சார்ந்தாரைக் காக்கும் சர்வேஸ்வரன், விமோசனம் வேண்டி தனதடி தொழு வோர்க்கெல்லாம் விமோசனத்தோடு, அனுகிரகமும் அளிக்கின்றார். அதில் முனிவர்களும், தேவர்களும்கூட அடங்குவர்.
அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர்கள் இந்த பூவுலகில்தான் சிவபூஜைப் புரிந்து நற்கதியும், நற்பேறுகளும் பெற்றுள்ளனர்.
அவ்வகையில் அதிஉன்னதத் தலமாகப் போற்றப் படுகின்றது கிளி யனூர்.
தேவாரப் பாடல்பெற்றத் தலங்கள் 274-ல் கடைசித் தலமாக போற்றப்படும் இந்த தலம்மீது திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார்.
வெகுகாலமாக வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது இந்த தலம். பாண்டிச்சேரி "Institute of Indology" சார்பில் 1984 ஆம் ஆண்டு டி.வி. கோபால ஐயர் அவர்களால் இத்தலத்தினையும் சேர்த்து "தேவார பண்முறை' என்கிற தொகுப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதுமுதலே இந்த கிளியனூர் திருத்தலம் தேவாரத்தலம் என்பது ஊர்ஜிதமானது.
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இந்தத் தலத்தை கிளியன்னவூர் என்று குறிப்பிடுகின்றார்.
கும்பமுனி என்று போற்றப்படும் அகத்திய மகரிஷி இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூசனைப் புரிந்துள்ளார். அகத்தியர் பூஜித்தக் காரணத்தால் இத்தல பெருமான் அகத்தீஸ்வரர் என்று போற்றலானார்.
சுகப் பிரம்ம ரிஷி தனக்கு ஏற்பட்ட தீராத (குன்ம வியாதி) வயிற்றுவலி தீர, இத்தல சிவபெருமானைப் பூஜித்து விமோசனம் பெற்றுள்ளார்.
கிளிமுகம்கொண்ட சுகப்பிரம்மரிஷி இத்தலத்தினில் வழிபட்டதனால் கிளியனூர் ஆனது இப்பதி. வடமொழியில் சுகபுரி என்றழைப்பர்.
பரந்தாமனானத் திருமாலைத் தாங்கும் நாகங்களின் முதன்மையான ஆதிசேஷனும் இத்தல சிவலிங்க மூர்த்தியை வழிபாடு செய்துள்ளார்.
இதையே....
"பன்னி நின்ற பனுவல் அகத்தியன் உன்னி நின்று உறுத்தும்
சுகத்தவன் மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் முன்னில் நின்ற.
கிளியன்ன வூரனே''
என்று சம்பந்தர் மெய்ப்பினைக் கூறுகின்றார். இதைவிடவும் இத்தலத்திற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?
காலவ மகரிஷி தனது இரண்டு பெண் குழந்தைகளின் தீராதப் பிணி நீங்க, இப்பதி வந்து தங்கி, தவமுடன் பூஜையும் புரிந்து திருவருள் பெற்றுள்ளார்.
இத்தலத்து அம்பிகையை மகா சிவராத்திரியின்போது மூன்றாம் காலத்தில் நந்திகேஸ்வரரே பூஜைபுரிவதாக தல மஹாத்மியம் தெரிவிக்கின்றது.
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற் றுப்படை, புறநானூறு போன்ற சங்க இலக் கியங்களில் இப்பகுதி ஓய்மாநாடு என்றும், அதன் மன்னன் நல்லியக்கோடன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்கால சோழர்களால் எழுப்பப்பட்ட இக்கோவில், சோழ மன்னர்கள் பலரால் பராமரிக்கப்படும், திருப்பணிகள் செய்யப்பட்டும் வந்துள்ளன. சோழர் கல்வெட்டில் இவ்வூர்.... "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, ஒய்மாநாட்டின் உலகுய்ய வந்த சதுர்வேதி மங்கலத்து கிளிநல்லூர்'' என்றும், கிளிஞனூர் என்றும், ஓய்மா நாட்டு விஜய இராஜேந்திரன் வளநாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்து ஈசன் திருவக்னீஸ்வரமுடைய மகாதேவர் என்றும், பொறிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னன் மல்லிகார்ஜுனனின் கல்வெட்டில் "கிளிவளநல்லூர்' என்று இவ்வூர் காணப்படுகின்றது.
சிவானுபவச் செல்வரான பாலைய சுவாமிகள் மற்றும் சிதம்பரம் சுவாமிகள் ஆகியோரும் கிளியனூர் ஈசனை வழிபட்டுள்ளனர்.
ஊரின் வடகிழக்கே உள்ள பெரிய ஏரியின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது ஆலயம். முதலில் செங்கற்த்தளியாக இருந்த இக்கோவிலை மதுரைகொண்ட கோப் பரகேசரி வர்மனாகிய முதலாம் பராந்தகச் சோழன் கருங்கற்த்தளியாக மாற்றியமைத்துள்ளான்.
