்றார்.
பின்னர் துருவன் நாட்டிற்கு மீண்டு, அரசாட்சி செய்தான். பின் துறவு நிலையை ஏற்று, பத்ரிகா சிரமம் சென்றான். நீண்ட தவத்தின் முடிவில் விஷ்ணு தூதர்கள், பகவானிடம் அழைத்துச்சென்றனர்.
விமானம் மூவுலகையும் தாண்டி, சப்தரிஷி மண்டலத்தையும் தாண்டி விஷ்ணு உலகம் சென்றடைந்தது.
மூவுலகத்திற்கும் சூடானமணியைப்போல் நட்சத்திரமாக பிரகாசிக்கிறான். அவனை சுற்றி ஜோதி சக்கரமானது சுற்றி கொண்டிருக்கிறது. நவகிரகங்களும், அஸ்வினி நட்சத்திரங்களும் அந்த துருவ மண்டலத்தில் சுற்றி வருகிறது.
ஐந்து வயதில், நாரதரிடம் உபதேசம் பெற்ற துருவன் இன்றைக்கும் துருவ நட்சத்திரமாக விளங்கிவருகிறான்.
இதுவே துருவனின் கதையாகும்.
பிரகலாதன்
இரண்யகசியு எனும் அரக்கன், மிகப்பெரிய வரங்களை பெறும் பொருட்டு, மந்திர மலைக்கு தவம் செய்ய சென்றான். அதுவரையில் பயந்து, ஒளிந்துகொண்டு இருந்த தேவர்கள், அரக்கனின் அரண்மனையை கைப்பற்றினர். இரண்ய கசிபுவின் மனைவி கயாதுவை சிறைப்பிடித்தனர். அப்போது கயாது கர்ப்பமாக இருந்தாள். இதனைக்கண்ட நாரதர். இப்பத்தினியை சிறை பிடித்து செல்வது பாவமாகும் என்றார்.
அதைக்கேட்ட இந்திரன், இவருக்கு பிறக்கும் பிள்ளையும் எங்களை கொடுமைப் படுத்தும். அதனால் பிறக்கப் போகும் குழந்தை யையும் கொன்றுவிடுகிறேன் என்றார்.
அதைக்கேட்ட நாரதர், இவருக்கு பிறக் கப்போகும் பிள்ளை, மகாவிஷ்ணுவின் பரம பக்தனாக மாறி, தேவர் களுக்கு நன்மை செய்ய போகிறான் என்றார்.
அதனால் இந்திரன், கயாதுவை வணங்கி, நாரதனின் ஆசிரமத் திற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு நாரதர், கர்ப்ப மான கயாதுவுக்கு தர்மத்தின் ரகசியத் தையும், ஞானத்தை யும் தொடர்ந்து உபதேசித்து வந்தார். இது அத்தனையையும் நாரதரின் கருணையில், கருவில் இருந்த, பிரக லாதன் கேட்டு, அதனை மனதில் இருத்திக் கொண்டார்.
அதனால், பிரக லாதன்சிறந்த விஷ்ணு பக்தனாகி, நரசிம்மரை தூணில் இருந்து வெளிப்பட வைத்த புராண நிகழ்வு உங்களுக் குத் தெரிந்திருக்கும்.
துருவன் தனது வைராக்கியத்தால் விஷ்ணு விடம் வரம்பெற்று, துருவ நட்சத்திரம் ஆனான். பிரகலாதன் கர்ப்பத்திலேயே, விஷ்ணு பக்தன் ஆகிவிட்டான்.
இக்காலத்தில் கர்ப்பமான பெண்கள் அடிதடி, கொலை, கொள்ளை, வம்பு தொடர் களை எப்போதும் டி.வியில், சினிமாவில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை கருவில் பார்க்கும் குழந்தையும், எவனை அடிக்கலாம், எப்போது சம்பவம் பண்ணலாம் என்றே திரிகிறது.
தயவுசெய்து இப்போதைய இளம் பெற்றோர்கள், உங்கள் குழந்தைகளை சற்று கண்டிப்புடன், இரண்டு அடி கொடுத்து, மனசில் சற்று பயம் இருக்கும்படி வளருங்கள். இந்த அடிமன பயம்தான் குழந்தைகளை கட்டுப்பாடாக, நல்ல மனிதராக வளர்க்கும்!