ழந்தமிழர்கள் நிலங்களை ஐந்துவகை களாகப் பிரித்தனர். அதில் குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த நிலமுமாகும். குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகப் பெருமானை வழிபட்டனர்.

தொல்காப்பியத்தில் முருகன் "சேயோன்' என குறிப்பிடப்பட்டுள்ளார். சங்க நூலான பத்துப்பாட்டில் நக்கீரர் எழுதிய "திருமுருகாற்றுப்படை'யில் முருகப் பெருமானே பாட்டுடைத் தலைவன்.

அதேபோல் எட்டுத் தொகையுள் அகநானூறு, பரிபாடல் போன்றவற்றிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் முருகனைப் போற்றும் பாடல்கள் உள்ளன. நம் முன்னோர்கள் முருகனை பழந்தமிழ்க் கடவுளாக வழிபட்டனர்.

nn

Advertisment

ஆதிசங்கரர் வகுத்துக் கொடுத்த ஆறுவகை சமயங்களில் "கௌமாரம்' என்பதும் ஒன்றாகும். இது முருகப் பெருமானை வழிபடும் சமயநெறியாகும். சைவ நெறியின் தலைவனான சிறுபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் வேறுபாடில்லை என்பது நமது சமயக் கோட்பாடு. யஜுர் வேதத்தில் வரும் ஸ்ரீருத்ர மந்திரத்தில்,

"ஈகானஸ் ஸர்வ வித்யானம் ஈச்வரஸ்

ஸர்வ பூதானாம் ப்ரம்மாதிபதிர் பிரம்மணோபதி பதிர்

பிரம்மா சிவோமே

அஸ்து சதாவிவோம்' (மஹாந்யாஸம்-4)

என்று, சிவனும் முருகனும் ஒருவரே என விளக்குகிறது.

திருமந்திரத்தில் திருமூலரும் இதே கருத்தை-

"ஆறுமுகத்தில் அதிபதி நாளென்றும்

கூறு சமயக் குருபரன் நாளென்றும்

தேறினர் தெற்குத் திருவம் பலத்துளே

வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே'

என்று வலியுறுத்துகிறார்.

சிவபெருமானைப் போற்றும்போது முருகப் பெருமானையும் "எந்தை பிரானுக்கு' எனத் தொடங்கும் பாடலில் பாடியுள்ளர்.

சங்க இலக்கிய நூலான தொல்காப்பியத்தில் "சேயோன் மேய மைவரை உலகம்' என முருகப் பெருமானைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. "குன்று தோறும் குமரன்' என முன்னோர்கள் சொல்வார்கள். குமரனாகிய முருகப் பெருமான் குடிகொண்ட குன்றில் பிரபலமான, பழமையான கோவிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலைச் சொல்வதுண்டு. இதுதவிர பல இடங்களில் சிறிய பெரிய குன்றுகளிலும் மலைகளிலும் முருகப் பெருமானுக்குக் கோவில்கள் உண்டு. அவற்றுள் பிரசித்திப்பெற்ற தலங்கள் ஆறு. அவற்றை "அறுபடை வீடு' எனச் சொல்வார்கள். அந்த வரிசையில் பிரம்ம ஜோதி சுவாமிகள் என்னும் சிவனடியார் முருகப் பெருமானின் அருளைப்பெற்று, செங்கற்பட்டு அருகேயுள்ள இருங்குன்றம் பள்ளியில் இருக்கும் சிறிய குன்றில், பாலமுருகன் என்னும் திருநாமத்துடன் மூலவராக முருகப்பெருமான் எழுந்தருளும் ஆலயத்தை 2003-ஆம் ஆண்டு அமைத்தார்.

செங்கற்பட்டை அடுத்த ஜானகிபுரத்தில் வசித்த பொன்னுசாமி- பாப்பாத்தி தம்பதிக்கு மகனாக 1945-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் துரைசாமி. முற்பிறவிகளில் முருகன்மீது அளவற்ற பக்தி இருந்ததன் காரணமாக இளம்வயதிலேயே இறைபக்தி மிகுந்தவராக- முருகப் பெருமானை நினைத்து தியானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இதனால் இல்லற வாழ்க்கையில் நாட்டமின்றி ஆன்மிகப் பெரியவர்கள், சிவனடியார்கள், சித்தர்கள் போன்றவர்களைத் தேடி பல இடங்களுக்கும் சென்று அவர்களிடம் உபதேசம் பெற்றார். 2000 ஆண்டு ஜூலை மாதம் ஆடிக் கிருத்திகையன்று சந்நியாசம் பெற்று தேவர்மலையில் (தேவார மலை) சிலகாலம் தனிமையில் தவம்புரிந்தார். ராஜயோகத்தில் மிகுந்த பயிற்சிபெற்ற அருணாசல சுவாமிகள் தான் இவரது ஆன்மிக வழிகாட்டியாக இருந்தவர். சந்நியா தீட்சைப் பெற்ற துரைசாமிக்கு பிரம்மஜோதி சுவாமிகள் என்னும் பெயரை சூட்டினார்.

