மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் குரு சாரத்தில் சஞ்சாரம் (புனர்பூசம்). கடந்த மாதம் 2-ல் நிற்கும் குருவும் வக்ரநிவர்த்தி. ராசிநாதன் செவ்வாயும் வக்ரநிவர்த்தி. 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் நிலவிய பிரச்சினைகள், சிக்கல்கள் விலகும். 2-ஆமிடத்துக்கு குரு ஒருபுறம் தன வரவு தந்தாலும் செலவுகளும் மறுபுறம் வந்துகொண்டு இருக்கும். 2-க்குடைய சுக்கிரன் 12-ல் உச்சம். மாத ஆரம்பத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். எதிர்பாராதவகையில் திடீர் செலவுகளும் விரயங்களும் ஏற்படலாம். 12-ல் நிற்கும் புதன் நீசம் பெற்றாலும் அவரும் 9-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகிறார். உடன்பிறந்தவர்களினால் மனவருத்தங்கள் உண்டாகலாம். என்றாலும் பிரிவினைகளுக்கு இடமில்லை. தாமரை இலை தண்ணீர்போல உறவுகள் இருக்கும். 11-ல் நிற்கும் சனி ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ஒருசிலருக்கு கால்வலி, உளைச்சல் போன்ற தொல்லை உண்டாகலாம் அல்லது தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற உபாதைகளையும் சந்திக்கலாம். 5-க்குடைய சூரியன் 12-ல் 15-ஆம் தேதிமுதல் சஞ்சாரம். தந்தைவழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருக்குள் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள்வகையில் நல்லவைகள் உண்டாகும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதிக்கு தனி சக்தி உண்டு. அவர்கள்மூலமாக இறைவனின் கருணை எளிதாக கிடைக்கும். கரூர் அருகில் நெரூர் சென்று ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திராள் சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். ஜென்ம ராசியில் குரு சஞ்சாரம். குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை. பொதுவாக பரிவர்த்தனை என்றால் அவரவர் வீட்டில் அந்த கிரகங்கள் இருப்பதாக அர்த்தம் என ஜோதிடவிதி கூறுகிறது. அந்தவகையில் சுக்கிரன் ஆட்சிபெற்றது போன்ற கணக்குதான். என்றாலும் 4-ஆம் தேதிமுதல் ராசிநாதன் வக்ரகதியில் அல்லவா இயங்குகிறார். அது நன்மையா- தீமையா என்ற ஆராய்ச்சியைத் தற்போது விலக்கிவிட்டு பலன்களை ஆராய்ந்தால் ராசிநாதன் ஜெய ஸ்தானத்தில் இருப்பது நன்மைதான். உங்கள் எண்ணம், திட்டக் கருதிய காரியங்கள் இவையாவும் செயல்வடிவம் பெறும். குருவும் 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள்வழியில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 2, 5-க்குடைய புதனும் 11-ல் நீசம். 9-ஆம் தேதிமுதல் அவரும் வக்ரகதி. உச்சனோடு புதன் சேர்ந்ததால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். தனவரவு உண்டாகும். 9-க்குடைய சனி 10-ல் சஞ்சரிப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். ஒருசிலர் உத்தியோகம் மாற்றம் பற்றிய சிந்தனைகளை எண்ணினாலும் உத்தியோக மாற்றம் சற்று காலதாமதமாகும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் பூமி, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட வகையில் சில முன்னேற்றங்களுக்கு இடமுண்டு. தகப்பனார்வழியே ஆதரவுக்கும் இடமுண்டு.
பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று ஸ்ரீகோடி சுவாமிகள் ஜீவசமாதி சென்று தரிசனம் செய்யவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 10-ஆமிடத்தில் சஞ்சாரம்; நீசம். சுக்கிரன் அங்கு உச்சமாக இருப்பதால் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 12-ல் இருக்கும் குரு அவ்வப்போது விரயச் செலவுகளைத் தருவார். கடந்த மாதம் வக்ரநிவர்த்தியான பிறகு விரயங்கள் சற்று குறையும். 12-க்குடைய சுக்கிரன் 10-ல் வக்ரமாகவும் இருக்கிறார். ஒருசிலர் உத்தியோக இடமாற்றத்தை சந்திக்கலாம். அல்லது ஊர்மாற்றத் தையும் எதிர்கொள்ளலாம். 9-ஆம் தேதிமுதல் 10-ல் உள்ள புதனும் வக்ரகதியில் சஞ்சாரம். ராசிநாதன் வக்ரம் பெறுவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிலநேரம் சந்தேகமோ அல்லது முயற்சியில் தாமத செயல்பாடோ ஏற்படலாம். பாக்கியாதிபதி சனி 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் முடிவில் காரிய அனுகூலம் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் வருவது சற்று சாதகமான பலனைத் தரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 12-ஆமிடத்து குரு 4, 6, 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீடு, கட்டடம் போன்வற்றில் செலவுகள் ஏதேனும் ஏற்படலாம். வேலை உண்டு, வீடு உண்டு, கார் உண்டு, குடும்பம் உண்டு. இப்படியெல்லாம் இருந்தாலும் ஒருசில நேரம் எதுவுமில்லாமல் வெற்றிடமாக இருப்பதுபோலவும் எதையோ நாடி மனது அலைவதுபோன்ற மாயையும் ஏற்படும்.
