மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக இருக்கிறார். 10-ல் சனி ஆட்சி. 2-க் குடைய சுக்கிரனும் 10-ல் சேர்க்கை. தொழில் துறையில் முன்னேற்றகரமான சூழ்நிலை கள் நிலவும். அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர் களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி உண்டாகும். 11-ல் உள்ள சூரியன், குரு லாபகரமான அனு கூலங்களைத் தருவர். இம்மாதம் 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி ஏற்படுகிறது. 2-ல் இருந்த ராகு ஜென்ம ராசிக்கும், 8-ல் இருந்த கேது 7-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். பொதுவாக ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சம்பந்தம் இருந்தால் திருமணத் தடை, நாகதோஷம் என்பதைக் குறிக்கும். ராகுவும் கேதுவும் 3, 7, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பார்கள். சகோதர சகாயம் உண்டாகும். சகோதரர்களுக்கு நல்ல சுபநிகழ்வுகள் அமையும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலங்கள் உண்டாகும். ஜனன ஜாதகத்தில் சமராகு தசாபுக்திகள் நடந்தால் பிரச்சினைகள், சங்கடங்கள் ஏற்படும். தேகநலத்திலும் வைத்தியச்செலவு போன்ற உபாதைகள் உண்டாகலாம். பொருளாதாரத்தைப் பொருத் தளவில் ஏற்றமான நிலைகள் தென்படும். யாருக் காவது கொடுக்கல்- வாங்கல் ஜாமின் பொறுப் பேற்பது போன்றவற்றில் தலையிட வேண்டாம். படித்துமுடித்து வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 12-க்குடைய செவ்வாய் 9-ல் உச்சம். வீண் அலைச்சல்கள், விரயங்கள் ஏற்பட இடமுண்டு. பொருளாதாரரீதியாக சில தேக்கங்கள் உண்டாகும். காரிய தாமதத்தை சந்திக்க நேரலாம். என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால் தர்ம கர்மாதிபதி யோகம் ஒரு புறம் உங்களை வழிநடத்திச் செல்லும். அதனால் சில நற்செயல்களும் நடந்தேறும். 10-ல் சூரியன், 2-க்குடைய புதன் சேர்க்கை. அரசு வழியில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் நல்ல தகவல்கள் வரும். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 11-ல் மாறுகிறார். 11-ஆமிடம் லாபம், வெற்றிமூத்த சகோதரம், ஜெய ஸ்தானமாகும். வேலை, உத்தியோகம், முயற்சி இவற்றில் வெற்றியுண்டாகும். ஜென்ம ராசியில் இருந்த ராகுவும், 7-ல் இருந்த கேதுவும் இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் ராகு 12-ஆமிடத்திற்கும், கேது 6-ஆமிடத்திற்கும் மாறுகிறார்கள். அது உங்களுக்கு ஒருவகையில் அனுகூலமான பலன்களைத் தரும். குடும்பத்திலும், கணவன்- மனைவிக்கிடையே நிலவிய பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். திருமணத் தடைகள் விலகி திருமண முயற்சிகள் கைகூடும். இதுநாள்வரை குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேலை பார்த்தவர்களும் மீண்டும் இணையும் சூழல்களும் அமையும். மறைமுக எதிர்ப்புகளும் விலகும்; நன்மைகள் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கி றது. 2023 டிசம்பர்வரை நடைபெறுகிறது. "அகப் பட்டவனுக்கு அட்டமத்துச்சனி' என்ற ஒரு சொலவடை உண்டு. மிகுந்த அலைச்சல்களையும் பிரச்சினைகளையும் உண்டுபண்ணும். ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம். 10-க்குடைய குரு 9-ல் தர்மகர்மாதிபதி யோகம். ஆக, எந்தப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்க்கும் யுக்திகளும் உங்களுக்கு அமையும் என்பதில் சந்தேகமில்லை. 17-ஆம் தேதிமுதல் புதன் 10-ல் நீசம்பெறுகிறார். தொழில்துறையில் சில தேக்கம் ஏற்படலாம். இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் ராகு- கேது பெயர்ச்சியாகிறது. 12-ல் இருந்த ராகு 11-லும், 6-ல் இருந்த கேது 5-லும் மாறுகிறார்கள். ராகு மாறும் 11-ஆமிடம் நல்ல இடம். கேது சற்று சுமாரான இடத்திற்கு மாறினாலும் உங்கள் மனதில் உதயமாகும் திட்டங்களை செயல்வடிவம் பெற வழிவகைகளை உண்டாக்குவார். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்கள் நிகழும். உடல்நலத்தில் சிறிது வைத்தியச் செலவு கள் வந்து விலகும். பொதுவாக செவ் வாய், சனி பார்த்தா லும் தீது; சேர்ந்தாலும் தீது என்றாலும் இங்கு செவ்வாய் உச்சம். சனி ஆட்சியென்பதால் தாக்கங்கள் அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்கு 11-ல் ராகுவும், 5-ல் கேதுவும் சஞ்சாரம். லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்ப தால் தொழில்துறையில் அனுகூலம், லாபம் இவையெல்லாம் கிடைக்கும். 5-ஆமிடத்துக் கேது உங்கள் நீண்டகாலத் திட்டங்களை செயலாக்கம் செய்ய துணைபுரிவார். 7-ல் சனி ஆட்சி. செவ்வாய் உச்சம். சுக்கிரன் சேர்க்கை. ராசிக்கு மூவரின் பார்வை. இதனால் சில நேரம் வீண்விரயங்களும் செயல்முறைச் செலவு, விசேஷ வைபவச் செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். மனதில் சில குழப்ப நிலைகளும் தோன்றும். 12-க்குடைய புதன் 9-ல் நீசமாகி 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். சகோதரவழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். மாத முற்பகுதியில் திடீர் ராஜ யோகத்திற்கும் வழிவகை பிறக்கும். மார்ச் 21-ஆம் தேதிமுதல், முக்கியப் பெயர்ச்சிகளாக கருதப்படும் குரு, சனி, ராகு- கேது பெயர்ச்சி களில்- ராகுவும் கேதுவும் பெயர்ச்சியாகிறார் கள். ராகு 10-ஆமிடத்திலும் கேது 4-ஆமிடத் திலும் மாறுகிறார்கள். தொழில் யோகம் நன்றாக செயல்படும். தேகநலனில் அக்கறை காட்டுவது அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக ராசி நாதன் ராசியைப் பார்ப்பது ஒரு பக்கபலம் தான். உங்கள் முயற்சிகளில் உத்வேகம் ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்துசேரும். சுயதொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு நிதி உதவியும் கிடைக்கப்பெறும். ராசிக்கு 6-ல் சனி ஆட்சி. செவ்வாய் உச்சம். யோககாரகன் உச்சம் பெறுவது நல்லதுதான். புதிய திருப்பங்கள் ஏற்படும். 2-க்குடைய புதன் குருவுடன் இணைந்து 7-ல் சஞ்சரிக்கிறார். பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 8-ல் மறைகிறார். அக்காலகட்டத்தில் சில தடைகள், தாமதம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படலாம். இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் 10-ல் உள்ள ராகு 9-ஆமிடத்திற்கும், 4-ல் உள்ள கேது 3-ஆமிடத்திற்கும் மாறுகிறார் கள். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கம், விவகாரம் சுமுகமான தீர்வுக்கு வரும். சகோதர சச்சரவுகள் விலகும். ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். 17-ஆம் தேதிமுதல் 2-க்குடைய புதன் 8-ல் மறைவு. நீசம் என்றாலும் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதுபோல தனவரவுகளுக்குக் குறையிருக்காது.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. அவரு டன் தனகாரகன் குருவும், மறைவு. பொருளா தாரத்தில் சிக்கல், சிரமங்கள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்ற போராட்ட சூழ்நிலை களைச் சந்திக்க வேண்டிவரும். என்றாலும் 2, 9-க்குடைய சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். செவ்வாய் உச்சம். செவ்வாய் 3, 8-க்குடையவர். சகோதரர்களாலும் அல்லது சகோதரிகளாலும் சில நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் சுபகாரியங்களை முன்னின்று நடத்தும் பொறுப்புகளும் வந்து சேரும். கேட்ட இடத்தில் கேட்ட உதவிகள் கிடைக்கும். அதற்காக தராதரமில்லாதவர் களிடம் கைநீட்டி விடாதீர்கள். அது உங்கள் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அமைந்து விடும். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகுவும், 3-ல் இருந்த கேதுவும் இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் ராகு 8-ஆமிடத்திற்கும், கேது 2-ஆமிடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை தந்தையிடம் நிலவிய பிரச்சினைகள், சச்சரவு கள் விலகி நன்மதிப்பும் பாசமும் உண்டாகும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல 8-ல் வரும் ராகு திடீர் யோகங் களைத் தருவார் என்று எதிர் பார்க்கலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் ஆட்சி பெற்ற சனியோடும், உச்சம்பெற்ற செவ்வா யோடும் இணைந்திருக்கிறார். தேகநலம் வளம்பெறும். வைத்தியச் செலவுகள் விலகும். வீண்விரயங்கள் கட்டுக்குள் அடங்கும். 2-க்குடைய செவ்வாய் உச்சம் பெறுவதால் பொருளாதாரப் பிரச்சினை தீர்வுக்கு வரும். பூமி, இடம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும். புதிய வாகனம் வாங்கும் அமைப்பு களும் கைகூடும். செய்ய நினைத்த காரியத்தை உடனடியாக முடிக்கும் சூழ்நிலைகளும் பிறக் கும். சனியுடன் செவ்வாய் இணைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சில சங்கடங்கள் தோன்றும். யாரேனும் ஒருவராவது விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதால் மனக்கவலையை விடுங்கள். 17-ஆம் தேதிவரை புதன் 5-ல் இருக்கிறார். பிள்ளைகள் வழியே சுபகாரியப் பேச்சுகள் கைகூடலாம். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நன்மையான பலன்கள் ஏற்படலாம். 11-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணமாக இருப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தித் தரும். இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் 8-ல் உள்ள ராகு 7-ஆமிடத்திற்கும், 2-ல் உள்ள கேது ஜென்ம ராசிக்கும் மாறுகிறார் கள். திருமணத்தடை, காரியதாமதம், மனக் குழப்பம் போன்றவற்றைச் சந்தித்தாலும், 5-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே முடிவில் காரிய ஜெயத்தைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். 3-ல் சனி ஆட்சி. சுக்கிரன் 3-ல் மறைவு. பொதுவாக 3-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்று குறிப்பிட்டாலும் செவ்வாய், சனிக்கு 3-ஆமிடம் நல்ல இடமாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ராசிநாதன் உச்சம் என்ற அடிப்படையில் உங்கள் செயல்பாடுகள் எல்லாம் வெற்றிகரமாக அமையும். 4-ல் உள்ள குரு தேகநலனில் முன்னேற்றம் தருவார். வாகனப் பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை உண்டாகும். அவ்வப்போது எழும் தேவையற்ற வீண் கற்பனைகளைப் போக்க முயற்சியுங்கள். எதிலும் தைரியமும் தன்னம் பிக்கையும் உங்களை வழிநடத்தும். சிலநேரம் பொருளாதாரரீதியாக நெருக்கடி ஏற்பட்டா லும் சமாளிக்கும் ஆற்றலும் திறனும் உண்டு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. 15-ஆம் தேதிமுதல் 10-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெற்று 11-ஆமிடத்தைப் பார்ப்ப தால் தொழிலில் லாபம், வெற்றி ஏற்படும். இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் ஜென்மத்தில் இருந்த கேது 12-ஆமிடத்துக்கும், சப்தமத்தில் இருந்த ராகு 6-ஆமிடத்துக்கும் மாறுவது நல்ல பலன்களைத் தரும். கடன்களின் சுமை குறையும். நோய் நொடிகள் விலகும். ஆன்மிக சிந்தனைகள் உருவாகும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைகிறார். அவருக்கு வீடுகொடுத்த சனி- குருவுக்கு 12-ல் மறைவு. என்றாலும் சனி ஆட்சியென்ப தால் மறைவு தோஷம் பாதிக்காது. இருப் பினும் ஏழரைச்சனியில் பாதச்சனி நடந்து கொண்டிருப்பதால் சில விஷயங்களைப் போராடித்தான் வெற்றி பெறமுடியும். சில விஷயங்களில் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல செயல்பட்டு அங்கும் நிறை வில்லாத நிலையே தோன்றும். மனநிம்மதி இருக்காது. நீங்களும் குழம்பி உங்களைச் சார்ந் தவர்களையும் குழப்புவீர்கள். இது ஏழரைச் சனியா அல்லது ராசிநாதன் மறைந்த குற்றமா என்ற சந்தேகம் எழுந்தால் இரண்டுமே காரணம்தான் என்று கூறவேண்டும். 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் ஒன்றுகூடி 3-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஆக, நெல்லிக்காய் சுவைக்கும்போது துவர்ப்பாக இருந்தாலும் தண்ணீர் குடித்தவுடன் இனிப்புச் சுவை ஏற்படுவது போல- ஆரம்பத்தில் தடை யாகத் தெரியும் விஷயங்கள் படிப்படியாக விலகி வெற்றிக்கனியை எட்டி நினைத்ததை சாதிக்கலாம். இம்மாதம் 21-ஆம் தேதிமுதல் 6-ல் நின்ற ராகு 5-ஆமிடத்துக்கும், 12-ல் இருந்த கேது 11-ஆமிடத்துக்கும் மாறுகிறார் கள். அது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.
