இந்த இதழில், அனுபூதியில் வரும் செய்யுள் 34 மற்றும் 35-ல், சக்தி வழிபாடும், முருகனிடம் எவ்வாறு சரணாகதி செய்யவேண்டும்-
அதற்கான வழி என்னவென்றும் அருணகிரி நாதர் கூறியதை விரிவாகப் பார்க்க இருக்கி றோம்.
செய்யுள்-34
"சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ஷண்முகனே
கங்காநதி பால கிருபாகரனே.'
பொருள்: மயிலைத் திறம்பட செலுத்திப் போர்புரியும் ஷண்முகப் பெருமானே, கங்கை நதியின் புதல்வனே, கருணையும் அருளும் உடையவரே! அலங்காரம் செய்து ஆடவரை மயக்கும் தீயநெறி கொண்ட பெண்கள்பால் நான் சென்று மயங்கிவிடாமலிருக்க எனக்கு வரம் தருவாயா?
கடந்த பாடலில் சாதகன் விந்தியமலை எவ்வாறு பாரத தேசத்தின் நடுவில் இருக்கிறதோ, அவ்வாறே தாமும் உலகம் மற்றும் ஆன்மிக வாழ்வு இரண்டிற்கும் நடுவில் நிற்பதை உணர்கிறான். சற்றே ஏற்பட்ட இறையனுபவம் அவனை மேலும் ஆன்மிக வாழ்வின்பால் அதிகம் செல்லத் தூண்டுகிறது, ஆனால் இன்னும் முழுதாகச் செல்ல முடியவில்லை. உலக வாழ்க்கை கர்மவினைகள் ஒருபுறம் இழுக்க, மறுபுறமோ இறைவனின் புன்னகை சாதகனை உருக்குகிறது.
இந்தப் பாடலில், சாதகன் ஆன்ம உணர்வு பெற்றபிறகும் தீநெறி செல்லாமல் இருக்க வேண்டுமென்று கேட்கும் வரத்திற்கு ஓர் அர்த்தமுண்டு. கர்மவினைகள் மூன்று விதமாக ஒரு மனிதனைத் தாக்குகிறது. முதலில் ஸ்தூலமாகவும், பின்பு சூட்சும மாகவும், பின்பு காரண நிலையிலும் தாக்குகிறது. அதனால்தான் "மட்டூர் குழல்' என்ற பாடலில், கர்மவினைகள் சாதகனை உலகவாழ்வில் நிஜத்திலேயே சில செயல்களில் ஈடுபடவைக்கிறது என்கிறார்.
அதன்பின்னர் "கூர்வேல் விழி' என்ற பாடலில் எண்ணங்களில் கர்மவினைகள் எஞ்சியிருப்பதைக் கூறி, அது சூட்சுமமாகத் தாக்கியதையும், அதன் தொடர்ச்சியாக இந்தப் பாடலில் காரண சரீரத்தில் இவ்வாறான பதிவுகள் இருப்பின், அதன் பிடியிலிருந்து தன்னை மீட்குமாறும் முருகனிடம் இறைஞ்சுகிறான் சாதகன். இங்கு வரமென்று கேட்கும்பொழுதே, சாதகன் அந்த வேலையைத் தம்மால் செய்யமுடியாதென்றும், இறைவனின் கருணையால் மட்டுமே அந்த வேலை நடக்குமென்றும் புரிந்துகொண்டபடி யால்தான், சிங்கார மடந்தையரால் தமக்கு வேறு எந்தத் தீங்கும் வந்துவிடாதபடி காக்குமாறு முருகனிடம் இறைஞ்சுகிறான்.
காரண உடலில் பதிந்திருக்கும் கர்மவினைகள் எப்போது வேண்டுமானா லும் வெளிப்படும். ஸ்தூல, சூட்சும வினைகள் சாதகனின் புத்திக்குத் தெரிந்து வெளிப்படும். ஆனால் காரண சரீரப் பதிவுகள் அழியவேண்டுமென்றால் சாதகனின் முயற்சியால் மட்டும் நடக்காது. மாறாக இறையருள்கொண்டு மட்டும்தான் அது மாறும்.
