"உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலு மில்ல தறிவு.'

-திருவள்ளுவர்

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்புகொண்டு ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது இன்பம்- துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

பைகுந்தபூர் காட்டுவழியாக சென்று கொண்டிருந்தான் போகன். வறுமை நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். இறைசிந்தனை, கொள்கைப்பிடிப்புள்ள அவன் பொருள் தேடுவதற்காக நடந்தான். எதுவும் கிடைக்காததால் மிகவும் களைத்திருந்தான். பசியால் மயக்கம் வரும் நிலையில் இருந்தான்.

காட்டுவழியில் கோடாரியுடன் அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி. போகனைக் கண்டதும், "தம்பி எனக்கு ஒரு உதவி செய்வாயா?'' எனக் கேட்டார். கேளுங்கள் பாட்டி "இந்தக் கூர்மையான கோடாரியால் பசுமையான அந்த மரத்தை வெட்டிப்போடு. அதுகாய்ந்ததும், எரிப்பதற்கு விறகாக்கிக்கொள்கிறேன். கூலியாக என் காதில் தொங்கும் தங்க பாம்படங்களில் ஒன்றைத் தருகிறேன்.''

vv

"மலைபோல தங்கம் தந்தாலும், மழை பொழிய துணை

நிற்கும் மருத்துவ குணம்கொண்ட மூலிகை

Advertisment

மரத்தையும் பச்சை மரத்தையும் வெட்ட

மாட்டேன். காய்ந்து நிற்கும் மரத்தை கண்டு

பிடித்து வெட்டித் தருகிறேன். அதை விறகாக்கிக் கொள்ளுங்கள்.''

Advertisment

எனக்குப் பச்சைமரம்தான் வேண்டும். அதுவும் இந்த மரத்தைத்தான் வெட்ட வேண்டும். தங்கப் பாம்படத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா... நல்லவிலை பெறும்...

மரத்தைச் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி. ஆசை வார்த்தையும் கூறினார் மூதாட்டி. முடியவே முடியாது.

மறுப்பு தெரிவித்ததுடன் உறுதியாக நின்ற போகனின் நேர்மையை பார்த்து வியந்தார் மூதாட்டி. திடீரென அழகிய தேவதையாக வடிவம் எடுத்து, "உன்னை சோதிப்பதற்காகவே மூதாட்டி வேடம் தரித்துவந்தேன். மழை பொழிய துணை நிற்கும் மரங்களை வெட்டமாட்டேன் என்றாய். உன் உயர்ந்த குணத்தை பாராட்டிப் பரிசு தருகிறேன்...'' என்றபடி நாணயங்ககள் நிறைந்த மஞ்சள் துணிப்பை ஒன்றை தந்து மறைந்தது தேவதை. தங்க நாணயங்களோடு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் போகன்.

ஒரு ஊரில் இருந்த மகாராஜா ரொம்ப நல்லவர்; தரும சிந்தனையுடன் எல்லாருக்கும் எல்லா உதவியும் செய்வார். யாருக்கும் இல்லை என்று சொல்லமாட்டார்.

ஒருசமயம் அவர் பெரிய காட்சி சாலை யைத் திறந்து யார் வேண்டுமானாலும் எவ்வளவு பொருட்களை வேண்டுமானா லும் இலவசமாக எடுத்துப் போகலாம் என ஏற்பாடு செய்தார். இந்தக் காட்சி சாலைக்கு ஆண்- பெண் என நிறைய பேர் வந்து, அவர் களுக்கு வேண்டியதை எடுத்துச்சென்றனர்.

சில பேர் அவங்களுக்கு தேவையான வேட்டி சட்டைகளையும் அங்கேயிருந்த விலையுயர்ந்த நகைகையும், நல்ல புத்தகங்களையும் எடுத்து சென்றனர். இரும்புப் பெட்டிகளை எடுத்துப் போயினர். சிலர் அனைவரும் முழு மனநிறைவு டன் திரும்பினர்.

அங்கே வந்த, வயதான அம்மா மட்டும் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. மனநிறைவும் இல்லை. அனைவரும் ஆச்சரியமாக அந்தம்மாவைப் பார்த்தனர்.

"உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே' என்றனர்.

"இங்கே இருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் திருப்தியளிக்கவே இல்லை. நான் மகாராஜாவைப் பார்க்கணும்...' என்றார். ஓடிப்போய் மகாராஜாவிடம் சொன்னார் அங்கேயிருந்த திவான்.

உடனே, யானை மேலே ஏறி அந்தம்மா வைப் பார்க்க வந்தார் மகாராஜா. "மகாராஜா, கீழே இறங்கி வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பற்றி உங்களிடம் பேசனும்...' என்றார்.

vv

அந்த அம்மா.

யானைமீதிருந்து கீழே இறங்கினார் மகாராஜா. மகாராஜாவின் வலதுகையைப் பிடித்து, "மகாராஜா இப்ப நீங்க எனக்கு சொந்தமாயிட்டீங்க. காட்சி சாலையிலே உள்ள சின்ன சின்னப் பொருட்களையும் விளையாட்டுப் பொம்மைகளையும் நான் விரும்பலே.

"உங்களைப் பெறவே நான் விரும்புகிறேன். நீங்க எனக்கு சொந்தமாகிவிட்டதால், இந்த ராஜ்ஜியத்தின் செல்வம் எல்லாம் இப்ப எனக்கு சொந்தமாகிவிட்டது'... என்றார் அந்த அம்மா. மலைத்துப் போய் நின்றார் மகாராஜா.

அந்த அம்மாவை கடைசிவரைக்கும் தன் அரண்மனையிலேயே வைத்து, தாய்மாதிரி கவனித்துக்கொண்டார். மகாராஜா.

ஞானமுள்ள அந்த வயதான அம்மா, மகாராஜாவை சொந்த மாகப் பாராட்டி. அவருடைய செல்வத்துக்கெல்லாம் எப்படி அதிபதியானாரோ, அப்படியே எல்லா சௌகரியங்களும் நம்மைத் தேடிவரும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு அற்புதமான திருத்தலம்தான் மண்ணிப்பள்ளம் ஸ்ரீ ஆதி வைத்திய நாதசுவாமி திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீ ஆதி வைத்தியநாத சுவாமி.

இறைவி: அருள்மிகு தையல் நாயகி.

விநாயகர்: ஔஷத விநாயகர்.

விசேஷமூர்த்தி: தன்வந்திரி.

ஊர்: மண்ணிப்பள்ளம், மயிலாடுதுறை மாவட்டம்.

தலவிருட்சம்: வில்வ மரம்.

தீர்த்தம்: தைல தீர்த்தம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. நவகிரக ஸ்தலங்களில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நெருங்கிய தொடர்புடையதும், பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த பெருமையுடனும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப் புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் மண்ணிப் பள்ளம் ஆதி வைத்திய நாதசுவாமி திருக்கோவில்.

காவிரி வடகரை ஸ்தலங் களில் தேவார வைப்புத் தலமாக விளங்குவதும், அங்காரகன், பஞ்சபாண்ட வர்கள், தன்வந்திரி மகரிஷி வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடன்; மண்ணிப்பள்ளம், ராதா நல்லூர், வரகடை, பாண்டூர், ஐவநல்லூர் இவை ஐந்தும் பஞ்ச வைத்திய நாத ஸ்தலங்கள். இவற்றில் முதன்மை வாய்ந்த பெருமையுடன் விளங்குவதுதான் மண்ணிப் பள்ளம் சிவாலயம்.

தன்வந்திரி வழிபட்டது

இராமாயணத்தின் பாலகாண்டம் (12) மற்றும் பாகவத புராணம் தன்வந்திரி பாற்கடலில் தோன்றி, சமுத்திர மந்தனத்தின்போது தேவர்களாலும் அசுரர் களாலும் சமுத்திரம் கலக்கப்பட்டபோது, அமிர்த பானையுடன் (அழியாத அமுதம்) தோன்றினார்.

இரண்டாவது துவாபர யுகத்தில் காசியின் அரசன் திர்கதாபஸ். ஒரு மகன் பிறப்பதற்காக வைத்தியர் தெய்வத்தைப் பிரார்த்தித்தார். தெய்வம் ஒரு வரமாக விரும்பிய குழந்தையாக தன்னை அவதாரம் செய்ய ஒப்புக் கொண்டது. தன்வந்திரி ஒரு சிறந்த அரசன் என்பதை நிரூபித்தார். மேலும் "அனைத்து நோய்களையும் விரட்டுபவர்' என்று விவரிக்கப்படுகிறார்.

அவர் உடல்நலக் குறைவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகவும், "உலகளாவிய அறிவின் பாஸ்டர் என்று அங்கீகரிக்கப் பட்டதாகவும் இரண்டாவது துவாபர யுகம் கூறுகிறது.

பரத்வாஜ முனிவர் அவருக்கு ஆயுர் வேதத்தின் சிகிச்சை முறையைப் பற்றி கற்பித்தார். மேலும் அவரை மருத்துவம் படிக்க வைத்தார். அரசர் தனது மருத்துவ அறிவை பலதரப்பட்ட சீடர்களுக்கு பரப்பினார்.

பிரம்ம வைவர்த புராணத்தின்படி தன்வந்திரி தனது சீடர்களுடன் ஒருமுறை கைலாயத்திற்கு பயணம் செய்தார். வழியில் தக்ஷகன் என்ற நாகன் ஒரு விஷத்தை உமிழ்ந் தான். ஒரு சீடன் தக்ஷகனின் தலையில் இருந்த வைரத்தைப் பறித்து பூமியை நோக்கி வீசினான். இந்த நிகழ்வு களை அறிந்தவுடன் சக்திவாய்ந்த சர்ப்ப ராஜா வாசுகி பரிவாரங்களுக்கு எதிராக துரோணர், புண்டரீகர் மற்றும் தனஞ் சயன் தலைமையில் ஆயிரக்கணக்கான பாம்புகளைக் குவித்தார். இந்த பாம்பு களின் விஷ உமிழ்வுகள் தன்வந்திரியின் சீடர்களை மயக்கமடையச் செய்தது. உடனடியாக தன்வந்திரி வனஸ்பதியில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை உருவாக்கி, அவரைப் பின்பற்றுபவர்கள் குணமடைய அனுமதித்து, பாம்புகளை மயக்கமடையச் செய்தார். என்ன நடந்தது என்று வாசுகி புரிந்துகொண்டபோது தன் வந்திரியை எதிர்கொள்ள சைவ நாக தேவதை யான மானசாவை அனுப்பினார். "மானசா தன்வந்திரியின் சீடர்களை மயக்கத்தில் ஆழ்த்தினார். ஆனால் தெய்வம் விஸ்வ வித்யா காலையில் திறமையானவராக இருந்ததால், இவர் விரைவில் தனது சீடர்களை சுயநினைவுக்கு கொண்டுவந்தார். தன்வந்திரியையோ அல்லது அவரது சீடர்களையோ தோற்கடிப் பது சாத்தியமில்லை என்று மானசா கருதிய போது, சிவன் தனக்குக் கொடுத்த திரிசூலத் தைத் தன்வந்திரியை நோக்கிப் பிடித்தாள். இதைக்கண்ட சிவனும் பிரம்மாவும் அவர்கள் முன் தோன்றி அமைதியை நிலைநாட்டி அனைவரையும் வழியனுப்பி வைத்தனர்.

தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படும் தன்வந்திரி பகவான் ஒரு சிறந்த ஆளுமை. "ஆயுர்வேதத்தின் தந்தை என்றும் மருத்துவர்க்கெல்லாம் பெரிய மருத்துவர் என்றும் புகழ்மாலையுடன் விளங்குகிறார்.

தல வரலாறு

காவிரி வடகரையில் பட்டவர்த்தி, இளந் தோப்பு என்ற பகுதியில் இன்று இருக்கும் இந்தக் கோவில் தன்வந்திரி மகரிஷியுடன் தொடர்புடையது.

இப்பகுதியின் மன்னன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்தக் கோவிலில் நோய் தீர்க்கும் சக்தி கொண்ட முனிவர் ஒருவர் வசிப்பதாக கேள்விப்பட்டு முனிவரை அரண்மனைக்கு வரச்சொன்னான். முனிவரிடம் வர வேண்டி யது மன்னன் என்றும், முனிவரைச் சந்திப் பதற்குமுன், கோவில் குளத்தில் நீராடி சிவபெருமானை வைத்தீஸ்வரனாகவும், பார்வதியை தைல நாயகியாகவும் வழிபட வேண்டும் என்றுகூறி முனிவர் மறைந்து விட்டார்.

இதனால் கோபமடைந்த மன்னன் முனிவரைக் கட்டி நெருப்பில் தள்ளும்படி கட்டளையிட்டான். மன்னரின் ஆணை நிறைவேற்றப்பட்டது. ஆனால் தையல்நாயகி சமேத ஆதி வைத்தியநாதர் உயிர்பெறச் செய்து முனிவரை, அந்த இடத்திலேயே தனது பணியை தொடரச் செய்தார். மேலும் கோப மடைந்த மன்னன் அந்த இடத் தை முழுவது மாக எரிக்க உத்தர விட் டான். மன்ன னின் நடத்தை யின் பயனற்ற தன்மையை உணர்ந்த முனிவர் அந்த இடத் தை விட்டு வெளியேறினார். கோவில் முழுவதும் தரை மட்டமானது. பின்னர் மன்னன் எச்சங்களைப் பார்வையிட்டபோது விக்ரகங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதைக் கவனித் தார். ஒரு நொடியில் அந்த முனிவர் வேறு யாருமல்ல தன்வந்திரி என்பதை உணர்ந்து உள்ளுக்குள் தன் செயல்களுக்காக வருந்தி னான். அதற்குப் பரிகாரமாக சிறிது தொலை வில் ஒரு புதிய இடத்தில் ஒரு புதிய கோவில் கட்ட முடிவுசெய்தான். மேலும் அனைத்து விக்ரகங்களையும் அந்த இடத்திற்கு மாற்றி னான். புதிய கோவில் முறையாகக் கட்டப் பட்டது.

இந்த ஆலயத்தின் விக்ர கங்கள் தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்களால் நிறுவப்பட்டவை என்றும் 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லவர் காலத்தைச் சார்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மண்ணில் பள்ளம் தோண்டி தீயிலிட மன்னன் ஆணையிட்டபோதும், தீயிலிட்ட மகரிஷியை மகேசன் உயிர்பெறச் செய்து தனது பணியை தொடரச் செய்ததால் அவ்விடத்திற்கு மண்ணில் பள்ளம் என்றிருந்து பிறகு மண்ணிப்பள்ளம் என்ற பெயர் சொல்வழக்கில் உண்டானது.

அம்மன் தைல பாத்திரம் ஏந்தி இந்த தீர்த்தத் திலிருந்து வந்ததால் தைல தீர்த்தம் என்றானது.

தைல நாயகி என்பது மருவி தையல்நாயகி என்றானது.

முற்பிறவியில் ஒருவன் செய்த பாபம் இப்பிறவியில் நோய் வடிவில் துன்புறுத்து கிறது. இது மருந்து, ஜெபம், தானம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்கு கிறது. பல ரிஷிகளாலும், மகான்களாலும் அருளப்பட்ட பல்வேறு நித்யகர்ம அனுஷ்டா னங்கள், சாந்திகளை தவறாது செய்வதால் மட்டுமே இத்தகைய நோய்கள்; துன்பங்கள் நீங்கி நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியமும் மனநிம்மதியுடன்கூடிய எல்லா வளங் களும் கிடைக்கும்.

அங்காரகன் வழிபட்டது

முன்னொரு காலத்தில் அங்காரகன் வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை வேண்டி தவத்தில் அமர்ந்தார். அவரது தவத்தினை ஏற்று உருவமற்ற நிலையில் ஈசன் காட்சிதந்து மேலும் சில இடங்களைக் கூறி (பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள் எனும் மண்ணிப்பள்ளம், ராதா நல்லூர், வரகடை, பாண்டூர், ஜவநல்லூர்) அங்கெல் லாம் சென்று அமர்ந்து தவத்தில் இருந்தால் தக்கநேரத்தில் தான் காட்சித் தந்து உமது நோயைதீர்ப்பேன் என்று கூறினார்.

அதே நேரத்தில் அவருக்கு சிவபெருமான் உறுதியளித்த படி அங்காரகன் தவமிருந்த போது அவரது தவத்தை மெச்சி அவருக்கு உருவமற்ற முறையில் (சூட்சுமமாய்) காட்சி தந்ததும் அல்லாமல்;

அடுத்து அவர் கூறிய மண்ணிப் பள்ளம், வரகடை, பாண்டூர், ஜவநல்லூர், ராதாநல்லூர் ஆகிய இடங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். இறுதியாக ராதாநல்லூரில் தவமிருந்தபோது அங்கும் உருவமற்ற நிலையில்தான் காட்சிதந்தார். ஈசனிடம் அங்காரகன் எங்கு தான் சுயவடிவம் பார்ப்பது? என்று கேட்ட தற்கு புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) வரவும். அங்கு பார்ப்போம் என்று அருள்புரிந்தார்.