மகரம்
மகர ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. 12-க்குடைய குரு 2-ல் சஞ்சாரம். 8-க்குடைய சூரியன் 2-ல் குருவுடன் சேர்க்கை. சில நேரங்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு உங்களைத் திக்குமுக்காட வைத்துவிடும். அதேசமயம் சிலநேரம் எதிர்பாராத தனப்ராதிக்கும் இடமுண்டு. அவரவர் ஜனன ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் தனப்ராப்திக்கு இடமுண்டு. பாதகமாக இருந்தால் செலவுக்கு இடமுண்டு. 15-ஆம் தேதிமுதல் சூரியன் 3-ல் மறைவு. சூரியன் 8-க்குடையவர் 3-ல் மறைவது ஒருவகையில் நன்மைதான். ஒருசிலருக்கு அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம், வேலையில் ஊர்மாற்றம் உண்டாகலாம். அது அனுகூலமான மாற்றமாகவும் அமையும். இதுவரை குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேலைபார்த்தவர்கள் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு மாறி பணிபுரியலாம். இந்த மாதம் 21-ஆம் தேதிமுதல் உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த ராகு 4-லும், 11-ல் இருந்த கேது 10-லும் மாறுகி றார்கள். சுயதொழில் புரிபவர்கள் லாபகரமான நிலைகளை சந்திக்கலாம். ஏழரைச்சனியின் இரண்டாம் சுற்றை சந்திக்கிறவர்களுக்கு அது பொங்குசனியாக மாறி பொலிவைத் தருமென்றும் நம்பலாம்.
கும்பம்
கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் முதற் கட்டமான விரயச்சனி நடக்கிறது. 2023-ல் ஜென்மச்சனியும் அடுத்து பாதச்சனியும் நடைபெறும். கும்ப ராசிக்கு ராசிநாதன் சனியே விரயாதிபதி. 3-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம். சகோதரகாரகனும் சகோதர ஸ்தானாதிபதியும் விரயஸ்தானத்தில் இருப்பதால் உடன்பிறந்த சகோதரவகையில் சுபவிரயச் செலவுகள் ஏற்படலாம். அதாவது திருமணம், காது குத்துவிழா, கிரகப் பிரவேசம் போன்றவற்றுக்கான செய்முறைச் செலவுகள் ஏற்படலாம். அதேசமயம் அலைச்சலும் திரிச்சலும் காணப்படும். ஜென்ம குரு 5-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். உங்களுடைய திட்டங்கள் வெற்றியாகும். வீடு, மனை, வாகனம் போன்றவற்றில் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். 7-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நின்று 7-ஆமிடத்தையே பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும். அன்யோன்மும் உண்டாகும். குருவும் பார்ப்பதால் கூடுதல் பலமாக அமையும். 21-ஆம் தேதிமுதல் 4-ல் உள்ள ராகு 3-ஆமிடத்திலும், 10-ல் உள்ள கேது 9-லும் மாறுகிறார்கள். தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். தகப்பனார்வழி அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 12-ல் விரயஸ்தானத் தில் இருக்கிறார். "ஒன்று நினைக்கின் அதுவொழிந்து மற்றொகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்பினும் நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்' என்ற பாடலுக்கேற்ப நீங்கள் ஒன்று நினைத்து செயல்படும் காரியம் உங்கள் நோக்கம்போல நடவாமல் செயல் தாமதம், சிரமம், பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரும். உங்கள் செயல்பாடுகளே உங்களுக்கு வினையாக வந்தமைவதால் எதையும் பலமுறை யோசனை செய்து இறங்கு வது நல்லது. 2-க்குடைய செவ்வாய் 11-ல் உச்சம். சனி ஆட்சி. இது ஒருவகையில் பலமாக அமைந்தாலும் தனகாரகன் மறைவதால் பொருளாதாரத்தில் அமைந்தாலும், தனகாரகன் மறைவதால் பொருளதாரத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். தொழில் இயக்கம் ஓடிக்கொண்டிருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டிய சூழ்நிலைகள் அமையும். 9-ல் உள்ள கேது ஆன்மிக சிந்தனைகளை ஏற்படுத்துவார். குலதெய்வ வழிபாடு, பூஜை போன்றவற்றில் கலந்துகொள்ளலாம். 21-ஆம் தேதிமுதல் 3-ல் உள்ள ராகு 2-லும், 9-ல் உள்ள கேது 8-லும் மாறுகிறார்கள். குடும்பத்தில் சில குழப்பங்களை ராகு உருவாக்கினாலும் ஒற்றுமையில் பாதிப்புக்கு இடமில்லை. கேது 8-ஆமிடத்திற்கு மாறுவது நன்மைதான். அதாவது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல 8-ஆமிடத்துக் கெடுபலன் மறையும்.