இங்கு இந்த வரத்தைக் கேட்க ஒரு காரணமுண்டு. புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்துணையோ இடங்களில் பெரிய பெரிய ஞானிகளும் முனிவர்களும்கூட மாயை வசப்பட்டு, தம் தவத்தை இழந்த கதைகள் ஏராளமுண்டு.
தேவி மாகாத்மியத்தில்-
"மஹாமாயா ஹரேசைஷா தயா
ஸம்மோஹ்யதே ஜகஸித்/
ஜ்ஞானிநாமபி சேதாம்ஸி தேஸிவீ
ப4க3ஸிவதீ ஹி ஸா//'
என்னும் வரிகளில், மகாமாயையானவள் ரிஷி முனிவர்கள் போன்ற ஞானிகளையும் பீடிக்கத்தான் செய்கிறாள்; எல்லாரும் மாயையின் கட்டுப்பாட்டில் விழவேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இறைவனின் மாயா சக்தியானது பாரபட்சமின்றி அனைவரையும் பீடிக்கத்தான் செய்கிறது. மாயை இறைவனின் சக்தியாதலால், அவரின் கருணையின்றி அந்த சக்தியினின்று வெளிவர முடியாது. காரண சரீரப் பதிவுகள் மாயையின் உதவிகொண்டே வெளிவர முடியும். ஆதலால்தான் மாயை விலகவேண்டி சாதகன் இங்கு இறைவனிடம் வரம்கேட்டுப் பெறுகிறான்.
உடல் உள்ளவரை பிரக்ருதி சம்பந்தம் ஏற்படுகிறது. பிரக்ருதி என்ற இயற்கையின் கட்டுக்குள், இயற்கை விதிகளின் துணைக்கொண்டே வாழ்க்கையை நடத்த இயலும். இங்கு சாதகன் இயற்கையை வென்றவனென்று எந்த இடத்திலும் அருணகிரிநாதர் சொல்லவில்லை. மாறாக, அந்த இயற்கை விதிகளால் தமக்கு துன்பம் வரவேண்டாம்; அவ்விதிகளால் தம் இறையனுபவம் பாதிக்காமலிருத்தல் வேண்டும் என்றுதான் சாதகன் கேட்பதுபோல் பாடல் அமைந்திருக்கிறது.
பசி, தாகம், உடல் உபாதை, இனப் பெருக்கத்திற்கான காமம் போன்றவை இயற்கையின் விதிகள். இவற்றால் துன்பம் வராமல் தடுக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும். காமத் தையோ, கோபத் தையோ நானே அடக்கி விடுவேன் என்று கூறுவதும் ஒருவகை ஆணவத்தைதான் கொடுக்கிறது. இந்தப் பாடலில் கூறிய வாறு, தம்மால் இயலவில்லையென்று சரணாகதி செய்யும் சாதகனுக்கு இறைவன் உடனே வரத்தைக் கொடுத்துவிடுகிறார்.
இந்தப் பாடலில் சிங்காரம் என்ற சொல், வட்மொழியின் "ஸ்ருங்காரம்' என்ற பதத்தின் தமிழ் வடிவமாகும். இந்த ஸ்ருங்கார ரசமே காமத்தின் வெளிப்பாடாக பல காவியங்களில் கையாளப்படுகிறது. இந்தப் பாடலில் சிங்காரம் என்ற வார்த்தை, மகளிர் பால் சென்று அவதிப்பட்டு கர்ம வினைகளை ஏற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டிய பயத்தைக் காட்டுகிறது.