பரிகாரம்: சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபட்டு மனதை ஒருநிலைப்படுத்த முயலவும்; அமைதி பெறும்.
கடகம்
கடக ராசிக்கு 10-க்குடை செவ்வாய் 12-ல் மறைவு. 2-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம்பெற்றாலும் அவரும் வக்ரம். 12-க்குடைய புதன் 9-ல் நீசம். 9-ஆம் தேதிமுதல் புதனும் வக்ரம். எல்லாவற்றுக்கும் மேலாக அட்டமத்துச் சனி நடந்துகொண்டிருக்கிறது. ஆக, சாண் ஏற முழம் வழுக்கிய நிலையாக வடிவேலு சொல்லுவதுபோல கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி வைத்தால் என்ன பண்ணுவது?! இவையனைத்தும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் குரு தருவார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். நம்பிக்கையில்தானே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத் தேக்கம், ஒரே வேலை இருமுறை செய்யவேண்டிய சூழல், அதனால் காலவிரயம், பணவிரயம் போன்றவை உண்டாகும். செலவும் மறுபுறம் விழி பிதுங்க வைக்கிறது. இதனிடையே உற்றார்- உறவினர்வகையில் சஞ்சலம், சங்கடம், உறவுகளில் மனக்கசப்பு போன்றவற்றையும் சந்திக்கும் நிலை! 3-ஆமிடத்துக் கேது மனதைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார். அதற்கு குருவும் துணைபுரிவார். 5-ஆமிடத்தை குரு பார்த்தாலும் எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் தாமதம் ஏற்படலாம். எனினும் குடும்பத்தில் காணப்படும் கணவன்- மனைவி ஒற்றுமை ஒரு ஆறுதலும் தேறுதலும் தரும்.
பரிகாரம்: நமது கர்மவினையைக் குறைக்கும் சக்தி ஜீவசமாதிக்கு உண்டு என்பதால் மதுரை திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலையில் ஸ்ரீசோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்; மாற்றம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 2-ல் கேது. 8-ல் ராகு. 2-ஆமிடம் குடும்ப ஸ்தானம். அங்கிருக்கும் கேது குடும்பத்தில் குழப்பம், மனஸ்தாபம், புரித-ல் பிரச்சினை போன்ற சங்கடங்களைத் தருவார். 10-ஆமிடத்துக் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்ப தால் ஏதோ பிரிவினை யில்லாமல் ஓடிக்கொண்டி ருக்கிறது. 7-ல் உள்ள சனி கணவன்- மனைவிக்குள் தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகளை உண்டுபண்ணும். அதேசமயம் திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண தாமதத்தையும் ஏற்படுத்தும். 2-க்குடைய புதன் 8-ல் நீசம். 9-ஆம் தேதிமுதல் வக்ரம். மேலே கூறிய குடும்ப சங்கடத்திற்கு புதனின் நீசமும் வக்ரமும் ஒரு காரணம். மாத பிற்பாதியில் சூரியனும் 8-ல் மறைவு. ஒரு நேரம் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் ஒரு நேரம் மந்தமாக செயல்படும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரும். அலைச்சலும் அதிகமாகக் காணப்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் உண்டாகும். ஒருசிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் செல்லும் அமைப்பும் ஏற்படும். ஒரு சிலருக்கு காரண காரியமில்லாத கோபதாபங்களைச் சந்திக்க நேரும். 3-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைந் தாலும் உச்சம்- வக்ரம். உடன்பிறந்த வகையில் விரயச் செலவுகள் ஏற்படலாம். மாதக்கடைசியில் பணப் பற்றாக் குறையும் காணப்படலாம்.
பரிகாரம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் தவசிமேடை சென்று ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை தரிசிக்கலாம். சிதம்பரம் சென்று தில்லைக்காளியையும் வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசம். 9-ஆம் தேதிமுதல் வக்ரமும் பெறுகிறார். 2, 9-க்குடைய சுக்கிரனும் 7-ல் உச்சம். 4-ஆம் தேதிமுதல் சுக்கிரனும் வக்ரம். ஆக, வக்ரகதியிலுள்ள கிரகங்களின் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிகிறது. ஜென்ம கேது 7-ல் ராகு. தேக நலத்தில் சௌகரியக்குறைவு, உத்தியோகத்தில் பிரச்சினை, எதிர்ப்பு, கணவன்- மனைவிக்குள்ளும் வாக்குவாதம் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். பிள்ளைகள்வழியில் நற்பலன்கள் தாமதமாகும். குரு ராசியைப் பார்ப்பதால் இவற்றையெல்லாம் சமாளிக்கும் யுக்திகளைத் தருவார். என்றாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது தேவையில்லாத டென்ஷன் உருவாக்குவதுடன் கோபக்காரர் என்ற பெயரையும் கொடுத்துவிடுகிறது. அதற்கு நீங்கள்தான் உங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் நிறைவு இல்லையென்றா லும் குறையிருக்காது. அதாவது வரவும் செலவும் சரிசம மாக ஓடும். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்- இளைஞிகளுக்கு 9-ல் குரு இருக்கும் காலகட்டம் திருமண முயற்சிகள் கைகூடும். தொழில் அல்லது உத்தியோகம் சம்பந்தப்பட்டவகையில் நன்மதிப்புக்கு இடமுண்டு. வியாபாரிகளுக்கு முதலீடுசெய்து வியாபாரம் செய்யும் சூழ்நிலை உண்டாகும். சகோதரவழியில் சகாயம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: திருவாரூர் மடப்புரம் பகுதியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு பெற்றா லும் உச்சமாக இருக்கிறார். மேலும் 4-ஆம் தேதிமுதல் வக்ரகதியில் சஞ்சாரம். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த குரு ரிஷபத்தில் இருக்கிறார். குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை. மேற்கண்ட கிரகத்தின் பலன் என்ன செய்யும்? உச்சம், வக்ரம், பரிவர்த்தனை இவையெல்லாம் நன்மையா- தீமையா என்ற குழப்பங்கள் ஏற்படலாம். இரண்டும் உண்டு. அநேக காரியங்களில் தாமதம், ஈடுபாடு இல்லாத நிலை போன்ற பலன்கள் ஏற்படலாம். செலவுக்கும் இடமுண்டு. வரவுக்கும் வழியுண்டு. கடைசி நேரத்தில் தேவைகள் நிறைவேறும் அமைப்பு இவற்றையெல்லாம் சந்திக்கலாம். துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி 5-ல் ஆட்சி. மனமகிழ்வுக்கு இடமுண்டு. 7-க்குடைய செவ்வாய் 9-ல் திரிகோணம். குருவின் சாரத்தில் சஞ்சாரம். கணவன்மார்களுக்கு மனைவியால் அனுகூலம் உண்டாகும். ஒருசிலருக்கு குடும்பச் சுமையைப் பாதியளவு மனைவிமார்கள் கணவர்களுக்கு குறைத்து சப்போர்ட் செய்யலாம். 12-க்குடைய புதன் 6-ல் மறைந்தாலும் நீசம். மாத பிற்பாதியில் விரயங்கள் சற்றுக் குறையும். உடன்பிறப்புகள் வகையில் சகாய உதவிகளை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் பாதிப்புகளுக்கு இடமில்லை. ஒருசிலர் உத்தியோக இடமாற்றத்தை சந்திக்கலாம். திடீர் வரவுக்கும் வழியுண்டு.
பரிகாரம்: சென்னை- பட்டாபிராம் வழி தாத்ரீஸ்வரர்- பிரசுன குந்தலாம்பிகை அம்மன் சந்நிதி சென்று வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு. என்றாலும் 7-ல் நிற்கும் குரு சாரத்தில் சஞ்சாரம். 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. விருச்சிக ராசிக்கு குரு பார்ப்பதால் பலன்கள் சூப்பர் ஆஹோ ஓஹோவென்று நிறையே பேர் கூறியிருக்கலாம். ஆனால் கடந்த மாதம்வரை வக்ரகதியில் நின்று குரு பார்த்தார். 4-ல் உள்ள சனியும் நவம்பர்வரை வக்ரகதியில் இயங்கினார். இவையெல்லாம் பட்டகாலிலே படும் என்பது போன்ற பலன்களைத்தான் சந்தித்தீர்கள். ஒருசிலருக்கு ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்திருக்கலாமே தவிர அநேக பேருக்கு சறுக்கல்கள்தான் நடந்திருக்கிறது. இப்போது 12-க்குடைய சுக்கிரன் 5-ல் உச்சம். வக்ரம். வீண்விரயம், அலைச்சல், திரிச்சல்கள் போன்றவை ஏற்படலாம். பிள்ளைகள் பற்றிய கவலைகள் மனதை வாட்டலாம். ஓயாத உழைப்பும் உடல் சோர்வை ஏற்படுத்தலாம். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஒருசிலர் பெற்றோர் பிள்ளைகளை விட்டு தூரமாக அதாவது பிள்ளைகள் ஓரிடம் பெற்றோர் ஓரிடம் என்று வசிக்க நேரிடும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார். ஒருசிலருக்கு புதிய மனை வாங்கும் அமைப்பும் உண்டாகும்.
பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும். ரமண மகரிஷிக்கு ஆன்மிக வழியைக் காட்டியவர்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 8-ல் சஞ்சாரம். கடந்த மாதம் வக்ர நிவர்த்தி ஆனதால் ஓரளவு ஆறுதல். எனினும் ராசிநாதன் 8-ல் மறைவதால் மனக்குழப்பம், திடீர் சஞ்சலம் போன்றவற்றை சந்திக்க நேரும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ஒருசிலருக்கு உத்தியோக வகையில் இடமாற்றத்தைக் கொடுக்கும். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு உத்தியோகமே மாற்றம் ஏற்படலாம். 12-க்குடைய செவ்வாய் 7-ல் நின்று ராசியையும் பார்க்கிறார். 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். விரயமும் உண்டு. வரவு வந்தாலும் பற்றாக்குறை சற்று அதிகமாக காணப்படலாம். 10-க்குடைய புதன் 4-ல் நீசம்பெற்று 10-ஆமிடத்தையே பார்க்கிறார். அரசுத்துறைப் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். 4-ல் ராகு தேகசுகம் பாதிக்கப்படலாம். ஒருசிலர் தோல் அலர்ஜி அல்லது கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம். வாகனவகையிலும் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம். சிறுசிறு விபத்துக்களும் உண்டாகலாம். பூர்வீகம் சம்பந்தப்பட்ட வழியில் சற்று நிதானமும் பொறுமையும் தேவை. அவசர முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். சகோதரர்களால் தொந்தரவுக்கு இடமில்லை. புரிதல்கள்தான் இங்கு பிரச்சினை. ஒருவரையொருவர் ஆழமாக சிந்தித்து உறவுகளில் சங்கடம் வராதபடி நடந்துகொண்டால் நன்மையும் மகிழ்ச்சியும் தேடிவருமே! தனிமரம் தோப்பாகாது அல்லவா!
பரிகாரம்: திருச்சி அருகில் பெரம்பலூர் சென்று மதனகோபால சுவாமியை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 2-ல் சனி. 8-க்குடைய சூரியன் சேர்க்கை. திடீர்செலவு, எதிர்பாராத வாகனச் செலவு போன்றவை ஏற்படலாம். ஏழரைச்சனியில் கடைசிக் கூறு பாதச்சனி நடக்கிறது. 10-க்குடைய சுக்கிரன் 3-ல் உச்சம். 4-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகிறார். தொழில் கவலை, வியாபாரக் கவலை, வேலையில் பிரச்சினை, பதவியில் குழப்பம், வாழ்க்கையிலும் பிரச்சினை என சங்கடங்கள் தோன்றும். 9-க்குடைய புதனும் 3-ல் மறைவு, நீசம். 9, 10-க்குடையவர்கள் சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகம் என்பது ஒருபுறமிருந்தாலும் இங்கு இருவரும் அடுத்தடுத்து வக்ரம் பெறுகிறார்கள். எனவே அந்த தர்மகர்மாதிபதி யோகம் இங்கு பலனளிக்காமல் போகிறது. 9-ஆமிடத்தை குரு பார்த்தாலும் 9-ல் கேது. ராகு பார்வை. எனவே பூர்வீக சொத்து சம்பந்தமாக நிலவும் பிரச்சினைகளில் தீர்வு தாமதமாகும். 4-க்குடைய செவ்வாயும் 6-ல் மறைவு. என்றாலும் குருவும் ராசியை பார்க்கிறார். செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு. கட்டடப் பணிகளை பாதியில் நிறுத்தியவர்களுக்கு மீண்டும் தொடங்கும் அமைப்பு உண்டாகும். சகோதரவகையில் சங்கடங்கள் நிலவத்தான் செய்யும். 3-ல் ராகு இருப்பதால் ஒரு மனதைரியத்தில் வாழ்க்கையை ஓட்டலாம்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமும் ஆஞ்சனேயருக்கு நெய்தீபமுமேற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 2-ல் ராகு 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். மேலும் கும்ப ராசிநாதனே விரயாதிபதியாக இருப்பதால் அது ஒரு போராட்டம். 12-ஆமிடத்தை ராகு பார்ப்பதும், 2-க்குடைய குருவும் 12-ஆமிடத்தைப் பார்ப்பதும் விரயங்களை சமாளிப்பது என்பது கடினமான ஒன்றாகும். சொந்தத் தொழில் செய்கிறவர் களுக்கு விழி பிதுங்கும் நிலை! அடிமை உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலையில் பளு அதிகமாக காணப்படுதல், பிரச்சினைகள் ஏற்படுதல் போன்ற நிலைகளை சந்திக்க நேரும். 4, 9-க்குடைய சுக்கிரன் 2-ல் உச்சம் பெற்றாலும் 4-ஆம் தேதிமுதல் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். தேக சுகத்தில் தொந்தரவு, குடியிருப்புவகையில் சங்கடம் (குடும்பத்திலும் சங்கடம்), வாகனவகையில் கவனம், தகப்பனாருக்கு உடல்நலத்தில் சிக்கல் அல்லது பூர்வீகத்தில் வில்லங்கம் இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் இன்னல்கள் ஏற்படலாம். தவிர ஏழரையில் ஜென்மச்சனியும் நடக்கிறது. இன்னும் பாதி ஏழரைச்சனியை எப்படி கடக்கப் போகிறோம் என்ற கவலையும் சூழ்ந்துகொள்கிறது. 10-ஆமிடத்தை 2-க்குடைய குரு பார்ப்பதால் தொழில் இயக்கம் சொல்-க்கொள்ளும்படி இல்லையென்றாலும் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது. சனி 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுக்கு இடமுண்டு.
பரிகாரம்: தென்காசி போகும் வழியில் கடையநல்லூரில் கிருஷ்ணாபுரம் ஜெய வீர அபய ஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும். சனிக்கிழமை சிறப்பு. வெற்றிலை மாலை சாற்றலாம்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 3-ல் மறைவு. என்றாலும் 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும். 3-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் உச்சம், வக்ரம். சகோதர- சகோதரிவழியில் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. வீண் விரயங்களும் உண்டாகும். சுபவிரயங்களும் உண்டாகும். 9-க்குடைய செவ்வாய் 4-ல் சஞ்சாரம். பூர்வீக வீடு அல்லது மனை சம்பந்தமான அபிவிருத்திக்கு உண்டான முயற்சிகள் அமையும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் கோட்சார பாதகம் பலம் குறைந்து காணப்படும். கோட்சார பலம் 20 சதவிகிதம். ஜாதக தசாபுக்தி பலம் 80 சதவிகிதம். ஆனால் சமயத்தில் கோட்சாரம் 80 சதவிகிதமும் தசாபுக்தி 20 சதவிகிதமுமாக மாறி வேலை செய்யும். அங்கேதான் அவரவர் பூர்வபுண்ணியம் வேலை செய்கிறது. ஆக, ஏழரைச் சனி உங்கள் தொழில், பொருளாதாரம், வேலை, வருமானம் இவற்றை பாதிக்கும் காலம்- சிலருக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும். ஆனால் அமைதியைக் கெடுக்கும். ஆனந்தத்தைக் கெடுக்கும். அல்லது உடலளவில் ஒருசிலருக்கு நோய்க்குரிய சூழ்நிலையும் ஏற்படலாம். ஜென்ம ராகு சிலநேரம் மனக்குழப்பத்தைத் தருவார். விடாத பக்தியும் வைராக்கியமும் இருந்தால் சோதனையிலும் சாதனை புரியலாம். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- குருவருளைத் தருவார்.
பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடுங்கள்.
செல்: 99440 02365