"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.'
-திருவள்ளுவர்
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப்பெய்யும் மழை. கம்பரைப் பலவிதங்களிலும் ஆதரித்தவர் சடையப்பவள்ளல். அவர்மீதுள்ள நன்றியை வெளிப்படுத்தும் முகமாக ஓர் அரிய நூலை எழுதத் தீர்மானித் தார் கம்பர்.
சடையப்பர் தடுத்து, "அதற்குப் பதிலாக உழவின் மேன்மையை விளக்கும் வகையில் ஒரு நூல் எழுதுங்கள்' என்றார். சடையப்ப ரின் வேண்டுகோளை ஏற்று, "ஏர் எழுபது' எனும் 70 பாடல் கள் அடங்கிய நூலை எழுதி முடித்தார் கம்பர். அந்நூலின் அரங்கேற்றத்திற்கு பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தெய்வத்தை வணங்கி சடையப்பருக்கு தன் நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்த கம்பர், நூலை அரங்கேற்றத் துவங்கினார். ஏராளமானோர் கூடிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சேதிராயர் எனும் முக்கியஸ்தரை, பாம்பு ஒன்று தீண்ட விஷம் தலைக்கேறி மயங்கி விழுந்தார். அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
தன் விரிவுரையை நிறுத்தி மேடையிலிருந்து இறங்கி, சேதிராயரை நெருங்கிய கம்பர், அவர் அருகில் அமைதியாக அமர்ந் தார். கடவுளை வணங்கி மூன்று வெண்பா பாடல்கள் பாடி சேதிராயரின் உடலை மென்மையாகத் தடவிக் கொடுத்தார்.
அதே விநாடி உயிர் நீத்தவரைப் போலக் கிடந்த சேதிராயர், தூக்கத்திலிருந்து எழுபவரைப்போல எழுந்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது. அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து முடிந்தது. சடையப்பவள்ளலோ ஏராளமான நிலங்களை நன்கொடையாக வழங்கினார். நல்ல பழக்க வழக்கங்கள் ஆழமாகப் பதிந்தால் தெய்வ அருள் தானே வந்துகூடும். அரும்பெரும் செயல்களைச் செய்ய வைக்கும் என்பர்.
அந்தக் காலகட்டம் மன்னராட்சிக் காலம். சோழ வள நாட்டில் காவிரி வடகரை யில் தும்பை என்பவள் வாழ்ந்து வந்தாள். அவள் (தும்பை) ஒரு விபச்சாரி. விபச்சாரத் தொழிலில் தர்மத்தைக் கடைப்பிடித்தவள். அவளின் தர்மக் கணக்கு கூடிக் கொண்டே போனதால், அவளை ஆட் கொள்ள நினைத்த சிவபெருமான் ஒருநாள் அதிகாலை அவள் வீட்டு வாசல்முன் அச்சாரம் வைத்திருந்தார். வீட்டின் வெளியே வந்து பார்த்த தும்பை, அந்த அட்சாரத்தை ஏற்றுக்கொண்டு வீட்டினுள் சென்றாள்.
அந்த நாட்டை ஆளக்கூடிய மன்னன் சார்பாக, தும்பையுடன் இரவு மன்னன் இருப்பதற்கான அட்சாரத்தை மன்னனின் சார்பாக கொண்டுவந்து வைப்பதற்காக வந்தவரைப் பார்த்து ஏற்கெனவே ஒருவர் இன்றிரவு என்னோடு இருப்பதற்காக அட்சாரத்தை வைத்துவிட்டுச் சென்று விட்டார். அவரை இன்றிரவு முழுவதும் நான் என் கணவனாகப் பாவித்து அவரோடு இருக்க நான் என் மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆகையால் உங்களு டைய அட்சாரத்தை ஏற்க இயலாது என்று கூறியதும், மன்னனின் சார்பாக வந்திருந்த நபர், "தாயே! இது மன்னனின் கட்டளை... தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று வற்புறுத்த, தும்பை, "இதுவரையில் நான் செய்கின்ற இத்தொழிலில் கடைப்பிடித்து வந்த தர்மத்தை மாற்ற இயலாது' என்று மறுத்து வந்தவரை அனுப்பிவைக்கிறாள்.
இரவு ஒரு முதுமையான தள்ளாடும் நிலையில் மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் கபம் ஒழுக, இடைவிடாத இருமலுடன் வயோதிகர் வந்து தும்பையைப் பார்த்து, "இன்று அதிகாலை வேளையில் நான்தான் உன்னோடு இருப்பதற்கு அட்சாரம் வைத்துச் சென்றேன்' என்றார்.
சொன்னதும் அவரை முகமலர வரவேற்று வீட்டினுள் அழைத்துச்சென்று படுக்கையறையில் படுக்கைமேல் இருக்க வைக்கிறாள். அவரால் இருமுவதையும் அடக்க முடியாமல், இருமி இருமி ஜலமும், மலமும் போக அதனை ஒரு பதிவிரதா பத்தினியானவள் என்ன செய்வாளோ, அதையெல்லாம் மனம் கோணாமல் சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே மேலும் மேலும் தன்னுடைய கழிவுகளை வெளியேற்றிக்கொண்டே இருந்தார். ஆனால் எந்தவிதமான சொல்லாளோ, மனதாலோ, செய்கையாலோ வெறுப்பைக் காட்டாமல் மனமுவந்து அந்த இரவுப் பொழுதுக்கு மட்டும் வந்தவருக்கு கடமைகளைச் செய்துகொண்டே இருந்த தும்பையைப் பார்த்து முதியவர் வேடத்தில் வந்திருந்த சிவபெருமான் தான் கொண்டிருந்த வேடத்தைக் கலைத்து சுயரூபமான வேடத்தில் நின்ற கோலத்தைப் பார்த்து, தும்பை அரற்றி, அழுது, கண்ணீர் மல்க இறைவனைத் தொழுது, "எம் பாவ வினையால் இம்மாதிரியான தொழில் வாய்க்கப்பெற்றும், ஏதோ ஒரு புண்ணியக் கணக்கால், நான் செய்யும் இந்தத் தொழிலிலும் தர்மத்தைக் கடைப்பிடித்து வந்தேன்' என்றாள்.
இறைவன் அதற்கு தும்பையிடம் "நீ வேண்டும் வரம் என்னவென்று கேள்.
அந்த வரத்தை யாம் உமக்குத் தந்தருள்கிறோம்''
என்றார். அதற்கு சிவபெருமானைப் பார்த்த பரவசத்தில், "உன்னுடைய பாதம் எப்போதும் என் தலைமீதிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக என் பாதம் எப்போதும் உம் தலைமீதிருக்க அருள்புரியவேண்டும்'' என்று பதட்டத்தில் கேட்க, எம்பெருமானும் "அப்படியே ஆகட்டும்'' என்று அருள்புரிய, தன் தவறை உணர்ந்த தும்பை பெருமானிடம் மன்றாட, "தும்பை என்ற பெயருடைய நீ தும்பைப் பூவாய் எப்போதும் எம்சிரசில் வீற்றிப்பாய்'' என்று தும்பைக்கு அருள்பாலித் தார்.
எண்ணுவதில் தர்மம்
சொல்லில் தர்மம்
செயலில் தர்மம்
தொழிலில் தர்மம்... ஆக தர்மத்தின் வழி நின்றால் கர்மத்தின் வலி குறையுமப்பா... இது முனிவர்கள், மகரிஷிகள், சித்தர் வாக்கு. உன்னை மாற்றும் வல்லமை உன்னிலிருந்தே உருவாக வேண்டும்.
நீ செய்த செயல்களின் செயலால் விளைந்தவைகளை, காலம் உனக்கு அனுபவப்பாடமாக கற்றுக்கொடுக்கும். கற்றதைக்கொண்டு உற்றதைப்பெற்று, உயரிய வழியில் உறுதியாகப் பயணித்தால் வாழ்வில் உன்னத நிலை அடையாளம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற உன்னதமானதொரு திருத்தலம்தான் அன்பில், ஸ்ரீ சத்திய வாகீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ சத்திய வாகீஸ்வரர், ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர், ஸ்ரீ ஆலயந்துறையப்பர்.
இறைவி: அருள்மிகு சௌந்தரநாயகி.
விசேஷமூர்த்தி: செவிசாய்த்த விநாயகர்.
புராணப் பெயர்: அன்பிலாலந்துறை.
ஊர்: அன்பில்.
மாவட்டம்: திருச்சி, லால்குடி வட்டம்.
தீர்த்தம்: சந்திர தீர்த்தம், காயத்ரி தீர்த்தம்.
தலவிருட்சம்: ஆலமரம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்டது. சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் 111-ஆவது தலமாகவும் காவிரி வடகரை ஸ்தலங்களில் 57-ஆவது திருத்தலமாகவும் திகழ்கின்றது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டதும், பிரம்மா, வாகீசமுனிவர் பூஜித்துப் பேறு பெற்றதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களை பெற்றதொரு திருத்தலம்தான் அன்பில், ஸ்ரீ சத்திய வாகீஸ்வரர் திருக் கோவில்.
"கணை நீடு எரிமால் அரவம் வரைவில்லா
இணையா எயில்மூன் றும்எரித் தஇறைவர்
பிணைமா மயிலும் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே!''
"நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்தெய்த்தும் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே''
-திருஞானசம்பந்தர்.
தல வரலாறு
குறுக்கையர் குடியிலே புகழனார் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இவரது மனைவியாக மாதினியார் என்னும் பெருமானைக் கிழத்தியார் அமைந்திருந்தார். கணவனும் மனைவியும் இல்லற நெறி உணர்ந்து வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப வாழ்ந்தனர்.
இவ்வாறு இவர்கள் இல்லறமெனும் நல்ல றத்தை இனிது நடத்திவரும்போது இறைவனருளால் மாதினியார் கருவுற்றாள்.
அம்மையார் மணி வயிற்றில் திருமகளே வந்து தோன்றினாள் போல் அருள்மிக்க அழகிய பெண் மகவு பிறந் தது. அப்பெண் குழந்தைக்கு திலகவதி என்று திருநாமம் சூட்டிப் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். சில வருடங்கள் கழித்து அம்மையார் மணி வயிற்றிலிருந்து திருச்சடையானின் அருள்வடிவமாக சைவம் ஓங்க தமிழ் வளர கலைகள் செழிக்க மருள் எல்லாம் போக்கும் அருள்வடிவமாக கோடி சூரியப் பிரகாசத்துடன்கூடிய ஆண் குழந்தை பிறந்தது.
பெற்றோர்கள் அந்த ஆண் குழந்தைக்கு மருள்நீக்கியார் என்று நாமகரணம் சூட்டினர். மருள்நீக்கியார் முற்பிறப் பில் வாகீச முனிவராக இருந்தார். இவர் திருக்கைலாயத்தில் அமர்ந்து எம்பெருமானின் திருவடியை அடைய அருந்தவம் புரிந்துவந்தார்.
இராவணன் குபேரனைத் தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். ஒருசமயம் இராவணன் புஷ்பக விமானத்தில் வந்துகொண்டிருந்தான். கைலாய மலையை புஷ்பக விமானம் அணுகியதும் அங்கு எழுந்தருளியிருந்த நந்தியெம் பெருமான் இராவணனிடம் இப்புண்ணிய மலை எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருமலை. அதனால் நீ வலப்பக்கமாகப் போய்விடு என்று பணித்தார்.
மதியற்ற இராவணன் மிதமிஞ்சிய ஆணவத்தால் நந்தியெம் பெருமானுடைய பெருமையையும், அவர் எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியின் திறத்தினையும் எண்ணிப்பார்க்க இயலாத நிலையில், "மந்திபோல் முகத்தை வைத்திருக்கும் நீ இந்த மாவீரன் இராவணனுக்கா அறிவுரை கூறுகின்றாய்?'' என்று சினத்தோடு செப்பி னான். அளவு கடந்த கோபம்கொண்ட நந்தியெம் பெருமான், "அப்படியென்றால் உன் நாடும் உன் வீரமும் குரங்கினாலேயே அழிந்து போகக் கடவது!'' என்று கூறி சாபம் கொடுத்தார். இராவணன் ஆத்திரத்தோடு, "என்னைத் தடுத்து நிறுத்திய இந்த கைலாய மலையை அடியோடு பெயர்த்து எறிகிறேன்'' என்று கூறித் தனது இருபது கரங்களாலும் மலையை அசைத்தான்.
அதுசமயம் ஈஸ்வரியுடன் நவமணி பீடத்தில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் தனது தண்டை சிலம்பணிந்த சேவடி பாதப் பெருவிரல் நுனி நகத்தால் லேசாச அழுத்தினார். அக்கணமே இராவணனது இருபது கரங்களும் மலையினடியில் சிக்கியது. இராவணன் கரங்களை அசைக்க முடியாமல் துடித்துக்கொண்டிருந்தான். ஓலக்குரல் எழுப்பினான். அத்திருமலையில் தவமிருந்து வந்த அருந்தவசியான வாகீசரின் செவிகளில் இராவணனின் ஓலக்குரல் விழுந்தது. மனம் இளகினார் முனிவர். அவனது துயரம் நீங்குவதற்கு நல்லதொரு உபாயம் சொன்னார்.
"எம்பெருமான் இசைக்குக் கட்டுப் பட்டவர். அவரை இசையால் வசப்படுத்தினால் இத்துயரத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த மார்க்கம் பிறக்கும்.'' வாகீச முனிவரின் அருளுரை கேட்ட இராவணன் தனது நரம்பை யாழாக்கி பண் இசைத்தான். பரமனின் பாத கமலங்களைப் போற்றிப் பணிந்தான். பக்தனின் இசை வெள்ளம் ஈசனின் செவிகளில் தேனமுதமாய்ப் பாய்ந்தது. சிவனார் சிந்தை குளிர்ந்தார்.
அவன் முன்னால் பெருமான் பிரசன்ன மானார். இராவணனின் பிழையைப் பொறுத்தார். சந்திரஹாசம் என்னும் வாள் ஒன்றை அவனுக்கு அளித்ததோடு நீண்டகாலம் உயிர்வாழும் பெரும் பேற்றினையும் அளித்தார். இராவணன் எம்பெருமானைத் தோத்திரத்தால் மேலும் வழிபட்டு, பேரின்பப் பெருக்குடன் இலங்கைக்குச் சென்றான்.
அதேசமயம் நந்தி தேவருக்கு வாகீச முனிவரின் செயல் சினத்தை மூட்டியது. இதனால் இராவணனுக்கு உதவிசெய்த வாகீச முனிவரை, "நீ பூலோகத்தில் பிறக்கக் கடவது'' என்று சாபமிட்டார். இதனால் கலங்கிய வாகீசர், பூமியில் அன்பிலாலந்துறை என்னும் இத்திருக்கோவிலில் சுயம்புவாய் எழுந்தருளிய ஈசனைப் பணிந்து வழிபட்டார். ஈசனின் கருணையால் திருஆமூரில் மருள் நீக்கியவராகப் பிறந்தார். இந்த நிகழ்வை தனது பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார் திருநாவுக்கரசர் சுவாமிகள். இதனால் வாகீசர் பணிந்த ஈசன் "சத்திய வாகீசுவரர்' என்ற திருநாமம் கொண்டார். வாகீசர் என்ற திருப்பெயர் நான்முகனுக்கும், பிரகஸ்பதிக்கும் உண்டு. அவர்களும் இங்குவந்து ஈசனை வழிபட்டார்கள். வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் உபகோவிலாக மூன்று கோவில்கள் அன்பில் கிராமத்தில் உள்ளது. அதில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மட்டுமல்லாது சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் மற்றும் மாரியம்மன் திருக்கோவிலும் உள்ளது.
சிறப்பம்சங்கள்
ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ சத்திய வாகீஸ்வரர். பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறையப்பர் என்ற பெயர்களும் உண்டு. சுயம்பு மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார். இறைவி யின் திருநாமம் அருள்மிகு சௌந்தர நாயகி.
ப் இத்தலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் செவி சாய்த்த விநாயகர். சீர்காழியில் பிறந்து உமையம்மையிடம் ஞானப்பால் உண்டு தேன்சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரை சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோவில் இருக்கும் இடத்தை அடையமுடியவில்லை. தூரத்தில் நின்றபடியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார்.
காற்றில் கலந்துவந்த ஒலி ஓரளவே கோவிலை எட்டியது. அங்கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர் "இளையபிள்ளையார்' எனப் பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம்பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக தன் யானைக் காதை பாட்டுவந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது.
ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக் காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி.
அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. "செவிசாய்த்த விநாயகர்' என்ற பெயரைப் பெற்ற இவர் சாமவேத விநாயகர் என்றும் குறிப்பிடப்படுவது குறிப்பிடத்தக்கது. சோழர் மற்றும் ஹொய்சாள வம்சங்களின் கல்வெட்டுக்கள் கோவிலுக்குள் உள்ளன.
காது சம்பந்தமான அறுவைச் சிகிச்சைகள், காது கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் இத்தலத்திலுள்ள இறைவன்- இறைவி மற்றும் விநாயகருக்கும் பூஜைகள் செய்து வழிபட்டால் உரிய பலன்கிட்டும் என்கிறார் அர்ச்சகர் பாலாஜி.
ப் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் ஆலய விழாக்களாக கொண்டாடப்படுகிறது.
ப் சங்கடஹர சதுர்த்தியன்று சத்திய வாகீச விநாயகரை வணங்கி னால் சங்கடங்கள் தொலை வதுடன் இனம்புரியா பயம் நீங்கி இன்புற்று வாழலாம்.
ப் ராகு- கேது, சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி காலங்களில் சிறப்பு வேள்வி அபிஷேக அர்ச்சனை நடைபெறும்.
ப் முதலில் மூலக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கல்லால் புனரமைக்கப்பட்டது. நடுத்தர நுழைவாயில் பத்து முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் கட்டப்பட்டுள்ளது. கடைசி காலகட்டத்தில் ஹொய்சாளர்கள் மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆகியோரால் புனரமைக்கப்பட்டுள்ளது. இத்தலம் காவிரி வடகரை ராஜராஜ வள நாட்டுக்கிழார் கூட்டத்து அன்பில் இருந்த அன்பிலுடையார்- திருவாலந்துறை உதய நாயனார் என ஈசனை அழைக்கப்பட்ட தாகவும்;
பாண்டிய மன்னன் கோபன்மார் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 11-ஆவது ஆட்சியாண்டில் கைக்கோள முதலியார் சாதியைச் சார்ந்த ஆச்சிராமன் குலோத்துங்க பல்லவராயர் நைவேத்தியம் வழங்கியதைப் பதிவுசெய்து, இதற்காக 3 மாநிலம் வாங்கியபிறகு கோவிலுக்கு வழங்கப்பட்டதாகவும்;
முதலாம் இராஜேந்திர சோழனின் 4-ஆம் ஆட்சியாண்டில் அன்பில் பெருங்குறி சபையார் புதிதாக நிறுவப்பட்ட ஆதி சண்டிகேஸ்வரருக்கு பூஜைகள் மற்றும் நைவேத்தியம் வழங்கியதை பதிவுசெய்து, அதே நிலத்திற்கு 280 கலம் (5 மா) தானமாக வழங்கப்பட்டதாகவும்;
ஹொய்சாள மன்னன் வீர ராமநாதனின் 8-ஆம் ஆட்சியாண்டில் வடவழிநாட்டு ஊத்துங்கத்துங்காவல நாட்டு குன்றக் கூட்டத்து செருவிடை மங்களமுடையான் பெரியன் தாழி பாண்டியராயன் என்பவருக்கு பூஜை, நைவேத்தியம், சூரியதேவன் நந்த வனம் ஆகியவற்றை வழங்கி பதிவு செய்துள்ளதாகவும் ஆலயக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றது.
ப் சூரியனைப் பார்த்த படி மற்ற எட்டு கிரகங் கள் அபூர்வ அமைப்பில் உள்ளதால் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி யாகிறது என்கிறார் செயல் அலுவலர்.
ப் மூன்று நந்திகள் இருப்பது விசேஷம். பிரதோஷ காலத்தில் வழிபடுவோர்க்கு கூடுதல் சிறப்புப் பலன்கிட்டும்.
ப் ராஜராஜர் காலத்தில் ஜைமினி குடும்பங்கள் இடம் பெயர்ந்து அன்பில் கிராமத்திற்கு வந்து விநாயகர்முன் சாமவேத பாராயணம் செய்ததால் சாமவேத விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிதுர்தோஷம், முன்னோர் சாபம், பெண் சாபம், சர்ப்ப சாபம் எந்த வகையிலான சாபங்களாயிருந்தாலும் சரி... பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர், வாகீச முனிவர் வழிபட்டதால் சத்திய வராகீஸ்வரர்... அதாவது பிரம்மனுக்கும் பிரகஸ்பதிக்கும் வாகீசன் என்ற பெயர் உண்டு. ஆதலால் அன்பர்கள் மனதில் ஸ்ரீ சத்திய வாகீஸ்வரர் என்பது மிகப்பொருத்தமானதாகவும், பதிவானதாகவும் உள்ளது. அத்தகைய சத்திய வாகீஸ்வரரிடம் விண்ணப்பம் வைக்கலாம் என்றும்; கோள்சாரரீதிய நவகிரக நிலைகள் சரியில்லாவிடில் தாங்கள் பிறந்த கிழமை அல்லது ஜென்ம நட்சத்திரத்தன்று சூரியனைப் பார்த்தபடி மற்ற எட்டு கிரகங்கள் உள்ளதால் நவகிரகங்களுக்கும் மூலவருக்கும் அபிஷேக வழிபாடு செய்து நலம்பெறலாம் என்றும், நாட்பட்ட நோயால் அவதிப் படுபவர்கள் மாத சதுர்த்தியன்று செவி சாய்த்த விநாயகருக்கும், சங்கடஹர சதுர்த்தியன்று சத்திய வாகீச விநாயகருக்கும் புது வஸ்திரம் சாற்றி அபிஷேக அர்ச்சனை செய்தால் நிவர்த்தியடையலாம் என்றும்; திருமணத்தடை, தம்பதி ஒற்றுமைக்கு திருமணக் கோலத்தில் அருட்காட்சி நல்கும் அம்மன் சௌந்தர நாயகியிடம் விண்ணப்பம் வைக்கலாம் என்றும்; மொத்தத்தில் தன்னை வழிபடும் அன்பர்களுக்கு ஆனந்த நிலையுடன் விருப்பங்களை நிறைவேற்றி வியப்புமிகு வாழ்வைத் தந்தருள்வார் என்று ஆலயப் பிரதான அர்ச்சகர் ஷண்முக சுந்தரசிவாச்சாரியார் பெருமிதத்துடன் கூறுகிறார்.
திருக்கோவில் அமைப்பு
நெற்களஞ்சியம் மிகுந்த சோழ வளநாட்டில் காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் ஐந்து நிலைகள்கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்குப்புறம் தல விருட்சமான ஆலமரம் மற்றும் சத்திய வாகீச விநாயகர் சந்நிதி தனியாக உள்ளது.
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் உட்பிராகாரங்களுடன் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், தீபஸ்தம் மற்றும் சந்திர தீர்த்த குளம் உள்ளது. 2-ஆவது நுழைவாயிலைக் கடந்தால் இறைவன்- இறைவி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் சதுர ஆவுடையார்மீது சுயம்புவாக அருட்காட்சி அளிக்கிறார் சத்திய வாகீஸ்வரர், கருவறை சந்நிதி, அந்தரளம் மற்றும் அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்மண்டபத் தூண்களில் பல சிற்பங்கள் உள்ளன. அவற்றில் சில, சிவனை வணங்கும் இரண்டு பாம்புகள், தூணின் ஒருபுறம் பாம்பு வால் மற்றும் தலை சர்ப்பமண்டலம் போன்றவை உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்ணு, பிரம்மா, பார்வதி, அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் சிவனை வழிபடும் படிமங்கள் உள்ளன. கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளன.
உட்பிராகாரத்தில் செவி சாய்த்த விநாயகர், க்ஷேத்திர விநாயகர், ஸ்ரீ வள்ளி சுப்பிரமணியர், விஸ்வநாதர் விசாலாட்சி, பிச்சாடானர், பைரவர், சனீஸ்வரர், நால்வர், சப்தமாத்ரிகர்கள், நடராஜ சபை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். நவகிரகங்கள் சூரியனை நோக்கியவண்ணம் உள்ளனர். பிராகாரத்தில் கிழக்கு நோக்கி தனிச் சந்நிதியில் பெயருக்குத் தகுந்தாற்போல் வடிவழகுடன் நின்ற நிலையில் அம்பாள் சௌந்தர நாயகி அருட்காட்சி தருகிறாள். இரண்டாவது பிராகாரம் மரங்கள் மற்றும் செடிகள் நிறைந்த திறந்தவெளி நந்தவனம் போல் உள்ளது.
ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் மூலவர் குடிகொண்டு அருள்பாலிப்பதால் இத்தல இறைவனை வணங்குபவர் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி நல்வாழ்வை அடையலாம் என்று அப்பர் பெருமானும்; ஒவ்வொரு பிறவியிலும் அடைந்திருக்கும் மூன்றுவிதமான கடன்களிலிருந்து மீளலாம் என்று சம்பந்தர் பெருமானும் பாடிய இத்தலம் கடைசியாக 2004-ஆம் ஆண்டு முக்கியஸ்தர்கள், ஆன்மிக அன்பர்கள், கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள், கிராமவாசிகள் மற்றும் அனைவரது ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. 20 ஆண்டுகளுக்குப்பின் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கூடிய விரைவில் அறநிலையத்துறை ஒப்புதலுடன் குட முழுக்கை எதிர்நோக்கியுள்ளது என்று ஆலய செயல் அலுவலர் கூறினார்.
நடை திறப்பு: காலை 6.00 மணிமுதல் பகல் 11.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ சத்திய வாகீஸ்வரர் திருக்கோவில், அன்பில் (அஞ்சல்) லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்- 621 702.
பூஜை விவரங்களுக்கு: சண்முக சுந்தர சிவாச்சாரியார்- 73588 73381, 99657 39750, பாலாஜி அய்யர்- 63602 62366.
அமைவிடம்: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருச்சியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், லால்குடியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
பேருந்து வசதிகள் உண்டு.
படங்கள்: போட்டோ கருணா