ஆனால் இங்கு "சிங்கார மடந்தை தீநெறி போய் மங்காமல்' என்னும் வார்த்தைகளை நாம் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டும். லலிதா சஹஸ்ரநாமம், "சிருங்கார ரஸ சம்பூர்ணா' என்ற நாமத்தில், அம்பிகை அன்பின் மொத்த சாரமாக இருக்கிறாள் என்று கூறுகிறது. அவ்வாறு இருக்கையில் இங்கு அருளாளர் பொதுமகளிரைப் பற்றி பேச வாய்ப்பு சிறிதாக இருக்கவேண்டும். குண்டலினி தியானத்தில் நாபிச் சக்கரத்தை பூர்ணகிரி பீடம் என்று குறிக்கும் வழக்கமுண்டு. இந்த பூர்ணகிரி பீடத்திலிருக்கும் குண்டலினி வடிவான அம்பிகையைதான் "சிருங்கார ரஸ சம்பூர்ணா' என்று குறிக்கிறோம். இந்தப் பாடலில் "சிங்கார மடந்தை தீநெறி' என்பது, குண்டலினி அக்னியானது பூர்ணகிரி பீடத்தில் இருப்பதைக் குறிக்கிறது. நாபிச் சக்கரத்தில் இந்த குண்டலினி அக்னியானது அதற்குமேல் போகாமல் மங்கிவிட வாய்ப்புகள் அதிகம். நாபிச் சக்கரத்தில் வரும் குண்டலினி உலக வாழ்வுக்குத் தேவை யான அத்துணை சுக போகங்களையும் கொடுத்துவிடும். அதற்கு மேல் சாதகர்கள் ஆன்மிக வாழ்வில் நடக்காமல் உலகமாயையில் மீண்டும் விழ வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் அருளாளர் "சிங்கார மடந்தை தீநெறி' என்று குண்டலினி அக்னியையும், அந்த அக்னி மங்கிவிடாமல் மேன்மேலும் ஆன்மிக வாழ்வில் முன்னேறி மோட்சநிலை எய்தவேண்டும் என்ற வேண்டுதலையும் இறைவனிடம் வைப்பதே இந்தப் பாடல் என்று, லலிதா சஹஸ்ரநாமத்தின் விளக்கத் தையும் சேர்த்துப் பார்க்கும்போது தெளிவாகத் தெரியும்.
செய்யுள்-35
"விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாணுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே.'
பொருள்: தேவலோகத்தின் தலைவரே, அழகிய சந்திரனைப்போன்ற நெற்றிகொண்ட வள்ளியம்மையைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விதியின் வசத்தால் பிறவிகள் எடுத்துக்கொண்டே இருக்கும் என்னை விடுவித்து மோட்சநிலை தரும் உன் மலர்போன்ற பாதங்களை எப்போது எனக்கு அருள்வாய்?
இந்தப் பாடலில் பிறவி சுழற்சி மற்றும் கர்மவினைகளின் தொடர்ச்சியைப் பற்றிக் கூறப்படுகிறது. அருணகிரிநாதர் இங்கு "விதி காணும் உடம்பு' என்று சொல்வது, கர்மவினைகளுக்கு ஏற்றவாறு ஒரு ஆன்மா இவ்வுலகில் உடலை எடுக்கிறது. ஞானிகள், எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களில் ஆன்மா பிறக்கிறதென்று ஏற்கெனவே வகுத்திருக்கி றார்கள். அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழில் "எழுகடல் மணலை அளவிடின் அதிகம்- எனது இடர்ப்பிறவி அவ தாரம்' என்று கூறுகிறார். மேலும்-
"ஒரு தாய் இரு தாய் பல கொடிய தாயுடனே அவமாய் அழியாதே' என, பலகோடி தாய்களுக்குத் தாம் பிறந்து வாழ்ந்திறந்து,
மீண்டும் பிறந்ததைக் கூறுகிறார். இவ்வாறாக கர்மவினைகளுக்கு ஏற்றவாறு விதியைக்கொண்டு இந்த ஆன்மா உடலெடுத்துப் பிறந்துகொண்டே இருக்கிறது. இவ்வாறான விதி காணும் உடம்பை விடமுடியவில்லையே- இந்த நிலை மாறுவதற்கு உன்னுடைய திருவடிகளை என்று தருவாய் என்று கேட்கும் தொனியில் இப்பாடல் அமைந்துள்ளது. என்றாலும், இங்கும் சில ரகசியங்களை அருளாளர் மறைத்துதான் கூறியுள்ளார்.