இவருடைய ஆன்மிகத் தேடலையறிந்த ஊர்மக்கள், செங்கற்பட்டு அருகில் புறவழிச்சாலையில் பாலாற்றங்கரைக்கு அருகே யுள்ள இளங்குன்றம்பள்ளி கிராமத்திலிருக்கும் சிறிய குன்றில் முருகப்பெருமானுக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

அடர்ந்த முட்புதர்கள் சூழ்ந்த இந்த குன்றில் முருகனுக்கு கோவில் கட்டவேண்டுமென்றால் அவனது திருவருள் வேண்டுமென ஊர் மக்களிடம் சொல்லி, முருகப் பெருமானின் உத்தரவுக்காகக் காத்திருந்தார்.

தேவர் மலையில் முன்பு பல சித்தர்கள் தவம் புரிந்துள்ளனர். பல நூற்றாண்டு களுக்குமுன்பு சித்தர்கள் கல்லாலான வேலை பூஜித்துள்ளனர். அதன்பிறகு ஊர்மக்கள் அந்த வேலை பக்தியுடன் வழிபடத் தொடங்கினார்கள்.

அதனருகே இருந்த விநாயகர் சிலையை யாரோ திருடிச் சென்று விட்டதால், கல்வேலைப் பாதுகாக்க ஊர்மக்கள் பிரம்மஜோதி சுவாமிகளிடம் கொடுத்தனர்.

இருங்குன்றம் பள்ளிக் குன்றில் முருகப்பெருமானுக்குக் கோவில் கட்ட இதுவே தகுந்த தருணமென எண்ணி, அடர்ந்த முட்புதர்களை யெல்லாம் களைந்து, ஒரு சிறிய இடத்தில் முருகனின் சிலையை வைத்துப் பூஜை செய்யத் தொடங்கினார். நாளடைவில் கோவிலைப் பற்றிய செய்தி பரவ, பக்தர்கள் குன்றுக்கு வரத் தொடங்கினர்.

பல அன்பர்கள் கொடுத்த நன்கொடையை வைத்து குன்றில் அழகிய கோவில் விரிவாகக் கட்டப்பட்டது. குன்றில் சிவபெருமானுக்குத் தனிச் சந்நிதியும் நவகிரகங்களுக்குத் தனிச்சந்நிதியும் உள்ளது. அழகிய குன்றிலிருந்து இயற்கைக் காட்சியையும், பாலாற்றையும் ரசிக்கலாம். கோவிலில் முருகனின் வாகனமான மயில்கள் இருக்கின்றன. இக்கோவிலை நிர்மாணிந்த பிரம்மஜோதி சுவாமிகள் 2016-ல் சித்தியடைந்தார். அவரது சமாதி குன்றில் உள்ளது. அவருக்குப் பிறகு குமரவேல் என்னும் அடியார் நித்தம் பூஜைகளைச் செய்து வருகிறார்.

இக்கோவிலைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "சித்தர் மரபில் வந்த ஸ்ரீ பிரம்மஜோதி சுவாமிகளால் இக்கோவில் சமீபகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது. முருகப் பெருமானின் திருவருளால் குறுகிய காலத்தில் பக்தர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. முருகனுக்கு உகந்த கிருத்திகை (கார்த்திகை) நாளில் சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. அன்றைய தினம் காலைமுதல் இரவுவரை சிறப்பாக அன்னதானம் நடைபெறும். வேண்டுதல் நிறைவேறுவதால் பக்தர்கள் பக்தியுடன் அதிகளவு வரத்தொடங்கியுள்ளனர்.

கல்வி, வேலை, திருமணம் போன்ற வேண்டுதல்களுக்கு சித்தர்கள் வழிபட்ட சக்திவாய்ந்த கல்வேலை ஒன்பதுமுறை சுற்றிவந்து வணங்கினால் காரியம் கைகூடும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. அதேபோல் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் சந்நிதியில் ஜபித்துக் கொடுக்கப்படும் எலுமிச்சைப் பழம் பல நன்மைகளைத் தரவல்லது'' என்று கூறினார்.