ஜீவதானி மாதா ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள விரார் என்னும் ஊரில் இருக்கிறது. வடக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் அமைந் துள்ளது. 1,465 படிகள் உள்ளன. இந்த ஆலயம் இருக்கும் மலைத்தொடரின் பெயர் சத்புரா.

ஜீவதானி மாதா இங்கு கோவில்கொண்டது குறித்து ஒரு வரலாறுண்டு. பாண்டவர்கள் வனவாச காலத்தில், இந்தப் பகுதியிலிருக்கும் விமலேஸ்வர் ஆலயத்திற்கு வந்தார்கள். அது பரசுராமரால் கட்டப் பட்டது. அங்கு வழிபட்டபின் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். வைட்டரானி என்னும் நதியின் கரையில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அங்கிருந்த பகவதி ஏகவீராவை பக்திப்பெருக்குடன் வணங்கினார்கள். அந்த இடத்திற்குப் பெயர் விரார் தீர்த்தம்.

பின்னர் ஏக வீராதேவியின் சிலையொன்றை குகைக்குள் உருவாக்கி, அதை வழிபட்டிருக்கின்றனர்.

அந்த அன்னைக்கு அவர்கள் வைத்த பெயரே ஜீவதானி மாதா.

Advertisment

dd

வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு இந்த அன்னையை வழிபடுகின்றனர். அந்த குகைக்கு தற்போதைய பெயர் பாண்டவா டோங்கிரி. இங்கு பல முனிவர்கள் தவம் செய்திருக்கின்றனர். இப்போதும் தவம் செய்கிறார்கள்.

கலியுகம் ஆரம்பமானபிறகு காலப்போக்கில் இந்த இடத்தை அனைவரும் மறந்துவிட்டார் கள். ஜகத்குரு சங்கராச்சாரியாரின் காலத்தில், கால்நடைகளை மேய்க்கும் ஒருவர் சங்கராச்சாரி யாரை நேரில்சென்று வணங்கி, தன் குலதெய்வத்தை வழிபடுவதற்கும் கால்நடைகளைக் காப்பதற்கும் வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டார்.

அவரை ஆசிர்வதித்த சங்கராச்சாரியார், "ஜீவதானி என்ற அன்னையின் தரிசனம் உனக்குக் கிடைக்கும். அதன்மூலம் நீ உன் கால்நடைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம்'' என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் தன் கால்நடைகளை ஓரிடத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி செய்தார். அங்கிருந்த பசுக்களில் ஒன்று தினமும் மாலை வேளையில் மலையுச்சிக்குச் சென்றது. இதை கவனித்த அவர் ஒருநாள் அந்த பசுவைப் பின்பற்றிச் சென்றார். அங்கே அவருக்குமுன் ஒரு அழகான பெண் தோன்றினாள். அப்போது அவருக்கு சங்கராச்சாரியார் கூறியது ஞாபகம் வந்தது. அந்தப் பசு அந்த அன்னையிடம் சென்றது.

"அன்னையே! இது உங்கள் பசுவா? இதுவரை இந்தப் பசுவை நான் பத்திரமாக பாதுகாத்திருக்கிறேன். எனக்கு நீங்கள் என்ன தரப்போகிறீர்கள்?'' என்று அவர் கேட்க, அன்னை சிரித்துக்கொண்டே அவரைத் தொட்டு, "நிச்சயம் நீ கேட்பதைத் தருகிறேன்'' என்றாள்.

அப்போது அவர், "தாயே! என்னைத் தொடாதீர் கள். நான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன்'' என்றார்.

அதற்கு அந்த அன்னை, "உலகில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதியென்று எதுவுமே இல்லை. நீயும் என் மகன்தான். உனக்கு புண்ணியம் கிடைக்கும். நீ நினைத்த காரியங்கள் நிறைவேறும்'' என்று கூறிவிட்டு குகைக்குள் சென்று மறைந்துவிட்டாள்.

இந்த குகைக்குள் வந்து அன்னையை வழிபட்டால், குழந்தை இல்லாதவர்களுக்குக் கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. "பெண்கள் வெற்றிலைப்பாக்கு கொண்டுவந்து எனக்கு முன்னால் வைத்து வழிபட்டால் நிச்சயம் அவர்கள் கர்ப்பம் தரிப்பார்கள்'' என்று அன்னையே ஒரு பெண்ணிடம் கூறியதாக வரலாறு.

இப்போது அங்கு அன்னையின் புதிய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. பழைய சிலை குகைக்குள் இருக்கும் இன்னொரு குகைக்குள் இருக்கிறது. தசரா பண்டிகைக் காலத்தில் ஏராளமான பக்தர்கள் ஜீவதானி மாதாவை தரிசிப்பதற்காக வருகிறார்கள்.

இந்த ஆலயத்தை முகலாயர்களும் போர்த்துக் கீசியர்களும் பலமுறை தாக்கியிருக்கிறார்கள்.

"ஜீவதானி' என்றால் "உயிர்தரும் அன்னை' என்று பொருள். இந்த ஆலயம் இருக்கும் மலைப்பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகளும் மரங்களும் இருக்கின்றன.

மகாராஷ்ட்டிர மாநிலத்திலுள்ள 18 சக்திபீடங்களில் இந்த ஆலயமும் ஒன்று. 1700-ஆம் வருடத்தில் இப்போதைய ஆலயம் புதுப்பித்துக் கட்டப்பட்டது. மலையின்மேல் செல்வதற்கு "ரோப் வே' வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பக்தர்கள் அன்னையைத்தேடி வருகிறார் கள்.

சென்னையிலிருந்து மும்பை சென்றால் அங்கிருந்து விராருக்கு ரயில் இருக்கிறது. பேருந்து களும் உள்ளன.