உடலென்று சொல்லுமிடத்தில், நாம் பௌதீக உடலை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. இங்கு லலிதையின் சஹஸ்ரநாமத்தில் கூறப்படும் "பஞ்ச கோஷாந்தர ஸ்திதா' என்னும் நாமத்தில் வரும் ஐந்துவிதமான உடல்களை நாம் பார்க்கவேண்டும். நாம் உடலென்று பொது வாகச் சொல்வது "அன்னமய கோசம்' எனப் படும் உணவின் சக்தியாலான உடலையே. இந்த உடலுக்கு ஆயுள் சில ஆண்டுகள்தாம். ஆனால் "பிராணமய கோசம்' எனப் படும் காற்றினாலான உடலுக்கு ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகள். "மனோமய கோசம்' என்று கூறப்படும் உடல்தான் கர்மப்பதிவுகளை உள்ளடக்கி, பல பிறவிகளை ஓர் ஆன்மா எடுக்கும்போது அந்த வினைகளை வெளிப்படச் செய்கிறது. "விஞ்ஞானமய கோசம்' என்ற உடல்தான் புத்தியைக்கொண்டு செயல்படுகிறது. இறுதியாக "ஆனந்தமய கோசம்' என்னும் உடல்மட்டுமே இறையனுபவத்தில் நிலைத்திருக்க ஏதுவாய் இருக்கிறது. இந்த கோசத்திலிருந்து இறைவனை எப்போதும் உணர்ந்திருப்பதும், இறைவனோடு கலக்காமல் இருப்பதுமே விசிஷ்டாத்வைதக் கொள்கையை நிலைநாட்டுகிறது. இந்த ஐந்து கோசங்களையும் கடந்து இறைவனோடு கலப்பதே த்வைதக் கொள்கையைக் காட்டுகிறது.
இந்தப் பாடலில் "உடல்' எனக் கூறப் படும் அணைத்து விஷயங்களையும் நீக்கினால் தான் இறைவனின் இயல்போடு கலந்து மோட்சநிலை எய்தமுடியுமென்று சாதகன் அறிகிறான். உடல்களையும் அதன் வினைகளையும் கடப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு இறைவனின் கருணை ஒன்றினால் மட்டுமே முடியும் என்று தெரிந்துதான், இறைவனின் திருவடியை என்று தருவாய் என்று கேட்கும் விதத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல். இங்கு "திருவடி தா' என்று கேட்பது, சாதகன் இறைவனின் திருவடி தீட்சையைக் கேட்கிறான். எப்போது இறைவன் சாதகனின் தலைமீது தன் திருவடி களை வைத்து தீட்சை தருகிறானோ, அப் போதே அவன் கால்பட்டு கர்மவினைகள் அழிகின்றன. இதைதான் அருளாளர் கந்தர் அலங்காரத்தில், "உன் கால் பட்டழிந்தது அயன் கையெழுத்தே' என்ற பொருளில் கூறுகிறார்.
குண்டலினி தியானத்தில், சக்தியானவள் ஆக்ஞா சக்கரத்தைக் கடந்து பின் சஹஸ்ராரம் செல்லும்முன்பு, சோமச் சக்கரம் என்னுமிடத்தில் அவள் திருவடிபட்டு அமிர்த தாரை பொழியும். இந்த அமிர்த தாரையே வினைகளைக் களைகிறது. மாயசக்தியாக இருந்தவள் இப்போது இறைவனின் அனுக் கிரக சக்தியாக மாறுகிறாள். லலிதையின் நாமங்களில் இதைதான் "சுதா சாராபி வர்ஷினி' என்று கூறுகிறார்கள். சைவத்தின் கோவிலாம் தில்லையில் நடராஜரின் அனுக்கிரக சக்தி, அவரது தூக்கிய திருவடியான சக்தி யின் இடது திருவடியைதான் குறிக்கிறது. இங்கும் சக்தியின் அனுக்கிரக பாவம் நன்றாக வெளிப்படுகிறது. இறைவன் தம் சக்தியின் மூலமாகதான் அனைத்தும் செய்கிறான் என்றும், அவன் திருவடி தீட்சை சக்தியின் அனுக்கிரகத்தால் நடப்பது என்பதைக் குறிப்பதற்கே அடுத்த வரியில் "மதி வாள் நுதல் வள்ளி' என்று அருளாளர் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளியை முருகப் பெருமான் துதிப்பதாகக் கூறப்படுவதிலிருந்து, வள்ளியைத் துதிக்க முருகனை எளிதாக அடையலாம் என்பதும், திருவடி தீட்சையென்பது சைவத்தின் "சக்திநி பாதம்' என்பதும் மறைபொருளாக வைக்கப் பட்டிருக்கிறது.
சக்தி வழிபாடு இவ்வாறாக அனுபூதி முழுக்க பல்வேறு இடங்களில் மறைந்து அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
(அனுபூதி தொடரும்)