மேஷம்
இம்மாதம் மே 1-ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி றார். ரிஷப ராசி 2-ஆமிடம். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்கள் உத்தமான இடங்கள். அத்துடன் மேஷ ராசிக்கு பாக்கியாதிபதியான குரு 2-ஆமிடத்துக்கு வருவது சிறப்பு. ஏற்கெனவே, குரு நின்ற இடம் ஜென்ம ராசி. விரயாதிபதி ஜென்மத்தில் நின்றதால் அலைச்சல், சேமிப்புக்கு வழிவகையில்லாத செலவு, திடீர் பயணம் போன்றவற்றை சந்தித்த நிலை! ஒருசிலருக்கு சுப விரயத்தை யும் கொடுத்தது. இப்போது 2-ல் வந்திருக்கும் குரு 6-ஆமிடம், 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கி றார். தனவரவுகளுக்கு இடமுண்டு. 6-ஆமிடத்துக்கு 4, 7-க்குடைய ஆதிபத்தியம் பெற்று அதற்கு 9-ல் நிற்கி றார். ஒருசிலர் பூமி, மனை வாங்கலாம் அல்லது புதிய வீடு கட்டலாம். அதற்கு கடனுதவியும் கிடைக்கும். திருமண பாக்கியம் கைகூடும். அதற்கும் ஒருசிலர் கடன் வாங்கி செய்யும் சூழல் அமையலாம். குரு 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். தேவையற்ற விமர்சனங் களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில்கூட மனைவி, பிள்ளைகள்வகையில் விமர்சனத்தை சந்திக்க நேரும் 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- தொழில் அபிவிருத்தி, உத்தியோக உயர்வு, மேன்மை போன்றவற்றைத் தரும். மேலும் 9-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் வழிநடத்தும்.
ரிஷபம்
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த குரு மே 1-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். "ஜென்ம இராமர் சீதையை வனத்திலே வைத்தது என்பது பாடல்.' அது நீங்களும் அறிந்ததே! ரிஷப ராசிக்கு 8, 11-க்கு உடைய குரு ஜென்ம ராசியில் வருவதால் நஷ்டமும் உண்டு; லாபமும் உண்டு. 8-க்கு உடையவர் ஜென்மத்தில் நிற்பதால் ஏமாற்றம், இழப்பு, அபகீர்த்தி ஆகிய பலனையும் தரும். 11-க்குடையவர் ஜென்மத்தில் நிற்பதால் லாபமும் வெற்றியும் தரும். ஜென்ம குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5-ஆமிடம் புத்திரஸ்தானம், மனது, மகிழ்ச்சி, திட்டம், எண்ணம் குரு உபதேசம் ஆகியவற்றையும் குறிக்கும். நீண்டகாலமாக வாரிச இல்லாமல் வருத்தப்பட்ட தம்பதிகளுக்கு வாரிசு யோகம் உண்டாகும். சிலர் தீட்சை பெறலாம். குரு உபதேசம் உண்டாகும். ஜோதிடம் பயிலலாம். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண வாய்ப்பை உண்டாக்கி தருவார். சிறுசிறு தாமதங்கள் ஏற்பட்டாலும் தடையாகாது. நல்ல வாழ்க்கைத்துணை அமையும். கணவன் அல்லது மனைவி பெயரில் தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பூர்வீகச் சொத்துகள்வகையில் பிரச்சினைகளைத் தவிர்ப்பார். 9-க்குடைய சனியும் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். சிக்கல்கள் விலகும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். ஆன்மிக ஈடுபாடு அதிகமாகும். தந்தைக்கு லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
மிதுனம்
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் நல்ல இடத்தில் இருந்த குருபகவான் இப்போது 12-ஆமிடமான விரயஸ்தானத்தில் மாறுகிறார். மிதுன ராசிக்கு 7-க்குடையவர் பாதகாதிபதி. அவர் 12-ல் மறைவது ஒரு பிளஸ் பாயிண்டுதான். வெளிநாட்டு பயணம், திடீர் வேலைமாற்றம், இடமாற்றம் போன்ற பலன்களைத் தருவார். 12-ஆமிடத்துக் குரு 4-ஆமிடம், 6-ஆமிடம் 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். 4-ஆமிடம், பூமி, வீடு, வாகன சுகம் என்பது தெரிந்ததே! அந்த இடத்துக்கு 7-க்குடையவர் 9-ல் நின்று பார்ப்பதால் அது சம்பந்தானவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். தாயார்வகையில் நலன்கள் உண்டாகும். புதிய மனைவி வாங்கலாம். அல்லது புதிய வீடு கட்டலாம். மாணவர்களுக்கும் கல்வியில் ஆர்வம் அக்கறை உண்டாகும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மேற்கண்ட 4-ஆமிடத்துப் பலனுக்காக கடன் வாங்கும் அமைப்பு ஏற்படும். போட்டி, பொறாமையும் உருவாகும். மறைமுக சத்ரு தொல்லைகள் இருந்தாலும் 6-ஆமிடத்தை கேதுவும் பார்ப்பதால் சத்ருக்களை சமாளிக்கலாம். 8-ஆமிடத்தை குரு பார்க்கிறார். விபத்து, மரணம், அவமானம், அபகீர்த்தி ஆகியவற்றைக் குறிக்கும். எதிலும் கவனமும் எச்சரிக்கையும் அவசியம். யாருக்கும் ஜாமீன் பொறுப்பு எதுவும் ஏற்கவேண்டாம். வாகனவகையில் முன்னெச்சரிக்கையாக ஓட்டவேண்டும். வீண் கற்பனை பயமும் மனதில் கவலையை உண்டாக்கும். என்றாலும் பூர்வ புண்ணிய பலன் காப்பாற்றும்.
கடகம்
கடக ராசிக்கு கடந்த ஒரு வருடகாலமாக 10-ல் இருந்த குரு இப்போது லாபஸ்தானமான 11-ஆமிடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த 10-ஆமிடத்தைவிட இப்போது மாறும் இடமான 11-ஆமிடம் மிக அற்புதமான இடம். கடந்த காலத்தில் குரு 10-ல் இருந்தார். அது 9-க்குடையவர் 10--ருந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்றதால் கெடுதல் இல்லை. என்றாலும் ஒருசிலருக்கு உத்தியோக வகை சங்கடங் கள் ஏற்படத்தான் செய்தது. 11-ஆமிடத்துக் குரு உங்களுக்கு முயற்சிகளுக்கு வெற்றி ஏற்படுத்தி மனதில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருவார். 11-ஆமிடத்து குரு 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம், தன்னம்பிக்கை, தைரிய ஸ்தானம். சகோதரவகையில் அல்லது நண்பர்கள்வகையில் கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவகையில் சுபநிகழ்வுகளும் நடைபெறும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- பிள்ளைகளால் நன்மதிப்பும் பாராட்டையும் தருவார். திருமண மாகி வாரிசுக்காக பலகாலம் காத்திருப்பவர்களுக்கு இக்கால கட்டம் வாரிசு யோகம் உண்டாகும். பெண் பிள்ளைகளுக்கு ஆபரணம் அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையையும் அன்யோன்யத்தையும் தருவார். திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும்.
சிம்மம்
இதுவரை சிம்ம ராசிக்கு 9-ஆமிடத்தி-ருந்த குரு இப்போது 10-ஆமிடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே பாக்கிய ஸ்தானத்தி-ருந்த குருபகவான் பலருக்கு யோகத்தைக் கொடுத்தார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஜனன ஜாதக தசாபுக்தி அடிப்படையில் சிலருக்கு தாமதமாகி இருக்கலாம். இப்போது 10-ல் வரும் குரு சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம். 10-ல் வரும் குரு 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். குருவுக்கு இருக்குமிடம் சிறப்பு. அதைவிட பார்க்குமிடம் சிறப்பு. 2-ஆமிடம், 4-ஆமிடத்தைப் பார்ப்பது யோகம்தான். ஆனால் 6-ஆமிடத்தைப் பார்ப்பதுதான் நல்லதல்ல! குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருளாதார வளர்ச்சிக்கு இடமுண்டு. சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். கேளிக்கை விருந்தில் கலந்துகொண்டு பாராட்டு பெறலாம். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மாணவ- மாணவியருக்கு மேற்கல்வி யோகத்தைத் தருவார். சிலர் புதிய மனை வாங்கலாம். அல்லது புதிய வீடு வாங்கலாம். அல்லது பழைய வீட்டை சீர்திருத்தம் செய்யலாம். தாயார் உடல்நலனில் தேக சௌக்கியம் உண்டாகும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மேற்படிவகையில் கடன் யோகத்தைத் தருவார். மறைமுக சத்ருகளும் உண்டாகலாம். போட்டி, பொறாமைகளையும் சமாளிக்க வேண்டியது வரும்.
கன்னி
கன்னி ராசிக்கு கடந்த வருடம் 8-ல் இருந்த குரு இம்மாதம் 1-ஆம்தேதி முதல் 9-ஆமிடத்துக்கு மாறுகி றார். ஜென்ம ராசியைப் பார்க்கிறார். பாக்கியஸ்தானத் திற்கு வரும் குரு உங்களுக்கு ஏற்றத்தையும் யோகத்தையும் தருவார். 7-க்குடையவர் 8-ல் மறைந்த காரணத்தால் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமைக்குறைவு, பல இன்னல்களைச் சந்தித்தீர்கள். 9-ல் வரும் குரு 1-ஆமிடம், 3-ஆமிடம், 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு உங்கள் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து போன்ற வற்றில் நிலைகளை உயர்த்துவார். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உடன்பிறந்தவர்கள் வகையில் நண்பர்கள் வகையிலும் நன்மை கள் உண்டாகும். உங்களை விட்டு விலகிய நட்புக்கள் இப்போது வந்துசேரும். தைரிய மும் தன்னம்பிக்கையும் கூடும். 5-ஆமிடம், புத்திர ஸ்தானம், மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திர உபதேசம் இவற்றைக் குறிக்கும் இடம். பிள்ளைகளால் பெருமையும் நன்மதிப்பும் உண்டாகும். "தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்- மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்'' என்ற குறளுக்கேற்ப செயல்படலாம்.
துலாம்
இதுவரை துலா ராசிக்கு 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆமிடத்துக்கு மாறுகிறார். 7-ல் குரு இருந்த காலம் எவ்வளவுதான் பிரச்சினைகள் தோன்றினா லும் குரு ராசியைப் பார்த்த பெருமையால் எதையும் சமாளிக்க முடிந்தது. இப்போது 8-ல் குரு வருவதால் விபத்து, சஞ்சலம், அபகீர்த்தி இவை ஏற்படுமோ என்று பயப்படவேண்டாம். 3, 6-க்குடைய ஆதிபத்தியம்பெற்ற குரு 8-ல் வருவதால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல திடீர் அதிர்ஷ்டத்தையும் தருவார். 8-ஆமிடத்துக் குரு 2-ஆமிடம், 4-ஆமிடம், 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-ஆமிடம் என்பது வெளியூர் வாசம், அயன சயன போகம், விரயச் செலவு போன்றவற்றைக் குறிக்கும். சுபவிரயங்கள் உண்டாகும். வெளியூர் வேலை மாற்றங் கள் ஏற்படலாம். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடியிருப்பு மாற்றம் அல்லது புதிய மனையோகம், வாகனவகையில் முன்னேற்றம் போன்ற பலன்களைத் தருவார். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயார் உள்ளவர்களுக்கு அவர்களது உடல்நலனில் தேகசுகம் பெறும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடும்ப வாழ்வில் நிம்மதியைத் தருவார். 2-ஆமிடத்துக்கு குரு 7-ல் வருவதால் திருமண யோகத்தையும் அமைத்துத் தருவார். தனவரவும் உண்டாகும். செலவுசெய்ய முடிகின்றது என்றால் வரவும் வருகிறது என்றுதானே அர்த்தம். "இறைக்கிற கிணறுதான் ஊறும்.'
விருச்சிகம்
இதுவரை விருச்சிக ராசிக்கு 5-க்குடைய குரு 6-ல் மறைந்திருந்தார். இப்போது 7-ஆமிடத்துக்கு மாறி ராசியைப் பார்க்கிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள். 6-ல் குரு இருந்த காலம் எந்தவித நற்பலனையும் அனுபவிக்க முடியவில்லை. கடன், விரயம், வீண் அலைச்சல், மன உளைச்சலைச் சந்தித்தீர்கள். இப்போது 7-ஆமிடத்துக்கு வரும் குரு திருமணம், உபதொழில், கணவன்- மனைவி ஒற்றுமை இவற்றைக் குறிக்கும். 7-ஆமிடத்து குரு 1-ஆமிடம், 3-ஆமிடம், 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும், செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். உங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக அமையும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு சகோதரவகையில் நிலவிய பெரிய விவகாரங்களும் அல்லது இலைமறை கால்மறை மாதிரி நிலவிய பனிப்போரும் பிரச்சினைகளும் மாறிவிடும். பங்காளிப் பகையும் விலகும். ஒற்றுமை உண்டாகும். 11-ஆமிடம் மூத்த சகோதரத்தையும் குறிக்கும்; உபய களஸ்திர யோகத்தையும் குறிக்கும். அந்தவகையில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீண்டநாள் நடந்து வந்த பூர்வீகச் சொத்து வழக்கு உங்களுக்கு சாதமான தீர்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
தனுசு
கடந்த ஓராண்டு காலமாக 5-ல் நின்று உங்கள் ராசியைப் பார்த்த குரு இப்போது 6-ஆமிடத்துக்கு மாறுகிறார். ராசிநாதன் மறைவது நல்லதல்ல. என்றாலும் 5-ஆமிடத்துக்கு 2-ல் குரு வருவதால் தனவரவு சம்பந்தமன திட்டங்களில் அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். 6-ல் வரும் குரு, கடன், போட்டி, பொறாமை, தேகசுகக் குறைவு போன்றவற்றை ஏற்படுத்துவார். 6-ல் வரும் குரு 2-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குருவால் பிறந்த ஊரைவிட்டு மாறுவதும், புது இடத்தில் வேலை செய்வதும், குடியிருப்பை ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பையும் குரு தருவார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு அனுகூலம் உண்டாகும். 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தொழில், உத்தியோகம், வேலை இவற்றில் நற்பலன்களைத் தருவார். ஒருசிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். 4-க்குடையவர் குரு 6-ல் நின்று 12-ஆமிட மான விரயத்தை பார்ப்பதால் வீடு, வாகனவகையில் சுப செலவுகள் ஏற்படும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தனவரவைப் பெருக்குவார். தாராள வரவு- செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும் நிறைவும் ஏற்படும். சேமிப்புக்கும் இடமுண்டு. ஏதேனும் டெபாசிட் போன்றவகையில் முதலீடு செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்கு 4-ல் கேந்திர பலம்பெற்ற குரு மே 1-ஆம் தேதிமுதல் 5-ஆமிடத்தில் திரிகோண பலம் பெறுகிறார். மேலும் உங்கள் ராசியைப் பார்க்கி றார். இதுவரை ஏழரைச்சனியின் பிடியில் துன்பப்பட்டு, துயரப்பட்டு வேதனைப்பட்டு வந்த நீங்கள் சனியின் கடைசிக்கட்டமான பாதச்சனியில் இருக்கிறீர்கள். இப்போது 5-ல் வரும் குரு சனியினால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துபோட்டு ஆறுதல் தருவார். உங்கள் நீண்ட காலத்திட்டங்கள் செயல்வடிவம் பெறும். பிள்ளைகளைப் பற்றிய கவலை விலகும். அவர்களால் நன்மதிப்பு உண்டாகும். 5-ஆமிடத்து குரு 1-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் திறமைகள் இனிமேல் வெளிப்படும். தீர்த்தி பெருமை உண்டாகும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுயமரியாதை காப்பாற்றப் படும். 9-ஆமிடம் பாக்கிய ஸ்தானம். பூர்வீகச் சொத்து களை அல்லது சுயசம்பாத்திய சொத்துகளை இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை இனி மாறிவிடும். தெய்வத் திருவருளும் குருவருளும் கிடைக்கும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு, கடன்பட்டு நடத்திவந்த தொழி-ல் கடன் அடைப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடையும்படியான அமைப்புகளை உருவாக்குவார். தொழில் மேன்மை அடையும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 3-ஆமிடத்தில் இருந்த குரு இப்போது 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த இடமும் சுமார்தான். இப்போது மாறியிருக் கும் இடமும் சரியில்லாத்துதான். என்றாலும் 4-ல் வரும் குரு பூமி, வீடு, வாகனம், தேகசுகம் வகையில் நற்பலனைத் தருவார். குரு சுபகிரகமல்லவா! 4-ல் வரும் குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 8-ஆமிடத்தைப் பார்க்கும் குரு அது சம்பந்தப்பட்ட பலன்களை பெருக்குவார். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. விபத்து ஏற்பட இடமுண்டு. மனச் சஞ்சலம் உண்டாகும். தாயார் உடல்நலனில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். 10-ஆமிடமான தொழில் ஸ்தானத்துக்கு குரு 2, 5-க்குடையவர் என்பதாலும் 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளைத் தற்கா-கமாக ஒத்திவைப்பது நல்லது. கூட்டுத் தொழி-ல் உள்ளவர்கள் விருந்தி சம்பந்தமான திட்டங் களை மேற்கொள்ளலாம். 12-ஆமிடத்தை குரு பார்ப்ப தால் விருத்திக்கு உண்டான விரயங்களை சுபவிரயமாக மாற்ற முயற்சிக்கலாம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். வெளியூர் அல்லது வெளி மாநில வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு காரிய ஜெயம் ஏற்படும்.
மீனம்
இதுவரை மீன ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆமிடத்துக்கு மாறுகிறார்! 2-ல் குரு இருந்தபோது பெரிய நன்மைகளை அனுபவிக்க முடியவில்லை. காரணம் சனி அதிசாரமாக ஆகஸ்ட் வரை கும்பத்தில் இருந்ததும், டிசம்பர் 2023 முதல் ஏழரையில் விரயச்சனி ஆரம்பமானதும் தான்! 3-ல் வரும் குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்துக்கு 6-ல் குரு வந்திருப்பதால் சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். 4-ஆமிடத்துக்கு 12-ல் குரு வந்திருப்பதால் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். மேலும் சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகளும் உண்டாகலாம். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் திருமணத்தடை விலகும். இன்னும் கல்யாணம் கைகூடவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோருக்கு கவலை நீங்கி பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கைகூடும். கணவர்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். தகப்பனார் உதவியும் ஆசியும் கிடைக்கும். தெய்வத் திருவருளும் அமையும். தீட்சை உபதேசம் போன்றவற்றைப் பெறலாம். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வெற்றி வாய்ப்பைத் தருவார். முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை அடையலாம். குருவருளும் பரிபூரணமாக அமையும். யோகக்காரனுக்கு ஆண்டவன் காவல்காரன் என்பதுபோல நற்பலன் அமையும்.
அலைபேசி: 99440 02365