அங்காரகன் முதலில் தவமிருந்த இடமான வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தீஸ் வரனாக காட்சிதந்தார். முதலில் தான் யார் என்பதைக் கூறாமல் மருத்து வர் உருவில் மானிட ராக வந்த சிவபெருமான் தன்னுடன் தனது மனைவியையும் மருத்துவச்சியாக அழைத்து வந்தார். அதே நேரத்தில் மனித உருவ மெடுத்து தவத்தில் அமர்ந்திருந்த அங்கார கன் பிணியும் தீர்ந்தது. அதற்குப் பின்னர் தான் சிவபெருமான் வைத்தியநாத சுவாமி யாக காட்சிதர அதே நேரத்தில்தான் அங்காரக பகவான் சிவபெருமானிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது தான் தவமிருந்த இடங்களில் சிவபெருமான் வைத்தியநாத சுவாமியாகவும் அவருடன் பார்வதி தேவியும் தையல் நாயகியாக அமர்ந்து அருளவேண்டும் என்றும், தங்களை வழிபடுவோர்க்கு செவ்வாய் தோஷத்தை விலக்கும் வகையில் எனக்கும் விசேஷ சக்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதையும் சிவபெருமான் ஏற்றுக் கொண்டு அருளினார். அந்த வகையில் முதன்மைவாய்ந்த தலம்தான் மண்ணிப் பள்ளம் ஆதி வைத்தியநாத சுவாமி திருக் கோவில்.

சிறப்பம்சங்கள்

* இறைவனின் திருநாமம் ஸ்ரீ ஆதி வைத்திய சுவாமி. இறைவியின் திருநாமம் அருள்மிகு தையல் நாயகி, தலவிருட்சம் வில்வ மரம், தீர்த்தம் தைல தீர்த்தம்.

* இத்தல விநாயகர் (பாகவத விநாயகர்) ஔஷத விநாயகர் மகாபாரதம் எழுதும் தோரணையில் இருக்கிறார். மாணவர்கள் தங்கள் கல்வித்திறமை, ஞாபக சக்தி வளர வழிபட்டு பலனடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

* மண்ணிப்பள்ளம் கிராமம் பண்டைய காலத்தில் மண்ணு நீர்பள்ளம் என்று பெரிய புராணத்தில் குறிப்பிட்டபடி பசிக்கு விருந்தாக வும் நோய்க்கு மருந்தாகவும் அருள்கிறார் இத்தல ஈசன் ஆதி வைத்தியநாத சுவாமி என்று கூறுகிறார் ஆலய அர்ச்சகர் ஹரிஹர சிவம் குருக்கள்.

* மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத் தில் இருந்தபோது அவர்கள் ஐவரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்கள் கிருஷ்ணரை அணுகினர். அவர் குணமடைய சிவபெரு மானுக்கு வைத்தியநாதராக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அறிவுறுத்தி னார். அதே நேரத்தில் கயிலாயத்தில் கிருஷ்ண ரின் வார்த்தைகளைக் கேட்ட சிவபெருமான் கைலாசத்திலுள்ள வில்வ மரத்தை அசைக்கி றார். மரத்திலிருந்து ஐந்து வில்வ இலைகள் பிரிந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி வடகரைப் பகுதியில் பூலோகத்தில் விழுந்தன. அவை வானவில்வம் என்றழைக்கப்பட்டது. ஒரு லிங்கத்தை நிறுவ ஒரு இடத்தை தேட முடிவுசெய்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவுடன் வானவில்வம் இலைகள் விழுந்த ஐந்து இடங்களில் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

இந்த இடத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதில் பிரார்த்தனை செய்தனர். இதனால் அவர்கள் அனைவரும் குணமடைந்தனர். பாண்டவர் கள் வழிபட்ட ஊர் பாண்டூர் என வழங்க லாயிற்று. அந்த வகையில் பாண்டவர்கள் மண்ணிப்பள்ளம் உட்பட மற்ற நான்கு தலங் களிலும் வழிபட்டு பேறு பெற்றதாக தருமை ஆதீன செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

* சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் நடக்கின்றது. குறிப்பாக தன்வந்திரிக்கு ஹோமங் கள், செவ்வாய்தோஷ பரிகாரங்கள், ஆயுள் ஆரோக்கிய விருந்தி ஹோமம் முதலிய நிகழ்வுகள் கட்டளைதாரர் அடிப்படை யில் நடக்கிறது.

* மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாளில் அகத்தியருக்கு குருபூஜை நடக் கின்றது.

திருக்கோவில் அமைப்பு

பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் மூலிகைத் தோட்டத்தின் நடுவே நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தின்முன்பு தைல தீர்த்தக்குளம் உள்ளது. கோபுரத்தில் உள்ளே நுழைந் தால் பலிபீடம், கொடிமரம், நந்தீசர் சந்நிதியும் உள்ளது. மூலவர் ஆதி வைத்திய நாதர் 3 1/2 அடி உயரத்தில் வெகு நேரத்தி யான தோற்றத்துடனும் அம்மன் தையல் நாயகி தெற்கு நோக்கி நின்ற நிலையில் தனிச் சந்நிதியுடன் அருள்பாலிக்கிறார். அக்னிமூலையில் மடப்பள்ளி உள்ளது.

சுற்றுப் பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வமரம், ஔஷத விநாயகர் க்ஷேத்திர விநாயகராக தனி சந்நிதி கொண்டுள்ளார். தன்வந்திரி தனி சந்நிதி கொண்டு அருள் கிறார். வள்ளி, முருகன், தெய்வானை, சண்டிகேஸ்வரி, கஜலட்சுமி மற்றும் கோஷ்ட தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. பிராகாரத்தில் தீர்த்தக்கிணறு உள்ளது. ஈசான்ய திக்கில் தெற்கு நோக்கிய படி சிலா ரூபத்தில் நடராஜர், அகத்தியரும், மேற்கு நோக்கியபடி பைரவர், சந்திரன், சூரியன் திருமேனிகளும் உள்ளன.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் தினசரி நான்கு கால பூஜைகள் முறைப்படி நடக்கிறது.

செவ்வாய் தோஷத்தினால் திருமண மாகாமல் தள்ளிப்போகிறதா? நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா? ஆரோக் கியம் பாதிக்கப்பட்டு வாழ்வில் விரக்தி அடைந்தவரா? தொழில்காரகன், பூமி காரகன் (செவ்வாய்) என்பதால் தொழில் அபிவிருத்தி புதியதொழில் அமைய வேண்டுமா? பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளதா? குழந்தைகள் கல்வியில் மேன்மையடைய வேண்டுமா? மருத்துவக் கோளாறுடன் புத்திரபாக்கியம் தள்ளிப் போகி றதா? இதுபோன்ற கோரிக்கைகளை மூலவர் ஆதி வைத்தியநாத சுவாமியிடம் வையுங்கள்.

அவர் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதுடன், எண்ணியதை எண்ணியவாறு அருளும் மண்ணிப்பள்ளம் தையல் நாயகி சமேத ஆதி வைத்தியநாத சுவாமி மற்றும் தன்வந்திரி பகவான் நம் விருப்பத்திற்கேற்ற வளமான வாழ்வைத் தந்தருள்வார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயத்தலைமை அர்ச்சகர் சந்திரசேகர சிவாச்சார்யார் அவர்கள்.

நடை திறப்பு: காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக் கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், தையல் நாயகி சமேத ஸ்ரீ ஆதி வைத்திய நாத சுவாமி திருக்கோவில், மண்ணிப்பள்ளம், திருப்புங்கூர் (அஞ்சல்) மயிலாடுதுறை மாவட் டம்- 609 112.

பூஜை விவரங்களுக்கு: சி. ஹரிஹரசிவம் குருக்கள்- 88386 23608, ஆர். சந்திர சேகர சிவாச் சார்யார்- 98433 79617, 97881 95632.

அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் இருந்து பட்டவர்த்தி செல்லும் வழியில் (திருப்புன்கூரை அடுத்தாற் போல்) எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மண்ணிப்பள்ளம் கிராமம். பேருந்து, ஆட்டோ வசதி வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து உள்ளது.