கிழக்கும் - மேற்குமாக இரண்டு வாயில்கள் உள்ளன. முக மண்டபத்துடன்கூடிய கிழக்கு வாயிலின் வழியாக உள்ளே நுழைய...ஈசான திசையில் நவகிரக சன்னிதியுள்ளது. தென்புறம் ஸ்தல விருட்சமான வன்னிமரம் உள்ளது. நடுநாயகமாய் கற்றளியாலான ஸ்வாமி சன்னதி மேற்கு முகமாக அமைந்திருக்க, அதையொட்டிய மகாமண்டபமும், வெளிப் புற மண்டபமும், கிழக்கு பார்த்த அம்பிகை சன்னிதியும் அமையப்பெற்றுள்ளது.
மேற்கு திசைப் பார்த்த சுவாமி ஸ்ரீ அகத்தீஸ் வரர் சதுர ஆவுடைக் கொண்டு அற்புதமாக அருள்பாலிக்கின்றார். அருள் சுரக்கும் அற்புத மூர்த்தம்.
கிழக்கு முகமாய் நின்றவண்ணம் மேலிரு கரங்களில் சங்கு- சக்கரமேந்தி புன்னகை ததும்ப அருள் சிந்துகின்றாள் அன்னை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. கரத்தில் சிறு பின்னம் ஏற்பட்ட காரணத்தால் கும்பா பிஷேகத்தின்போது இந்த அம்பாள் சிலையை மாற்றிட தீர்மானித்திருந்தனர்.
அப்போது ஆலய பொறுப்பாளர் கனவில் தோன்றிய அம்பிகை, கையொடிந்த உன் தாயை தூக்கி ஏரிந்து விடுவாயா? என்று கேட்க, அதன்பின் பழைய அம்பாள் சிலைக்கே குடமுழுக்கு நடத்தினார்கள். சுவாமியும்- அம்பாளும் இங்கு மாலைமாற்றும் கோலத் தில் எதிரும்- புதிருமாக வீற்றருள்வது சிறப்பு.
நிருர்தி மூலையில் கணபதி சன்னிதியும், வாயு திசையில் கஜலட்சுமி மற்றும் கந்தன் சன்னதியும் அமைந்துள்ளன.
சிறிய ஆலயம் எனினும் சிற்பகலாப் பொக்கிஷமாக திகழ்கின்றது. சிற்பங்கள் ஒவ்வொன்றும் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொன்றும் சோழர் கலை நயத்தின் மேன்மையை கூட்டுகின்றது.
ஆலயத்தின் தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் கன்வ தீர்த்தம் ஆலயத்திற்கு மேற்புறம் அமையப்பெற்றுள்ளது.
ஒன்பது கல்வெட்டுக்கள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன.
அவை.... முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 917), முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி. 1025), முதலாம் இராஜாதிராஜன் (கி.பி 1046), முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1073), முதலாம் விக்ரம சோழன் (கி.பி. 1128), முதலாம் இராஜநாராயண சம்புவராயன் (கி.பி. 1338), விஜயநகர மன்னன் மல்லிகார்ஜுனன் (கி.பி. 1447), விஜயநகர மன்னன் அச்சுதராயர் (கி.பி. 1524) மற்றும் விஜயநகர மன்னன் சதாசிவ மகாராயர் (கி.பி. 1526) ஆகியோரது கல்வெட்டுக்கள் இவ்வாலயத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதோடு பாண்டியர் கால கல்வெட்டு களும் இப்பகுதியில் ஏராளமாகக் கிடைத் துள்ளன.
பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர மன்னர்களின் திருப்பணி பற்றிய விரிவானச் செய்திகளை இக்கல்வெட்டுகளின் வாயிலாக நாம் அறியப் பெறலாம்.
அரசுக்குச் சொந்தமான இவ்வாலயத்தில் தினசரி இரண்டுகால பூஜைகள் நடைபெறு கின்றது. தினமும் காலை 8.00 மணிமுதல் 11.00 மணிவரையும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரையும் ஆலயம் திறந் திருக்கும்.
இத்தலத்தின் விசேஷங்களாக.. பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை சிறப்பு வழிபாடுகளும், பங்குனி உத்திரம் ஏகதின உற்சவமும் சிறப்புற நடத்தப்படுகின்றன. சிவராத்திரி நான்கு காலமும் சிறப்பு அபிஷேக - அலங்கார- ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அதோடு ஏனைய சிவாலய விசேஷங்களும் செவ்வனே அனுசரிக்கப்படுகின்றன.
தீராத பிணியில் வாடுபவர்கள் இத்தல இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து, அதை அருந்திட, உற்ற பலனுண்டு. இத்தல வழிபாடு திருமணத்தடையோடு, நாக தோஷம், புத்திரதோஷம் போன்றவற்றையும் நீக்கி, வளமும், நலமும் பெற்று வாழ்ந்திட வழிவகுக்கின்றது. சம்பந்தரும் தனது தேவாரத்தில் இவற்றை பதிவு செய்துள்ளார். சுகபுரி கண்டு சுகம் பல பெறுவோம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா விலுள்ள இப்பதி, திண்டிவனம்- பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் திண்டிவனத் திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் தைலாபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது.